Wednesday, 20 May 2015

படியளக்கும் பரமேஸ்வரன் அம்சம் மஹாபெரியவா !!!

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பகல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை. 

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார். 

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா. 

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார். 

பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார். 

உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது. 

அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர். 

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது. 

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார். 

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா. 

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார். 

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை. 

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.

Tuesday, 14 April 2015

மகாதேவா, நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும்.

''மகாதேவா,  நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும்.  அது  என்ன தெரியுமா?  போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போறேனே  அது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்? இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.”

இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை. அவர் பழுத்த அநுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம். நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும்! சந்தேகமில்லை.

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை ‘அது தண்டமாகி விட்டது’ என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பிப்பது. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

‘நாம் செய்கிறோம்’ என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அநுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம். ‘பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்’ என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை. நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.

Friday, 3 April 2015

ஆசாரமும் ஆஹாரமும் - வடதேச வழக்கின் உயர்வு - மஹா பெரியவா

நாம் நம்மைவிட அநாசாரக்காரர்கள் என்று நினைக்கும் வடக்கத்திக்காரர்கள்தான் அநேக விஷயங்களில் நம்மைவிட நல்ல சாஸ்திர வழக்குகளை அநுஸரிப்பவர்களாயிருக்கிறார்கள்.

'ஸ்வதந்திரம்' வந்த பிற்பாடு அங்கேயும் ரொம்ப க்ஷீண தசை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸமீப காலம் வரையில் நான் தெரிந்து கொண்டதில் அவர்களிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆஹார விஷயம் அதில் ஒன்று. இத்தனை புளி, மிளகாய், பெருங்காயம் என்று நாம் வைத்துக் கொண்டிருப்பது போல அங்கேயில்லை. இதெல்லாம் ராஜஸத்தில் சேர்ப்பதுதான்.

இதில் பெங்காலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். "மத்ஸய்ப் பிராம்மணாள்" உள்ள ஊராச்சே என்றால் அது [மத்ஸ்யம் உண்ணும் பழக்கம்] முன்னேயே சொன்னாற்போல் ஒரு நிர்ப்பந்தத்தில் ஏற்பட்டது.

நாங்கள் பெங்கால் போயிருந்தபோது அவர்கள் ஆஹார வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது பெரிய முகாமாக மடத்து ஜனங்கள் போயிருந்தோம். அவர்களும் சளைக்காமல் நாநூறு ஐநூறு பேர் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். 

ஆனால் அதில் புளி இல்லை. புளி இல்லாமல் நமக்கு ஏது சாப்பாடு? குழம்பு, ரஸம் எதுவானாலும் அதுதானே முக்யம்? அவர்களுக்கோ கோதுமையும், டாலுக்குப் பருப்பும் இருந்தால் போதும், பெங்காலின் அரிசிச் சாதம் சாப்பிடுபவர்கள் தானென்றாலும் ரஸம், குழம்பு போட்டுக் கொள்ளாதவர்கள். அதனால் அவர்களுக்குப் புளியே தேவையில்லை.

நாங்கள் புளி வேண்டுமென்று கேட்டோம். உடனே எங்கேயோ நாலைந்து மைல் போய் அங்கேயிருந்த புளிய மரத்திலிருந்து கொஞ்சம் பச்சைக் காயைப் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த ஸ்வல்பப் புளியங்காய் இங்கே மடத்திலே வைக்கிற அண்டா சாம்பாருக்கு ஸமுத்திரத்தில் பெருங்காயம் கரைக்கிற மாதிரிதான் ஆகியிருக்கும்.
"இத்தனூண்டை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? இன்னும் ரொம்ப வேணுமே!" என்றோம்.

உடனே அவர்கள் பரிஹாஸமாக, "க்யா ஆப் இம்லீ காதே ஹை, யா சாவல் காதே ஹை?" (நீங்கள் புளியைச் சாப்பிடுகிறீர்களா, அல்லது அரிசி சாப்பிடுகிறீர்களா?) என்று கேட்டார்கள்!

பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். டேராடன் மாதிரி இடங்களில் பிராம்மண கூலிக்காரன் முதுகிலே பெட்டி கட்டிக்கொண்டு அதில் வெள்ளைக்கார துரையை உட்கார்த்தி வைத்துக்கொண்டு போவான். 

ஆனால் வழியில் வாயிலே பச்சைத்தண்ணி விடமாட்டானாம். போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டு, ஸ்நானம் பண்ணித் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துத்தான் சாப்பிடுவான்.

தர்வான், வேலைக்காரி முதலியவர்கள்கூட யஜமான் வீட்டில் நாயாக உழைத்தாலும், அந்த வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது கிடையாது என்பதே வடதேசத்து வழக்கம் ஜாதியில் உசத்தி, தாழ்த்தி சொல்லிக் கொண்டு "தாழ்ந்தவன் வீட்டில் உசந்தவன் சாப்பிட்டாலென்ன?" என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் குழப்பிப் பல பட்டடை பண்ணுவதுதான் சீர்திருத்தம் என்று இங்கே நாம் நினைக்கிறோமென்றால், அங்கே தாழ்ந்த நிலையில் உள்ள வேலைக்காரன்கூட உயரந்த நிலையிலுள்ள முதலாளி வீட்டில் சாப்பிடுவதில்லை என்றிருக்கிறான்!

இப்படி ஜாதிக்காக இல்லாமல் 'ஸ்வயம்பாகம்' என்ற நியமத்துக்காக என்று வைத்துக் கொள்ளும்போது, சண்டையும் இல்லாமலிருக்கிறது.

வடக்கே ஸம்பந்திகள் வீட்டில்கூட ஜன்மத்திலேயே ஒரு நாளாகக் கல்யாண தினத்தன்று மட்டுந்தான் சாப்பிடுவார்கள்.

அவனவனும் தன்னை pure -ஆக வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம். இதிலே ஒரு அங்கம்தான் பிறத்தியாரால் அந்த purity -க்கு கெடுதல் வந்துவிடப் போகிறதே என்று ஜாக்கிரதையாக, அவர்களுடைய 'ரேடியேஷன்' ஆஹாரத்தில் ஏற்படாமல், தன் சாப்பாட்டைத் தானே பண்ணிக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்திலே ஜாதி முதலான அம்சங்களுக்கு இடமேயில்லை. இந்த ஸமத்வத்துக்காக யார் சமைத்தாலும் எல்லாரும் சாப்பிட்டாக வேண்டுமென்று பண்ணி ஜனங்களின் personal purity -ஐ பாதிக்க வேண்டாம். 

"ஜாதி கூடாது" என்று ஆரம்பத்திலிருந்து இப்படி ஸம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாங்கூட ஜாதியைக் கொண்டு வந்து அதில் அபேத வாதத்தை நிலை நாட்டுவதே எல்லாவற்றையும்விட முக்யம் என்பதாக விஷயம் தெரிந்துகொள்ளாமல் செய்து வருகிறார்கள்.

ஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது; சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக்கொண்டு, "நீ சாப்பிடலாம், நீ சாப்பிடக்கூடாது" என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது.

"இதிலே மேலும் இல்லை; கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது. வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்" என்று நினைக்கிறவர்களுக்கோ 'ஸமத்வம்' என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. 

அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது.

காயத்துக்குத்தான் ஜாதியே தவிர சண்டைக்கா வைத்திருக்கிறது? அதுவும் சாப்பாட்டிலே சண்டை என்றால் வேதனையாயிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே ஸொல்யூஷன் ஸ்வயம்பாகம்தான் என்று தெரிகிறது. 

