Friday, 11 May 2012

அருள் மழை - 44 - மஹா பெரியவாள் - ஸ்ரீ போதேந்திர சுவாமிகள்


லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும், பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும் பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின் தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச் செல்வார்.

மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில் அவற்றையெல்லாம் கட்டிப் பராமரிக்க அப்போது வசதி இருந்தது.
அப்படி ஒருமுறை, பெரியவா பாபுராவ் சத்திரத்தில் வந்து தங்கியபோதுதான், அவரை முதன்முறையாகத் தரிசித்தார் லக்ஷ்மிநாராயணன்.
எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். என் பெரியப்பா என்னை பெரியவாகிட்ட கூட்டிண்டு போய், ‘என் தம்பி பிள்ளை இவன். மூணாங் கிளாஸ் படிக்கிறான்’ என்று அறிமுகப்படுத்தினார்.
பையனுக்குப் பூணூல் போட்டாச்சோ?’ன்னு விசாரிச்சார் பெரியவர். ‘இல்லை’ன்னு சொன்னதும், ‘சரி, சீக்கிரம் பூணூல் போட்டுடு. ஸ்கூல்ல லீவு சமயத்திலே இங்கே என்னண்டை அனுப்பி வை’ன்னார்.
அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு 1946-47-ல அதே பாபுராவ் சத்திரத்துல மறுபடியும் பெரியவா வந்து தங்கினா. அதுக்குள்ளே எனக்குப் பூணூல் போட்டாச்சு. பெரியவா சொன்னாப்பல, ஸ்கூல் லீவ் நேரத்துல மடத்துக்குப் போய் பெரியவாளுக்குச் சேவை செய்ய ஆரம்பிச்சேன். அதுதான் ஆரம்பம். வில்வம் ஆய்ஞ்சு கொடுக்கறது தான் என் முதல் டியூட்டி. பெரியவா பத்து நாள் அங்கே இருந்தா.
ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஜெயராமய்யர் பெரியப்பாவுக்கு சீனியர். அவர் பெரியவாளை வந்து தரிசனம் பண்ணினார். ‘நீங்க ஊருக்குள்ள வரணும்’னு கேட்டுண்டார். ‘ஊருக்கு வந்தா என்ன தருவே?’ன்னு கேட்டா பெரியவா. ‘உன்னோட வீட்டைக் கொடுத்துடறியா? நான் பத்து மாசம் இங்கேதான் தங்கப் போறேன்’னார். குறும்பா கேக்கறாப்பல இருக்கும்; ஆனா, அதுக்குப் பின்னாடி பெரியவா மனசுக்குள்ளே பெரிய திட்டம் ஏதாவது இருக்கும்.
தினம் என்னால அவ்ளோ தூரம் நடந்து பெண்ணையாத் துக்குப் போக முடியாது. அதனால எனக்கு இங்கேயே ஒரு குளம் வெட்டிக் குடுக்கறயா?’ன்னு கேட்டா பெரியவா.

