Friday, 16 December 2016

ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது…

பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று,
​​
ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி 
ஓடினாள்.'

பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா?

அவளை கூப்பிட்டார். தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது.

“அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன ஸுவாஸினி வந்திருக்கா பாரு! மங்களகரமா இருக்கோல்லியோ? இந்த வேளைல நீ மாத்ரம் கண்ணீரும் கம்பலையுமா நின்னா
நன்னாருக்குமா? நெத்தில குங்குமம் வெச்சுக்கோ”

தாயினும் மேலான தயாபரனின் வார்த்தைகள் அவள் அழுகையை அதிகமாக்கியது.

“இல்ல பெரியவா, நா…  குங்குமம் வெச்சுக்க கூடாது”. 

பெரியவா பதிலே சொல்லவில்லை.

“எங்காத்துக்காரர் military-ல வேலை பாத்தார். ஆறு மாஸம் முந்தி டெல்லிலேந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துது. அதுல…. அவர் சண்டைல செத்து போயிட்டதா எழுதியிருந்தது. நா….நம்பலை பெரியவா! வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிண்டேன். டெல்லிக்கு
போன் பண்ணினா, அவாளும், border-ல இருக்கறவாகிட்ட பேசி, அவர் செத்துப் போய்ட்டார்னு confirm பண்ணிட்டா! 

பேப்பர்ல கூட ரெண்டு மூணு தடவை ந்யூஸ் வந்துடுத்து. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..! கார்யம்-லாம் அப்போவே பண்ணிட்டோம். இன்னிக்கு நா… மடத்துக்கு வந்ததே, அவரோட அகால மரணத்துக்கு அவருக்கான கர்மாவை இனிமே எப்படி பண்றது-ன்னு கேக்கத்தான் வந்தேன். 

இந்த மாதிரி ஸுவாஸினி பூஜை நடக்கப்போறதுன்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன் பெரியவா….”  நாதியில்லாமல் இருந்தவள், இன்று ஆத்மநாதனிடம் கதறிவிட்டாள்.

பரப்ரஹ்மம் பேசாமல் இருந்தது.

“அவரோட ஆத்மா ஶாந்தி அடையணும். இதுதான் என் ப்ரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். பெரியவா… இப்போ போகச்சொன்னா போய்ட்டு, இன்னொருநாள் வரதுக்குகூட தயாராயிருக்கேன்”

பெரியவா பதிலேதும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்தார்.

ஸாக்ஷாத் காலஸம்ஹாரமூர்த்தியாக ஜ்வலித்தார். தன் முன்னால் இருந்த மரடப்பாக்குள் கையை விட்டு, கை நிறைய குங்குமத்தை அள்ளினார், அழகான புன்முறுவலுடன் அவளிடம் நீட்டினார்.

அவளோ முழித்தாள். அவளுடைய கை, குங்குமத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை!

” வாங்கிக்கோங்கோ ! பெரியவா தன் கையாலேயே குங்குமம் தரார்னா, ஒங்களோட பாக்யம்ன்னா! நீங்க ஸுமங்கலிதான்!

பக்கத்தில் இருந்தவர்கள் முடுக்கியதும், நடுங்கும் கைகளில் குங்குமத்தை வாங்கிக்கொண்டாள்.

“நெத்தில இட்டுக்கோ! ஓன்னோட மனக்லேஸம் அவஶ்யமில்லாதது. ஒம்புருஷன் உஸுரோட இருக்கான். ஸீக்ரமா ஒங்கிட்ட வரப்போறான்.”

“உயிரோடு இல்லை” என்று ஆறு மாஸமாக அரஸாங்கம் முதல், அத்தனை பேராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு விஷயம், ஒரே நொடியில் தெய்வத்தால், “பொய்” என்று தள்ளப்பட்டது.

அந்த பெண்ணோ, ஸந்தோஷத்தில், பெரிய பொட்டாக இட்டுக்கொள்ளவும், அங்கிருந்த பல ஸுவாஸினிகள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, திருமாங்கல்யம் என்று வாரி வழங்கினார்கள். க்ஷணத்தில், அந்த இடம் குதூகலமானது.

அன்று அவளும் ஒரு ஸுவாஸினியாக வரிக்கப்பட்டு பூஜையில் அமர்ந்தாள்.

ஒருவாரம் கழிந்தது.
​​
பெரியவாளின் திருவாக்கு, பொய்யாகுமா?

இறந்ததாக கருதப்பட்டு, கருமாதியும் பண்ணப்பட்ட அவளுடைய புருஷன்….. மெலிந்து, சோர்ந்து ஒரு அதிகாலை வேளை வீட்டுக்குள் நுழைந்தான்..!

அவனைக் கண்டதும், அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல், ஆனந்தத்தில் ஏதேதோ உளறினாள்.

“எப்டி இருந்தேள்? எங்க இருந்தேள்?…. ஏன் ஒங்க head-quarters-ல கூட அப்டி சொன்னா?….”

“நீ கேள்விப்பட்டதெல்லாம் நெஜந்தான். கிட்டத்தட்ட ஸாவோட விளிம்புக்கே போய்ட்டேன்.! குண்டு பாய்ஞ்ச வலியில, மயக்கமாய்ட்டேன்..! 

சலனமே இல்லாம, ஸன்னமான மூச்சுகூட இல்லாம இருந்த என்னை, செத்த பொணம்-னு நெனச்சிண்டு எதிரிகள்…. எங்கியோ இழுத்துண்டு போய் அநாதரவா போட்டுட்டு போய்ட்டா! யாரோ சில மலைவாஸிகள் என்னை எடுத்துண்டு போயி ஸொஸ்தமாக்கினா..!  அவா புண்யத்ல, எனக்கு புனர்ஜன்மா கெடச்சுது. அங்கேர்ந்து எந்தவிதமாவும் யாரையும் contact பண்ணக்கூட முடியல….! நன்னா நடக்க முடிஞ்சதும், ஒடனே கெளம்பிட்டேன். ஒன்னோட ப்ரார்த்தனை வீண் போகல..!” 

ப்ரார்த்தனையா! ! மலைவாஸியான பரமேஶ்வரனுடைய பரமக்ருபையன்றோ!

“பெரியவா…. தெய்வம்னா….! எனக்கு குங்குமத்தை அள்ளி குடுத்தாரே!…”
அழுது கொண்டே, ஶ்ரீமடத்தில் நடந்ததைச் சொன்னாள்.

அவ்வளவுதான்! இருவரும் விழுந்தடித்துக்கொண்டு காஞ்சியில் பீடத்தில் அமர்ந்து அன்பைச் சுரந்து கொண்டிருக்கும், பரப்ரஹ்மத்தின் திருவடிகளில் வந்து விழுந்தார்கள்.

“என்ன?….. ஆத்துக்காரர் வந்துட்டாரா?…ஒனக்கு இனிமே எந்த கொறையும் இருக்காது…”

திருவாய் மலர்ந்தது காலனை எட்டி உதைத்த காலடி தெய்வம்!

Monday, 7 November 2016

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

                        அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல்.  வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும்  ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன்  உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

                  கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி  யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

                           அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி  களிப்படைய,  நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன். 

                 அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம்  சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

           கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த  சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

                       தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை  சாலையைப் பெருக்கி  எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது. 

               இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.  அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம்  செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது.  தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.  தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன  சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

             கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி  நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.

               சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த  இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து  நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

                 கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம்  காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால்  தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை  நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 
                        மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த  நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

                   அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது.  நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.  

                       ‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள்.  அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும்  அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

                              மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள்.  மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

        நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள் 
                              எல்லோரும் நகைத்தனர்
         வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்  
                           ஜனமே என்னை வெறுத்தது
          என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.  (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

                     மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய்  எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே  விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

          வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.  நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம்  நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

                    ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.

மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே 
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள் 
கணக்காலே எண்ண முடியுமா 
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன. 
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

                                   17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது. 

                          “ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல்   எங்களுக்கு யார் மூலமோ  கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய  அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும்  நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.   

                                  இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார்.  அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து  17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை  நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

பக்தர் குறைக் கேட்டு அச்சத்தை  நீக்கி அருள காத்திருக்கின்றீரே அக் கருணை எங்களைக் காத்தருளட்டும் !
  (ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..) 

மாமுனியே சரணமையா !