மேல் ஜாதியா, கீழ் ஜாதியா என்ற கேள்விக்கே இடமில்லாமல், "The question does not arise" என்கிறாற்போல், இந்த விஷயங்கள் எழும்புவதற்கே இடமே தராமல், அந்தந்த ஜாதிக்காரனே சமைத்தாலும் சாப்பிடுவதில்லை, அம்மாவோ, அகமுடையாளோ பண்ணினால்கூடத் தொடுவதில்லை, அவனவனும் தன் கையால்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வைத்து விடுகிற நியமமே ஸொஸ்யூஷன்.

எவன் தொட்டுச் சாப்பிடலாம், எவன் பார்த்துச் சாப்பிடலாம், எவனோடு சாப்பிடலாம் என்கிற கேள்விகள் இருக்கிறவரையில் சாஸ்திரம் ஒன்றாகவும் சீர்திருத்தம் இன்னொன்றாகவும் இருந்துகொண்டு சண்டைதான் வரும். அதனால் எவனுமே தொடாமல் அவனவனே சமைத்துக் கொண்டு, எவனுமே பார்க்காமல், எவனோடும் சேர்ந்து உட்காராமல் தனித்தனியாகப் போஜனம் பண்ணி விடுவது உத்தமம். 

' காகம் கரைந்துண்ணக் கண்டீர் ' என்கிறாற்போல் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்றிருந்தால் பழங்கள், பானங்களைச் சேர்ந்து சாப்பிடலாம். மற்றவர்கள் சமைத்துக் கொள்ள உணவுப் பண்டங்களாகக் கொடுப்பதே விருந்துபசாரந்தான்; அப்படிப் பண்ணலாம்.

இதுவரை தக்ஷிணத்தில் நம்மைவிடக் கடும் குலாசாரமுள்ளவர்களின் கையில், அல்லது பெர்ஸனலாக நம்மைவிட சுத்தமானவர்களின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து வந்திருக்கிறது. 

வடக்கேயோ இதுவும் கூடாது. கிஸான் [குடியானவன்] ஆனாலும் பணடிட் ஆனாலும் அவனவனே சமைத்துக்கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. நம்மைவிட சுத்தர்கள் கையில் சாப்பிடலாம் என்பதனாலேயே நாம் அவ்வளவு சுத்தியாவதற்கு பிரயத்தனப்படாமலே இருந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் இடம் கொடுத்துப் போகிறது. 

ஸ்வயம்பாகம் என்று வைத்து, நம்முடைய அசுத்தி நாமே பண்ணிக் கொள்கிற சாப்பாட்டினால் நமக்குள் மேலே மேலே போய்க்கொண்டேயிருக்கிறபோது தான், இப்படி நம்மைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பிரயத்னம் செய்வோம்.

"சாப்பாடு பண்ணிப் போடுகிறவனின் சுத்தம் சாப்பிடுகிறவனுக்குள் போகிறது; நாம் சுத்தனாக வேண்டும்; அதே ஸமயத்திலே நம் சாப்பாட்டை நாமே பண்ணிக்கொள்ள வேண்டும்" என்றால் அப்போது நாம் சுத்தமாக ஆவதற்கு முயற்சி பண்ணத்தானே செய்வோம்?

ஸ்வாமி பிரஸாதம், குருப் பிரஸாதம் தவிர ஸ்வயம்பாகம்தான் என்று ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்.

இதனால் ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, அரட்டை, சீட்டு, ஸினிமா என்று போகவோ விடாமல் சமையல் வேலை என்று ஒன்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா? 

இதில் தானே பண்ணிக் கொள்வதால் நிறைய தினுசு வேண்டாம் என்று நாக்கு டிஸிப்ளினும் வருகிறது. சமைத்ததில் ஸத்வ ரஸம் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து அப்போது நாமஜபம் செய்கிற டிஸிப்ளின் வேறு. தானே பொங்கிப் போட்டுக் கொள்வது என்கிற, அல்பமாகத் தோன்றுகிற தர்மாசாரத்துக்கு இத்தனை நல்ல பலன்கள்!

