Friday, 14 December 2012

"ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி"- மஹா பெரியவாளின் நயமான விளக்கம்




மரயானைப் பொம்மையைப் பார்த்தால் குழந்தை அது யானை என்றே எண்ணுகிறது. பெரியவர்களுக்கு அது யானை மாதிரி இருந்தாலும் மரம்தான் என்று தெரிகிறது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை தெரிகிறது. பெரியவர்களுக்கு யானை மறைந்து மரம் தெரிகிறது. இப்படியே பார் (உலகம்) முதலாக பஞ்ச பூதங்களும் பரமாத்மா என்ற மரத்தால் பண்ணின பொம்மைதான். பரமாத்மாதான் இத்தனையும் என்று நாம் பார்க்கவேண்டும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

என்று திருமூலர் சொன்னபடி, பஞ்ச பூதங்களையே பார்த்துக்கொண்டு, அதன் காரணமான பரமாத்மாவை மறந்திருப்பதை விட்டு, இவற்றால் பரமாத்மா மறைந்துப்போகவிடாமல், இவற்றிலும் வியாபித்திருப்பது பரமாத்மாதான் என்று, அனைத்தையும் ஈச்வர வியாபகமாகப் பார்க்க வேண்டும்.

ஒரு வஸ்துவை நாம் பார்க்கிறோம் என்றால், பார்க்கப் படுகிற object என்றும், பார்க்கிறவனான subject என்றும் இரண்டு ஏற்பட்டுவிடுகின்றன. நம் உடம்பை நம்மால் object -ஆகத் தெரிந்து கொள்ள முடிகிறது. "என் உடம்பு நன்றாயிருக்கிறது;அல்லது நன்றாக இல்லை"என்று நாம் அதைப்ப பற்றித் தெரிந்து கொள்கிறோம் என்றால், அப்போது அது object - ஆகி விடுகிறது. அதிலிருந்து வேறாக, 'நாம்'என்ற ஏதோ ஒன்று Subject - ஆக இருந்து கொண்டு, அதைப் பார்க்கிறது என்று ஏற்படுகிறது. அப்படிப் பார்ப்பது எதுவோ அதுதான் ஆத்மா. இந்த Subject -ஐ எதனாலும் தெரிந்து கொள்ள முடியாது. அப்படித் தெரிந்துகொள்ள முடிந்து விட்டால் அதுவும் Object -ஆகி, அதைப்பார்க்கிற இன்னொரு subject - தான் நிஜ நாம் என்றாகிவிடும். நிஜமான நாமான ஆத்மா subject - ஆகத்தான் இருக்கமுடியுமே தவிர object ஆகாது. எனவே சரீரம் முதலான object - களைத் தள்ளவிட்டு இந்த subject -ஆக நாம் அநுபவத்தில் தனித்து இருந்து கொண்டுதான் இருக்க முடியுமே தவிர அதை அறிந்து கொண்டு இருக்க முடியாது. அறிவது என்றால், இதைவிட இன்னொன்று இதை object ஆக்கி ஆராய்ந்தால்தான் முடியும். ஆத்மாவின் விஷயத்தில் இது அஸம்பாவிதம். ஆத்மாதான் நிஜமான நாம், அதை அறியவேண்டும் என்றால், அப்படி அறிகிற வஸ்து ஆத்மாவுக்கு வேறானதாகத்தான் இருக்க வேண்டும். நம்மில் நம்முடைய நிஜமான ஸ்வரூபத்துக்கு வேறாக என்ன இருக்கமுடியும்?ஆத்மாவுக்கு அந்நியமாக அதை அறிய எது உண்டு? எதுவும் கிடையாது. அதனால், "ஆத்ம ஞானம்", "ஆத்மாவை அறிவது" என்ற வார்த்தைகளைச் சொன்னால்கூட, இங்கெல்லாம் ஞானம், அறிவது என்பதற்கு ஒரு ஸப்ஜெக்ட் இன்னொரு ஆப்ஜெக்டை அறிகிறது என்று அர்த்தமில்லை. தன்னைத்தானே அநுபவித்துக் கொள்வதைத்தான் இந்த இடங்களில் 'ஞானம்', 'அறிவது'என்ற வார்த்தைகளால் சுட்டிக் காட்டுகிறோம். இதனால் தான் கேனோபநிஷத், எவன் ஆத்மாவை அறிந்துவிட்டேன் என்கிறானோ அவன் அறியவே இல்லை;எவன் அறியவில்லை என்ற நிலையில் இருக்கிறானோ அவன்தான் அறிகிறான். தெரியும் என்று நினைக்கிறவனுக்குத் தெரியாது; தெரியாது என்ற நிலையில் இருக்கிறவனுக்கே தெரிந்தது"என்கிறது. "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்"என்று சொல்வதும் இதைத்தான்.

ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி நான் சொன்னது இந்த உபநிஷத்தின் கடைசியில் ரொம்பவும் அழுத்தமாக, உபதேசிக்கப் பட்டிருக்கிறது. பயிர்த்தண்டிலிருந்து கதிரை உருவி எடுக்கிறோம் அல்லவா?ஒரு ஈர்க்குச்சியில் மேல் தோலிலிருந்து உள்ளேயிருக்கும் ஈர்க்கை அப்படியே உருவி விடுகிறோம் அல்லவா?அந்த மாதிரி, ஆப்ஜெக்டான சரீரத்திலிருந்து ஸப்ஜெக்டான ஆத்மாவைத் தைரியமாக உருவி எடுத்துக்கொண்டு, அதுவாகவே இருக்கவேண்டும் என்று அந்த மந்திரம் (vi:17) சொல்கிறது. 'காமம்,க்ரோதம், த்வேஷம், பயம் எல்லாம் மனஸை சேரந்தனவே ஒழிய, ஆத்மாவான எனது அல்ல. பசி, தாகம் முதலியன உடம்பைச் சேர்ந்தனவே, தவிர என்னுடையன அல்ல, என்று ஆத்மாவைச் சேராத எல்லா அநாத்மவஸ்துக்களையும் object ify பண்ணி, வெளியே தள்ளுவதற்கு ஸதா பழகிக் கொண்டேயிருக்க வேண்டும். இம்மாதிரி எப்பொழுதும் அநுஸந்தானம் செய்து வந்தால், உடம்பும் மனஸும்தான்நாம் என்பதாக வேரூன்றியிருக்கும் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, மறைந்தே போய்விடும். உடம்புக்கும் மனஸுக்கும் இருக்கப்பட்ட அழுக்குகள் எதுவுமில்லாத சுத்தமான ஆத்மாவாக நாம் இருக்கலாம். இப்படி, சரீரத்திலிருந்தும் மனஸிலிருந்தும் ஆத்மாவைப் பிரிப்பதற்கு, முஞ்சம் புல்லுக்குள்ளிலிருந்து ஈர்க்கு பளிச்சென்று சுத்தமாக வழவழவென்று பிரிந்து வருவதைத் திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறது. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த வாழைக்கட்டை வாடி வதங்கிப் போனால், நாம் வாடி வதங்குகிறோமா?அந்த வாழைக்கட்டையை விட, இன்னம் கொஞ்சம் கிட்டேயிருக்கும் மாம்ஸக் கட்டை என்றே இந்த சரீரத்தை எண்ணவேண்டும். அந்த வாழைக்கட்டை ஸப்ஜெக்டான நாமாக இல்லாமல் ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாகப் பார்க்கப் பழக வேண்டும்.