Saturday, 5 November 2016

மஹாபெரியவாளின் ஆங்கிலப் புலமை

காஞ்சி மஹா பெரியவாளை தரிசிக்க ஒரு சமயம் அமெரிக்க வாழ் தம்பதிகளும்,அவர்களின் குடும்ப நண்பரும் வந்திருந்தனர். 

அந்த அமெரிக்க தம்பதிகள் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள்,அவர்கள் குடும்ப நண்பர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்.
காஞ்சி மாமுனிவர் அவர்களின் ஷேம லாபங்களை விசாரித்த பின் அவரின் பேச்சு மொழி பக்கம் திரும்பியது. 

அந்த அமெரிக்க தம்பதிகளை பார்த்து,நீங்கள் உங்களுக்குள் எந்த மொழியில் உரையாடுவீர்கள் என்று கேட்டார். நாங்கள் வெகு காலமாக அமெர்க்காவில் இருப்பதால்,ஆங்கிலத்தில் தான் பேசுவோம் என்றனர் . 

மஹா பெரியவர் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் மனதில் எதாவது ஒன்றை பற்றி நினைதால் எந்த மொழியில் நினைப்பீர்கள் என்றார். அதற்கு அந்த தம்பதிகள் ஆங்கிலத்தில் தான் நினைபோம் என்றனர். 

தம்பதிகளுடன் வந்த அவர்கள் குடும்ப நண்பர், எங்களுக்கு தமிழில் பேச வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை, அதனால் என்ன பிரயோஜனம் என்று கூறி முடித்தார்.
நாம் தாய் மொழி அல்லாத மொழியில் புலமை பெற்றவர்களாக இருந்தாலும்,நாம் மற்ற மொழியில் பேசும் பொழுது,முதலில் தாய்மொழியில் தான் நம் மனதில் அந்த விஷயம் புலப்படும் ,நம் மனது தான் வேகமாக மற்ற மொழி சொற்களை தேர்ந்தெடுத்து பேச வைக்கிறது என்ற அறிவியல் உண்மையை நன்கு உணர்ந்த காஞ்சி மாமுனிவர் அவர்களின் ஆணவத்தை அடக்க எண்ணினார்.


தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர்,ஆங்கிலம் தெரியாதவர்களுடன் பேசுவதே நேரத்தை வீண் அடிப்பது என்ற எண்ணத்தை கொண்டவர். காஞ்சி மாமுநிவரையும் அதே கண்ணோட்டத்தோடு தான் பார்த்தார்.


இந்த உரையாடல் நடந்து கொண்டி்ருக்கும் ஒரு பெண்மணி பெரியவாளிடம் தீர்த்தம் பெறுவதற்கு வந்தார். காஞ்சி மாமுனிவர் அந்த பெண்மணிக்கு தீர்த்தம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். 

இந்த காட்சியை அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.
பெரியவாள் அந்த பெண்மணியை பற்றி கூற ஆரம்பித்தார். "தீர்த்தம் வாங்கிண்டு போனாளே அவா குடும்பம் ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்தது இன்னைக்கு நொடிஞ்சு போய்டா, ஆனா அன்னைக்கு எப்படி மடத்தின் மேலயும் ஆச்சாரியர்கள் மேலயும் பக்தியா இருந்தாளோ இன்னைக்கும் அப்படி தான் இருக்கா எந்த நிலைமையிலும் ஒரே மாதிரி இருப்பதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும்" என்று தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பரை பார்த்து கேட்டார்.


இது என்ன பிரமாதம் என்று நினைத்த அந்த அமெரிக்க வாழ் தமிழர்,சொல்வதற்கு முனைதார் ஆனால் சரியான வார்த்தை கிடைக்க வில்லை. பெரியவாள் அவரை பார்த்து நான் தமிழில் சொன்ன விஷத்தை நீங்கள் ஆங்கிலத்தில் நினைத்து பார்த்து சொல்லுங்கள் என்றும் கேட்டு கொண்டார். அப்பொழுதும் அவருக்கு அந்த வார்த்தை கிடைக்க வில்லை.


அமெரிக்க தம்பதிகளிடமும் கேட்டார், அவர்களாலும் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாள் அந்த அமெரிக்க குடும்ப நண்பரை பார்த்து " உங்களுக்கு வேணா அவகாசம் தரேன் வெளிய போய் யோசிச்சு சொல்லுங்கோ " என்றார்.


அவர் குறுகும் நெடுக்கும் நடந்து அதற்கு விடை தேடினர் ஆனால் அவருக்கு கிடைக்க வில்லை. 

பெரியவாள் அந்த அமெரிக்க தமிழரை பார்த்து "நான் உங்க அளவுக்கு ஆங்கிலம் தெரியாதவன் தான், ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லறேன் அது சரியாய் இருக்கானு பாத்து சொல்லுங்கோ" என்றார் பெரியவாள். Equipoised (எப்பொழுதும் ஒரே நிலையில் இருத்தல்) என்ற ஆங்கில வார்த்தையை சொன்ன பொழுது தான் அவர்கள் அனைவர்க்கும் பொறி தட்டியது, அது தான் சரியான வார்த்தை என்று அவர்கள் ஒப்பு கொண்டனர்.


தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர் கண்ணீர் மல்க தான் ஆணவமாக இருந்ததையும் அதற்கு மன்னித்தருளும் படியும் பெரியவாளின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.

Thursday, 7 July 2016

காணாமற் போன தங்க உத்தரணி - மஹா பெரியவா


திருடனை இனம் கண்டு ஆனால் அவனுக்குத் தண்டனைக்குப் பதில் திருடியதற்கான காரணத்தை அறிந்து (பணம் பற்றாமை) அதையும் போக்க வழி செய்து, அவனுக்கு தண்டனையும் அவமானமும் நேராமல் காத்து அதே சமயம் காணாமற் போன பொருளையும் மீட்டு - அத்தனையும் இருந்த இடத்திலிருந்தே ஒருவர் செய்திருக்கிறார் என்றால், அது நம் மஹா பெரியவா தவிர, வேறு யாரால் முடியும்?

ஒருதடவை மஹா பெரியவா திருவிடைமருதூர் மகாதான தெருவிலுள்ள ‘ஆர்.எம்.எம். சத்திரம்’ என்கிற பழைய சத்திரத்தில் தங்கி இருந்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்க தினமும் வரதும் போறதுமா இருந்தா.
அன்னிக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி இருக்கும். அவ்வளவாகக் கூட்டமில்லை.

இதை சொன்னவர் அப்பா பேர் சந்தானம். அவரை அருகில் அழைத்த ஸ்வாமிகள், ”சந்தானம், ஒங்க கிராமத்தச் சேர்ந்தவாள்ளாம் இங்க வந்துண்டிருக்காளோன்னோ? எல்லாரையும் வரச் சொல்லு! ஒத்தரும் வெறுமனே திரும்பிப் போகப்படாது. இங்கேயே சந்திர மௌலீஸ்வர பிரசாதமா ‘வைஸ்வதேவம்’ (போஜனம்) பண்ணிட்டுப் போகணும். என்ன புரிஞ்சுதா?” எனச் சிரித்துக்கொண்டே, தாயின் கருணையோடு உத்தரவிட்டார்.

சந்தானமும் மிகவும் பவ்யமாக, ”பெரியவா உத்தரவு!” என்று சொல்லிவிட்டு நமஸ்கரித்தார். பெரியவா விடவில்லை.
”இன்னிக்கு நீ சந்திரமௌலீஸ்வர பூஜையை தரிசனம் செஞ்சுட்டு இங்கயே ‘வைஸ்வதேவம்’ பண்ணிட்டுப் போ!” என்று பணித்தார்.

மதிய போஜனத்தை முடித்துக்கொண்டு சத்திரத் திண்ணையில் சற்றுச் சிரம பரிகாரம் பண்ணினோம். மதியம் 3 மணி இருக்கும். திடீரென்று சத்திரத்தினுள் ஒரே ஆரவாரம். மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடி, எதையோ பரபரப்பாகத் தேடினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தோம்.

மடத்தைச் சேர்ந்த ஒருவர், ”வேற ஒண்ணுமில்லே… பெரியவா சந்திரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக கும்மோணத்தைச் சேர்ந்த பெரிய மனுஷர் ஒருத்தர் தங்கத்துல உத்தரணி ஒண்ணு பண்ணிக் குடுத்துருந்தார். சுமார் மூணு பவுன் இருக்கும்! நேத்தி வரைக்கும் பெரியவா பூஜைல அது இருந்துது. இன்னிக்கு அதக் காணலே. இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கோம். இன்னும் பெரியவாகிட்ட சொல்லலே. அவாளுக்குத் தெரியாது!” என்று 
பரபரப்போடு அதைத் தேடுவதில் முனைந்தார்.

