கடவுள் நம்மோடு பேசுவதில்லை. எது சொன்னாலும் எது செய்தாலும் கடவுள் விக்ரஹம் சிரித்துக் கொண்டேதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஏன்?
ஒரு புராதன கோயில் பெருக்கும் ஒரு நல்ல பக்தருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. பாவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து எத்தனையோ குறைகள் சொல்லி, நன்றி சொல்லி, என்னன்னவோ சொல்கிறார்கள்., படிக்கிறார்கள்., புலம்புகிறார்கள்..மகிழ்கிறார்கள்.. அனைத்தையும் சிரித்துக்கொண்டே, நாள்முழுதும் நின்றுகொண்டே களைப்பைக் காட்டாமல் இந்தக் கடவுள் பொறுத்துக்கொண்டே வாய் திறக்காமல் வெறுமே பார்த்துக்கொண்டே உணர்ச்சி காட்டாமல் இருக்கிறாரே..எவ்வளவு ஆயாசமாக இருக்கும்? எனவே அந்த மனிதன் கடவுளைக் கேட்டான்.
பக்தர்: "இவ்வளவு பொறுமையோடு கால் கடுக்க தினமும் நிற்கிறாயே, உனக்கும் ஓய்வு வேண்டாமா?"
கடவுள்: "ஆமாம் அப்பா.. ஓய்வு தேவைதான், என்ன செய்ய?"
பக்தர்: நான் வேண்டுமானால் உனக்காக ஒருநாள் நிற்கட்டுமா?"
கடவுள்: "ரொம்ப சந்தோஷம். நான் உன்னை என்போல் சிலையாக்குகிறேன். எந்தக் காரணம் கொண்டும் நீ உன் உணர்ச்சிகளைக் காட்டவோ, பேசவோ, எந்த பக்தர் விஷயத்திலும் தலையிடவோ கூடாது. புன்னகையோடு அனைவருக்கும், பாராபட்சமின்றி அருளும் ஆசியும், தரிசனமும் வழங்க வேண்டும். செய்வாயா?"
பக்தர்: "அவ்வாறே செய்கிறேன் "
மறுநாள் பக்தர், கடவுள் சிலையாக நின்றார். முதலில் அன்று ஒரு பணக்காரர் வந்தார். கடவுளை வேண்டிக்கொண்டு, பெரும் தொகையை நன்கொடையாக கோயிலுக்கு வழங்கி விட்டு போகும்போது, ஞாபக மறதியாக நிறைய பணம் உள்ள தன்னுடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டு வீட்டுச் சென்று விட்டார்.
கடவுளாக நின்ற பக்தருக்கு, "அடே மனிதா, உன்னுடைய பணப்பை இங்கேயே இருக்கிறது, எடுத்துக்கொண்டு போ" என்று சொல்ல நா எழும்பியது, ஆனால், கடவுள் வாய் திறக்கக்கூடாது என கட்டளையிட்டது நினைவுக்கு வர, பேசாமல் பார்த்துக்கொண்டே நின்றார்.
சிறிது நேரம் சென்றது. ஒரு பரம தரித்திர ஏழை கடவுள் முன்னாள் நின்று, "கடவுளே, என் குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது., கடன் தொல்லை வாட்டுகிறது., எவ்வளவு உழைத்தாலும், ஊதியம் போதவில்லை., நீயே கதி" என வேண்டி, ஒரு சிறு கற்பூரத்தை ஏற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டு திறந்தபோது, என்ன ஆச்சர்யம்!!! திண்ணென்று பணம் நிரம்பிய ஒரு பை கண்ணில் பட்டது.
கடவுளே, இதுவும் உன் மாயா லீலைதானே??!!!" இதுதான் உன் கட்டளை என்றால், அதுபோலவே நடக்கட்டும் என்று மகிழ்ச்சியோடும், நன்றியோடும், பக்திப்பரவசத்தோடு அப்பணப்பையை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.
"அரே.. அது ஒரு பணக்கார பக்தன் விட்டுச் சென்றது. வைத்து விட்டுப் போ" என கத்திச் சொல்லத் துடித்தான் அந்த பக்தக்கடவுள். ஆனால் மீண்டும் கடவுள் கட்டளை ஞாபகம் வர, வாய்மூடி நின்றான்.
அடுத்ததாக ஒரு கப்பல் செலுத்தும் மாலுமி வந்தான். "கடவுளே, இன்று இரவு கப்பலில் நான் வெளிநாடு செல்கிறேன். திரும்பி வர, ஒரு வருடம் ஆகுமே. நீதான், என்னையும், என் கப்பலையும், அனைத்து சிப்பந்திகளையும், என் குடும்பத்தையும் காத்தருள வேண்டுகிறேன் என வேண்டி நின்றுகொண்டிருந்தபோது, அங்கு திடீரென பணத்தை தவறவிட்ட பணக்காரனும்,ஒரு போலீஸ்காரனும் வந்தார்கள்.
