உடனே அவர், `அம்மா, உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே ! அவனுக்குச் செய்ய வேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா? என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.
அவருடைய கணக்கும் சரியாகத்தான் இருந்தது. அமரசிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்து கொண்டாள்.
உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகிவிட்டாள். திரை அறுந்து விழுந்தது.
அப்புறம் அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டான்.
ஸரஸ்-அதாவது நீர் நிலையில்-இருக்கிறவள் ஸரஸ்வதி. அறிவுதான் அந்த நீர்நிலை. அது கொஞ்சம் கூடக் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதற்குள் அவள் இருக்க முடியும். ஆனால், ஆசார்யாள் அவதரித்த காலத்தில் எப்படியிருந்தது?
ஏகப்பட்ட மதங்கள்-எழுபத்திரண்டு என்று சொல்வார்கள்-விதண்டாவாதங்களைச் சொல்லிக்கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸரஸானது ஒரே சேற்றுக்குட்டை மாதிரி ஆகிவிட்டது. அப்போது அத்வைத உபதேசத்தால், ஆசார்யால்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடியோடு வாரி அப்புறப்படுத்தி, ஸரஸைத் தெளிய வைத்து, ஸரஸ்வதியை நிஜமான ஸரஸ்வதியாக்கினார் என்று `வக்தாரம் ஆஸாத்ய ' இப்படி ஒரு ஸ்லோகம் போகிறது...!!!
இம்மாதிரி ஸரஸ்வதியை ஸரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ஸரஸ்வதியை அப்புறப்படுத்தும்படியாயிற்று. பிறகு, அவர் ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கும் தாமும் அநுக்கிரகத்தைச செய்தார். அதுவே 'அமரகோச'த்தின் கதையும் ஆகும்.
ஆசார்யாளிடம் தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன், அவனுக்குத் தான் எழுதிய புஸ்தகங்கள் (சுவடிகள்) ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற என்ணம் வந்தது.
அத்வைத பரமாக ஆச்சார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்மந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன சித்தாந்தம் தோற்றுப்போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்கள் மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.
எந்த மதஸ்தரானாலும் நேர்மை, சத்தியம் உள்ளவர்கள் எதிலும் இருப்பார்கள். ஜைனர்களுக்கு சத்தியம், நேர்மை மிகவும் அதிகம். அவர்கள் ஞானச்சம்மந்தமூர்த்தி ஸ்வாமிகளுடன் வாதத்துக்கு வந்தபோது, தாங்களாகவே, "நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துபோவோம்" என்றார்கள். அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றில் அவரிடம் தோற்றுப்போனார்கள். ஆனால், கருணை மிகுந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அவர்களை கழுவேற நினைக்கவில்லை. ஆனாலும், அவர்களாகவே பிடிவாதமாக, "நாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு, கழுவேறினார்கள்.
ஞானசம்பந்தர் சமணர்களை இரக்கமில்லாமல் தண்டித்ததாக சிலர் நினைப்பது தப்பு. இவர் வாதத்தில் ஜெயித்து, அதனால் பாண்டிராஜா இவர் பக்கம் சேர்ந்து, எதிராளிகளுக்கு எந்த சிட்சை தரவும் இவருக்கு அதிகாரம் தந்தும்கூட, அவர் ஜைனர்களை மன்னித்ததே அவருடைய பெருமை. அப்படியும் வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமை.
எதற்காக இவை சொல்லப்பட்டது, என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமரசிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது.
எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று, எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான்.
இதை ஆச்சார்யாள் கேள்விபட்டதும் துளிக்கூட சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.
"அடடா., என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? லோகம் என்று ஒன்று இருந்தால், நானாதினுசான அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்ராயங்ககள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும்.எதிர்க்கட்சி என்று ஒன்று இருந்தால்தான், நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ளமுடியும்.
நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்துவிட்டுப்போ. ஆனாலும், நீ மகா புத்திமான் என்று உன்னை நான் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்ல முடியுமோ அத்தனை நன்றாகச்செய்து சுவடுகளை எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்;
உன் புத்தியளவில், நீ சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா? என்று ஆசார்யாள் அமரசிம்மனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசியாக அக்னியில் போட இருந்த சுவடியை போடாமல் தடுத்தார்.