ஸ்ரீமடத்து காரியஸ்தர், ‘இது பெரியவா காதை எட்றதுக்குள்ள எப்டியும் கண்டுபிடிச்சு வெச்சாகணும்!’. கவலை அவர் முகத்தில்.
மடத்து ஆட்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை பண்ணினார்.

எல்லோருமே '' தெரியாது. பார்க்கலையே '' என்கிறார்கள்.

”எல்லாரையும் விசாரணை பண்ணியாச்சு. ஒருத்தன்தான் பாக்கி ! உக்கிராண கைங்கர்யம் பண்ற ராமநாதனைக் கூப்பிடு!” என்றார். மானேஜர்.தேடித் பார்த்துவிட்டு ஒருவர், ”சமையல்கார ராமநாதன் அங்கே இல்லே. அவன் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கானாம். சாயங்காலம்தான் எதிர்பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

மாலை மணி 5. மகா பெரியவா

ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார். பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டுச் சற்று நின்றார். பிறகு, தமது அறை வாயிலில் சுவரோரம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

கூடத்துப் பக்கம் பூஜா கைங்கர்யம் பண்ணும் இளைஞன் ஒருத்தனை பார்த்து அருகில் அழைத்த ஆச்சார்யாள், ”ஏண்டாப்பா… நானும் மத்யானத்லேர்ந்து பாக்கறேன்… சத்ரம் அல்லோலகல்லோலப் பட்டுண்டிருக்கே, என்ன சமாசாரம்? ரொம்பப் பெரிய மனுஷா யாராவது இன்னிக்கு வரப்போறாளோ?” , சிரித்தபடி கேட்டார்.

அந்த இளைஞன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, ”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே, பெரியவா!” என மென்று விழுங்கினான்.

”ஒண்ணுமில்லேனு சொல்லிப்டா எப்டிடாப்பா! சத்ரமே அமக்களப்பட்டுண்டிருக்கே! வேறென்னதான் விஷயம்?”
சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள்.

அந்த இளைஞன் மிகவும் தயங்கியபடி, ”நீங்க சந்த்ரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துகாக யூஸ் பண்ற பவுன் உத்தரணியைக் காணலே பெரியவா! அதத்தான் சத்ரம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கா” என்றான் வருத்தத்துடன்.

”ஏண்டாப்பா! நம்ம மனுஷ்யா யார் பேர்லயா வது சந்தேகம் இருக்கோ… அப்டி ஏதாவது பேசிக்கறாளோ?”
”தெரியலியே பெரியவா! காரியஸ்தர் மாமாதான் என்னென்னமோ சொல்லிண்டிருக்கார். அவருக்கு தான் தெரியும்!” என்றான் இளைஞன்.

”சரி… நீ போய் கார்யஸ்தர் மாமாவை இங்க வரச் சொல் !” - அவனுக்கு உத்தரவிட்டார் பெரியவா.

கூடத்துக்கு வந்த காரியஸ்தர், பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். பெரியவா சிரித்துக் கொண்டே, ”ஏண்டாப்பா! பூஜைலேர்ந்த பவுன் உத்தரணி காணலியாமே?” என்று கேட்டார்.

”ஆமாம், பெரியவா!”

”என்னிலேர்ந்து காணம்னு ஏதாவது தெரியுமோ?”

காரியஸ்தர் தயங்கியபடியே, ”ரண்டு நாளா சந்திரமௌலீஸ்வர பூஜையின் உபயோகத்துக்கு உத்தரணியை எடுக்கலே, பெரியவா! இன்னிக்கு பாக்கறச்சே அதக் காணம்!” என்று மென்று விழுங்கினார்.

”சரி… நீ என்ன நெனைக்கறே?”

”எனக்கு என்ன படறதுன்னா, யாரோ அத எடுத்திருக்கணும்!”
”சரி, யார்னு ஒன்னால அனுமானிக்க முடியறதா?”

”அப்படி தீர்க்கமா சொல்ல முடியலே, பெரியவா. இருந்தாலும், ஒரு பேர்வழி மேல சந்தேகம் இருக்கு !”

”யார் அந்தப் பேர்வழி ?”

காரியஸ்தர் தயங்கித் தயங்கி, ”பெரியவாளுக்குத் தெரியாம ஒண்ணுமே இருக்க முடியாது. இருந்தாலும், என் மனசுல பட்டதைச் சொல்லிடறேன்!” என்று இழுத்தார்.

”சொல்லு… நானும் தெரிஞ்சுக்கறேன்.”

”நம்ம சமையல் வேலை ராமநாதன்தான்கறது என் தீர்மானம்!” என்று காரியஸ்தர் பூர்த்தி செய்வதற்குள்… ”அதெப்படி சொல்றே நீ?” என்று மடக்கினார் ஸ்வாமிகள்.

”பத்துநாளா ராமநாதன், ‘எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே. கும்மோணம் முனிசிபல் ஆஸ்பத்ரில சேத்து வைத்தியம் பாக்கணும். முந்நூறு ரூவா அட்வான்ஸ் வேணும்’னு நச்சரிச்சுண்டே இருந்தான். அது மட்டு
மில்லே பெரியவா, சம்பளத்துல ‘இன்க்ரிமென்ட்’ வேற போட்டுக் கொடுங்கோனு நித்தம் தொளச்சுண்டி
ருந்தான். 

அதனால…”இடைமறித்த ஆச்சார்யாள், ”அவனுக்குப் பணமுடை இருக்கற காரணத்தால, அவன்தான் இந்த கார்யத்தப் பண்ணி இருக்கணும்னு முடிவு கட்டிட்டியாக்கும் ! சிரித்தார். ”சரி சரி… இப்போ அந்த ராமநாதன் எங்கே இருக்கான்? நான் கூப்டேன்னு அவன இங்க அழச்சுண்டு வா!” என்றார்.

”அம்மாவுக்கு ரொம்ப ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கான் பெரியவா!”

”போகட்டும்… அட்வான்ஸும், இன்க்ரிமென்ட்டும் கேட்டான்னியே, அதைப் போட்டுக் குடுத்துட்டியோ?”

”இல்லே பெரியவா…”

”பின்ன என்ன பண்ணினே?”

”அவன் கேட்ட ரெண்டு விஷயத்துக்குமே மடத்துல இப்போ சௌகர்யப்படாதுனுட்டேன், பெரியவா!”

பெரியவா சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில். ”சரி, நீ ஒரு கார்யம் பண்ணு! அந்த ராமநாதன் தேப்பெருமா நல்லூர்லேர்ந்து வந்த ஒடனே, அவனையும் அழச்சிண்டு எங்கிட்ட வா! புரியறதா?” உத்தரவளித்துவிட்டு, தனது ஏகாந்த அறைக்குப் போனார். 
.
இரவு மணி 8.

தேப்பெருமாநல்லூரிலிருந்து ராமநாதன் வந்ததும் அவனோடு கூடத்தில் மானேஜர். சொல்லி வைத்தாற்போல் பெரியவாளும் கதவைத் திறந்துகொண்டு அங்கே வந்து அமர்ந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் ராமநாதன்.
பெரியவா வாத்சல்யத்துடன், ”ராமநாதா! உன் தாயாருக்கு ஒடம்பு சரியில்லேனு கேள்விப்பட்டேனே, இப்போ எப்டி இருக்கா?”

ராமநாதன் கண்கலங்கியபடி, ”வயத்துல ஏதோ கட்டி வந்திருக்காம், பெரியவா! கும்மோணம் பெரியாஸ்பத்ரில சேத்துதான் ஆபரேஷன் பண்ணணுமாம்…”

”அதுக்குத்தான் காரியஸ்தர்ட்ட அட்வான்ஸ் கேட்டயா?”

”ஆமாம், பெரியவா!”

”இன்க்ரிமென்ட்டும் வேணும்னியாமே..?”

இதற்கு ராமநாதன் பதில் பேசவில்லை. ”ஏன் பதில் சொல்லமாட்டேங்கறே? இப்ப மாசம் என்ன சம்பளம் வாங்கறே?”
”அறுபது ரூவா, பெரியவா…”

”என்ன இன்க்ரிமென்ட் எதிர்பார்க்கறே? பதிலில்லை. பெரியவாளும் விடவில்லை.

