Friday, 4 March 2016

வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

கொஞ்சம் பழைய சம்பவம் இது.. காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.

'சதஸ்' என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே ""களை"" கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.

மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும்.

ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல் பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற
சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.

இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.

அது ஒரு வெள்ளிக்கிழமை....வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும் சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.

சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள், பண்டிதர்கள் 

ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் கொண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம்
தெரிந்தது. 

காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். "அவனுக்கும் நூறு ரூபாய்....எனக்கும் நூறு ரூபாய்தானா?" என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? 

"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் "சந்தோஷம் பெரியவா.. நான் புறப்படுகிறேன்" என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு வெளியேறினார்.

உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

"சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று" என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். "சரி...தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா"
என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள், புஷ்பங்கள், கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார்.
பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, "பெரியவா........ ஒரு விண்ணப்பம்..." என்று இழுத்தார் வக்கீல்

"சித்த இருங்கோ..." என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.

அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். "சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்.....நீதான் பார்த்திருப்பியே..
அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு.. பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா" என்றார்.

உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன். மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.

அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.

ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார். அவர் அருகே போய், "பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்" என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார் ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், "அம்பீ..... முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் போயிடுமேடா" என்றார்.

சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, "அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ.. கையோட
உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்" என்று அடமாகிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே "ஐயரே [ஐயங்காரே]... அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும். போய்ப் பாரேன்.
அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?" என்று சிடுசிடுவென்று சொல்ல.... வேஷ்டியில் சுருட்டி வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான் சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. 

உள்ளே நுழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.

"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?" என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.
சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.

சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென "பெரியவா...ஒரு விண்ணப்பம்.." என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.

"சித்த இருங்கோ...உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்.." என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு "வக்கீல் சார் இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ" என்றார் காஞ்சி மகான்.

இவருடைய அட்ரஸை நான் ஏன் குறித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கொண்டார் வக்கீல்.

"நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே... அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து. அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ" என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.

ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். "முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?" என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? 
யார் அவர்? அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?" என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.

பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.

ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.
விஷயத்துக்கு வருவோம்.  

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட சென்னை வக்கீல், "பெரியவா...ஒரு விண்ணப்பம்......

நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் ..." என்று தொய்வான குரலில் இழுத்தார். "உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே."

"இல்லே பெரியவா...என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே...".என்று தயங்கினார் வக்கீல்.

"உன்னோட விண்ணப்பம் என்ன.... கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே...அதானே?" என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம். 

வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை."ஆமாமாம் பெரியவா.... அதேதான்... அதேதான்!"

இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்....நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்?
இப்ப என்ன பண்றே..."-பெரியவா இடைவெளி விட்டார்.

"பெரியவா சொல்லணும்...நான் கேட்டுக்கணும்...."- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. 

ஏன்னா நாலு மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, "சும்மா மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா"னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்."

"பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்" என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி அடைந்தார் அந்த மகான்.

Monday, 8 February 2016

மணிசாஸ்திரிக்கு வந்த மஹா பெரியவா பிரசாதம்

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் மணி சாஸ்திரி. சுமார் 40 வருடங்களுக்கு முன் காஞ்சி மடத்தோடு தொடர்பு கொண்ட பலருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். சுத்தமான வைதீகக் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இருந்தாலும் தான் கொண்ட ஆசார அனுஷ்டானங்களை என்றென்றும் விடாமல், தொடர்ந்து மேற்கொண்டவர் மணி சாஸ்திரி. இவரது ஒட்டுமொத்த குடும்பமே மகா பெரியவா சேவையில் பூரித்து திளைத்தது.

இவருடைய அண்ணன் – ஹரிஹர சாஸ்திரி ஒரு காலத்தில் மயிலாப்பூரில் வைதீக காரியங்களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர்களுடைய தம்பியான சந்துரு சாஸ்திரி பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயிலில் பூஜகராக இருந்தார்.

1979-களில் ராஜ்தூத் பைக் ஒன்று வாங்கினார் ஹரிஹரசாஸ்திரி. அப்போது அந்த விஷயம் மீடியாக்களில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. காரணம் – வைதீகம் போன்ற தொழிலில் இருப்பவர்கள் அப்போது சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்வது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. வைதீகக் காரியங்களில் இருக்கும் பலர் இன்றைக்கு பைக், கார் போன்ற வாகனங்கள் வைத்துக் கொள்வது சகஜம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன் எல்லாமே நடையாத்தைரை தான். கொஞ்சம் தொலைவு நடக்கவேண்டும் என்றால் தான் பேருந்துகளில் பயணிப்பார்கள்.

ஹரிஹர சாஸ்திரிகள் பைக் வாங்கிய விஷயத்தை அப்போது பிரபலமாக இருந்த இல்லஸ்ட்ரேடட் வீக்லி இதழ் ‘பைக் வாங்கிய முதல் சாஸ்திரி’ என்று இவரது படத்தையும் போட்டு செய்தி வெளியிட்டது. மஹாபெரியவா கூட இது பற்றி ‘என்ன ஹரிஹர சாஸ்திரியாரே…பைக் வாங்கிட்ட போலிருக்கு’ என்று விசாரித்தாராம். இது ஒரு துணுக்குத் தகவல் தான். அனுபவத்துக்கு வருவோம்.

