Monday, 29 October 2012

ரெண்டு ஆசை- மஹா பெரியவாளிடம் ஒரு தெலுங்கு சிறுவன்



ஸ்ரீ சைலத்தை  நோக்கி  மகாபெரியவா பரிவாரத்தோடு  யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது கர்னூல் லே  வரவேற்பு  ஏற்றுக்கொண்டு  பிரசங்கமும்  பண்ணியாச்சு.  மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது  ஒரு சின்ன கிராமம்.  திடீரென்று  மழை.  "சுவாமி  சிவிகையில் ஏறிக்கணும்".  “ அதெப்படி?  இத்தனைபேர்  மழையிலே நனைஞ்சுண்டு  நடந்துவரும்போது  நான்  சிவிகையிலா ?  “ஹூம்  ஹூம்   நானும்  நடந்தே வரேன்"  மேற்கொண்டு  நடக்க முடியாதபடி  மழை பலத்தது.  

ஒரு  பழைய  சிவன் கோயில் தென்பட்டது.  அதில்  தங்க பெரியவா  முடிவு பண்ணியாச்சு.    காட்டு தீ போல மஹா பெரியவா  சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம்  மாற்றிகொண்ட  செய்தி   பரவ  ஊர்  ஜனங்கள்  அனைவரும்  பெரியவாளுக்கு  பூரண  கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும்  ஆசி வழங்கிவிட்டு  யாத்திரை  தொடர்ந்தார்  பெரியவா.   

ஏழுஎட்டு மைல்  தூரத்தில் ஒரு கிராமம்.  அதன் ஜமிந்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார்.  கிராமமே  அவரை சூழ்ந்துகொண்டு த ங்கள் கிராமத்தில் பெரியவா  தங்கி  அருள்  செய்ய  வேண்டிகொண்டார்கள்.  பெரியவாளுக்கு  என்னதோன்றியதோ?  இங்கு  21 நாள்  இருக்கபோறேன்  என்று  அறிவித்தார்.  ஊரில்  சத்திரம்  ரெடி பண்ணப்பட்டது.  விறு விறென்று  கொட்டகை போடப்பட்டது.   

மறுநாள்  காலை.  பெரியவா அருகில் இருந்த  புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு  போயாச்சு. மடத்து  காரியஸ்தருக்கு  மஹா  கவலை.  அந்த  கிராமத்தில்  பூஜைக்கு  வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம்  ஒன்றை  மாதிரிக்கு  காட்டி  ஊர்  ஜனங்களிடம்  ஒரு   கூடை  இதுபோல இருக்கிற  வில்வம் கொண்டு வர வேண்டும்  என  கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும்  வில்வம் கிடைக்கவில்லை.  மணி பத்தரை  ஆயிற்று,  பெரியவா  பூஜை சாமான்களையெல்லாம்  பார்த்துவிட்டு  "வில்வம் இல்லையா?" என்று கேட்டார்.  கண்ணில்  ஜலம் வழிய  காரியஸ்தர், “சுவாமி, ஜமிந்தார் எல்லா  ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்”  என்றார்.   பெரியவா  பேசாமல்  சத்திரத்துக்கு  பின்னால்  மாட்டு தொழுவத்தருகில் ஒரு  கல் பாறையில் தியானம்  பண்ண  அமர்ந்துட்டா.   

பதினொன்னரை  மணியிருக்கும்   இன்னும்  வில்வம் வரவில்லை.  சரி  இன்று  சந்திர மௌலீஸ்வரருக்கு  பூஜையோ  பெரியவாளுக்கு  பிக்ஷையோ  இல்லைபோலிருக்கே.  இன்னும்  இருபது  நாள் வேறு  இங்கு  இருக்கணுமே”???  த்யானம்  பண்ணிகொண்டிருந்த பெரியவா  கண்  திறந்தா.  