ராமநாதன் தயங்கியபடியே சன்னமான குரலில், ”மாசம் ஒரு பத்து ரூவா பெரியவா…” என்று குழைந்தார்.

”மாசா மாசம் எழுபது ரூவா சம்பளம் வேணுங்கறே நீ. அப்டித்தானே?” – இதற்கும் பதிலில்லை. உடனே காரியஸ்த ரைப் பார்த்த ஸ்வாமிகள், ”இவன் 10 ரூவா இன்க்ரிமென்ட் கேக்கறான். நீ என்ன பண்றே, இந்த மாசத்துலேர்ந்து இவனுக்கு 15 ரூவா இன்க்ரிமென்ட் போட்டு, எழுவத்தஞ்சு ரூவாயா சம்பளத்தக் குடு. அதுக்கு முன்னே, இப்பவே இவன் கேட்ட அட்வான்ஸ் ரூவாயக் குடுத்துடு. என்ன, புரியறதா?” என்று உத்தரவு போட்டார்.

”அப்டியே பண்றேன் பெரியவா!” என்றார் காரியஸ்தர்.

”என்ன ராமநாதா, இப்ப ஒனக்கு சந்தோஷம் தானே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

வாய் பொத்தி, கண்களில் நன்றிக் கண்ணீரோடு ராமநாதன் தலையாட்ட, பெரியவா, கூடத்திலிருந்த அனைவரையும் பார்த்து,
”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…” என்று சஸ்பென்ஸோடு நிறுத்தினார்.அனைவரும் 
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘புரியலியே, பெரியவா?’ என்பதுபோல் ஆவலுடன் ஸ்வாமிகளையே பார்த்தனர்.
மஹா பெரியவா சிரித்தபடியே, ”ஒரு முக்கியமான எடத்ல நீங்க தேடாம விட்டுட்டேள். இப்ப சொல்றேன், கேளுங்கோ… நித்யம் சந்திரமௌலீஸ்வர பூஜைல உபயோகப்படுத்தற நிர்மால்ய புஷ்பங்களைக் கொல்லைல கால் படாத எடத்ல கொண்டு போய் கொட்றேளோன்னோ… அதுல போய்த் தேட வேண்டாமோ பவுன் உத்தரணியை ! அதுக்காக இப்பவே ராத்ரில தேடப்போயிடாதீங்கோ… பூச்சி பொட்டு இருக்கும். கார்த்தால போய்ப் பாருங்கோ. சந்திரமௌலீஸ்வரர் கிருபையால அது அங்க கெடச்சுடும்.” சொல்லிய அடுத்த கணமே தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
பொழுது விடிந்தது.

”பெரியவா சொன்னபடியே கார்த்தால கொல்லைல போய் நிர்மால்ய புஷ்பங்களைக் கிளறிப் பார்த்தோம். பளபளனு அதுல கிடந்தது தங்க உத்தரணி. ஆனா, அது எப்டி அங்க வந்ததுங்கறது, சந்திரமௌலீஸ்வரருக்கும் பெரியவாளுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்…” என்கிறார் மானேஜர்.

Friday, 4 March 2016

வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

கொஞ்சம் பழைய சம்பவம் இது.. காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.

'சதஸ்' என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே ""களை"" கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.

மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும்.

ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல் பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற
சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.

இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.

அது ஒரு வெள்ளிக்கிழமை....வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும் சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.

சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள், பண்டிதர்கள் 

ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் கொண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம்
தெரிந்தது. 

காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். "அவனுக்கும் நூறு ரூபாய்....எனக்கும் நூறு ரூபாய்தானா?" என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? 

"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் "சந்தோஷம் பெரியவா.. நான் புறப்படுகிறேன்" என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு வெளியேறினார்.

உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

"சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று" என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். "சரி...தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா"
என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள், புஷ்பங்கள், கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார்.
பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, "பெரியவா........ ஒரு விண்ணப்பம்..." என்று இழுத்தார் வக்கீல்

"சித்த இருங்கோ..." என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.

அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். "சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்.....நீதான் பார்த்திருப்பியே..
அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு.. பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா" என்றார்.

உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன். மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.

அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.

ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார். அவர் அருகே போய், "பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்" என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார் ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், "அம்பீ..... முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் போயிடுமேடா" என்றார்.

சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, "அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ.. கையோட
உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்" என்று அடமாகிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே "ஐயரே [ஐயங்காரே]... அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும். போய்ப் பாரேன்.
அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?" என்று சிடுசிடுவென்று சொல்ல.... வேஷ்டியில் சுருட்டி வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான் சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. 

உள்ளே நுழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.

"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?" என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.
சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.

சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென "பெரியவா...ஒரு விண்ணப்பம்.." என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.

"சித்த இருங்கோ...உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்.." என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு "வக்கீல் சார் இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ" என்றார் காஞ்சி மகான்.

இவருடைய அட்ரஸை நான் ஏன் குறித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கொண்டார் வக்கீல்.

"நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே... அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து. அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ" என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.

ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். "முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?" என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? 
யார் அவர்? அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?" என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.

பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.

ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.
விஷயத்துக்கு வருவோம்.  

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட சென்னை வக்கீல், "பெரியவா...ஒரு விண்ணப்பம்......

நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் ..." என்று தொய்வான குரலில் இழுத்தார். "உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே."

"இல்லே பெரியவா...என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே...".என்று தயங்கினார் வக்கீல்.

"உன்னோட விண்ணப்பம் என்ன.... கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே...அதானே?" என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம். 

வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை."ஆமாமாம் பெரியவா.... அதேதான்... அதேதான்!"

இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்....நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்?
இப்ப என்ன பண்றே..."-பெரியவா இடைவெளி விட்டார்.

"பெரியவா சொல்லணும்...நான் கேட்டுக்கணும்...."- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. 

ஏன்னா நாலு மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, "சும்மா மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா"னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்."

"பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்" என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி அடைந்தார் அந்த மகான்.

Monday, 8 February 2016

மணிசாஸ்திரிக்கு வந்த மஹா பெரியவா பிரசாதம்

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் மணி சாஸ்திரி. சுமார் 40 வருடங்களுக்கு முன் காஞ்சி மடத்தோடு தொடர்பு கொண்ட பலருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். சுத்தமான வைதீகக் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இருந்தாலும் தான் கொண்ட ஆசார அனுஷ்டானங்களை என்றென்றும் விடாமல், தொடர்ந்து மேற்கொண்டவர் மணி சாஸ்திரி. இவரது ஒட்டுமொத்த குடும்பமே மகா பெரியவா சேவையில் பூரித்து திளைத்தது.

இவருடைய அண்ணன் – ஹரிஹர சாஸ்திரி ஒரு காலத்தில் மயிலாப்பூரில் வைதீக காரியங்களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர்களுடைய தம்பியான சந்துரு சாஸ்திரி பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில் பூஜகராக இருந்தார்.

1979-களில் ராஜ்தூத் பைக் ஒன்று வாங்கினார் ஹரிஹரசாஸ்திரி. அப்போது அந்த விஷயம் மீடியாக்களில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. காரணம் – வைதீகம் போன்ற தொழிலில் இருப்பவர்கள் அப்போது சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்வது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. வைதீகக் காரியங்களில் இருக்கும் பலர் இன்றைக்கு பைக், கார் போன்ற வாகனங்கள் வைத்துக் கொள்வது சகஜம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் எல்லாமே நடையாத்தைரை தான். கொஞ்சம் தொலைவு நடக்கவேண்டும் என்றால் தான் பேருந்துகளில் பயணிப்பார்கள்.

ஹரிஹர சாஸ்திரிகள் பைக் வாங்கிய விஷயத்தை அப்போது பிரபலமாக இருந்த இல்லஸ்ட்ரேடட் வீக்லி இதழ் ‘பைக் வாங்கிய முதல் சாஸ்திரி’ என்று இவரது படத்தையும் போட்டு செய்தி வெளியிட்டது. மஹாபெரியவா கூட இது பற்றி ‘என்ன ஹரிஹர சாஸ்திரியாரே…பைக் வாங்கிட்ட போலிருக்கு’ என்று விசாரித்தாராம். இது ஒரு துணுக்குத் தகவல் தான். அனுபவத்துக்கு வருவோம்.