1983-ல் சென்னை பெசண்ட் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் மணி சாஸ்திரி. மாதாமாதம் சுமார் 400 ரூபாய் வாடகை. மஹாபெரியவா சேவைக்காக அவ்வப்போது காஞ்சிபுரம் சென்று பெசண்ட் நகர் வீட்டுக்குத் திரும்பி வருவது வழக்கம். பெரியவா காஞ்சிமடத்தில் இருக்கும் காலகட்டங்களில் குடும்பத்துடன் சென்று சேவை செய்வார் மணி சாஸ்திரி.

ஒருமுறை பெசண்ட்நகர் வீட்டில் இருந்த மணிசாஸ்திரி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவருக்குத் திடீரென என்ன ஆயிற்று என்று குழம்பிய வீட்டார், தங்கள் குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான டாக்டர் பி.ஆர்.ஷெட்டியிடம் அழைத்துப் போனார்கள். மணிசாஸ்திரியைப் பரிசோதித்துப் பார்த்த ஷெட்டி இவரை உடனடியாக ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனாலும் மணிசாஸ்திரியின் பொருளாதார நிலை பற்றி நன்கு அறிந்தவர் ஷெட்டி. எனவே தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து அடையாறு பகுதியில் இருக்கும் வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையில் சேரச் சொல்லி அனுப்பினார்.

அதன்படி பதறிப் போனவர்கள், மணி சாஸ்திரியை அழைத்துக் கொண்டு V.H.S.மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அட்மிஷனும் உடனடியாகக் கிடைத்தது. பலதரப்பட்ட மருத்துவர்களும் வந்து மணிசாஸ்திரியைப் பரிசோதித்தார்கள். ஏராளமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் உடலில் எக்கச்சக்க காம்ப்ளிகேஷன் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருவாரம் இங்கேயே சிகிச்சை செய்வோம். அதன் பிறகு பார்ப்போம் என்றார்கள்.

மணி சாஸ்திரிகளிடம் இருந்து பேச்சே இல்லை. உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை. குடும்பத்தினர் அனைவரும் கலங்கினர். மஹாபெரியவாளுக்கு சேவை செய்தே தேய்ந்து போன இந்த தேகத்தை அந்த மகானே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தனர்.

டாக்டர்கள் சொன்ன ஒரு வாரம் முடிந்தது. ஆனால் மணி சாஸ்திரியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்கள் தோற்றுப் போயினர். இந்த நிலையில் ‘நாளை இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்’ அதுதான் நல்லது’ என்று சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொன்னார்கள் டாக்டர்கள். அடுத்து என்ன செய்வது என்றே அந்தக் குடும்பத்தினருக்குப் புரியவில்லை. கண்ணீர் மல்க நின்றனர் அனைவரும்.

அப்போது ஹரிஹர சாஸ்திரி மருத்துவமனைக்கு வந்தார். படுக்கையில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த தம்பி மணிசாஸ்திரியிடம் சென்றார். தம்பியை இந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு. ‘கவலைப்படாதடா….உனக்கு ஒண்ணும் இல்லை. காஞ்சிபுரம் போய் பெரியவாளைப் பார்த்திட்டு வருவோம் வாடா’ என்றார் தம்பியிடம் சுவாதீனமாக. மணிசாஸ்திரியிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. கேட்கக் கூடிய கேள்வியை உள்வாங்கிக் கொள்பவர்களால்தானே பதில் சொல்லமுடியும்? இப்போது தான் மணி சாஸ்திரி அந்த நிலையில் இல்லையே.

உடன் இருந்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் பதறிப் போனார்கள். உடலில் அசைவே இல்லாமல் இருக்கும் இவரை எப்படி காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போவது? அது ரொம்பவும் ஆபத்தானது என்று சட்டென்று மறுத்துப் பேசினார்கள். ஹரிஹர சாஸ்திரியைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.

மணி சாஸ்திரி வராவிட்டால் என்ன? அவன் சார்பாக நானே போய் மஹாபெரியவாளைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். அந்தக் கருணை தெய்வம் தான் இவனை உயிர்ப்பிக்க வேண்டும். நிச்சயம் இவனைக் காப்பாற்றும் என்று ஹரிஹர சாஸ்திரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

தம்பி மணி சாஸ்திரியை அவர் முன்பு இருந்த பழைய உற்சாக நிலையில் பார்த்துவிடத் துடித்தார் ஹரிஹர சாஸ்திரிகள். ‘மணி சாஸ்திரியை எப்படியாவது காஞ்சிபுரம் கூட்டிப்போனால், மகா பெரியவாளைப் பார்த்ததுமே எழுந்து உட்கார்ந்து விடுவான். ஆனால், அவன் இப்போது இருக்கும் நிலையில் காஞ்சிபுரத்துக்கு எப்படிக் கூட்டிப்போவது?’ என்று தீவிரமாக யோசித்தார் ஹரிஹர சாஸ்திரிகள்.

‘மணி சாஸ்திரியை எப்படியாவது காரில் உட்கார வைத்து காஞ்சிபுரம் கூட்டிப் போய் விடுவது’ என்ற ஹரிஹர சாஸ்திரிகளின் கருத்தை, குடும்பத்தினர் உட்பட மருத்துவர்கள் எவருமே ஏற்கவில்லை. அது மணி சாஸ்திரியின் தற்போதைய உடல் நிலைக்கு உகந்ததல்ல என்று கருத்து தெரிவித்தனர் அடையாறு வி.ஹெச்.எஸ். மருத்துவர்கள்.

“சரி… மணி சாஸ்திரியின் சார்பாக நான் காஞ்சிபுரம் புறப்படுகிறேன். அந்தக் கருணை தெய்வத்திடம் கண்ணீர் மல்க வேண்டுகிறேன். பயன் இல்லாமலா போகும்?” என்று திடமான நம்பிக்கையுடன் தன் குடும்பத்தினரிடம் சொன்ன ஹரிஹர சாஸ்திரிகள், அன்று இரவே காஞ்சிபுரம் கிளம்பத் திட்டமிட்டார்.