"எப்படிக் கற்றுக் கொள்வது?" என்று புருஷர்களாய் பிறந்தவர்கள் பிரமிக்க வேண்டியதில்லை. "இப்படித்தான் இருக்கணும்" என்ற எண்ணம் வந்துவிட்டால், ஈஸியாக கற்றுக் கொண்டு விடலாம்.

பொம்மனாட்டிக் குழந்தைகள் சூட்டிகையாயிருந்தால், அரைத்துக் கரைத்து இத்தனை தினுஸோடும் சமைப்பதற்குப் பன்னிரண்டு வயஸுக்குள் கற்றுக் கொண்டு விடவில்லையா?

 'வெரைய்டி' இல்லாமல் ஸிம்பிளாக ஒரு சப்பாத்தி அல்லது ஒரு பொங்கல், ஒரு தயிர் என்று ஆஹாரத்தை ஆக்கிக் கொண்டு விட்டால், நாலே நாளில் கற்றுக்கொண்டு விடலாம். என் அபிப்ராயம், 

பதினைந்தே நிமிஷத்தில் தயாரிக்கக்கூடியதாக ஏதாவது ஒரு ஸிம்பிள் ஆஹாரத்தைப் புருஷர்கள் அத்தனை பேரும் தெரிந்து கொண்டு தாங்களே அதைப் பண்ணிப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டுமென்பது.

Wednesday, 11 March 2015

வைஷ்ணவநுக்கு அத்வைத குரு மந்த்ரஉபதேசம்......

ஒரு நாள் மஹாபெரியவாள் காளஹஸ்தியில், சமீபத்தில் இருந்த ஒரு பழைமையான சிவன் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். நானும் என் மனைவியும் அவர் இருந்த இடம் நாடிச் சென்றோம். 

மிகச் சிறிய கோவில்; வெளிப்ராகாரத்தில் புல் மண்டியிருந்தது. கர்ப்பக்ருஹத்தின்
அடிப்பீடத்தில் உள்ள கருங்கல் ஓரமாக குந்தியவாறு உட்கார்ந்திருந்தார்கள். அச்சமயம் அவருடன் வெகு சிலரே இருந்தனர். அவர்களை விஜாரித்தோம். 'ஸ்ரீபெரியவாள் ரொம்ப நேரமாக இங்கே உட்கார்ந்திருப்பதையும், காரணம் தெரியவில்லை என்பதாகவும் சொன்னார்கள். 

நாங்கள் இருவரும் திகைத்து நின்றோம்! ஸ்ரீபெரியவாள் நாங்கள் வந்ததைக் கவனித்தார்.

என்னை நோக்கி சமிக்ஞை செய்து அருகே அழைத்தார். அடியேன் அருகில் சென்றேன்.
ஸ்ரீபெரியவாள் தன் கையில் உள்ள தண்டத்தால் கருங்கல் பீடத்தைக் காண்பித்து'' இது உனக்குப் படிக்க வருமா?'' என்று கேட்டார். நான் அந்தக் கல்வெட்டு எழுத்துகளைக்
கூர்ந்து பார்த்து'' எனக்குப் படிக்கத் தெரியவில்லை'' என்றேன்.

ஸ்ரீபெரியவாள் ''நான் சொலேன் கேளு ஹரி:ஓம் என்று ஆரம்பித்து தொடர்ந்து வாசித்துக் காண்பித்தார். உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

மடத்திற்கு சென்ரவுடன் அம்மாவிடம் இது பற்றிக் கேட்டோம்.

அம்மா சொன்னாள்:- சில மாதங்களுக்குமுன், உங்கள் அகத்திற்கு கும்பகோணத்திலிருந்து வந்த ஒரு சுமங்கலி மாமி காமாக்ஷி அம்மனை உங்கள் அகத்து விளக்கில் ஆவாஹனம் செய்து, அம்பாளின் பீஜாக்ஷரங்களை உபதேசம் செய்தாள் அல்லவா?