பணக்காரன் வேக வேகமாக சந்நிதியருகில் வந்து தன கைப்பையைத் தேடினான். தென்படவில்லை. அங்கு நின்றுகொண்டிருந்த கப்பல் மாலுமியைக் கண்டதும் அவன்மேல் சந்தேகம். அருகில் நின்ற போலீஸ்காரனிடம் "இதோ இவன்தான் என் கைப்பையை எடுத்திருக்க வேண்டும்., இவனைக் கைது செய்து, கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால், உண்மை வெளி வரும்" என்று அலறினான்.
நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை நான் எந்தப் பணப்பையையும் பார்க்கவில்லையே என்று அப்பாவித்தனமாக சொல்லி, கெஞ்ச, அந்த மாலுமியை போலீஸ்காரன் அழைத்துச் செல்லும் நேரத்தில், பக்த கடவுளுக்கு கோபம் வந்து விட்டது. "அய்யா போலீஸ்காரரே! இந்த மனிதர் திருடனில்லை. பணப்பையை ஒரு ஏழை பக்தன் இங்கு வந்தபோது எடுத்துச் சென்றுவிட்டதை நான் பார்த்தேன். இவரை விட்டு விடுங்கள்" என திருவாய் மலர்ந்தார்.
மாலுமிக்கு மிக்க சந்தோஷம். "கலியுகத்தில் கண்கண்ட கடவுளே., நீயே பேசி, உண்மையை உணர்த்தி, என்னைக் காப்பாற்றினாய்" என வணங்கினார். பணக்காரருக்கு சந்தோஷம். ஏழை பக்தன் எங்குள்ளான் என்று அறிந்து, அவனிடத்திலிருந்து பண பையைப் பெற போலீஸ்காரன் உதவி நாடினார். கடவுளே பேசிய அதிர்ச்சியில் ஓட்டமாய் ஓடி போலீஸ்காரர் ஏழையைத் தேடினார். பக்தகடவுளுக்கு, தாம் ஒரு நீதிமானாக நடந்ததில் பெருமகிழ்ச்சி.
அன்றிரவு கடவுள் பக்தன் முன் தோன்றி "அன்பா! போதும் உன் உதவி. என் வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன். நீ உன் வேலையை பார் என் அதிருப்தியுடன் சொன்னார்.
"ஏன், நான் என்ன தப்பு செய்தேன்" என்று பக்தர் வினவ, கடவுள் சொன்னார்...
"பணக்காரன் கொடுத்த நன்கொடையும், கைபையில் இருந்த பணமும் திருட்டு வழியில் சம்பாதித்து வந்தது. கோவிலுக்கு நன்கொடை என்கிற நல்ல காரியத்தில் அப்பணம் ஈடுபடும்போது, அதற்கு விலையாக கொஞ்சம் பணம் ஒரு உண்மையான ஏழைக்கு உதவ, அந்த புண்யமாவது பணக்காரனின் பாவத்தைக் குறைக்கட்டுமே என ஏற்பாடு பண்ணினேன். மாலுமியை போலீஸ்காரன் சிறை செய்து கப்பலில் வெளிநாடு செல்லாமல் செய்வதற்காக நான் போட்ட திட்டத்தை நீ கெடுத்து விட்டாய். இன்றிரவு கடலில் பிரயாணம் செய்யும் அவன் கப்பல் போகும் பாதையில் சுனாமி வர இருக்கிறது., அதனால் கப்பல் மூழ்கப்போகிறது.. அவனையும், கப்பலில் இருக்கும் மற்றவரையும், மாலுமியின் குடும்பத்தையும் காப்பாற்ற நான் செய்ய நினைத்ததை ஒரே நாளில் நீ இவ்வளவையும் மாற்றி அமைத்தாய். பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா?"- என கடவுள் கேட்டதும், பக்தருக்கு தூக்கி வாரிப் போட்டது.
கடவுளின் ஒவ்வொரு சங்கல்பமும், செயலும், அருளும், நம் சிற்றறிவுக்கு எட்டாதவை அல்லவா !!
Dear Shri Guru,
ReplyDeleteNamaskaram. Nice story to explain the Avathara Kadavul!!! Everything HE does it has a got a background and it carries a purpose!! We have to understand and not to argue or interfere...
Regards,
Subbu