இந்த லோகத்தில், நாம் சரீரத்தில் இருப்பதாகத் தோன்றும் இப்போதே, இப்படி சரீரத்தை நானல்ல, என்னுடையதல்ல என்று பண்ணிக்கொள்ள வேண்டும். அப்போது, செத்துப் போனபின் தான் வேறு ஏதோ கைலாஸ வைகுண்டாதி லோகங்களுக்குப் போய் மோக்ஷம் அடையலாம் என்று இல்லாமல், இங்கேயே மோக்ஷமாகி விடும்! மோக்ஷம் என்றால், எந்த பாரமும் இல்லாமல் விடுபட்ட ஸதாநந்தம் என்றே அர்த்தம். அப்படி இந்த லோகத்திலேயே சரீரப் பிரக்ஞையை விட்டு, ஆத்மாராமனாக இருப்பவனைத்தான் ஜீவன் முக்தன் என்பது. வேத வேதாந்தங்களின் பரம தாத்பர்யம் ஒருத்தனை இப்படி ஜீவன் முக்தனாக்குவதுதான். கீதையில், பகவான் ப்ராக் சரீர விமோட்சனாத் (சரீரத்திலிருந்து உயிர் வெளியே போகிறதற்கு முந்தியே) , இந்த லோகத்தில் இருக்கும்போதே -இஹைவ - எவன் காம க்ரோத வேகங்களை அடக்கி விடுகிறானோ அவனே யோகத்தில் நிலைத்து நித்ய ஸுகத்தை அநுபவிக்கிறவன் என்று, இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். இஹைவ - இஹ ஏவ - அதாவது இங்கே இந்த பூலோகத்தில் இருக்கிற போதே, இப்படி ஆத்மாவைத் தெரிந்து கொண்டுவிட்டால் (அதாவது அநுபவித்து விட்டால்) , சரீரம் போனாலும் போகிறது தெரியாது. சரீரம் இருக்கிறபோதேதான் அது தன்னுடையதல்ல என்று போக்கிக் கொண்டாகி விட்டதே! ஆகையால், சாவு என்று ஒன்று வந்து சரீரத்தைப் போக்கடிக்க வேண்டுமா என்ன?

Thursday, 13 December 2012

வேடனே ராஜா; ஜீவனே பிரம்மம் - மஹா பெரியவர்




ராஜா ஒருத்தன். ராஜா என்றிருந்தால் சத்ரு ராஜா, யுத்தம் எல்லாமும் இருக்கத்தானே செய்யும்? இந்த ராஜாவை எதிர்த்து எதிரி ராஜா வந்தான். இவனுடைய துரதிருஷ்டம், யுத்தத்தில் இவன் தோற்றுப் போனான்.

'வெற்றி;இல்லாவிட்டால் வீர ஸ்வர்க்கம்!' என்று சில ராஜாக்கள் யுத்த பூமியிலேயே உயிரை விட்டு விடுவார்கள் தோற்றுப் போனால் ஒடி ஒதுங்கிப் பதுங்கிக் கொள்வார்கள். இவர்கள் எல்லோருமே வீரத்திலோ மானத்திலோ குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. பாய்கிற புலி பதுங்கும் என்கிற மாதிரி இவர்கள் பதுங்குவது பிற்பாடு படையெடுத்துப் பழி வாங்குவ - தற்காகத்தான். மகாசூரர்களும், மானஸ்தர்களுமான ராஜபுத்ர ராஜாக்கள் கூட, இப்படி முஸ்லீம்களின் படையெடுப்பின் போது ஒடிப்போய், பிறகு பெரிய சைனியம் திரட்டிக் கொண்டு வந்து சண்டை போட்டிருக்கிருக்கிறார்கள்.

என் 'கதை- ராஜாவும்'தோற்றுப் போனவுடன் பிராணஹத்தி பண்ணிக் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டான்.