ஒரு சிறு  புன்னகை.. ஒரு மடத்து  பூஜா கைங்கர்ய  பையன்  ஓடிவந்தான். தலையிலே ஒரு  பெரிய  கூடை  பச்சை பசேலுன்னு நிறைய  மூணு  தள  வில்வம்!!!. பெரியவாளுக்கு  சந்தோஷம்.  “”வில்வமே  கிடைக்காதுன்னு  சொன்னாளே  எப்படி கிடைச்சுது??.“யார் இவ்வளவு  ஸ்ரத்தையா  வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான்  வந்துடுத்தே  பூஜை  ஆரம்பிப்போம்””  என்று  பெரியவா  சொல்லி சாஸ்த்ரோக்தமா  பூஜா  நடந்து  எல்லாருக்கும் பிரசாதமும்  வழங்கியாச்சு. “” யார்  வில்வம்  கொண்டுவந்தாளோ  அவாளை  கூப்பிடுங்கோ  பிரசாதம்வாங்கிக்கட்டும்””  என்று  பெரியவா சொன்னபோது  ஸ்ரீ  கார்யம்  நடுங்கிக்கொண்டே  "பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே  மண்டபத்து ஓரத்திலே  மறைவா  ஒரு  திண்ணையிலே இந்த  கூடை  இருந்தது.  யார்  வச்சதுன்னே  தெரியலே."

“ ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே  தன்னுடைய  பூஜைக்கு  எடுத்துண்டு வந்திருக்கலாம்””  என்று  பெரியவா சிரிச்சுண்டே  சொன்னா. அன்று முழுதும்  கோலாகலமா  பூஜா,  இசை, பிரவசனம், பிரசங்கம் எல்லாம்.  ஊர் ஜனங்களுக்கு  பரம  சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு  மட்டும்  வயத்திலே  புளி கரைச்சுது.  நாளைக்கு என்ன  பண்றது??? . 

மறுநாள்  காலை.   வில்வம்  கண்டுபிடித்து  கொண்டுவந்த  பையனையே  கெஞ்சினார் " “அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம்  மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு  திண்ணையிலே  வில்வம்  கிடைக்குமா  பாரேன்!!”  சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே  இன்னிக்கும்  ஒரு  பெரிய கூடை நிறைய  வில்வம்!!!  மகாபெரியவா பூஜைக்கு தயாராகி  பூஜா திரவியங்களை  நோட்டம்  விட்டு  வில்வகூடையை பார்த்துவிட்டு  ஸ்ரீ கார்யத்தை  அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.  

"ஆமாம்!,   பெரியவா  இன்னிக்கும்  யாரோ கொண்டுவச்ச  வில்வகூடை தான்  இது.” “ யார்  இப்படி ரகசியமா  கொண்டு வக்கிரான்னு  கண்டுபிடி.  நாளைக்கு  விடிகாலம்பர முதல்ல  நீ  கண்காணி.  அந்த ஆசாமியை  கையோட எங்கிட்ட   அழைச்சுண்டு வா””. என்று மகா பெரியவா  உத்தரவு போட  ஸ்ரீ  கார்யம் மறுநாள்  அதிகாலை  மண்டபத்து ஓரம்  மறைந்துகொண்டு  வில்வம்  யார் கொண்டுவந்து  வைக்கிறார்கள்  என்று  காத்திருந்தபோது  எட்டரை  மணி சுமாருக்கு   ஒரு  தெலுங்கு பையன்,  தலையிலே  கட்டு குடுமி,  அழுக்குவேஷ்டி மூலகச்சம்,  தலையிலே  ஒரு  கூடையில்  வில்வம் எடுத்துவந்து  வழக்கம்  போல  பந்தக்கால்  அருகேவைத்துவிட்டு திரும்பும்போது  எதிரே  ஸ்ரீ கார்யம்  வழி மறித்து நின்றார்.  பையன்  ஸ்ரீ கார்யம்  காலில்  விழுந்துவணங்கினான்.  