அவள் வாக்குப் படி நீயும் ஆவஹனாதிகள் செய்து பூஜை செய்து வந்தாய் என்றாயே? அவள் வாக்குப்படி பெரிய ஞானிகளின் உபதேசம் கிடைக்கும் என்றாளல்லவா? அதுதான் உன் அகத்துக்காரருக்கு மஹாபெரியவா மந்த்ரோபதேசம் செய்திருக்கிறார்! என்று தோன்றுகிறது
என்றாள் அம்மா.

ஒரு வைஷ்ணவருக்கு அத்வைத குருவான தான் உபதேசம் செய்து அதனை நீ பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற மரபை மீறக்கூடாது என்பதற்காக, கல்வெட்டைப் படித்துக் காண்பிக்கும் பாவனையில் ஒரு மஹாமந்த்ரத்தை ஒரு பரம பக்தனுக்கு உபதேசம் செய்திருக்கிறார்!

எவ்வளவு பொருள் பொதிந்த, யுக்திக்கு உகந்த , நுட்பமான தெய்வீக லீலை
இது, அ
ற்புதச் செயல் இது!

இதுபோன்ற கலையெல்லாம் பெரியவாளுக்கு கைவந்த ஒன்றல்லவா?

நெல்லிக்குப்பம் தம்பதியினரின் அனுபவம்

தகவல் கோதண்டராம சர்மாவின் தரிசன் அனுபவங்கள்.

"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி !"

விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில் மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில் தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.
படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி "நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்"-என்று சொல்ல திடுக்கென்று விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி.
எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும் என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய் போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்று காசாக்கிக் கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லைஎன்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.
அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த 'ஏகாம்பர குப்பம்' என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.
"ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே! வெளிலே வா!" என்று கத்த ஆரம்பித்தான்.
ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு, "அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு. நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.
ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று, "நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!" என்று
விவரம் கேட்க,
"ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும் சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப் பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து என்னை வந்து பாருன்னு சொன்னாரு" என்றான்.
மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார். 
அவன், "சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே இருக்கேன்" என்று கதறி விட்டானாம்.
பெரியவா " நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க. உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ. எல்லாம் சரியாப்போகும்" என்று சொல்லி அவனுக்கு பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம் பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

Tuesday, 10 March 2015

மஹா பெரியவா கருணையை என்னவென்று சொல்வது? எவ்வளவுதான் சொல்வது???

1988 வருடம்.பல ஊர்களுக்கு வங்கி அலுவல்நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை உடம்பு முழுவதும் அரிப்பு.எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் பரமாசாரியரிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டி சரியாகவில்லை.சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .
ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா பெரியவா சாதூர் மாஸ்யம் விரதம் ஆரம்பிக்கபோரா தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.

ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி,அரிசி, மளிகை சாமான்களோடு பரமாச்சாரியார் இருக்கும் தேடி சென்றோம். ரிக்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு.கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பரமசாரியரிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.
எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்ட்டானதுக்கு நதிக்கரபோகப்போறளாம் உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் .பாலு மாமா நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்ப சொல்லிட்டார்.

ஏதன் மத்யே எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு. எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் செட்சைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு அவர் பாத்துக்கட்டும் என்றுஅவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம்.

வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச்சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……..
நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்கால் மாதிரி முன்று பிரிவாக ஜாலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டணம் முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது நான் குளித்த ஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.

அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன் .குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து.அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறிதட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்ட ஜலம்தான் என்மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.

பெரியவா அதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார் .நானும் கரை ஏறினேன்.உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்து பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டோம்.

பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது.பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் " வந்த காரியம் முடிந்ததா" என்று.எனக்கு அப்போதுதான் உறைத்தது என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று .
இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை.என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் 
.
நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார் " தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்." என்றார் .அவளவுதான் அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது.இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை, இதை எண்ணிப்பாக்காமல் இருக்க முடியவில்லை.

நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்.