பாணாம்பட்டுன்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு ஊர். தோட்டத்துல வேலை பாக்கறவா 200 பேர் சேர்ந்து மூணு நாள் தோண்டினதுல, அஞ்சு அடியிலேயே ஜலம் வந்துடுத்து. ராமருக்கு அணில் உதவின மாதிரி நானும் இந்தக் குளத் திருப்பணியில பங்கெடுத்துக்கிட்டேன். முட்டிக்கால் ஜலம்தான். ஆனா, ஸ்படிகம் மாதிரி இருந்துது. அதுல இறங்கி ஸ்நானம் பண்ணிட்டு, கங்கா பூஜை பண்ணினார் பெரியவா.
பத்துப் பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒரு நாள்… ‘இங்கே ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்துல வடவாம்பலம்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே சுப்பிரமணிய ரெட்டியார்னு ஒருத்தர் இருக்கார். அவரைக் கூட்டிண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அவரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன் னோம். பெரியவா நம்மளை எதுக்குக் கூப்பிடறானு அவருக்கு ஒண்ணும் புரியலே. அவர் நல்ல வசதியானவர். அவர் வந்து பெரியவரைப் பார்த்து, ‘நான் என்ன செய்யணும்?’னு கேட்டார். ‘தாசில்தாரை அழைச்சுண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அந்தக் காலத்துல, தாசில்தார்னா கலெக்டர் மாதிரி… அவ்வளவு பவர் அவருக்கு.
தாசில்தார் வந்தார். அவர் கும்ப கோணத்து பிராமணர். அவர்கிட்டே பெரியவா, ‘இந்த ஊர்ல என்ன விசேஷம்? ஃபீல்டு மேப் இருக்குமே? அதுல பாத்து கண்டுபிடிச்சு சொல்லு’ன்னா.
ஃபீல்டு மேப்பை வெச்சு அவரால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே!
அப்புறம் பெரியவாளே, ‘ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னால பெண்ணையாறு இங்கே வடவாம்பலம் கிராமத்துக் குப் பக்கத்துலதான் ஓடிண்டிருந்திருக்கு. நாளாவட்டத்துல ஒதுங்கி ரொம்ப துரம் தள்ளிப் போயிடுத்து’ன்னார்.
வடவாம்பலத்துல முன்னே ஒரு பெரிய சித்தர் இருந்திருக்கார். அங்கேதான் ஸித்தி அடைஞ்சிருக்கார். ஆத்ம போதேந்திரான்னு ஒரு பீடம் இருந்திருக்கு. அதை எல்லாம் வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து’ன்னா பெரியவா.
தை மாசம் அஞ்சாம் தேதி வரை கங்கை அங்கே வர்றதா ஐதீகம். ஆத்துத் திருவிழாவா கொண்டாடுவா. சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துண்டு போவா. அந்த இடத்துல ஆத்ம போதேந்திரா சமாதி ஆகி, லிங்கம் வச்சு அதிஷ்டானம் கட்டியிருக்காளாம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி, ‘இந்த க்ஷணமே அங்கே போகணும்’னா பெரியவா. நாங்க ரெண்டு பேர் டார்ச்லைட் எடுத்துண்டு அவரோடேயே நடந்து போனோம். ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டார் பெரியவா. விடியற்காலை நாலு மணி வரைக்கும் ஜபம் பண்ணினார். அப்புறம், இருள் 
பிரியறதுக்கு முன்னே ஊருக்குத் திரும்பி வந்துட்டார்.
அப்புறம், மூணு மாசம் கழிச்சு மறுபடியும் கிளம்பி, பெரியவரோடு அதே இடத்துக்குப் போனோம். ஒரு பெரிய ஸர்ப்பம் எதிரே வந்துது. நடுங்கிப் போயிட்டோம். ‘ஒண்ணும் பண்ணாது. ஒரு நிமிஷம் நில்லுங்கோ’ன்னார் பெரியவா. அது ஊர்ந்து போய் மறைஞ்சுடுத்து. முன்பு போலவே பெரியவா அங்கே குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ணினார். நாலு மணிக்கு ஜபத்தை முடிச்சுண்டு எழுந்து வந்துட்டார். அங்கே அப்படி என்ன விசேஷம்னு எங்களுக்கு எதுவும் புரியலே.
மறுபடி சுப்பிரமணிய ரெட்டியாரை அழைச்சுண்டு வரச்சொல்லி, அவர்கிட்ட, ‘எனக்கு இங்கே ரெண்டு ஏக்கர் நிலம் வேணும். வாங்கித் தர முடியுமா?’ன்னு கேட்டார் பெரியவா. ‘ஆகட்டும்’னார் ரெட்டியார்.
தஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஏக்கர் 200 ரூபா மேனிக்கு ரெண்டு ஏக்கர் 400 ரூபாய்னு பத்திரம் எழுதிக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. பணம் வாங்கமாட்டேன்னு மறுத்தார் ரெட்டியார். ‘இல்லே! நீங்க வாங்கிக்கத்தான் வேணும். இல்லேன்னா நாளைக்கு ஒரு பேச்சு வரும்’னு சொல்லி, மடத்துலேருந்து 500 ரூபாயை ரெட்டியாருக்குக் கொடுக்கச் சொல்லிட்டார் பெரியவர்.
அப்புறம், அந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல தோண்டிப் பார்க்கணும்னா பெரியவா. அவருக்கு மாமா பிள்ளை ஒருத்தர் இருந்தார். அவரையும் அழைச்சுண்டு அந்த இடத்துக்குப் போனோம். ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, அங்கே கடப்பாரையால தோண்டினார் அவர். வெளியே எடுத்தப்போ கடப்பாரை முனையெல்லாம் ரத்தம்!
அவர் அதைப் பார்த்து மூர்ச்சையாகி, அங்கேயே தடால்னு விழுந்துட்டார். என்ன பண்றதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னோம். அரை மணி கழிச்சு அவரே, ‘எனக்கு ஒண்ணும் இல்லே’ன்னு எழுந்து உட்கார்ந்துட்டார்.
பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னோம். ‘பயப்படாதீங்கோ! அங்கே, அடியிலே ஒரு கோயில் புதைஞ்சு கிடக்கு. நாளைக்குத் தோண்டிப் பாக்கலாம்’னார்.
அப்படியே மறுநாள் போய்த் தோண்டினப்போ, முன்னே ஒரு காலத்துல அங்கே கோயில் இருந்ததுக்கான அடையாளங்கள் தெரிஞ்சுது. ஒரு சிவலிங்கம் கிடைச்சுது. ரெண்டு மாசம் அங்கேயே இருந்து, அந்தக் கோயிலை மறுபடி புதுப்பிச் சுக் கட்டிட்டு, காஞ்சிபுரம் திரும்பிட்டா பெரியவா.
அந்த நேரத்துல நான் 3, 4 மாசம் பெரியவாளோடு கூடவே இருந்தேன். அந்தச் சம்பவங்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ சிலிர்ப்பா இருக்கு!” என்று சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மிநாராயணன்