இவர்களின் குடும்பத்தின் மீது அபாரமான அன்பும் தீவிர மரியாதையும் கொண்ட, ‘பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த அன்பர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்களின் முயற்சியால் பயணத்துக்கு ஒரு காரும் ஏற்பாடானது. அந்த காரில் ரத்னகிரீஸ்வரர் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரம் புறப்படத் தயாரானார்கள்.
ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் புறப்படத் தயாரான அதே இரவு. நேரம் மணி 11. இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துக்கு வருவோம்.

மடத்தில் பூஜைகளைப் பார்த்துவிட்டு, மஹா பெரியவாளையும் தரிசித்துவிட்டு, இரவு ஆகாரத்தையும் முடித்து, பக்தர்கள் பலரும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டிருந்தார்கள். மடத்திலேயே தங்கி மறுநாளும் மஹா ஸ்வாமிகளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அனுக்கிரகமும் உள்ளவர்கள் மட்டும் மடத்தில் இரவு தங்கி இருந்தார்கள். நேரம் ஆகி விட்டபடியால், அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்கப் போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட காஞ்சி மடமே அமைதியான சூழ்நிலையில் இருந்தது. இரவு காவல் காக்கும் பணியில் உள்ள வாட்ச்மேன், மடத்தின் பிரதான கதவைப் பூட்டுவதற்காக முனைந்து கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்து, ஒரு சீடனை அனுப்பி அந்த வாட்ச்மேனைக் கூட்டிவரச் சொன்னார் மகா பெரியவா.

‘கதவைப் பூட்டுகிற வேளையில் பெரியவா வரச் சொல்கிறாரே…. ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது’ என்று தனக்குள் பரபரத்த வாட்ச்மேன், தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து அவசர அவசரமாக இடுப்பில் சுருட்டிக் கட்டிக் கொண்டு, மடத்துக்குள் விரைந்தார்.

பெரியவாளைப் பார்த்ததும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டார்.
பிறகு வாட்ச்மேனிடம் பெரியவா, “கதவைப் பூட்டிடாதே… மெட்ராஸ்லேர்ந்து ஹரிஹர சாஸ்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வருவான். கதவைப் பூட்டிட்டா அவனுக்குக் கஷ்டமா போயிடும். அவன் வந்தப்பறம் பூட்டிக்கோ” என்று சொல்ல, பெரியவாளின் ஞான திருஷ்டியைக் கண்டு பரவசப்பட்ட வாட்ச்மேன், “அப்படியே ஆகட்டும் சாமீ” என்று மீண்டும் கும்பிடு போட்டு, வெளியே நடந்தான்.

மடத்தின் மெயின் ‘கேட்’ அருகே வந்தவன், கதவைப் பூட்டாமல், அங்கேயே ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கியது.

ஹரிஹர சாஸ்திரிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அந்த கார், காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலில் ‘கிறீச்’சிட்டு நின்றது.

இதைத்தானே வாட்ச்மேனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்?!

முதலில் ஹரிஹர சாஸ்திரிகள் காரில் இருந்து இறங்க, வாட்ச்மேன் பரவசமானான். “வாங்க ஐயரே… நீங்க இன்னிக்கு ராத்திரி, மடத்துக்கு வருவீங்கன்னு சாமீ இப்பதான் அரை மணி நேரம் முன்னே சொன்னாரு… உங்களுக்காகக் கதவைக்கூட பூட்ட வேண்டாம்னு சாமீ சொல்லிச்சு. வாங்க, வாங்க” என்று வரவேற்றான். ஹரிஹர சாஸ்திரிகளை முன்னே அறிந்தவர்தான் இந்த வாட்ச்மேன்.

தன்னுடன் வந்த ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய பிரமுகர்களைப் பார்த்து, “மடத்துக்கு இன்னிக்கு நாம வரப்போறோம்னு பெரியவாளுக்கு நியூஸ் கொடுத்திருந்தேளா?” என்று கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினர்.

ஹரிஹர சாஸ்திரிகள் மெய்சிலிர்த்துப் போனார்.

“மகா பெரியவாளே…” என்று நா தழுதழுக்க, அந்தக் கலியுக பரமேஸ்வரனின் திருநாமம் உச்சரித்து மடத்தின் வாசலுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். இதுவே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது அவருக்கு!

மெல்லிய விளக்கொளியில் இருந்த ஸ்ரீமடத்துக்குள் அவர்கள் நுழைந்தனர்.

அப்போது ஒரு சிஷ்யன் வேகமாக இவர்களிடம் வந்து, “மாமா… பெரியவா உங்களுக்காகக் காத்திண்டிருக்கா… உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னா” என்றான், அடுத்தகட்ட அதிரடியாக.

ஹரிஹர சாஸ்திரிகளுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் அடுத்த அதிர்ச்சி. ‘நாம் வரப்போவது பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவாவது பரவாயில்லை. வந்தவுடனே நம்மைப் பார்க்க வேண்டும் என அந்தப் பரப்பிரம்மம், இரவில்கூட ஓய்வெடுக்காமல் காத்துக் கொண்டிருக்கிறதே!’

சிஷ்யன் முன்னால் நடக்க, பரபரவென்று அவனைப் பின்தொடர்ந்தார்கள் அனைவரும்.