அவன் மட்டுமாக ஒடவில்லை. அவனது பத்தினியையும் குதிரை மேல் வைத்துக் கொண்டு ஒடினான். அப்போது அவள் நிறை கர்ப்பிணி. இந்த நாளில் "அண்டர்க்ரவுண்ட்டாக போவது என்ற மாதிரி அப்போதும் உண்டு. இந்த ராஜாவுக்கு ரொம்பவும் அபிமான மந்திரி இப்படித்தான் தலைமறைவாகிவிட்டான். ராஜாவும் ராணியும் தப்பித்து ஒடியது அவனுக்கு மட்டும் அப்போதே தெரியும்.

ராஜாவின் குதிரை பிரதேசத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனைத் தேடிப் பிடித்து வர, சத்ரு ராஜா நாலாபக்கமும் குதிரைப் படையை அனுப்பியிருந்தான். அவர்களில் சிலர் இந்தக் காட்டுக்கே வந்துவிட்டார்கள். ராஜா போவதைத் தூரத்தில் பார்த்து அவனைப் பின் தொடர்ந்து துரத்தி வந்தார்கள். இவனைத் துரதிருஷ்டமும் துரத்திக் கொண்டு வந்தது. சத்ருக்கள் கிட்டே வந்து விட்டார்கள்.

பக்கத்திலே ஒரு வேடன் குடிசை இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. குதிரையை நிறுத்தி , அதிலிருந்து இறங்கினான். ராணியையும் இறக்கினான். "சத்ருக்கள் என்னை விடமாட்டார்கள். அவர்கள் ஏராளமான பேர்கள் இருப்பதால் நான் எதிர்த்து எதுவும் பண்ணுவதற்கில்லை. என் முடிவு நிச்சயம். ஆனால் என்னோடு நீயும் போய்விடக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், என்னால் பழி வாங்கமுடியாவிட்டாலும், இப்போது c கர்ப்பவதியாக இருக்கிறாயவல்லா?உனக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறந்தாலும் பிறக்கலாம்;பிறக்கப் போகும் பிள்ளையாவது சத்ருவை ஜயித்து ராஜ்யத்தை மறுபடியும் நம் பரம்பரையின் கைக்குக் கொண்டு வரவேண்டும். ஆகையால் c பதிவிரதை என்பதற்காக என்னோடு செத்துப் போவதை விட, என் மனோரதத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே உயிரோடிருந்து பிள்ளையைப் பெற்று வளர்க்கவேண்டும். இந்த வேடன் குடிசையில் அடைக்கலம் புகுந்து பிழைத்துக் கொள்' என்று ராணியிடம் ராஜா சொன்னான்.

அவளுக்கு அது தாங்க முடியாத கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் ராஜதர்மம் என்ற ஒன்று, அதற்கென்றே மானம், கௌரவம் என்றெல்லாம் இருந்ததால், பதியின் வார்த்தையை அவளால் தட்டமுடியவில்லை. 'புருஷன் சொல்வதுதானே நமக்கு வேதம்?அவன் சா என்றால் செத்துப் போகத் தயாராக இருக்கிற மாதிரியே, செத்துப் போவதுதான் சந்தோஷம் என்கிற ஸ்திதியில் அவன், 'சாகாதே. c உயிரோடுதான் இருக்கவேண்டும்'என்றால் அதையும் நாம் கேட்டுத்தானாக வேண்டும்'என்று தன்னைத் தானே ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு குடிசைக்குள் போய் மறைந்து கொண்டு விட்டாள்.

சத்ரு வீரர்கள் வந்து ராஜாவைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் கதை அத்தோடு முடிந்தது. அவர்களுக்கு ராணியையும் இவன் கூட அழைத்து வந்தது தெரியாது. 'தனக்கு என்ன ஆபத்து வந்தாலும் வரட்டும்;அவளுக்கு வரக்கூடாது'என்று தான் இவன் குதிரையில் அவளை முன்னே உட்கார வைத்து மறைத்துக் கொண்டு ஒட்டினான். பின்னாலிருந்து வந்த எதிரிகளுக்குக் குதிரை மேல் இவனுக்கு முன்னால் அவள் உட்கார்ந்த்திருந்தது தெரியவில்லை.