ஸ்ரீ கார்யம்  அரை குறை தெலுங்கிலே  "போய்  குளிச்சுட்டு,  தலையை  முடிஞ்சுண்டு, நெத்திக்கு ஏதாவது  இட்டுண்டு  துவைத்த  வேஷ்டி வஸ்த்ரத்தொடு   மத்யானம் வா, சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்””.என்றார்.   பையன்  தலையாட்டிவிட்டு  நழுவினான். மூணுமணி  சுமாருக்கு   வெள்ளை வேஷ்டி,  நெத்தி பூராவிபுதி,  எண்ணெய் வழிய  தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு  பயபக்தியோடு  அந்த  பையன்  மெதுவா  உள்ளே நுழைஞ்சான்.  

எதையோ  தேடிக்கொண்டிருந்த  பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன்  மலர்ந்தது.  நமஸ்காரம் பண்ணி  ஓரமா  நின்ற  பையனை  அருகே அழைத்தார்.
“நீ யாரப்பா  உன்னோடைய  பேர்  என்ன? 
“புரந்தர கேசவலு”’ங்கய்யா.
“தமிழ்  பேசறியே,  எப்படி??”
“அய்யா  எங்கப்பாதாங்க  சொல்லி  கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே  பூட்டாங்க. நாங்கல்லாம்  மதுரைபக்கம்  உசிலம்பட்டிங்க.  அப்பாரு  புழைப்புக்கு  இங்க  எனக்கு  ஆறு வயசு இருக்கும்போது  கூட்டியாந்தாரு.ஜமீன்லே  மாடு மேக்கற  வேலை. பள்ளிக்கூடம்  போகலே.  அப்பாரு பாட்டுன்னா உயிரையே  விட்டுடுவாரு.  தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு  பாட்டு  எல்லாம்  பாடுவாரு.  எனக்கும்  சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம்  முன்னாலே   பூட்டாரு.  நான்  தான்  இப்ப ஜமீன்லே  மாடு மேக்கறேன்.  பன்னண்டு  வயசுங்க இப்போ””.
“”அது சரி.  இந்த  ஊர்லே  வில்வம்  கிடையாதாமே  ;உனக்கு  மட்டும் எப்படி  எங்கே  கிடைச்சுது??”
“நாலு கல்லு  தாண்டி  மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது  ஒருதடவை  அப்பாரு, “” ஏலே,  புரந்தரா  இதோ அந்தாக்கலே இருக்கு பாரு  மூணு  மரம்  அது தான்  வில்வம் மரம்.  சிவன்  சாமிக்கு  அது போட்டு  பூஜைபண்ணுவாங்க.  ரொம்ப  விசேஷமான  இலை”” அப்படின்னு  சொன்னாரு.

மூணு நாள்  முன்னே  ஜமீன்லே  அந்த இலை  அர்ஜண்டா  வேணும்  எண்டு  பேசிக்கிட்டாங்க.  
சாமி  மடதுக்காரங்க  கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய   வாங்க மாட்டாங்களோ ன்னு தான்  யாருக்கும் தெரியாம  கூடையிலே  தெனமும்  கொண்டு வச்சேங்க.  சாமி  சத்தியமுங்க.  மன்னிப்பு கேக்கறேங்க”” 

மஹா பெரியவா  அவனை  கண்ணால்  பரிபூர்ணமாக  பார்த்துக்கொண்டே “”புரந்தரகேசவலு  உனக்கு  என்ன தேவை, ஏதாவது  ஆசை  இருந்தா சொல்லு மடத்திலேருந்து  செய்ய சொல்றேன்””  என்றார்.   

 "சிவ சிவா!!  சாமி, எங்கப்பாரு “ஏலே புரந்தரா,  எதுக்கும்  ஆசை படக்கூடாதுடாம்பாரு.    எனக்கு  ரெண்டே  ஆசைங்க.  ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது  சாமி  இந்த வூர்லேருந்து  போரன்னிக்கு  சொல்றேன்””  கண்லே  பொலபொலன்னு கண்ணீரோடு  அவன் சொன்னதை கேட்டு  மகாபெரியவா  மிக்க  பரிவுடன் “”புரந்தரா,  உன்னுடைய  முதல் ஆசையை சொல்லு”  என்றார். 

