Monday, 23 July 2012

பெரியவாளும் - ரோஜா மாலையும்

 


பெரியவாளிடம் அத்யந்த  பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள்  குடும்பம். அவர்  தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும்  என்று கொள்ளை ஆசை! 
பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு

 குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம்  பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார்.  

ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ.    பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள்.


 "இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.


மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கர மடத்தி லிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக  தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு!



"பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி

 இருக்கும்! 

குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம்  "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக் கொண்டார்!
சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். 
சற்று நின்று திரும்பி,  "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். 
இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா 'வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
 பகவான் ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!

Tuesday, 17 July 2012

மகாபெரியவா சொல்லிக்கொடுக்கும் பஞ்சாயதன பூஜை


“”தென்புலத்தார், தெய்வம்..." என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.ஆபீஸ்க்குப் 
போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய 
வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது  சம்பிரதாயம். இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு 
சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராட்சைப்பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராட்சை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக
நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேளை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம். பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி,  அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக்  கொடுத்து விடுகின்றோம்?. வெறுமே அவரிடம் காட்டுகிறோம்!. பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. நிவேதயாமி என்றால் அறிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில்  இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். 

அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா???. செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும் கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.   

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.
அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும்.  நல்லவர்களாவோம்.