கனகதாரா ஸ்தோத்ரம் உருவான கதை
ஆதிசங்கரர் சந்நியாசம் வாங்கிக்கொள்வதற்கு முன், பால தசையில், காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து, வீடு வீடாகப் போய் பிஷை வாங்கி வந்த சமயம், ஒரு துவாதசியன்று, பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிஷைக்காகப் போனார். அன்று அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவே போனார் போலிருக்கிறது !
இவர் போனபோது, அந்த வீட்டின் உஞ்சவர்த்திப் பிராம்மணன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், "அடடா, எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி ! இவருக்குப் பிஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்" என்று நினைத்தாள்.
ஆனால், பிஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடிதேடிப் பார்த்ததில், ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப்பாரணைக்காக அவள் புருஷன் ' சேமித்து ' வைத்திருந்த நெல்லி !
' போயும் போயும் இதையா அந்த தெய்வக் குழந்தைக்குப் போடுவது ? ' என்று ரொம்பவும் மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால், "பவதி பிஷாம் தேஹி" என்று கேட்டு விட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அனுப்பக்கூடாது என்பதால், வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்து, சொல்ல முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள்.
உள்ளே வந்த அவள், `ஐயோ, இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா? ' என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி கையைப் பிசைந்து கொண்டு, வாசலுக்கும், உள்ளுக்குமாகத் தவித்து, தவித்து நடமாடிவிட்டு கடைசியில், `அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்? " என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்காயை ஆசாரியளுக்குப் போட்டாள்.
பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் பாலச் சிறுவனான அந்த ஆச்சாரியாள் கண்டு, அவர் மனசு அவளுக்காக உருகிற்று.
அம்பாளாகிய மஹாலஷ்மியைத் துதித்து, ஸ்தோத்ரம் ஒன்றை மனம் உருக பாடினார். இவ்வாறு மஹாலஷ்மியை நினைத்து துதிக்கிறபோது, ஆகாசத்திளிருந்து அசரீரி கேட்டது. "இந்த ஏழை பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். (தரித்திரம்-என்ற ஏழ்மைத்தனம் ) பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தை தருவதற்கில்லை" என்றது அந்த அசரீரி.
உடனே ஆசார்யாள், "இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷயமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டுருக்காளே. இந்த அன்பும் தியானமும் எத்தனை புண்ணியமானவை ! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே !" என்றார்.
"அம்மா, மஹாலஷ்மி ! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய இருக்கிறதே ! அதனால், ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா" என்று லக்ஷிமியை பிரார்த்தித்தார்.
லக்ஷிமியிடம் இவர் இப்படி ஏழை பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு "கனகதாரா ஸ்தவ"த்திலேயே உட்சான்று இருக்கிறது. "தத்யாத் த்யாநுபவனோ" என்கிற ஸ்லோகத்தில் இது வெளியாகிறது.
"சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும், உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா ? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக்கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையை பொழியம்மா !" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.
இப்படி அவர் ஸ்தோத்திரத்தை பாடி முடித்ததும், மஹாலக்ஷிமிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீடு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்த விட்டாள்.
இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்திற்கு "கனகதாரா ஸ்தவம்" என்கிற பெயரே உண்டாயிற்று. `கனகதாரா ' என்றால் `பொன்மழை ' என்று அர்த்தம். `ஸ்தவம் ' என்றாலும் `ஸ்துதி ' என்றாலும் ஒன்றேதான்.
இந்த ஸ்துதிக்கு (ஸ்தோத்திரத்திற்கு) ஒரு விசேஷம் என்னவென்றால், ஆதிசங்கரர் முதன் முதலாக செய்த ஸ்துதி இதுதான். அவரின் அன்பு, அந்த ஏழை பத்தினியின் அன்பு, மகாலக்ஷிமியின் அன்பு என்ற மூன்றும் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாக காலக்ஷேபம் (வாழ்க்கை) நடத்துவத்ற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.
கீழே உள்ள link ஐ click பண்ணினால், கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கலாம்.
MS SUBBULAKSHMI : KANAKADHARA STOTRAM (from you tube)
Very nice gift for all of us. it is a big treasure
ReplyDeleteand your service is really great
Krithivasan