அப்போது அவன் கையில் இருந்ததுதான் 'அமரகோசம்'. ஆச்சார்யாள் தடுத்திருக்காவிட்டால், அதுவும் "ஸ்வாஹா"வாகியிருக்கும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக, சமய சம்மந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயேபோய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆச்சார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்' என்ற பெயருக்கு ஏற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.
அகராதியில் அதை எழுதியவன் தன்னுடைய சித்தாந்தம்(சுய கருத்துக்கள்)
முதலான சொந்தக் கொள்கைக்கும் பட்சபாதம் காட்டக்கூடாது. பிற மதங்களைச் சேர்ந்த வார்த்தைகளானலும், இங்கே அகராதியில், அவற்றை விட்டுவிடாமல், ஆட்சேபிக்காமல்,, அவற்றுக்கு அந்தந்த மதஸ்தர்கள் என்ன அர்த்தம், என்ன பெருமை நினைக்கிறார்களோ அதைத்தான் கொடுக்க வேண்டும். வேண்டுமானால், 'இப்படி இன்னாருடைய நம்பிக்கை' (belief) என்று பட்டும் படாமலும் சேர்க்கலாமே தவிர, கண்டனம் ஒன்றும் பண்ணக்கூடாது. எல்லாவார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்கத்தான் வேண்டும்.---அது எந்தக் கட்சியாரின் கொள்கை என்று பார்ப்பது அகராதிக்காரனின் வேலை இல்லை.
இந்த நியாயத்துக்கு கட்டுப்பட்டுத்தான் அமரசிம்மன் ஜைனனாக இருந்தபோதே இந்த 'அமரகோச'த்தை எழுதியிருக்கிறான். இன்றைக்கும் சகல ஸமஸ்கிருத மாணவர்களும் நெட்டுருப் போடுகிறமாதிரி, பொது நோக்கோடு எழுதியிருக்கிறான்.
'அகராதியையா? நெட்டுருவா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி நெட்டுருப் போடுவது? என்று தோன்றும். ஆனால், அமரகோசம் அழகான சுலபமான சுலோகங்களாக, காவியம் மாதிரி, ஸ்தோத்திரம் மாதிரி, அப்படியே நெட்டுருப்போட வசதியாகத்தான் இருக்கிறது. அதை மனப்பாடம் செய்வது வழக்கமாகி விட்டிருக்கிறது.
அத்தனை வித்யார்த்திகளுக்கும் ஏட்டுச் சுவடியில் எழுதிக்கொடுப்பது என்றால் அதற்கே ஆயுச்காலம் போதாது. எனவே, எதையும் மனப்பாடம் (memorise) பண்ணுகிற மாதிரி கொடுப்பதே யுக்தம் என்று கண்டார்கள். பேச்சு நடையில் இருப்பது மறந்து போகும். எப்போதும் நாம் பேசிக்கொண்டே இருப்பதால், அதே நடையில் இருக்கிற பாடம் தனியாக மனஸில் நிற்காமல் உதிர்ந்து போய்விடும்.
ஆனால், அதுவே, ஒரு சந்தம், எதுகை, மோனை முதலானவைகளோடு சேர்ந்து செய்யுளாக (poetry) வந்து விட்டால், மனப்பாடம் செய்து மனஸில் மறக்காமல் பதித்துக் கொள்ளலாம். இதனால்தான், எந்த சாஸ்த்திரத்தையும் சுலோகங்களாகச் செய்து உருப்போட வைத்தார்கள். அச்சுப் புஸ்தங்கள் வருகிற வரையில், மகா பண்டிதர்களாக இருந்த பலர், ஒரு ஏட்டுச்சுவடிகூட இல்லாமல், ஞாபக சக்தியிலிருந்தே சகல சாஸ்திரங்ககளையும் கற்றுக்கொண்டு சொல்லி வந்தார்கள்.
அந்தக் காலத்தில், எல்லா சாஸ்திரங்களும்-வேதாந்தம், வைத்தியம், சங்கீதம் டிக் ஷனரிகூடத்தான்--சுலோகங்களாகத்தான் செய்யப்பட்டன. காரணம் என்ன? அப்போது அச்சுப் போட்டுப் புஸ்தகம் தயாரிக்கத் தெரியாது. எனவே கடைக்குப்போய் விலை கொடுத்து எத்தனை பிரதி வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றால் முடியாது.