Monday, 23 April 2012

அருள் மழை - 43 - மஹா பெரியவாள் - Foreign Trip


வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள்.
... பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள்.
காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம் குத்தமில்ல!" என்று சாஸ்திர விளக்கம் அளித்தார்கள். "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்.. குளிக்கிறது,
அனுஷ்டானம் பண்ரது..இதெல்லாம விட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல"  என்று சொல்லிச் சிரித்தார்கள். 

அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.
"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது. அதனால் நீயே முன்ன தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ.. காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும் செய்கிறார்.

அருள் மழை - 42 - மஹா பெரியவாள் - படித்ததில் மெய் சிலிர்த்தது


சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னுதகவல். றந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.


‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோடகுரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு,காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால,பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.


தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.


‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும்ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.
‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்றுபெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…


‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சிமகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.
பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள்திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன். 

காலடியில் அவதரித்த கருணைப் பெருங்கடலே ...

அருள் மழை - 41 - மஹா பெரியவாள் - அம்பாளின் பல ரூபங்கள்

‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.


இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!
அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்ல ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.


‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமரையாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!

Friday, 20 April 2012

அருள் மழை - 40 - மஹா பெரியவாள் - எசையனூர் பாட்டி (Esayanur Patty)


காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.

எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.


“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.


“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.


காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.


ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.

“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.


சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்

Thursday, 19 April 2012

அருள் மழை - 39 - மஹா பெரியவாள் - கானல்நீர்!


பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ‘ஹா ஹா’ என்று தாஹம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது. ங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச்சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் இலேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்,

ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது! லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ‘அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், ‘கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா ? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்