1983-ல் சென்னை பெசண்ட் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் மணி சாஸ்திரி. மாதாமாதம் சுமார் 400 ரூபாய் வாடகை. மஹாபெரியவா சேவைக்காக அவ்வப்போது காஞ்சிபுரம் சென்று பெசண்ட் நகர் வீட்டுக்குத் திரும்பி வருவது வழக்கம். பெரியவா காஞ்சிமடத்தில் இருக்கும் காலகட்டங்களில் குடும்பத்துடன் சென்று சேவை செய்வார் மணி சாஸ்திரி.

ஒருமுறை பெசண்ட்நகர் வீட்டில் இருந்த மணிசாஸ்திரி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவருக்குத் திடீரென என்ன ஆயிற்று என்று குழம்பிய வீட்டார், தங்கள் குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான டாக்டர் பி.ஆர்.ஷெட்டியிடம் அழைத்துப் போனார்கள். மணிசாஸ்திரியைப் பரிசோதித்துப் பார்த்த ஷெட்டி இவரை உடனடியாக ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனாலும் மணிசாஸ்திரியின் பொருளாதார நிலை பற்றி நன்கு அறிந்தவர் ஷெட்டி. எனவே தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து அடையாறு பகுதியில் இருக்கும் வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையில் சேரச் சொல்லி அனுப்பினார்.

அதன்படி பதறிப் போனவர்கள், மணி சாஸ்திரியை அழைத்துக் கொண்டு V.H.S.மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அட்மிஷனும் உடனடியாகக் கிடைத்தது. பலதரப்பட்ட மருத்துவர்களும் வந்து மணிசாஸ்திரியைப் பரிசோதித்தார்கள். ஏராளமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் உடலில் எக்கச்சக்க காம்ப்ளிகேஷன் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருவாரம் இங்கேயே சிகிச்சை செய்வோம். அதன் பிறகு பார்ப்போம் என்றார்கள்.

மணி சாஸ்திரிகளிடம் இருந்து பேச்சே இல்லை. உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை. குடும்பத்தினர் அனைவரும் கலங்கினர். மஹாபெரியவாளுக்கு சேவை செய்தே தேய்ந்து போன இந்த தேகத்தை அந்த மகானே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தனர்.

டாக்டர்கள் சொன்ன ஒரு வாரம் முடிந்தது. ஆனால் மணி சாஸ்திரியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் தோற்றுப் போயினர். இந்த நிலையில் ‘நாளை இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்’ அதுதான் நல்லது’ என்று சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொன்னார்கள் டாக்டர்கள். அடுத்து என்ன செய்வது என்றே அந்தக் குடும்பத்தினருக்குப் புரியவில்லை. கண்ணீர் மல்க நின்றனர் அனைவரும்.

அப்போது ஹரிஹர சாஸ்திரி மருத்துவமனைக்கு வந்தார். படுக்கையில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த தம்பி மணிசாஸ்திரியிடம் சென்றார். தம்பியை இந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு. ‘கவலைப்படாதடா….உனக்கு ஒண்ணும் இல்லை. காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்த்திட்டு வருவோம் வாடா’ என்றார் தம்பியிடம் சுவாதீனமாக. மணிசாஸ்திரியிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. கேட்கக் கூடிய கேள்வியை உள்வாங்கிக் கொள்பவர்களால்தானே பதில் சொல்லமுடியும்? இப்போது தான் மணி சாஸ்திரி அந்த நிலையில் இல்லையே.

உடன் இருந்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் பதறிப் போனார்கள். உடலில் அசைவே இல்லாமல் இருக்கும் இவரை எப்படி காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போவது? அது ரொம்பவும் ஆபத்தானது என்று சட்டென்று மறுத்துப் பேசினார்கள். ஹரிஹர சாஸ்திரியைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.

மணி சாஸ்திரி வராவிட்டால் என்ன? அவன் சார்பாக நானே போய் மஹாபெரியவாளைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். அந்தக் கருணை தெய்வம் தான் இவனை உயிர்ப்பிக்க வேண்டும். நிச்சயம் இவனைக் காப்பாற்றும் என்று ஹரிஹர சாஸ்திரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

தம்பி மணி சாஸ்திரியை அவர் முன்பு இருந்த பழைய உற்சாக நிலையில் பார்த்துவிடத் துடித்தார் ஹரிஹர சாஸ்திரிகள். ‘மணி சாஸ்திரியை எப்படியாவது காஞ்சிபுரம் கூட்டிப்போனால், மகா பெரியவாளைப் பார்த்ததுமே எழுந்து உட்கார்ந்து விடுவான். ஆனால், அவன் இப்போது இருக்கும் நிலையில் காஞ்சிபுரத்துக்கு எப்படிக் கூட்டிப்போவது?’ என்று தீவிரமாக யோசித்தார் ஹரிஹர சாஸ்திரிகள்.

‘மணி சாஸ்திரியை எப்படியாவது காரில் உட்கார வைத்து காஞ்சிபுரம் கூட்டிப் போய் விடுவது’ என்ற ஹரிஹர சாஸ்திரிகளின் கருத்தை, குடும்பத்தினர் உட்பட மருத்துவர்கள் எவருமே ஏற்கவில்லை. அது மணி சாஸ்திரியின் தற்போதைய உடல் நிலைக்கு உகந்ததல்ல என்று கருத்து தெரிவித்தனர் அடையாறு வி.ஹெச்.எஸ். மருத்துவர்கள்.

“சரி… மணி சாஸ்திரியின் சார்பாக நான் காஞ்சிபுரம் புறப்படுகிறேன். அந்தக் கருணை தெய்வத்திடம் கண்ணீர் மல்க வேண்டுகிறேன். பயன் இல்லாமலா போகும்?” என்று திடமான நம்பிக்கையுடன் தன் குடும்பத்தினரிடம் சொன்ன ஹரிஹர சாஸ்திரிகள், அன்று இரவே காஞ்சிபுரம் கிளம்பத் திட்டமிட்டார்.

இவர்களின் குடும்பத்தின் மீது அபாரமான அன்பும் தீவிர மரியாதையும் கொண்ட, ‘பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த அன்பர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்களின் முயற்சியால் பயணத்துக்கு ஒரு காரும் ஏற்பாடானது. அந்த காரில் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரம் புறப்படத் தயாரானார்கள்.
ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்படத் தயாரான அதே இரவு. நேரம் மணி 11. இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துக்கு வருவோம்.

மடத்தில் பூஜைகளைப் பார்த்துவிட்டு, மஹா பெரியவாளையும் தரிசித்துவிட்டு, இரவு ஆகாரத்தையும் முடித்து, பக்தர்கள் பலரும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டிருந்தார்கள். மடத்திலேயே தங்கி மறுநாளும் மஹா ஸ்வாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அனுக்கிரகமும் உள்ளவர்கள் மட்டும் மடத்தில் இரவு தங்கி இருந்தார்கள். நேரம் ஆகி விட்டபடியால், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்கப் போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட காஞ்சி மடமே அமைதியான சூழ்நிலையில் இருந்தது. இரவு காவல் காக்கும் பணியில் உள்ள வாட்ச்மேன், மடத்தின் பிரதான கதவைப் பூட்டுவதற்காக முனைந்து கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்து, ஒரு சீடனை அனுப்பி அந்த வாட்ச்மேனைக் கூட்டிவரச் சொன்னார் மகா பெரியவா.

‘கதவைப் பூட்டுகிற வேளையில் பெரியவா வரச் சொல்கிறாரே…. ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது’ என்று தனக்குள் பரபரத்த வாட்ச்மேன், தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து அவசர அவசரமாக இடுப்பில் சுருட்டிக் கட்டிக் கொண்டு, மடத்துக்குள் விரைந்தார்.

பெரியவாளைப் பார்த்ததும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டார்.
பிறகு வாட்ச்மேனிடம் பெரியவா, “கதவைப் பூட்டிடாதே… மெட்ராஸ்லேர்ந்து ஹரிஹர சாஸ்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வருவான். கதவைப் பூட்டிட்டா அவனுக்குக் கஷ்டமா போயிடும். அவன் வந்தப்பறம் பூட்டிக்கோ” என்று சொல்ல, பெரியவாளின் ஞான திருஷ்டியைக் கண்டு பரவசப்பட்ட வாட்ச்மேன், “அப்படியே ஆகட்டும் சாமீ” என்று மீண்டும் கும்பிடு போட்டு, வெளியே நடந்தான்.