இப்போது புஸ்தகம் என்று ஒன்று இருப்பதால், 'பார்த்துக்
கொள்வதற்குதான் (for ready reference) புஸ்தகம் இருக்கிறதே' என்று எவரும் எதையும், இப்படி மனசுக்குள் ஆழமாக வாங்கிக்கொள்ளாத நிலைமையையே பார்க்கிறோம். இன்று லைப்ரரிகள் வெளியே அதிகம்.
அக்காலத்திலோ எழுதப் படிக்கத்தெரியாதவர்கள்கூட , ரொம்பப் பேர் தாங்களே 'வாக்கிங் லைப்ரரி'களாக (நடமாடும் வாசக சாலைகளாக) இருந்து வந்தார்கள். காரணம் நெட்டுருப் பழக்கம்தான். இப்படி நெட்டுருப் பண்ணுவதாலேயே புத்திக்கு ஒரு பலம் ஐகாக்ரியம் (concentration) ஒழுக்கம் (mental dicipline) இவையும் மாணாக்கருக்கு உண்டாயிற்று. நிறைய நேரம் இதே காரியமாக உட்கார்ந்தால்தானே, ஒரு விஷயம் மனப்பாடம் ஆகும்?
ஆதலால் மாணாக்கர்களின் புத்தியைக் கன்னாபின்னா என்று பல விஷயங்களில் போகாமல் கட்டிப்போட்டுப் படிப்பிலேயே வைத்திருப்பதற்கு, இப்படி மனப்பாடம் பண்ணுவது ரொம்ப சகாயம் இருந்தது. இதற்கு வசதியாக சகல சாஸ்திரங்ககளையும் ஸயன்ஸ்களையும் பத்யமாக (poetry) எழுதி வைத்தார்கள். கத்யம், பத்யம் என்று இரண்டு.-கத்யம் 'பரோஸ்'; பத்யம்-'பொயட்ரி'.
சுலோக ரூபத்தில் வெகு அழகாக 'அமர கோச'த்தை எழுதினான் அமரசிம்மன். அதிலே ஹிந்துமத தெய்வங்களின் பெயர்கள் வருகிறபோது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு என்னென்ன முக்கியமான பெயர்கள் உண்டோ அத்தனையும், கொஞ்சங்கூட மதபேத புத்தியில்லாமல், அடுக்கிகொண்டு போவான். அதை கேட்டாலே, அகராதியாகத் தோன்றாது.
அர்ச்சனை போல -- நாமாவளி போல -- தோன்றும். இதோ 'சம்பு ' என்ற வார்த்தைக்கு பிரதிபதங்களாக, 'அமரம்' சொல்வதை படியுங்கள்.
சம்பு; ஈசு: பசுபதி; சிவ: சூலி மகேஸ்வர: |
ஈச்வர: சர்வ ஈசான: சந்த்ரசேகர: ||
பூதச: கண்டபரக: கிரீசோ கிரீசோ ம்ருட: |
ம்ருயுஞ்ஜய: கிருத்திவாஸா : பினாகீ பிரமாததிப்: ||
அமரசிம்மன் பகவந் நாமாக்களை ரொம்பவும் ஆசையோடு சொல்லிக்கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. ஆரம்ப மாணவர்களும் நினைவு வைத்துக்கொள்கிற மாதிரி சுலபமாக லலிதமாகப் பதங்களைப் போட்டிருக்கிறான்.
'இந்திரா' என்ற வார்த்தை வந்தவுடன், இப்படியே மகாலக்ஷ்மியைப் பற்றிப் பொழிகிறான்.கேட்கவே லக்ஷ்மிகரமாக இருக்கும்.
இந்திரா லோகமாதா மா க்ஷீரோததனயா ரமா
பார்கவி லோகஜனனீ க்ஷீர ஸாகரகரகன்யகா
லக்ஷிமீ: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீ: ஹரிப்ரியா
இப்படிப் போகிறது. டிக் ஷனரி மாதிரி இல்லை; ஸ்தோத்திரமாக இருக்கிறது !