பெரியவா அமர்ந்திருந்த அந்தக் குடிசையின் வாசலுக்குச் சென்றதும், சிஷ்யன் ஒதுங்கிக் கொண்டான். ஹரிஹர சாஸ்திரிகள் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், “வாப்பா ஹரிஹரா… ராத்திரி வேளைல வந்திருக்கே. முக்கியமான ஜோலின்னு, துணைக்கு ஆசாமிங்களையும் கூட்டிண்டு கார்லயே வந்திட்டியோ?” என்று அந்த மகா முனிவர், இவர்களைப் பார்த்து இயல்பாகக் கேட்டார்.


“அது வந்து பெரியவா…” என்று ஹரிஹர சாஸ்திரிகள் மெள்ள விஷயத்தைச் சொல்லத் துவங்க … “முதல்ல எல்லாரும் உக்காருங்கோ. ஆகாரமெல்லாம் ஆயிடுத்தோல்யோ? இல்லேன்னா அரிசி உப்புமா ரெடி பண்ணச் சொல்லட்டுமா?” என்று கேட்டார் பெரியவா.

“எல்லாம் ஆச்சு பெரியவா. எதுவும் வேண்டாம்” என்றவர்கள், தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.

“பெரியவா… என் தம்பி மணி சாஸ்திரி ஒடம்பு முடியாம படுத்திண்டிருக்கான். இன்னிக்கோ, நாளைக்கோன்னு டாக்டர்கள் நாள் குறிச்சிட்டுப் போயிட்டா…” என்று அடுத்து எதோ சொல்ல வந்த ஹரிஹர சாஸ்திரிகளை பெரியவா இடை மறித்தார். “ஏண்டா… இப்ப அவனை, தனியா விட்டுட்டா எல்லாரும் இங்க வந்திருக்கேள்?” என்று திகைப்புடன் கேட்டார்.

பெரியவாளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது ஹரிஹர சாஸ்திரிகளுக்கு.

சில விநாடிகள் தியானத்துக்குப் பிறகு பெரியவா திருவாய் மலர்ந்தார். “அசடே… இந்தப் பிரசாதத்தைக் கொண்டுபோய் மணிகிட்ட கொடு. எல்லாம் காமாட்சியோடது” என்று பிரசாதத் தட்டுகள் இருந்த பக்கம் கைநீட்டிக் காண்பித்தார்.

அங்கே-

நாலைந்து மூங்கில் தட்டுகள். அதில் ஏராளமான புஷ்பங்கள், மாலைகள், விதம்விதமான பழங்கள், விபூதி, குங்குமம் என்று அனைத்தும் ஃபிரஷ்ஷாக இருந்தன. மூங்கில் தட்டின் விளிம்புகூட கண்களில் படவில்லை. அந்த அளவுக்குப் பிரசாதங்கள் அனைத்தும் அடர்த்தியாக – மூங்கில் தட்டையே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன.

ஹரிஹர சாஸ்திரிகளும் பெரியவாளிடம் இருந்து தன் வாழ்க்கையில் எத்தனையோ முறை பிரசாதங்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது போன்றதொரு பிரசாதங்களை – தூக்க முடியாத அளவுக்கு – அவர் பெற்றதே இல்லை.

எல்லோரும் பெரியவாளின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள். அனைவரையும் ஆசீர்வதித்தார் மகா பெரியவா.

“பெரியவா உத்தரவு கொடுத்தா, பிரசாதங்களை எடுத்துண்டு இப்பவே மெட்ராஸ் கௌம்பிடுவோம். மணி ரொம்ப சந்தோஷப்படுவான்” என்று தரையில் இருந்து, மெள்ள எழுந்தபடி கேட்டார் ஹரிஹர சாஸ்திரிகள்.

“அவசரப்படாதே… மணி சாஸ்திரி பத்திரமா இருப்பான். அகால வேளை. இங்கேயே படுத்துண்டுட்டு விடிகார்த்தால வெளிச்சம் வர ஆரம்பிச்சவுடனே கௌம்புங்கோ” என்றார் மகா ஸ்வாமிகள்.

“உத்தரவு பெரியவா” என்றபடி, வந்தவர்களுடன் சேர்ந்து தானும் மூங்கில் தட்டுகளைச் சுமந்தபடி அங்கிருந்து வெளியே வந்தார் ஹரிஹர சாஸ்திரிகள். மடத்தின் ஒரு மூலையில் – தலைமாட்டில் பிரசாதத் தட்டுகளை வைத்துவிட்டு மேல்வஸ்திரத்தைத் தரையில் விரித்து, லேசாகக் கண் அயர்ந்தனர்.

புரண்டு புரண்டு படுத்தார்களே தவிர, எவருக்கும் தூக்கம் வரவில்லை.

பொழுது விடிந்தவுடன் இந்தப் பிரசாதங்களைக் கொன்டுபோய் தம்பி மணியிடம் சேர்க்க வேண்டும் என்பதே ஹரிஹர சாஸ்திரிகளின் நினைப்பாக இருந்தது. ‘அவன் இந்நேரம் எப்படி இருக்கிறானோ? பெரியவாளின் ஆசியுடன் தேறி விடுவானா?” என்றெல்லாம் இவரது எண்ணம் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

அதிகாலை ஐந்து மணிக்கு மடத்தின் வாசலில் சாணம் தெளித்து, கோலம் போடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரிஹர சாஸ்திரிகள் உட்பட அனைவரும் காருக்கு வந்துவிட்டனர். டிரைவரும் தயாராகவே இருந்தார்.

பிரசாதங்களைச் சுமந்தபடி அந்த கார், அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. பெரியவாளின் பிரசாதத் தட்டு ஒன்றைத் தன் மடியில் வைத்திருந்த ஹரிஹர சாஸ்திரிகள், ஏதோ பெரியவாளே தன்னுடன் பயணித்து வருவதுபோல் உணர்ந்தார்.