அதனால் ராணியைத் தேடிப் பார்க்காமலே அவர்கள், வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷமாகப் போய்விட்டார்கள். வேடன் குடிசையில் வேடனின் அம்மாக் கிழவி இருந்தாள். பூர்ண கர்ப்பினியாகத் தஞ்சம் என்று வந்த ராணியை மனஸார வரவேற்று வைத்துக் கொண்டாள்.

படித்தவர்கள், நாகரிகக்காரர்கள் என்கிற நம்மை விட,பாமரமான ஏழை ஜனங்களிடம் உபகாரம் செய்கிற ஸ்வபாவம் , விஸ்வாசப் பண்பு எல்லாம் எக்காலத்திலும் ஜாஸ்திதான். ராஜ ஸ்திரீயை வேட vFg தன் வயிற்றில் பிறந்த மகளைப் போல் வைத்துப் பராமரித்தாள்.

ராணி வயிற்றில் ஒரு பிள்ளை பிறந்தது அதோடு தன் கடமை ஆகிவிட்டது என்கிற மாதிரி பிரஸவத்திலேயே ராணி மரணம் அடைந்து விட்டாள். பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. சத்ரு ராஜாவே பரிபாலனம் பண்ணிக்கொண்டிருந்தான். ஆனாலும் ஜனங்களுக்கு அதில் திருப்தியில்லை. ஒரு ராஜ்யம் தோற்றுப் போனால்கூட ஜனங்களுக்குத் தங்கள் பழைய பாரம்பரிய ராஜா இல்லையே என்று தாபம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த 'கதை-ராஜ்ய'த்திலிருந்த ஜனங்களுக்கு ராஜாவோடு ராணியும் தப்பித்துப் போனதோ, காட்டிலே அவளுக்குக் குழந்தை பிறந்ததோ தெரியாது, அதனால் தங்கள் கஷ்டத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையோடு இருந்தார்கள்.

மந்திரிக்கு மட்டும் ராஜ தம்பதி இரண்டு பேருமே ஒடியது தெரியுமல்லவா?அதனால் அவன் யோசித்தான். 'ஈச்வர கிருபையில் ராணிக்குப் பிள்ளைக் குழந்தையாகவே பிறந்திருந்து, அது இப்போது எங்கேனும் வளர்ந்துவந்தால் பன்னிரண்டு வயசு இருக்கும் அல்லவா?பாரம்பரியமான யுவராஜா என்றால் சைன்யத்தை நடத்தி யுத்தம் பண்ணவும், மந்திரிகளின் ஆலோசனையோடு ராஜ்ய பாரம் பண்ணவும் பன்னிரண்டு வயசு போதுமே!அதனால், ராஜகுமாரன் கிடைக்கிறானா என்று தேடிக் கண்டுபிடித்து அவனை கொஞ்சம் தநுர்வேதத்தில் [போர்ப் பயிற்சியில்] தேற்றிவிட்டால், ஜனங்கள் ஒரு மனஸாக அவன் கீழ் சேர்ந்து சத்ரு ராஜாவை அப்புறப்படுத்துவார்களே! என்று நினைத்தான்.

ரகசியமாக கோஷ்டி சேர்த்து, அவன் பழைய ராஜாவின் சந்ததி இருக்கிறதா என்று தேடினான். வேடனின் குடிசைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அநேக வேடப் பசங்களோடு ராஜாவின் பிள்ளையும் ஒரு கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலையை முடிந்து இறக்கை சொருகிக் கொண்டு, குந்துமணி மாலையும் புலிநகமும் போட்டுக்கொண்டு அணில் குத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஆனாலும் வம்சவாரியான ராஜ களை, பழைய ராஜாவின் ஜாடையெல்லாம் அவனுக்கு இருந்ததால், புத்திசாலியான மந்திரிக்கு ஊகமாக புரிந்தது.