மடத்தின் மெயின் ‘கேட்’ அருகே வந்தவன், கதவைப் பூட்டாமல், அங்கேயே ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கியது.

ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அந்த கார், காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலில் ‘கிறீச்’சிட்டு நின்றது.

இதைத்தானே வாட்ச்மேனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்?!

முதலில் ஹரிஹர சாஸ்திரிகள் காரில் இருந்து இறங்க, வாட்ச்மேன் பரவசமானான். “வாங்க ஐயரே… நீங்க இன்னிக்கு ராத்திரி, மடத்துக்கு வருவீங்கன்னு சாமீ இப்பதான் அரை மணி நேரம் முன்னே சொன்னாரு… உங்களுக்காகக் கதவைக்கூட பூட்ட வேண்டாம்னு சாமீ சொல்லிச்சு. வாங்க, வாங்க” என்று வரவேற்றான். ஹரிஹர சாஸ்திரிகளை முன்னே அறிந்தவர்தான் இந்த வாட்ச்மேன்.

தன்னுடன் வந்த ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய பிரமுகர்களைப் பார்த்து, “மடத்துக்கு இன்னிக்கு நாம வரப்போறோம்னு பெரியவாளுக்கு நியூஸ் கொடுத்திருந்தேளா?” என்று கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினர்.

ஹரிஹர சாஸ்திரிகள் மெய்சிலிர்த்துப் போனார்.

“மகா பெரியவாளே…” என்று நா தழுதழுக்க, அந்தக் கலியுக பரமேஸ்வரனின் திருநாமம் உச்சரித்து மடத்தின் வாசலுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். இதுவே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது அவருக்கு!

மெல்லிய விளக்கொளியில் இருந்த ஸ்ரீமடத்துக்குள் அவர்கள் நுழைந்தனர்.

அப்போது ஒரு சிஷ்யன் வேகமாக இவர்களிடம் வந்து, “மாமா… பெரியவா உங்களுக்காகக் காத்திண்டிருக்கா… உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னா” என்றான், அடுத்தகட்ட அதிரடியாக.

ஹரிஹர சாஸ்திரிகளுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் அடுத்த அதிர்ச்சி. ‘நாம் வரப்போவது பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவாவது பரவாயில்லை. வந்தவுடனே நம்மைப் பார்க்க வேண்டும் என அந்தப் பரப்பிரம்மம், இரவில்கூட ஓய்வெடுக்காமல் காத்துக் கொண்டிருக்கிறதே!’

சிஷ்யன் முன்னால் நடக்க, பரபரவென்று அவனைப் பின்தொடர்ந்தார்கள் அனைவரும்.

பெரியவா அமர்ந்திருந்த அந்தக் குடிசையின் வாசலுக்குச் சென்றதும், சிஷ்யன் ஒதுங்கிக் கொண்டான். ஹரிஹர சாஸ்திரிகள் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், “வாப்பா ஹரிஹரா… ராத்திரி வேளைல வந்திருக்கே. முக்கியமான ஜோலின்னு, துணைக்கு ஆசாமிங்களையும் கூட்டிண்டு கார்லயே வந்திட்டியோ?” என்று அந்த மகா முனிவர், இவர்களைப் பார்த்து இயல்பாகக் கேட்டார்.


“அது வந்து பெரியவா…” என்று ஹரிஹர சாஸ்திரிகள் மெள்ள விஷயத்தைச் சொல்லத் துவங்க … “முதல்ல எல்லாரும் உக்காருங்கோ. ஆகாரமெல்லாம் ஆயிடுத்தோல்யோ? இல்லேன்னா அரிசி உப்புமா ரெடி பண்ணச் சொல்லட்டுமா?” என்று கேட்டார் பெரியவா.

“எல்லாம் ஆச்சு பெரியவா. எதுவும் வேண்டாம்” என்றவர்கள், தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.

“பெரியவா… என் தம்பி மணி சாஸ்திரி ஒடம்பு முடியாம படுத்திண்டிருக்கான். இன்னிக்கோ, நாளைக்கோன்னு டாக்டர்கள் நாள் குறிச்சிட்டுப் போயிட்டா…” என்று அடுத்து எதோ சொல்ல வந்த ஹரிஹர சாஸ்திரிகளை பெரியவா இடை மறித்தார். “ஏண்டா… இப்ப அவனை, தனியா விட்டுட்டா எல்லாரும் இங்க வந்திருக்கேள்?” என்று திகைப்புடன் கேட்டார்.

பெரியவாளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது ஹரிஹர சாஸ்திரிகளுக்கு.

சில விநாடிகள் தியானத்துக்குப் பிறகு பெரியவா திருவாய் மலர்ந்தார். “அசடே… இந்தப் பிரசாதத்தைக் கொண்டுபோய் மணிகிட்ட கொடு. எல்லாம் காமாட்சியோடது” என்று பிரசாதத் தட்டுகள் இருந்த பக்கம் கைநீட்டிக் காண்பித்தார்.

அங்கே-

நாலைந்து மூங்கில் தட்டுகள். அதில் ஏராளமான புஷ்பங்கள், மாலைகள், விதம்விதமான பழங்கள், விபூதி, குங்குமம் என்று அனைத்தும் ஃபிரஷ்ஷாக இருந்தன. மூங்கில் தட்டின் விளிம்புகூட கண்களில் படவில்லை. அந்த அளவுக்குப் பிரசாதங்கள் அனைத்தும் அடர்த்தியாக – மூங்கில் தட்டையே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன.

ஹரிஹர சாஸ்திரிகளும் பெரியவாளிடம் இருந்து தன் வாழ்க்கையில் எத்தனையோ முறை பிரசாதங்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது போன்றதொரு பிரசாதங்களை – தூக்க முடியாத அளவுக்கு – அவர் பெற்றதே இல்லை.

எல்லோரும் பெரியவாளின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள். அனைவரையும் ஆசீர்வதித்தார் மகா பெரியவா.

“பெரியவா உத்தரவு கொடுத்தா, பிரசாதங்களை எடுத்துண்டு இப்பவே மெட்ராஸ் கௌம்பிடுவோம். மணி ரொம்ப சந்தோஷப்படுவான்” என்று தரையில் இருந்து, மெள்ள எழுந்தபடி கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

“அவசரப்படாதே… மணி சாஸ்திரி பத்திரமா இருப்பான். அகால வேளை. இங்கேயே படுத்துண்டுட்டு விடிகார்த்தால வெளிச்சம் வர ஆரம்பிச்சவுடனே கௌம்புங்கோ” என்றார் மகா ஸ்வாமிகள்.

“உத்தரவு பெரியவா” என்றபடி, வந்தவர்களுடன் சேர்ந்து தானும் மூங்கில் தட்டுகளைச் சுமந்தபடி அங்கிருந்து வெளியே வந்தார் ஹரிஹர சாஸ்திரிகள். மடத்தின் ஒரு மூலையில் – தலைமாட்டில் பிரசாதத் தட்டுகளை வைத்துவிட்டு மேல்வஸ்திரத்தைத் தரையில் விரித்து, லேசாகக் கண் அயர்ந்தனர்.

புரண்டு புரண்டு படுத்தார்களே தவிர, எவருக்கும் தூக்கம் வரவில்லை.

பொழுது விடிந்தவுடன் இந்தப் பிரசாதங்களைக் கொன்டுபோய் தம்பி மணியிடம் சேர்க்க வேண்டும் என்பதே ஹரிஹர சாஸ்திரிகளின் நினைப்பாக இருந்தது. ‘அவன் இந்நேரம் எப்படி இருக்கிறானோ? பெரியவாளின் ஆசியுடன் தேறி விடுவானா?” என்றெல்லாம் இவரது எண்ணம் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

அதிகாலை ஐந்து மணிக்கு மடத்தின் வாசலில் சாணம் தெளித்து, கோலம் போடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரிஹர சாஸ்திரிகள் உட்பட அனைவரும் காருக்கு வந்துவிட்டனர். டிரைவரும் தயாராகவே இருந்தார்.

பிரசாதங்களைச் சுமந்தபடி அந்த கார், அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. பெரியவாளின் பிரசாதத் தட்டு ஒன்றைத் தன் மடியில் வைத்திருந்த ஹரிஹர சாஸ்திரிகள், ஏதோ பெரியவாளே தன்னுடன் பயணித்து வருவதுபோல் உணர்ந்தார்.

காலை சுமார் ஏழரை மணிக்கு அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரிக்குள் அந்த கார் நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், தங்களால் முடிந்த தட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு மணி சாஸ்திரி இருந்த வார்டை நோக்கி நடந்தனர்.