காலை சுமார் ஏழரை மணிக்கு அடையாறு வி.ஹெச்.எஸ். ஆஸ்பத்திரிக்குள் அந்த கார் நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், தங்களால் முடிந்த தட்டுகளைக் கையில் எடுத்துக்கொண்டு மணி சாஸ்திரி இருந்த வார்டை நோக்கி நடந்தனர்.

மலர்களும் மாலைகளும் நிரம்பிய அந்த மூங்கில் தட்டில் இருந்து கிளம்பிய திவ்யமான நறுமணம், மருத்துவமனையின் சூழலையே மாற்றியது.

எதிர்ப்பட்ட மருத்துவர்களும் நர்ஸ்களும், காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து மகா பெரியவா ஆசியுடன் இந்தத் தட்டுகள் வந்துள்ளன என்பதை அறிந்து, அதைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வந்திருந்த சில உறவுக்கார அன்பர்கள், அதற்கு நமஸ்கரிக்கவே செய்தனர்.

இந்தக் களேபரங்களை எல்லாம் தாண்டி மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் இவர்கள் செல்வதற்குச் சில நிமிடங்கள் கூடுதலாகவே ஆயின.

‘தம்பி மணி சாஸ்திரி நேற்றைய இரவுப் பொழுதை எப்படிக் கழித்தானோ? அவனுடைய தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?’ என்றெல்லாம் ஹரிஹர சாஸ்திரிகள் மனம் கன்னாபின்னாவென்று அலைந்தது.

இதோ ஹரிஹர சாஸ்திரிகள், மணி சாஸ்திரி அட்மிட் ஆகி இருந்த வார்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரசாத மணம், அந்த அறைக்குக் கூடுதல் பிரகாசம் தந்தது. சூழலையே இதமாக்கியது.

“தம்பீ மணி…” என்று கூப்பிட்டுக் கொண்டே வார்டுக்குள் முதலில் நுழைந்த ஹரிஹர சாஸ்திரி ஏகத்துக்கும் அதிர்ந்துவிட்டார்

ஹரிஹர சாஸ்திரிகளுடன் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பியவர்களும் மடத்தில் இருந்து பெரியவாளின் அனுக்ரஹமாகக் கிடைத்த பிரசாதங்களைக் கைகளில் சுமந்திருந்தனர். ‘மணி சாஸ்திரியின் கையில் எப்படியாவது இந்தப் பிரசாதங்களைக் கொடுத்து, மஹாபெரியவாளின் அருள் அவனுக்குக் கிடைக்கவைக்க வேண்டும். பிரசாதமாகக் கொண்டு வந்திருக்கும் ஓரிரு பழங்களை நறுக்கி, அவனுக்கு உட்கொள்ளக் கொடுக்க வேண்டும். விபூதி பிரசாதத்தை அவன் நெற்றியில் இட்டுவிட்டு, தினமும் தலைமாட்டுக்கு அருகில் வைக்கச் சொல்ல வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் அவரது அண்ணனான ஹரிஹர சாஸ்திரிகள்.

மணிசாஸ்திரி இருந்த வார்டுக்குள் நுழைந்ததும், ஏகத்துக்கும் அதிர்ந்து விட்டார் ஹரிஹர சாஸ்திரி. உடல் நலம் முடியாமல் – நோயின் உக்கிரமம் தாளாமல் சுருண்டு படுத்திருப்பான் மணி சாஸ்திரி என்று சென்றவருக்கு, அவர் ஜம்மென்று நிமிர்ந்து பெட்டில் உட்கார்ந்திருந்ததால் அதிர்ச்சி இருக்காதே பின்னே?! அது மட்டுமல்ல… ‘வாப்பா ஹரிஹரா… எங்கேர்ந்து வர்றே? என்று மணி சாஸ்திரி குரலில் பிசிறு இல்லாமல் கேட்ட கேள்வியைத் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை ஹரிஹர சாஸ்திரி.

தம்பியை இந்த நிலையில் பார்த்ததும், ஹரிஹர சாஸ்திரிக்குப் பேச்சே எழவில்லை. கண்களில் நீர் கசிய ஆனந்தப்பட்டார். நெகிழ்ச்சியில் பூரித்தார். காஞ்சி மடத்துக்குச் சென்று பெரியவா தரிசனம் முடித்து வந்திருக்கும் வேளையில் இப்படி ஓர் அற்புதமா என்று எண்ணி, அந்த நடமாடும் தெய்வத்தை ஒரு கணம் இருந்த திசையில் இருந்தே மனமுருக வேண்டிக் கொண்டார். மானசீக நமஸ்காரத்தைத் தெரிவித்தார்.

பிறகு தன் இயல்புக்கு வந்த ஹரிஹர சாஸ்திரி ‘என்ன மணி எப்படிடா இருக்கே? இப்படித் திடீர்னு எழுந்து பெட்ல உக்காந்திண்டிருக்கியே. உன்னால முடியறதா? டாக்டருங்க பார்த்தா ஏதானும் சொல்லப் போறா’ என்று வேகவேகமாக நடந்து பெட்டில் மணிசாஸ்திரியின் அருகில் உட்கார்ந்து கொண்டார் ஹரிஹர சாஸ்திரி. கூடவே நர்ஸ், மற்றும் டாக்டர்களின் அனுமதி பெறாமல் எழுந்து உட்கார்ந்து தன்னை சிரமப்படுத்திக் கொள்கிறானோ என்றும் கவலைப்பட்டார் ஹரிஹர சாஸ்திரி.

‘ஒண்ணும் கவலைப்படாதீங்கோ…நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி வரைக்கும் என்னால எதுவும் முடியாம இருந்தது. இன்னிக்கு முடியறது. எழுந்து உட்கார்ந்தேன்’ என்றார் மணி சாஸ்திரி.