அந்த கிழவி இப்போதும் உயிரோடு இருந்தாள். அவளிடம் கேட்டான். காட்டு ஜனங்களுக்கு சூது, வாது, பொய், புரட்டு தெரியாது. அதனால் அவள் உள்ளபடி சொன்னாள். ரொம்ப வருஷம் முந்தி ஒரு கர்ப்பிணி இங்கே வந்து அடைக்கலம் கேட்டான். அவனை நான் என் மகள் மாதிரி வளர்த்தேன். ஆனாலும் அவள், தான் யார், என்ன என்று சொல்லிக்கொள்ளாமலே இந்தப் பிள்ளையை பெற்றுப் போட்டுவிட்டுக் கண்ணை மூட்க்கொண்டு போய்விட்டாள். அதற்கப்புறம் இந்தப் பிள்ளைக்கு நானே அம்மாவாக இருந்து வளர்த்து வருகிறேன். ராஜகுடும்பம் மாதிரியான பெரிய இடத்து வாரிசு என்று ஊகிக்க முடிந்தாலும் இன்னார் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. எங்களில் ஒருத்தனாக எங்களோடேயே வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறோம்"மந்திரிக்கு உடனே இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி 'நம் ராஜகுமாரன்தான் இங்கே வளர்வது' என்று புரிந்து விட்டது. அதை அவன் சொல்லி , பிள்ளையை அழைத்துப் போக முன்வந்தவுடன், கிழவி, வேடன் எல்லோருக்கும் ரொம்பவும் கஷ்டமாகி விட்டது. வளர்த்த பாசம்! ஆனானப்பட்ட கண்வ மஹரிஷி, ஜட பரதர் மாதிரியானவர்களையே வளர்த்த பாசம் ஆட்டி வைத்திருக்கிறதே!ஆனாலும் ராஜ்யகாரியம் என்பதால், இந்த வேடர்கள் தியாக புத்தியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் வேடப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரனை மந்திரி கூப்பிட்டதும், அவன் விழுந்தடித்துக் கொண்டு ஒடப்பார்த்தான். அவனுக்கு வேட சகவாசம்தான் பிடித்ததே தவிர, இந்தப் பெரிய மநுஷ சம்பந்தம் பிடிக்கவேயில்லை.

வேடப்பிள்ளை மாதிரியே, "இவங்கள்ளாந்தான் என் ஜாதி, ஜனங்க, இவங்களைவிட்டு வரமாட்டேன்"என்று ஒடினான். அப்புறம் அவனைப் பிடித்து வந்து மந்திரி அவனுக்கு வாஸ்தவத்தையெல்லாம் விளக்கிச் சொன்னான். "c ராஜகுமாரன். c பிறக்கும் முன்பே, சத்ருக்களிடமிருந்து தப்பி இங்கே ஒடிவந்த உன் தகப்பனார் கொல்லப் பட்டார்.அதற்கப்புறம் வேடர் குடிசையில் உன்னைப் பிரஸவித்து விட்டு உன் அம்மாவும் போய்விட்டாள். அதிலிருந்து c இங்கே வளர்ந்து வருகிறாய். ஆனாலும் c ராஜ்யத்தையெல்லாம் ஆள வேண்டியவன். உன்னைத் தலைவனாக வைத்துக் கொண்டு தான் நாங்கள் அதை சத்ருக்களிடம் மீண்டும் ஜயிக்க ஆலோசனை செய்திருக்கிறோம். இப்போது c இருப்பதைவிடக் கோடி மடங்கு உயர்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டியவன். 'மாட்டேன்"என்று சொல்லலாமா ?என்று எடுத்துச் சொல்லி விளக்கினான். அந்த பிள்ளைக்கு வீரம், பித்ருபாசம், அதற்காக எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டி விட்டான்.தான் ராஜகுமாரன் என்று தெரிந்தவுடனேயே, அந்தப் பிள்ளைக்கு ரொம்ப சக்தி, தேஜஸ், காம்பீர்யம் எல்லாம் உண்டாகிவிட்டது. அப்புறம் அவனுக்கு அஸ்திர சஸ்திர அப்பியாஸம், கொஞ்சம் சொல்லிக் கொடுத்தவுடனேயே அவற்றை நன்றாகப் பிடித்துக் கொண்டான். வேட ஜனங்களை விட்டுப் போனான். மந்திரியின் சகாயத்துடன் நாட்டில் சைனியம் திரட்டினான். ராஜ விச்வாஸம் கொண்ட ஜனங்கள், தங்கள் பழைய பாரம்பரிய வாரிசு வந்திருக்கிறான் என்றவுடன் உத்ஸாகமாக அவன் கீழ் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்டரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விஸ்வாசம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விஸ்வாசத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜயாதிகாரம் என்பது. இந்தக் கதையில் வரும் பையன் மாதிரி திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் பல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அதனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் 'யதா ராஜா ததா ப்ரஜா'[அரசன் எவ்வழி;மக்கள் அவ்வழி] என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் என்று வெறும் ராஜாங்க ரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்த சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டி - யிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ரஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கின்றது.