“சாமி  எங்கப்பாரு  எனக்கு   புரந்தர தாசர்  தியாகராஜர்  பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை  சாமி முன்னாலே நீங்கள் இந்த  ஊரிலே  இருக்கிறவரை   நான்  பாடி காட்டி  சாமி அதைகேக்கணும்””.  மஹா பெரியவா  புலகாங்கிதமானாள்.  “அப்படியே  ஆகட்டும்டா.  நீ  பாடு  நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை  உனக்கு உண்டு. க்ஷேமமா  இருப்பே”””.   பெரியவா  பிரசாதமும் தன் கழுத்திலிருந்து  ஒரு துளசி மாலையும்  அவனுக்கு  கொடுத்து  ஆசிர்வதித்தார். 

பெரியவா  ஊரில்  இருக்கும்வரை  தினமும்  வில்வமும்  புரந்தரன்  பாட்டும்  பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக  இருந்தும்  உச்சரிப்பு பிழைகளை  அவ்வப்போது  பெரியவா  திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள்  பெரியவா  ஊரை விட்டு  கிளம்பிட்டா.  அனைவருக்கும்  ஏக்கம். பிரசாதங்கள்  வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ  தேடியது.  ஓரத்தில்  கண்களில் நீரோடு  ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு  புரந்தரன்நின்று கொண்டிருந்தான்.  அவனை  கை காட்டி  அருகில் அழைத்து  “” புரந்தரா,   உன்னுடைய இரண்டாவது ஆசையை  இன்னிக்கு  சொல்றேன்னியே  அது  என்ன?
  
“ சாமி  மாடு மேக்கறச்சே நாங்க  பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு  இத பார்றா  புரந்தரா,  நமக்கு  சாமி கிட்டேஒரு ஆசை தான்  கேக்கணும்.  செத்துட்டம்னா  மோட்சம் வேணும்னு  அது மட்டும்  தான்   கேக்கனும்பாரு.   சாமி,  எனக்கு  மோட்சம்  கிடைக்கனும்னு  அருள் செய்யுங்க,””

மகாபெரியவா  அதிர்ந்து போனார்.  பரப்ரஹ்மம்  வாஞ்சையோடு  அவனுக்கு  அருளிற்று.”” புரந்தரா, உரிய காலத்தில்  உனக்கு  மோட்சம் கிடைக்க  நான்  சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ  சந்தோஷமா போ”.  என்று ஆசிர்வதித்தார்.   பிறகு  ஜமீன்தாரை  கூப்பிட்டு   இந்த  புரந்தரகேசவன்  சம்பந்தமா  எல்லா  விஷயங்களையும் மடத்துக்கு  தெரியப்படுதுங்கோ””  என்றார். 

பல வருஷங்களுக்கு பிறகு  ஒருநாள்  மத்யானம்  ரெண்டு மணிக்கு  பெரியவா  திடீரென்று  எழுந்து காமாட்சிஅம்மன் கோயில்  புஷ்கரணிக்கு  சென்று  ஸ்நானம்  செய்து  தியானத்தில்  அமர்ந்தார். விட்டு  விட்டு  ஒருமணிக்கொருதரம்  புஷ்கரணியில்  ஸ்நானம்  ஜபம்.  ஆறு மணி வரை  இது  தொடர்ந்தது. பெரியவா கரையேறினா.   

அப்போ ஏழு மணியிருக்கும்  ஒருத்தன்  மடத்திலேருந்து  வேகமாக  சுவாமிகள் கிட்ட  வந்தான்.என்ன  என்று  கண்களால்  வினவ  “”கர்னூல்லே இருந்து  தந்தி.  யாரோ “”” புரந்தரகேசவலு சீரியஸ்””   என்று அனுப்பியிருக்கா.  யார்னு தெரியலே  பெரியவா””  . 