‘எப்படிடா முடியறது? இந்த நாள் வரைக்கும் எங்களையெல்லாம் இப்படிக் கவலைப்பட வெச்சுட்டியேடா…உனக்கான நாளையும் டாக்டருங்க குறிச்சிக்கும்படியா வெச்சுட்டியேடா’ என்று மணி சாஸ்திரியை ஆதுரமாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தார் ஹரிஹர சாஸ்திரி.

‘எனக்கு ஒன்னும் இல்லேண்ணா… நேத்து ராத்திரி பெரியவா இங்கே வந்தா…’ மணி சாஸ்திரி இப்படிச் சொல்லத் துவங்க மிரண்டு போனார் ஹரிஹர சாஸ்திரி.

‘என்ன சொல்றே..பெரியவா இங்கே வந்தாளா? எந்தப் பெரியவா?

என்னண்ணா இப்படிக் கேக்கறேள்? நமக்கு எல்லாம் பெரியவான்னா யாரு? காஞ்சி தெய்வம் தான். சாட்சாத் அந்தப் பெரியவா இங்கே வந்தா…’

வந்தாரா… இந்த ஆஸ்பத்திரிகு வந்தாரா…என்ன சொன்னார்? ஹரிஹர சாஸ்திரியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை. தம்பி சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

‘ராத்திரி ரெண்டு மணி இருக்கும். தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுத்தேன். திடீர்னு அதிகார தொனியில் ஒரு குரல் – ‘மணி எழுந்து உட்கார்டானு. பொசுக்குன்னு எழுந்து பார்த்தா யாருமே இல்லை. எதோ பிரமையோன்னு திரும்பப் படுத்துட்டேன். அப்புறமும் அதே அதிகாரக் குரல் – ‘மணி..உனக்கு ஒண்ணுமே இல்லை. நீ ஆரோக்கியமா இருக்கே.எழுந்து உட்கார்டா’ தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

மஹாபெரியவா என் முன் தோன்றி சொன்னார். ‘ஜய ஜய சங்கர’னு கன்னத்துல போட்டுண்டு ‘அப்படியே ஆகட்டும் பெரியவா’னு சட்டுன்னு போர்வையை விலக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இது நாள் என்னைப் பாடாப் படுத்திண்டிருந்த உபாதை எதுவும் அதுக்குப் பிறகு கொஞ்சமும் இல்லை. உடம்பு ரொம்ப இயல்பா ஆயிடுத்து’ – மணி சாஸ்திரி வெகு சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹரிஹர சாஸ்திரிகளும், அவருடன் வந்தவர்களும் அடைந்த ஆச்சரியத்துக்கும் பிரமிப்புக்கும் அளவே இல்லை. ‘மணி உனக்கு ஒடம்பு நன்னா ஆகணும்னு தான் காஞ்சிபுரம் போய் அந்த மஹானைத் தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு வந்தோன். ஆனா அவரோட பிரசாதம் உன் கைக்கு வந்து சேர்றதுக்குள்ளே உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துட்ட அந்த தெய்வத்தின் கருணையை எப்படிப் பாராட்டறது’ என்றவர், தான் கொண்டுவந்த பிரசாதத்தில் இருந்து விபூதியை மட்டும் எடுத்து மணி சாஸ்திரியின் நெற்றியில் இட்டுவிட்டார்.

V.H.S.மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் இந்தத் தகவல் போய் ஓடோடி வந்தார்கள். ‘நேற்றைய தினம் வரை நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மணி சாஸ்திரியா இவர்? என்று ஆளாளுக்குத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வந்த பிரசாதம் மருத்துவமனைக்குள் விநியோகம் ஆனது.

‘என்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்றேள்?” என்று மணி சாஸ்திரி ஆர்வமுடன் கேட்டது மருத்துவர்களுக்கே மாபெரும் சந்தோஷத்தை தந்தது.

அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து இயல்பாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மணி சாஸ்திரி. 1983-ஆம் வருடத்திலேயே நாள் குறிக்கப்பட்ட மணி சாஸ்திரி, பன்னிரண்டு வருடங்கள் கழித்து 1995-ல் இயற்கை எய்தினார்.

காஞ்சி மடத்துக்கு மணிசாஸ்திரி செய்திருந்த தொண்டைப் பாராட்டி மடத்தின் சார்பில் அவருக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு தந்திருந்தார்கள். அந்த வீட்டில் தான் அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

பெரியவா சரணம் பெரியவா கருணை.

கட்டுரையாளர் : தெய்வத்தின் குரல் திரு.சுவாமிநாதன் அவர்கள்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி

Thursday, 21 January 2016

"பாமதி'யும்,'பரிமள'மும்" - மஹா பெரியவா

ஸ்ரீமடம், கும்பகோத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம்.

மகாப் பெரியவாள் பிரும்மஸூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஏராளமான வித்வான்களும்,சந்யாசிகளும் கேட்டுப்
பரவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்வான் இடையில் சந்தேக விளக்கம் கேட்டார்.

பெரியவாள் ஐந்து நிமிஷம்போல் பதில் சொல்லி விட்டு,  
" ..'பாமதி'யிலோ,   'பரிமளத்'திலோ இதற்கு
விஸ்தாரமான பதில் இருக்கு.அதைப்படிச்சால் போதும்... மடத்து லைப்ரரியிலே அந்தப் புஸ்தகம் இருக்குமே! பார்த்துவிடலாமே?" என்றார்கள்.

