Saturday, 15 September 2012

மகா பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன்



அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். - அர்த்தமுள்ள இந்து மதம், எட்டாம் பாகம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

....இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார்.  இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.
கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி  இருக்கிறார்.  தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.

உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.  அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார்.  அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை. லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது.  மகா யோகம் மலர்கள் தூவுகிறது.  மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது. உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி.  அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் 'இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 'ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல.  ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.  ஒரு உத்தமமான யோகியை 'பிராமணன்' என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார்.  அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே. அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்..

பெரியவரின் மகாத்மியம் !


திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! 

திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். 

இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி
இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். 

இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
"எந்திரு..சீதே...ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை.." என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். 

முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர்
க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! 

பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின்
ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல்!
"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"ராமா!.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ!"
"உத்தரவு பெரியவா......" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். 

பிறகு, "ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.

பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....!!!!!!

அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! "கணேசன்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். 

Thursday, 23 August 2012

‘யார் துறவி? எது துறவு?’- WHO IS A SANYAASI - MAHAA PERIYAVAA'S EXPLANATION - PRACTICAL EXPLANATION



‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.
...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’

Sunday, 19 August 2012

வேத சப்த மஹிமை – பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்


நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ‘என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.
நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, “நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்” என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ‘இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்” என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. “ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?” என்றான் அந்த பிராம்மணன்.
நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். “அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?” என்று. “அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது” என்றான் பிராம்மணன்.
“அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன்(reaction) ஏற்படுத்துமானால் , வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில்(atmosphere) எத்தகய உயர்ந்த ரியாக்ஷன்(reaction) ஏற்படுத்தும் என்பது தங்களுக்கு காலையில் ஞாபகமில்லை போலிருக்கு” என்று சொன்னார்.
சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்த்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும் , அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் “தெய்வீகம்” என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

Friday, 3 August 2012

அஞ்செழுத்து அஸ்திவாரம் - "சிவாயநம'"




ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.

பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.  



நாரதரும் அப்படியே கேட்டார்.


இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. 


அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.



பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.



நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.



பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.


""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.



""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.



நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! 


ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், 


""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.



நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.



அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.



பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.
  

சி - சிவனைக் குறிக்கும்
வா - அருளைக் குறிக்கும்
ய - ஆன்மாவைக் குறிக்கும்
ந - திரோதத்தைக் குறிக்கும்
ம - மலமாயைக் குறிக்கும்.

Thursday, 2 August 2012

Monday, 23 July 2012

பெரியவாளும் - ரோஜா மாலையும்

 


பெரியவாளிடம் அத்யந்த  பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள்  குடும்பம்அவர்  தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம்பெரியவா தஞ்சாவூரில் முகாம்பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும்  என்று கொள்ளை ஆசை
பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு

 குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லிபெரியவாளை தர்சனம்  பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார்.  

ஆனால்இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்மாலையோடு வீடு திரும்பினார்அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானேஇந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ.    பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள்.


 "இல்லேஇல்லேஅம்பாளும் பெரியவாளும் வேற வேற இல்லேதான்ஆனாலும்இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்ஆமாஇது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுஅதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.


மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்பெரியவா மேலவீதி சங்கர மடத்தி லிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்துநடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக  தெருவே திமிலோகப்பட்டதுசாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு!



"பெரியவா வராபெரியவா வராதர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தாபாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்குத்துவிளக்குபுஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்பெரியவாளுடைய வேகம் அப்படி

 இருக்கும்

குள்ள உருவமாக இருந்தாலும்அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும்ஆனால்கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும்அந்த வேகம்உண்மையான மஹான்களுக்கே ரித்தான லக்ஷணம்!
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டுசற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்துரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய்முன்தினம்  "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டுஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாகயானை தும்பிக்கையால் தூக்குவது போல்அருட்கரத்தால் தூக்கிதானே தன் தலையில் சூடிக் கொண்டார்!
சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழியவிக்கித்து நின்றனர்ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்இப்படி ஒரு பரமகருணையாஎன்று சொல்லமுடியாத ஆனந்தம்திக்கு முக்காடினார்கள்எல்லாரும் நமஸ்கரித்ததும்விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார்
சற்று நின்று திரும்பி,  "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்அவ்வளவுதான்ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லிஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார்
இதோஅவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா 'வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
 பகவான் ஸர்வவ்யாபிஎன்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக ண்டார்கள்உணர்ந்தார்கள்!