இப்படிப் பக்ஷபாதமில்லாமல் அர்த்தம் சொன்ன அமர சிம்மனுக்கும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பக்ஷபாதம் வந்ததுதான் வேடிக்கை.
'பௌத்த மதம் ' என்று வந்தால் மட்டும் கொஞ்சம் மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குப் போகவில்லை. நியாயமாகப் பார்த்தால் பௌத்தத்தைவிட, ஹிந்து மதத்திடம்தான் அவனுக்கு விரோதம் அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளைப் பற்றிச் சொல்லாமலிருப்பது, ஹிம்ஸை இருப்பதால் யக்ஞம் கூடச் செய்யக்கூடாது என்பது ஆகிய கொள்கைகளில் ஜைனம், பௌத்தம் இரண்டுமே வைதிகத்துக்கு விரோதமானவை. அவற்றுக்குள் இம்மாதிரி ஒற்றுமை அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
பொதுவாக அடுத்த ஊரில் அல்லது அடுத்த தெருவில் நம் பரம விரோதியிருக்கிறான் என்றால்கூட, அவனிடம் நமக்கு அதிகம் போட்டியிராது. அதிக வயிற்றெரிச்சல்இராது; ஆனால், பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டில் நமக்குக் கிட்டத்தில் இருக்கிறானே, இவனுக்கு நம்மிடத்தில் அத்தனை விரோதம் இல்லாவிட்டால் கூட, இவனைப் பார்த்துதான நமக்கு அசூயை. ஆத்திரம் ஜாஸ்தியாக இருக்கும். இவனை எப்படி மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருப்போம். இதே மாதிரி தன் மதத்துக்கு ரொம்ப வித்தியாசம் இருக்கிற வைதிக மதத்தைவிட, அதற்கு ரொம்ப ஒற்றுமை உள்ள பௌத்தத்தை மட்டம் தட்டுவதிலேயே அமரசிம்மன் தன நிகண்டுவில், ஹிந்து மத வார்த்தைகளுக்கு நியாயமாக அர்த்தம் பண்ணிவிட்டு, புத்த மத வார்த்தைகள் என்று வரும்போது என்ன பண்ணினான்?
புத்தரைக் குறிப்பிடும் வார்த்தை வரிசையாக சொல்ல நேர்ந்தபோது, அவருக்கென்றே பிரசித்தமாக இருக்கிற பெயர்களை -- "ததாகதர்"; (லஷியத்திலேயே செல்கிறவர்) போன்ற பெயர்களை அமரசிம்மன் சொல்லவே இல்லை. பொதுவான பெயர்கள் சிலவற்றை மட்டும், "இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியாய் இருக்கட்டும்" என்கிற மாதிரி சொல்லி விட்டான். அதோடு நிற்கவில்லை. 'ததாகதர், சாக்யமுனி' முதலான பெயர்களை எல்லாம் ஜீனருடையதாக (மகாவீரருடையதாக) ஆக்குகிறான் ! புத்தர்ருடைய 'பாடி-கார்ட்' ஆக (மெய்காவலராக) ஸூகதர் என்று இருந்தார். அவர் பெயரைக்கூட தன மதாசாரியரான ஜீனருடைய பெயர்களில் ஒன்றாகவே கொடுக்கிறான்.
ஆனால், ஹிந்து மதத்திடம் இப்படியெல்லாம் மனகோணல் (prejudice) எதுவும் காட்டவில்லை. ஹிந்துகளுக்குள்ளேயே வைஷ்ணவர்கள்,சைவர்களுக்கிடையே இருக்கக்கூடிய பரஸ்பர "ப்ரெஜுடிஸ்' கூட அமரசிம்மனுக்கு இல்லை. ஈச்வரன் பெயர்களைச் சொல்கிறமாதிரி, மகாவிஷ்ணுவின் நாமாக்களைக் கொடுக்கிறான். அதனால்தான் சைவ, வைஷ்ணவ பேதமில்லாமல் எல்லா மாணவர்களும் 'அமரத்தை' நெட்டுருப்போடும் பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது.
அதனாலேயே இன்றும் அழியாப் புகழ் பெற்றதாக சம்ஸ்கிருத்தின் அகராதியாக "அமரகோசம்" இருந்து வருகிறது.