புத்தகசாலைப் பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரி,

"யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருக்கார்... இப்போ லைப்ரரியில் இல்லை!" என்றார்.

அந்த சமயத்தில் தெருப்பக்கத்தில் பேரிச்சம்பழக்காரன் குரல் கணீரென்று கேட்டது.

"பழைய புஸ்தகங்களைப் போட்டுவிட்டு, சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா, உடனே போய், அவனிடம் இருக்கிற 
புஸ்தகங்களையெல்லாம் விலை பேசி வாங்கிக்கொண்டு வா" என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.

அவர் ஒரு கட்டு புஸ்தகங்களுடன் வந்தார். 

அபூர்வமான சம்ஸ்க்ருத புத்தகங்கள்! புத்தகக் காகிதம் பழுப்பு நிறமாகிவிட்டிருந்தது. 

"சாஸ்திரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ..."என்று
உத்திரவாயிற்று.

சாஸ்திரிகள் ஒவ்வொரு புஸ்தகமாக எடுத்து தலைப்பை சொல்லிக் கொண்டு வந்தார். அந்தக்கட்டில், 'பாமதி'யும்,'பரிமள'மும்
(அத்வைத விளக்க நூல்கள்) இருந்தன.
------------------------------------------------------------------------
'பாஷ்ய பாடம் நடக்கும் நேரம் பார்த்து
பேரிச்சம் பழக்காரன் வருவானேன்?
அவனிடம் புஸ்தகங்கள் இருப்பானேன்?
அவைகளை விலைக்கு வாங்கும்படி
பெரியவாளே உத்திரவு இடுவானேன்?
(கீழே உள்ள கதையைப் படியுங்கள் விளக்கத்திற்கு)
-------------------------------------------------------------------------------------
அம்பிகாபதி கதை :(இதனை  "அம்பிகாபதி" திரைப்படத்தில் கூட பார்த்து இருப்போரும் உண்டு. )

கல்விச்சக்ரவர்த்தி கம்பருடைய மகன் அம்பிகாபதியும், குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியும் ஒருவரையொருவர் விரும்புவதைத் தெரிந்து கொண்ட ஒட்டக்கூத்தர், சோழனிடம் இதைப்பற்றி கொளுத்தி விட்டார். அரசன் நம்புவதற்காக, கம்பரையும் அம்பிகாபதியையும் மட்டும் தனியான விருந்துக்கு அழைக்கச் சொல்லி, அவர்களுக்கு அன்னம் பரிமாறும் வேலையை இளவரசியான அமராவதி செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு பண்ணினார்.

விருந்துக்கு அம்பிகாபதி வரப்போவதை அமராவதிக்கும், அமராவதி அன்னம் பரிமாறப் போவதை அம்பிகாபதிக்கும் சொல்லக் கூடாது என்று கூறினார். அப்போதுதான் அவர்களுடைய அன்பை கண்கூடாக அரசனால் காண முடியும் என்றும் கூறினார்.

அதன்படியே ஒட்டக்கூத்தர், அரசன், கம்பர், அம்பிகாபதி நால்வரும் விருந்துண்ண அமரவும், அமராவதி அன்னவட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்ததும், இருவருக்குமே பெருத்த ஆஸ்சர்யமும், ஆனந்தமும் உண்டானது! 

அம்பிகாபதியும் பெரிய கவியில்லையா? அமராவதியை எதிர்பாராமல் அங்கு பார்த்த ஆனந்தத்தில், கவிதையும் துள்ளிக் கொண்டு வந்தது! தான் எங்கு இருக்கிறோம், என்ன பின்விளைவு என்பதெல்லாம் மறந்தது இருவருக்கும்!

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய......."

என்று அம்பிகாபதி ஆரம்பித்ததும், அமராவதியின் பாதம் கொப்பளித்ததோ இல்லையோ....அரசனின் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது! கம்பரும், மைந்தனின் தகுதியில்லா அன்பால், நிலைகுலைந்து போனார்! விட்டால்....பிள்ளை இன்னும் எதையாவது பாடி, மன்னன் அவனுக்கு அங்கேயே ஸமாதி கட்டி விடுவானோ? என்ற பயத்தில், வாக்தேவியான வாணியை சரணடைந்தார்! பிள்ளை ஆரம்பித்த கவிதையை, தான் முடித்து வைத்து, அவனையும், இளவரசியையும் சுதாரித்துக் கொள்ள வைத்தார்.

"இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க 
வட்டில் சுமந்த மருங்கசைய.......
கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று 
கூவுவாய் நாவில் வழங்கோசை வையம் பெறும்...!" என்று முடித்தார்.

ஒட்டக்கூத்தரோ, மன்னருக்கு தூபம் போட்டு, அம்பிகாபதி பாடியது அமராவதியைப் பார்த்துதான், என்றதும், "கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியின் குரல் கேட்டுத்தான் என் மகன் பாடினான்" என்று கம்பர் சொன்னதும், அரசன் ஆட்களை அனுப்பி, வீதியில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண் யாராவது இருந்தால் உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

சதா தமிழ் என்னும் அழகால் தன்னை மேலும் அழகு படுத்தும் தன்னுடைய பக்தனான கவிச்சக்ரவர்த்தியை, கலைமகளான ஸரஸ்வதி தன் அனுக்ரஹ அழகால் அக்ஷணமே காப்பாற்றினாள்.

ஆம்! கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாக ஸாக்ஷாத் ஜகன்மாதாவான ஸரஸ்வதியே வந்துவிட்டாள் !