ஸ்ரீ கார்யதிடம்  பெரியவா  சொன்னது இது தான்:

“”புரந்தர கேசவன்  இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு   வேறே பிறவி எடுத்துட்டான்.  அவனுக்கு  இன்னும்  ஆறு பிறவி இருக்கு.  அதுக்கப்பறம்  அவன்  மோக்ஷம்  போகணும்னு  சந்திரமௌலிஸ்வறரை  பிரார்த்தனை  பண்ணி  ஆறு பிறவிக்கும்  ஸ்நானம்  பண்ணி ஜபம் பிரார்த்தனை  பண்ணி அந்த நல்ல  ஆத்மாவுக்கு  என்னுடைய  கடமையை செஞ்சுட்டேன்".  

Tuesday, 16 October 2012

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை-மஹாபெரியவா


அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.
நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.
ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – ”யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!
பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ‘பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.
இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை. 
அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.
‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.
அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். ‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால்,
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **
என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார். ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. ‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் ”விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. ‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.
அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!
நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.
நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. ‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?
ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் ”ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….
உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.
அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.
இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: ‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.
க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.
ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

Monday, 15 October 2012

ஸந்தியாவந்தனம்-காயத்ரீ- காஞ்சி பெரியவா



ஸந்தியாவந்தனத்தின் அம்சங்கள்

தநுர்வேதத்தில் அஸ்திரம், சஸ்திரம் என்று இரண்டு வகை ஆயதங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சஸ்திரம் என்பதுதான் கம்பு, அம்பு, ஈட்டி, கதை முதலான அசல் ஆயுதங்கள். அஸ்திரம் என்பது இப்படி அசல் ஆயுதமாக இல்லாமல் எந்த ஒரு வஸ்துவையும் மந்திர சக்தியால் ஆயுதமாக ஆக்கி எய்வது. மந்திரத்தைச் சொல்லி ஒரு தர்ப்பையையோ, புல்லையோ ஏவி விட்டால் கூட அது ஆயுதமாகிவிடும். சஸ்திரங்களையும் இப்படி மந்திர பூர்வமாகப் பிரயோகிப்பதுண்டு. மந்திரபூர்வமாக ஒரு பதார்த்தத்தை அஸ்திரமாக்கி ஏவி விட்டால், எதன்மேல் விடுகிறோமோ அது நாசமடையும்.

இரு பிறப்பாளர் என்னும் பிரம்ம - க்ஷத்ரிய- வைசியர்கள் பிரதிதினமும் மூன்று வேளையும் பண்ண வேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. 

அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். அஸ்திரம் என்றால் ஒன்றை மந்திர பூர்வமாக விட்டு எறிகிறதல்லவா? அந்த அஸ்திரம் எது? எதை விட்டெறிகிறது? ஜனங்களுடைய புத்தியை ஆசிரயித்திருக்கிற அஸுரர்கள் தொலைய வேண்டுமென்று ஜலத்தை விட்டு எறிகிறதுதான் அஸ்திரமாகிறது. இதுதான் ஸந்தியா வந்தன அர்க்கயம். 'பாபம், பொய் முதலியவை தொலைய வேண்டும். ஞான ஸ¨ரியன் பிரகாசிக்க வேண்டும். அது பிரகாசிக்காமல் பண்ணிக் கொண்டு உள்ளே இருக்கிற பிரதிபந்தகங்கள் (இடையூறுகள்) நிவர்த்தியாக வேண்டும்' என்று அந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பண்ண வேண்டும். எந்தக் காரியம் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இதைப் பண்ண வேண்டும்.

