Wednesday, 3 December 2014

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு - கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

“இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” என்று கூறுவார்கள்.

 நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை நாம் அறியமாட்டோம். 

அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். 

குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. 

கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான்.  மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு! 

ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.

அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது.

காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்?  வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.

முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார் 

ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, “வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்க, “அவர் ரொம்ப குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம். 

வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்.” என்று கூறினார் தொண்டர்.

உடனே ஞானக்கடல், “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.

மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: “நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்.” என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது 

“எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.

பகவான் கீதையில் “கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக” சொல்கிறார் 

அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும் 

நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.

Tuesday, 30 September 2014

""குரு என்பவர் யார்?"" - மஹா பெரியவாளின் அற்புதமான விளக்கம்

சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ''தத்வமஸி'' என்ற மஹாவாக்கியம் வருகிறது.
'' நீயேதானப்பா அந்த பிரம்மமாயிக்கிறாய் என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதா உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி = ''தத்'' என்பது பரமாத்மாவான பிரம்மம்; ''த்வம்'' என்பது ஜீவாத்மா; ''அஸி'' என்றால் இருக்கிறாய். பரப் ரம்மமாக இருக்கிறாய் - என்றைக்கோ ஒருநாள் அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலே தான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்தால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?

எனவே ''நீ எப்போதும் பிரம்மம் தானப்பா'' என்றால் எப்படி? அதைப் புரிய வைக்க ஒரு கதை: நமது வாழ்க்கையே எதாவது ஒரு கதையை நம்பி தானே நடக்கிறது. ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே
அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இந்தக் கதை வருகிறது.

ஒரு ராஜகுமாரன் அவனது அப்பா அம்மா எதிரி ராஜாவின் படையெடுப்பில் கொல்லப்பட்டதால், உயிர் தப்பி மந்திரியால் காட்டில் வேடர்கள் பகுதியில் குழந்தையாக விடப்பட்டு இளம் வயதில் வேடர்களோடு வளர்கிறான். பெரியவனாகி, பின்னால் அவன், தான் ஒரு ராஜகுமாரன் என்று அவனை தப்பிக்க விட்ட மந்திரி மூலமே உணர்கிறான். இத்தனை காலமும் வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் ,ராஜ குமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். வேடப்பையனும் ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான். முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை. அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாகி கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி ராஜாவோடு சண்டை போட்டு ஜெயித்து ஸாம்ராஜ்யாதிபதி யாகவே ஆகிவிட்டான்.

நாமெல்லாருமே இந்த மாதிரி ''வேட'' வேஷத்தில் தான் உள்ளோம். ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் எப்படியிருந்தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின் வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக் கிறோம். நாம் உண்மையில் பிரம்மம்என்று தெரிந்து கொள்ளலாமா? தெரிந்தால் மட்டும் என்ன? அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) இழுத்துக்கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளை யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாகஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன்ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மா ட்டோம் என்கிறோம். அது தான் வித்தியாசம்.

''கல்லேனும், ஐயா, ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே! -- தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி,நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி,பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ ''நாமா'' க ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார். வேடப் பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப் புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து,அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம் '' பரமாத்ம'' த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.


Sunday, 3 August 2014

​பஞ்சாயதான பூஜை - மஹா பெரியவா

தென்புலத்தார், தெய்வம் என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும். செனகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். செனகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.ஆபீடுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்கிறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும், துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம்.

பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. 'நிவேதயாமி' என்றால் "அறிவிக்கிறேன்" என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில், இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா. செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஷ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.

அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்.

Thursday, 24 July 2014

"நானும் நீயும் ஒண்ணுதான்" - மஹா பெரியவா தரும் அற்புத விளக்கம்

வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.
அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.

"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.
அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.
"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-
"நானும் நீயும் ஒண்ணுதான்!"
என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்
"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்.

வாழை நமக்கு காட்டும் ஞானோபதேசம் - மஹா பெரியவா


வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.
('பீபிள்ஸ் ஃப்ரூட்!'-People Fruit)

பெரியவாள் போடும் சாப்பாட்டு விருந்தை சாப்பிட்டு முடிக்கிறோம். இலை போட்டு அதில்தானே விருந்தைப் படைப்பது? அந்த இலையைத் தரும் வாழை ஜாதி பற்றி அவர் வாய்மொழி கூறாது முடிக்கலாமா?

'மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதான ஒன்றுதான். ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும் இலை துளியளவே இருக்கும்போது இதற்குத்தான் 'போட்டுக் கொண்டு சாப்பிடுகிற' அளவுக்குப் பெரிசாக இலை! அப்படி, தாய் மனஸோடு சாதம் போட்டுப் பார்க்கிறதாலேதான் வாழையை நம் ஸம்பிரதாயத்தில் உசத்தி வைத்திருக்கிறது.

'எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக, தேஹாரோக்யம், புஷ்டி தருவதாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதில் வாழை ஒன்றைத் தவிர எதையாவது அதையே முழுச் சாப்பாட்டுக்குப் பதிலாகச் சாப்பிட முடிகிறதோ? முப்பழங்களில் மீதி இருக்கிற மா, பலாப்பழங்களைக் கூட வயிறு ரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோ? ஒரு வேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அது பணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான் கட்டுப்படியாகும். சர்வ ஜனங்களும் காசு கொடுத்து நாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு வயிறு 'தம்' மென்று நிறையும்படி இருப்பது வாழைதான். அதுதான் (சிரித்து) 'பீபிள்ஸ் ஃப்ரூட்!'