மலர்களும் மாலைகளும் நிரம்பிய அந்த மூங்கில் தட்டில் இருந்து கிளம்பிய திவ்யமான நறுமணம், மருத்துவமனையின் சூழலையே மாற்றியது.

எதிர்ப்பட்ட மருத்துவர்களும் நர்ஸ்களும், காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து மகா பெரியவா ஆசியுடன் இந்தத் தட்டுகள் வந்துள்ளன என்பதை அறிந்து, அதைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வந்திருந்த சில உறவுக்கார அன்பர்கள், அதற்கு நமஸ்கரிக்கவே செய்தனர்.

இந்தக் களேபரங்களை எல்லாம் தாண்டி மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் இவர்கள் செல்வதற்குச் சில நிமிடங்கள் கூடுதலாகவே ஆயின.

‘தம்பி மணி சாஸ்திரி நேற்றைய இரவுப் பொழுதை எப்படிக் கழித்தானோ? அவனுடைய தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?’ என்றெல்லாம் ஹரிஹர சாஸ்திரிகள் மனம் கன்னாபின்னாவென்று அலைந்தது.

இதோ ஹரிஹர சாஸ்திரிகள், மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரசாத மணம், அந்த அறைக்குக் கூடுதல் பிரகாசம் தந்தது. சூழலையே இதமாக்கியது.

“தம்பீ மணி…” என்று கூப்பிட்டுக் கொண்டே வார்டுக்குள் முதலில் நுழைந்த ஹரிஹர சாஸ்திரி ஏகத்துக்கும் அதிர்ந்துவிட்டார்

ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பியவர்களும் மடத்தில் இருந்து பெரியவாளின் அனுக்ரஹமாகக் கிடைத்த பிரசாதங்களைக் கைகளில் சுமந்திருந்தனர். ‘மணி சாஸ்திரியின் கையில் எப்படியாவது இந்தப் பிரசாதங்களைக் கொடுத்து, மஹாபெரியவாளின் அருள் அவனுக்குக் கிடைக்கவைக்க வேண்டும். பிரசாதமாகக் கொண்டு வந்திருக்கும் ஓரிரு பழங்களை நறுக்கி, அவனுக்கு உட்கொள்ளக் கொடுக்க வேண்டும். விபூதி பிரசாதத்தை அவன் நெற்றியில் இட்டுவிட்டு, தினமும் தலைமாட்டுக்கு அருகில் வைக்கச் சொல்ல வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் அவரது அண்ணனான ஹரிஹர சாஸ்திரிகள்.

மணிசாஸ்திரி இருந்த வார்டுக்குள் நுழைந்ததும், ஏகத்துக்கும் அதிர்ந்து விட்டார் ஹரிஹர சாஸ்திரி. உடல் நலம் முடியாமல் – நோயின் உக்கிரமம் தாளாமல் சுருண்டு படுத்திருப்பான் மணி சாஸ்திரி என்று சென்றவருக்கு, அவர் ஜம்மென்று நிமிர்ந்து பெட்டில் உட்கார்ந்திருந்ததால் அதிர்ச்சி இருக்காதே பின்னே?! அது மட்டுமல்ல… ‘வாப்பா ஹரிஹரா… எங்கேர்ந்து வர்றே? என்று மணி சாஸ்திரி குரலில் பிசிறு இல்லாமல் கேட்ட கேள்வியைத் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை ஹரிஹர சாஸ்திரி.

தம்பியை இந்த நிலையில் பார்த்ததும், ஹரிஹர சாஸ்திரிக்குப் பேச்சே எழவில்லை. கண்களில் நீர் கசிய ஆனந்தப்பட்டார். நெகிழ்ச்சியில் பூரித்தார். காஞ்சி மடத்துக்குச் சென்று பெரியவா தரிசனம் முடித்து வந்திருக்கும் வேளையில் இப்படி ஓர் அற்புதமா என்று எண்ணி, அந்த நடமாடும் தெய்வத்தை ஒரு கணம் இருந்த திசையில் இருந்தே மனமுருக வேண்டிக் கொண்டார். மானசீக நமஸ்காரத்தைத் தெரிவித்தார்.

பிறகு தன் இயல்புக்கு வந்த ஹரிஹர சாஸ்திரி ‘என்ன மணி எப்படிடா இருக்கே? இப்படித் திடீர்னு எழுந்து பெட்ல உக்காந்திண்டிருக்கியே. உன்னால முடியறதா? டாக்டருங்க பார்த்தா ஏதானும் சொல்லப் போறா’ என்று வேகவேகமாக நடந்து பெட்டில் மணிசாஸ்திரியின் அருகில் உட்கார்ந்து கொண்டார் ஹரிஹர சாஸ்திரி. கூடவே நர்ஸ், மற்றும் டாக்டர்களின் அனுமதி பெறாமல் எழுந்து உட்கார்ந்து தன்னை சிரமப்படுத்திக் கொள்கிறானோ என்றும் கவலைப்பட்டார் ஹரிஹர சாஸ்திரி.

‘ஒண்ணும் கவலைப்படாதீங்கோ…நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி வரைக்கும் என்னால எதுவும் முடியாம இருந்தது. இன்னிக்கு முடியறது. எழுந்து உட்கார்ந்தேன்’ என்றார் மணி சாஸ்திரி.

‘எப்படிடா முடியறது? இந்த நாள் வரைக்கும் எங்களையெல்லாம் இப்படிக் கவலைப்பட வெச்சுட்டியேடா…உனக்கான நாளையும் டாக்டருங்க குறிச்சிக்கும்படியா வெச்சுட்டியேடா’ என்று மணி சாஸ்திரியை ஆதுரமாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தார் ஹரிஹர சாஸ்திரி.

‘எனக்கு ஒன்னும் இல்லேண்ணா… நேத்து ராத்திரி பெரியவா இங்கே வந்தா…’ மணி சாஸ்திரி இப்படிச் சொல்லத் துவங்க மிரண்டு போனார் ஹரிஹர சாஸ்திரி.

‘என்ன சொல்றே..பெரியவா இங்கே வந்தாளா? எந்தப் பெரியவா?

என்னண்ணா இப்படிக் கேக்கறேள்? நமக்கு எல்லாம் பெரியவான்னா யாரு? காஞ்சி தெய்வம் தான். சாட்சாத் அந்தப் பெரியவா இங்கே வந்தா…’

வந்தாரா… இந்த ஆஸ்பத்திரிகு வந்தாரா…என்ன சொன்னார்? ஹரிஹர சாஸ்திரியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை. தம்பி சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

‘ராத்திரி ரெண்டு மணி இருக்கும். தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுத்தேன். திடீர்னு அதிகார தொனியில் ஒரு குரல் – ‘மணி எழுந்து உட்கார்டானு. பொசுக்குன்னு எழுந்து பார்த்தா யாருமே இல்லை. எதோ பிரமையோன்னு திரும்பப் படுத்துட்டேன். அப்புறமும் அதே அதிகாரக் குரல் – ‘மணி..உனக்கு ஒண்ணுமே இல்லை. நீ ஆரோக்கியமா இருக்கே.எழுந்து உட்கார்டா’ தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

மஹாபெரியவா என் முன் தோன்றி சொன்னார். ‘ஜய ஜய சங்கர’னு கன்னத்துல போட்டுண்டு ‘அப்படியே ஆகட்டும் பெரியவா’னு சட்டுன்னு போர்வையை விலக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இது நாள் என்னைப் பாடாப் படுத்திண்டிருந்த உபாதை எதுவும் அதுக்குப் பிறகு கொஞ்சமும் இல்லை. உடம்பு ரொம்ப இயல்பா ஆயிடுத்து’ – மணி சாஸ்திரி வெகு சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹரிஹர சாஸ்திரிகளும், அவருடன் வந்தவர்களும் அடைந்த ஆச்சரியத்துக்கும் பிரமிப்புக்கும் அளவே இல்லை. ‘மணி உனக்கு ஒடம்பு நன்னா ஆகணும்னு தான் காஞ்சிபுரம் போய் அந்த மஹானைத் தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு வந்தோன். ஆனா அவரோட பிரசாதம் உன் கைக்கு வந்து சேர்றதுக்குள்ளே உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துட்ட அந்த தெய்வத்தின் கருணையை எப்படிப் பாராட்டறது’ என்றவர், தான் கொண்டுவந்த பிரசாதத்தில் இருந்து விபூதியை மட்டும் எடுத்து மணி சாஸ்திரியின் நெற்றியில் இட்டுவிட்டார்.