ஒரு காரியத்தை சிரத்தையாக ஒருவன் பண்ணினால் 'மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ணுகிறான்' என்று சொல்லுகிறோம். வாஸ்தவத்தில் இந்த அர்க்ய காரியத்தையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ண வேண்டும்! தினந்தோறும் இதைப்பண்ணி வந்தால் அந்த சத்ருக்கள் நாசமாய்ப் போய் விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது ச்வாஸத்தை அடக்க வேண்டும். இப்பொழுது நாம் மூக்கை மட்டும் தான் பிடிக்கிறோம். சாஸ்திரம் 'நாஸிகாம் (மூக்கை) ஆயம்ய' என்று சொல்லவில்லை. 'ப்ராணான் (மூச்சை) ஆயம்ய' என்றுதான் சொல்லியிருக்கிறது. அதாவது வெறுமே மூக்கைப் பிடிக்காமல் பிராணனையே கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். 'ப்ராணாயாமம்' என்பது 'ப்ராண ஆயாமம்', அதாவது 'ச்வாஸக் கட்டுப்பாடு', 'ஆயம்ய' என்றால் 'கட்டுப்படுத்தி'. 
          
எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்பட வேண்டும். ஜலத்தைக்கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கும் மனது ஒருமைப்பட வேண்டும். அதற்காகத் தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். 'மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும்?' என்று கேட்கலாம். மனது நிற்கிற பொழுது மூச்சு நிற்பதைப் பார்க்கிறோமே! பெரிய ஆச்சரியம் உண்டாகிறது, பெரிய துன்பம் வருகிறது, பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனசுலயித்துப் போய் ஏகாந்தமாக நிற்கிறது; 'ஹா!' என்று கொஞ்ச நேரம் மூச்சும் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஒடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை; தானாக நிற்கிறது. மனசு ஒன்றிலே நன்றாக ஈடுபட்டவுடன் மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். இப்படி மனது ஒருமைப்படுகிற போது மூச்சு நிற்கிறதென்றால் மூச்சை நாமாக நிறுத்தினாலும் மனது ஒருமைப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால் மூச்சை இறுக்கி, அப்புறம்அர்க்கயம் தருவது.

நாம் அர்க்கியம் விடும்போது சித்த ஐகாரியத்தோடு (மன ஒருமைப்பாட்டோடு) விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைக்காக்கிரியம் உண்டாகும். அதை நிறையப்பண்ணுவது யோகத்திற்கு அவசியம். அப்படி நிறையப் பண்ணுவது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்ய வேண்டியது. நாம் ஸந்தியாவந்தனத்தில் அதிகபட்சமாக ஒரு இடத்தில் பத்துத் தடவை பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்னும் சில இடத்தில் இருக்கிறது. சிறு வயதில் உபநயனமான காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் வேளைக்குப் பத்துப் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தாலே, இத்தனை நாளில் யோகீச்வரராக ஆகியிருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ண வேண்டுமல்லவா? அரை நிமிஷம் ச்வாஸத்தை நிற்கப் பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம். பிராணன் நின்றால் மனது நிற்கும். 

அந்த நிலையில் அர்க்யம் கொடுத்தால் வாஸ்தவமாகக் கெட்ட அஸுர சக்திகள் ஒடிப்போகும். மனஸ் நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரமாகும். அர்க்கியமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ண வேண்டும். பின்பு காயத்ரீ பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். மூச்சைக் கொஞ்சம் நிறுத்துகிறது, பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தாலே போதும். அதிகம் அடக்கவேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப்ரதானம், ஜபம், ஸ்தோத்திரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் பெறுவதற்காகப் பண்ணகிறேனென்று நினைத்துச் செய்யவேண்டும். முதலில் பண்ணும் ஸங்கல்பம் என்பது அதுதான். ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். திரிகாலங்களிலும் இதை ஸ்வல்பமாவது பண்ணவேண்டும்.