வாழைப்பழம் ஆஹாரம் என்றால், வழைப் பூ மருந்து. பழமாகும்போது தித்திக்கிற அது பூவாக இருக்கும்போது துவர்க்கிறது. துவர்ப்புப் பண்டங்களே உடம்புக்கு ரொம்ப நல்லது. பூஞ்சைக் குடலுக்குக் கூட வாழைப் பூ ஏற்றது.

மற்ற பூக்கள் வாஸனை. வழைப் பூ மட்டும் அப்படியில்லை. வாஸனா ஸஹிதம், வாஸனா க்ஷயம் என்று வேதாந்தத்தில் சொல்கிறார்களே, அதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இன்னும் வேதாந்தமாக ஒன்று. விதை போடாமல் முளைப்பது அது. கர்மா விதையிலேதான் ஜீவன் மறுபடி, மறுபடி பிறந்து, வினையைப் பிறவி தோறும் விதைத்துப் புனர்ஜன்மங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது. அந்த வித்து அடிபட்டுப்போன ஞானத்தை வாழை நினைவூட்டுகிறது.

இப்படிச் சொன்னதால் அது வாழ்க்கைக்கு ஸம்பந்தப்படாதது என்று அர்த்தம் இல்லை. வாழ்கிற மட்டும் நல்லபடி வாழ்வதற்கும் அதுதான் பாடம் போதிப்பது.

'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக இருப்பது வாழை. தண்டு, பட்டை, தார் உள்பட, இலை, பூ, காய், பழம் என்று அதன் ஸர்வாங்கமும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதல்லவா? ஆனபடியால், 'வாழ்க்கை' 'வாழ்வு' என்று அதற்கே பெயர் வைக்கிற அபிப்பிராயத்தில்தான், 'வாழை' என்று பெயர் வைத்தது.
அதை வாழை மரம் என்கிறோம். மரம் என்றால் அது சொர சொரவாக இருப்பதுதானே வழக்கம்? இது ஒன்று மாத்திரம் வழவழாவாக இருக்கிறது! கரட்டு முரட்டுத்தனமில்லாமல் மழமழவென்று எல்லாவித மனுஷ்யர்களுக்கும் ஸந்தர்ப்பங்களுக்கும் அநுகூலமாக நம்மைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிக்கிறதே அந்த வழவழ. வழவழப்பை வைத்தும் அதற்கு 'வாழை' என்று பெயர் கொடுத்திருக்கலாம்.

விதையாகி வம்ச விருத்தி ஏற்படுத்திக் கொள்ளும் மா, ஆல், இன்னும் அநேக வ்ருக்ஷங்களில் கணக்கு வழக்கில்லாமல் விதைகள் தோன்றுகின்றன. அது ஒவ்வொன்றும் முளைத்தால், இந்த பூமியே ஒரு வ்ருக்ஷ ஜாதிக்குக்கூடப் போதாது. அப்படி நடக்காததால் அந்த விதைகளில் பெரும்பாலானவை முளைப்பதில்லை என்று தீர்மானமாகிறது. முளைத்திருப்பதிலும், எந்தக் கன்று எந்தத் தாய் மரத்தின் விதையிலிருந்து முளைத்திருப்பது என்பது எவருக்கும் சொல்லத் தெரியாததாக இருக்கிறது. வாழையில்தான் தாய் மரத்தைச் சுற்றியே அதன் கன்றுகள் முளைப்பதால் இதிலிருந்து இது பிறந்தது என்று தீர்மானமாகத் தெரிகிறது. கன்று பிறந்ததோடு தாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறது. ஸத்பிரஜை உண்டான அப்புறம் தாம்பத்யம் இல்லாமலிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு தர்ம சாஸ்திரம் சொல்கிறதென்றால், வாழையோ அதைவிட ஞானத்துடன் பெரிய ஸந்நியாஸமாகப் போயே போய் விடுகிறது. இங்கே வேதாந்தம். இதிலேயே வாழ்க்கைத் தத்துவமும்! நல்ல ப்ரயோஜனமுள்ள ஒரு வாழை, அதே ப்ரயோஜனத்திற்காக லோகத்திற்குத் தரும் ப்ரஜைகளான கன்றுகளை, இந்தப் ப்ரஜை இந்த அம்மாவுக்குப் பிறந்தது என்று நமக்கெல்லாம் காட்டும்படி இருக்கிறதல்லவா? வேறே எந்த மரத்தின் விஷயமாகவும் அப்படி இல்லையே! அதனால்தான் ?வாழையடி வாழையாக வாழ்? என்று வாழ்த்துவதாக இருக்கிறது! அந்த வாழ்த்துக்கு அடையாளமாகவே கல்யாணங்களிலும் மற்ற மங்கள வைபவம் எதிலுமே வாழை கட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது. வாழை மரம் மங்களச் சின்னம்.

Wednesday, 23 July 2014

மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை - மஹா பெரியவா


குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம்

ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் 'ராஜாப்பயல்'என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் 'கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்'என்று சொல்லி வந்தார்கள். இப்போது 'மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை'என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா?

அதனால்தான் " இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது" என்று சொல்வது.

இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான்.

இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது.

இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் - ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் " பெரிய இடத்துப் பிள்ளை " யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும்.

Saturday, 12 April 2014

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே... மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...


தினமும் காலை சங்கரா தொலைக்காட்சியில் நாமெல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதுதான்... ஆனாலும் அலுப்பதில்லையே.... 

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இம்மஹானை மீண்டும் மீண்டும் காணக் கண் கோடி வேண்டும்...

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா... 

Click/Copy this below link and paste to get the song about Mahaperiyavaa...
http://www.dailymotion.com/video/k207hqNeingkSq6Mhgk?start=25

ஆஹா....ஆனந்தம் பேரானந்தம்.....

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா...

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
குருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...