V.H.S.மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் இந்தத் தகவல் போய் ஓடோடி வந்தார்கள். ‘நேற்றைய தினம் வரை நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மணி சாஸ்திரியா இவர்? என்று ஆளாளுக்குத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வந்த பிரசாதம் மருத்துவமனைக்குள் விநியோகம் ஆனது.

‘என்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்றேள்?” என்று மணி சாஸ்திரி ஆர்வமுடன் கேட்டது மருத்துவர்களுக்கே மாபெரும் சந்தோஷத்தை தந்தது.

அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து இயல்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மணி சாஸ்திரி. 1983-ஆம் வருடத்திலேயே நாள் குறிக்கப்பட்ட மணி சாஸ்திரி, பன்னிரண்டு வருடங்கள் கழித்து 1995-ல் இயற்கை எய்தினார்.

காஞ்சி மடத்துக்கு மணிசாஸ்திரி செய்திருந்த தொண்டைப் பாராட்டி மடத்தின் சார்பில் அவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு தந்திருந்தார்கள். அந்த வீட்டில் தான் அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

பெரியவா சரணம் பெரியவா கருணை.

கட்டுரையாளர் : தெய்வத்தின் குரல் திரு.சுவாமிநாதன் அவர்கள்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி

Thursday, 21 January 2016

"பாமதி'யும்,'பரிமள'மும்" - மஹா பெரியவா

ஸ்ரீமடம், கும்பகோத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம்.

மகாப் பெரியவாள் பிரும்மஸூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஏராளமான வித்வான்களும்,சந்யாசிகளும் கேட்டுப்
பரவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்வான் இடையில் சந்தேக விளக்கம் கேட்டார்.

பெரியவாள் ஐந்து நிமிஷம்போல் பதில் சொல்லி விட்டு,  
" ..'பாமதி'யிலோ,   'பரிமளத்'திலோ இதற்கு
விஸ்தாரமான பதில் இருக்கு.அதைப்படிச்சால் போதும்... மடத்து லைப்ரரியிலே அந்தப் புஸ்தகம் இருக்குமே! பார்த்துவிடலாமே?" என்றார்கள்.

புத்தகசாலைப் பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரி,

"யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருக்கார்... இப்போ லைப்ரரியில் இல்லை!" என்றார்.

அந்த சமயத்தில் தெருப்பக்கத்தில் பேரிச்சம்பழக்காரன் குரல் கணீரென்று கேட்டது.

"பழைய புஸ்தகங்களைப் போட்டுவிட்டு, சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா, உடனே போய், அவனிடம் இருக்கிற 
புஸ்தகங்களையெல்லாம் விலை பேசி வாங்கிக்கொண்டு வா" என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.

அவர் ஒரு கட்டு புஸ்தகங்களுடன் வந்தார். 

அபூர்வமான சம்ஸ்க்ருத புத்தகங்கள்! புத்தகக் காகிதம் பழுப்பு நிறமாகிவிட்டிருந்தது. 

"சாஸ்திரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ..."என்று
உத்திரவாயிற்று.

சாஸ்திரிகள் ஒவ்வொரு புஸ்தகமாக எடுத்து தலைப்பை சொல்லிக் கொண்டு வந்தார். அந்தக்கட்டில், 'பாமதி'யும்,'பரிமள'மும்
(அத்வைத விளக்க நூல்கள்) இருந்தன.
------------------------------------------------------------------------
'பாஷ்ய பாடம் நடக்கும் நேரம் பார்த்து
பேரிச்சம் பழக்காரன் வருவானேன்?
அவனிடம் புஸ்தகங்கள் இருப்பானேன்?
அவைகளை விலைக்கு வாங்கும்படி
பெரியவாளே உத்திரவு இடுவானேன்?
(கீழே உள்ள கதையைப் படியுங்கள் விளக்கத்திற்கு)
-------------------------------------------------------------------------------------
அம்பிகாபதி கதை :(இதனை  "அம்பிகாபதி" திரைப்படத்தில் கூட பார்த்து இருப்போரும் உண்டு. )

கல்விச்சக்ரவர்த்தி கம்பருடைய மகன் அம்பிகாபதியும், குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியும் ஒருவரையொருவர் விரும்புவதைத் தெரிந்து கொண்ட ஒட்டக்கூத்தர், சோழனிடம் இதைப்பற்றி கொளுத்தி விட்டார். அரசன் நம்புவதற்காக, கம்பரையும் அம்பிகாபதியையும் மட்டும் தனியான விருந்துக்கு அழைக்கச் சொல்லி, அவர்களுக்கு அன்னம் பரிமாறும் வேலையை இளவரசியான அமராவதி செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு பண்ணினார்.

விருந்துக்கு அம்பிகாபதி வரப்போவதை அமராவதிக்கும், அமராவதி அன்னம் பரிமாறப் போவதை அம்பிகாபதிக்கும் சொல்லக் கூடாது என்று கூறினார். அப்போதுதான் அவர்களுடைய அன்பை கண்கூடாக அரசனால் காண முடியும் என்றும் கூறினார்.

அதன்படியே ஒட்டக்கூத்தர், அரசன், கம்பர், அம்பிகாபதி நால்வரும் விருந்துண்ண அமரவும், அமராவதி அன்னவட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்ததும், இருவருக்குமே பெருத்த ஆஸ்சர்யமும், ஆனந்தமும் உண்டானது! 

அம்பிகாபதியும் பெரிய கவியில்லையா? அமராவதியை எதிர்பாராமல் அங்கு பார்த்த ஆனந்தத்தில், கவிதையும் துள்ளிக் கொண்டு வந்தது! தான் எங்கு இருக்கிறோம், என்ன பின்விளைவு என்பதெல்லாம் மறந்தது இருவருக்கும்!

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய......."

என்று அம்பிகாபதி ஆரம்பித்ததும், அமராவதியின் பாதம் கொப்பளித்ததோ இல்லையோ....அரசனின் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது! கம்பரும், மைந்தனின் தகுதியில்லா அன்பால், நிலைகுலைந்து போனார்! விட்டால்....பிள்ளை இன்னும் எதையாவது பாடி, மன்னன் அவனுக்கு அங்கேயே ஸமாதி கட்டி விடுவானோ? என்ற பயத்தில், வாக்தேவியான வாணியை சரணடைந்தார்! பிள்ளை ஆரம்பித்த கவிதையை, தான் முடித்து வைத்து, அவனையும், இளவரசியையும் சுதாரித்துக் கொள்ள வைத்தார்.

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய.......
கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று 
கூவுவாய் நாவில் வழங்கோசை வையம் பெறும்...!" என்று முடித்தார்.

ஒட்டக்கூத்தரோ, மன்னருக்கு தூபம் போட்டு, அம்பிகாபதி பாடியது அமராவதியைப் பார்த்துதான், என்றதும், "கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியின் குரல் கேட்டுத்தான் என் மகன் பாடினான்" என்று கம்பர் சொன்னதும், அரசன் ஆட்களை அனுப்பி, வீதியில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண் யாராவது இருந்தால் உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

சதா தமிழ் என்னும் அழகால் தன்னை மேலும் அழகு படுத்தும் தன்னுடைய பக்தனான கவிச்சக்ரவர்த்தியை, கலைமகளான ஸரஸ்வதி தன் அனுக்ரஹ அழகால் அக்ஷணமே காப்பாற்றினாள்.

ஆம்! கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாக ஸாக்ஷாத் ஜகன்மாதாவான ஸரஸ்வதியே வந்துவிட்டாள் !

காவலர்கள் அவளை அழைத்து வந்து, மன்னன் முன் நிறுத்தியதும்,
"கம்பனின் கவிதைக்கு எதைத்தான் தரக்கூடாது? கொட்டிக்கிழங்கு தரட்டுமா?" என்று அவள் கூறியதும், மன்னன் ஒட்டக்கூத்தரை ஓரங்கட்டி விட்டுவிட்டு, தன் சந்தேஹம் ஆதாரமற்றது என்று அப்போதைக்கு நம்பினான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாக்தேவியை நாவில் நர்த்தனமாடவிட்ட கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வரும்போது,- ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி' யான நம் பெரியவா ஸங்கல்பித்தால், அம்பிகை ஏன் பாமதி, பரிமளத்துக்காக, 'பேரீச்சம்பழம்' விற்க மாட்டாள்?