தினந்தோறும் மூன்று வேளையும் ரோகிஷ்டன் (நோயாளி) கூடப்பிராணாயாமம் பண்ணவேண்டும் என்று சாஸ்திரத்தில் இருப்பதால் உபத்திரவம் கொடுக்கிற அளவுக்கு இதில் ச்வாஸக் கட்டுப்பாடு இல்லை என்று புரியும். இப்படிப் பண்ணினாலே ரோகமும் போய் தீர்க்காயுஸ் உண்டாகும்.
ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயுரவாப்நுயு:|
ப்ரஜ்ஞாம் யசச்ச கீர்த்திம் ச ப்ரஹ்ம வர்சஸமேவ ச||
(மநுஸ்மிருதி, 4-94)

அபிவாதனத்தில் எந்த மஹரிஷியுனுடைய ஸந்ததியில் பிறந்திருக்கிறோம் என்று சொல்கிறோமோ அந்த மஹரிஷி முதல் காயத்ரீ ஜபிக்கப்பட்டு வருகிறது. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மாநுஷ்டானங்களைச் செய்யவேண்டியது நமது கடமை. அந்த முதல் ரிஷிக்கு அப்புறம் எவ்வளவோ பேர் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள். த்ரயார்ஷேயம், பஞ்சார்ஷேயம், ஏகார்ஷேயம் என்று சொல்கிறோம். அதாவது அந்த அந்த கோத்திரத்தில் ரிஷிகளோ, ஐந்து ரிஷிகளோ, ஒரு ரிஷியோ இருந்திருக்கிறார்கள் என்று இதனால் தெரியவருகிறது. அவர்கள் அப்படி தீர்க்காயுஸ், ஞானம், புகழ், பிரம்மதேஜஸ் முதலியவையுள்ள ரிஷிகளாக ஆனதற்குக் காரணம் அவர்கள் செய்த ஸந்தியாவந்தனம்தான் என்பது நான் சொன்ன (மநு ஸ்மிருதி) ச்லோகத்தின் அர்த்தம்.

தொடர்ச்சியாக வந்த இந்த தாரையை நாம் அறுத்து விடக்கூடாது. பிராணாயாத்தோடு சித்தைக்காக்கிரியத்தோடு மந்திர லோப மில்லாமல் பரமேச்வரார்ப்பணமாக ஸந்தியாவந்தனத்தை நிறுத்தி நிதானமாகப் பண்ணவேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு பண்ணவேண்டும்.
மனோ-வாக்-காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூன்றாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன். ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரீ ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் (புரோக்ஷித்துக் கொள்வது) முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது.

அது மட்டுமில்லாமல் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் மூன்றும் சேர்ந்ததாகவும் ஸந்தியாவந்தனம் இருக்கிறது. ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று பாத்திரம் வைத்துக்கொள்ளவேண்டும். ஸந்தியா வந்தனத்தை அவஸரமாகப் பண்ணக்கூடாது என்பது முக்கியம்.

காயத்ரீ மந்திர மகிமை

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்;கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்'என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமும்;அதம பக்ஷம் பத்து. 

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஒய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனதுக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்தீ என்று மூன்று பிரகாரமாக தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ!லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்?அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். 

பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை (புழுதியை) வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்!அவர், 'காணாமல் கோணாமற் கண்டு கொடு!ஆடுகாண் போகுது பார் போகுது பார்!என்று சொல்லி இருக்கிறார். 

"காணாமல்"என்றால் ஸ¨ரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம்கொடுக்க வேண்டும். "கோணாமல்"என்பதற்கு ஸ¨ரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு"என்பதற்கு ஸ¨ரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸ¨ரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம். 

காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்கயத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.
ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.
காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும்

ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.
காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும்.
பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபால் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம்.

அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத vFg, சூத்ரர்களுக்கும் trustee (தர்மகர்த்தா) மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராஃதக் காலம் ஆனபின், அதாவது ஸ¨ர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸாங்க்ய காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது.அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம்
கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவைனை எல்லாரும் பிரார்திப்போமாக!

Friday, 12 October 2012

"காமாக்ஷியும், காமகோடியும்"



தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.

”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்

டுது. பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப்
பெரியவாகிட்டே சொன்னோம்.

அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!

காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு
சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!

காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!