காவலர்கள் அவளை அழைத்து வந்து, மன்னன் முன் நிறுத்தியதும்,
"கம்பனின் கவிதைக்கு எதைத்தான் தரக்கூடாது? கொட்டிக்கிழங்கு தரட்டுமா?" என்று அவள் கூறியதும், மன்னன் ஒட்டக்கூத்தரை ஓரங்கட்டி விட்டுவிட்டு, தன் சந்தேஹம் ஆதாரமற்றது என்று அப்போதைக்கு நம்பினான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாக்தேவியை நாவில் நர்த்தனமாடவிட்ட கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வரும்போது,- ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி' யான நம் பெரியவா ஸங்கல்பித்தால், அம்பிகை ஏன் பாமதி, பரிமளத்துக்காக, 'பேரீச்சம்பழம்' விற்க மாட்டாள்?

100 ஆவது ஆண்டு விழாவுக்கு சற்று முந்தைய மஹா பெரியவாளின் அநுக்கிரஹம் !!!

மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு. மூச்சுக்காற்று. சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி. இன்னும் என்ன சொல்ல? கோடானு கோடி சம்பவங்களில் ஒன்று அடி மனதை தொட்டு விட்டது. அதை உங்களுக்கும் பரிமாறி அந்த வார்த்தைக்கப்பால் பட்ட சுகானுபவம் நீங்களும் பெற எனக்கு ஆசை. எங்கிருந்தோ எனக்கு வந்ததை சற்று செப்பனிட்டு அளிக்கிறேன்.

டாக்டர் சிவசங்கர் அமெரிக்காவே தஞ்சம் பிறந்த தமிழகமோ தாய் நாடு இந்தியாவோ ஒரு உபயோகமற்ற, உருப்ப டாத சாக்கடை, இந்தியர்கள் திருத்த முடியாத காட்டுமிராண்டிகள் தன்னைத்தவிர என்ற அமெரிக்க- தா(க் )க- இந்தியர். இந்தியாவுக்கு மனத்தில் விருப்பமில்லாமல் மனைவியின் தொண தொணப்பு தாங்காமல் வந்து கொண்டிருக்கிறார்.

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு” “நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

“கடல் மட்டும்தான் மாறலை !”

பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக் குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.

“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”

பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.

பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலி கிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்கு ஏரோப்ளேன் ?”

பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”
பேசவில்லை.

“அலுமினிய சொம்போட ?”

பேசவில்லை.

விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

“என்ன மோசமான லாண்டிங் !”

விமானம் ஊர்ந்தது.

“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”

“நீங்களும் பார்க்கணும்.”

“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”

பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி, “இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?” 

பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”

அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”

அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.

சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பது அடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.

‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.

“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம் இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.

பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறை தான் கஷ்டம்’ என்று.

இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!

கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களா பாரு இந்தியாவிலே …”

கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து, எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க — இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

“வாட் வாட் ?”

அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்; எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒரு பொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”
“நீங்க வாங்க; அவனோட என்ன ?”

பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள். இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.
வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில் ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”

“நான் எங்கே போனா உனக்கென்ன ?”

“அவனோட பேச வேண்டாம்.”

“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”

அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

“டாக்டர் சிவசங்கர்.”

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

“ஆமாம்.”

“இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.”

“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”

பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.

“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”

“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

“டிரைவர் உங்க பேரு என்ன ?”

“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”

கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது. “பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”

“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”

“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்… இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….”

“விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?”

“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.

அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”

“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

“அம்மா உங்களுக்கு ?”

“நிம்மதி “ என்றாள்.

“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

“எனக்குத் தேவைப்படுதுங்க.”

“லுக் அவுட் !” என்று கத்தினார். 

வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.

அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”

சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

“இளநி சீவலாங்களா ?”

“வேண்டாம்ப்பா .”

“சீவிட்டேங்களே…”

பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

“சரி, குடு” என்றார். நல்ல வேளை.

இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”

பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

“மயிரிழைல தப்பினம்.” “எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.

காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள் காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்…. 

பாகீரதிக்கு உற்சாகம் பொங்கியது.

பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம் ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிறலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துறலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”

ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.
‘காமாந்தகார கன்னி’ என்ற சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.

ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”

பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”

“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

“அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”

“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

“நான்தான் காரணமா சொல்லு ?”

“சரி நானும்தான் காரணம்.”

பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

“சும்மா வாங்களேன் துணைக்கு!”

அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார்.

பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

“ஹூ இஸ் திஸ் பாய் ?”

“புதுப் பெரியவா.”

“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

“நீங்க விழ வேண்டாம்.”

“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”

ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.

அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.
சிவசங்கரன் ஓரமாக நிற்க ........ “நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “
“ஷிவ்ஷங்கர்.”

“ஊரு ?”

“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

”இல்லை நாங்க சொல்றது வேற .”

“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயே கரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

“இல்லை.”

“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

“இல்லை.”

“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்‌ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.

அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக் கொடுத்து அனுப்பிச்சார்.

அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.

பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சு போய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்ல..
கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டிலஸ்டாண்டி சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம் பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்க முடியும் ?”

“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”

அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.

வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”

பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி 
ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.

உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.

அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”

“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......

பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.

“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.

ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !

உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.

காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.

ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும்.
கவலைப்படாதீங்கோ.

பையன் பேர் என்ன சொன்னேள் ?”

“பாலாஜி.”

அவர்கள் வெளியே வந்தனர்.

சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?” “சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !

அவள் அடங்காமல் அழுதாள்.

“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'

யார்?

ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது - 

''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”

இதற்கு மேல் எழுதுவது அர்த்தமில்லை. இதயமும் மனமும் தானே எழுதிக்கொள்ளும்