''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? இந்த வெறும் உடம்புக்கு எதற்கு சடங்கு, மரியாதை செய்ய வேண்டும்? - மஹா பெரியவா கொடுக்கும் மிக அற்புதமான விளக்கம்,
தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி'என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை தானே பண்ணிக் கொள்ள ,முடியாது. அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம். இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.
''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது?ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப் போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸ¨ர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.
ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி'என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது..
'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது'என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதைத் b) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்'என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது.
கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா - இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை;காதால் பார்க்க முடிவதில்லை!பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது. பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது.
அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்'பண்ண ஒன்று-எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான்.
சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்'இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம். இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களா யிருக்கிறோம்.
யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்;அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்'என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்''என்று திருமந்திரத்தில் சொல்கிறார்*2.
ஆனாதல் இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்'பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹ§தி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.
செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா?எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே !
ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்''என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.
சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டிசெய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.
இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா?அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.
'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்;போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்;ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?'என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்;உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது;அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது !
No comments:
Post a Comment