'இவர்கள் தன் ஜனங்கள் 'என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், 'இவன் நம் ராஜா'என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது. கதையில் சொன்ன பையன், சத்ருவை ஜயிக்க மந்திரியின் ஏற்பாட்டில் ஆயத்தம் பண்ணுகிறான் என்றவுடன் ஜனங்களெல்லாம் அவன் கட்சியில் சேர்ந்து யுத்தத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சுலபத்தில் சத்ருவை ஜயித்தும் விட்டார்கள். பையனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி ராஜா ஆக்கினார்கள். அவனுக்குத் தான் வேடனாக இருந்த எண்ணமே அடியோடு மறந்து போய்விட்டது. பூர்ண ராஜாவாகவே இருந்தான். இந்தக்கதையை நான் சொல்லவில்லை. பெரிய ஆசார்யர் ஒருத்தர், அத்வைத ஸம்பிரதாயத்தின் ஆதிகாலப் பிரவர்த்தகர்களில் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். குரு தத்வத்தைச் சொல்லும்போது இப்படிக் கதை சொல்லியிருக்கிறார். நான் கொஞ்சம் காது,மூக்கு வைத்தேன்.

கதையிலே வேடப்பையனாக இருந்தவன் ராஜகுமாரனாக உருமாறவா மாறினான்? Transform ஆனானா என்ன? வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இதை முதலில் தெரிந்து கொள்ளாதிருந்தான். அதனால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மையைத் தெரிந்து கொண்டு விட்டவுடன், ராஜகுமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான் முதலில் தன்னைத் தானே புரிந்து கொள்ளாமல் இருந்தான். அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாக உயர்வு பெற்றுவிட்டான். அப்புறம் சண்டை போட்டு ஸாம்ராஜ்யாதிபதியாகவே ஆகிவிட்டான்.

வேட வேஷத்தில் (வேட வேடத்தில்: வேஷம் என்பது தமிழில் வேடம் என்றாகும்) இருந்த ராஜகுமாரன் மாதிரித் தான் நாமெல்லாம் ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான். இந்திரியங்கள் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் பிரம்மம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டாலும் அதை அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் இழுத்துக் கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளையெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக ஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால் மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மட்டோம் என்கிறோம்.

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும்...
என் கல்நெஞ்சம் உருகவில்லையே! 

என்று தாயுமான ஸ்வாமிகள் நம் நிலைக்கு இறங்கி வந்து நமக்காகத்தான் பாடியிருக்கிறார். நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா?நம்மை நம்முடைய நிஜ நாமாக ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார். வேடப்பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப்புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி தொடுத்து, அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம் பரமாத்மத்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.

Wednesday, 12 December 2012

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? - மஹா பெரியவா


தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.

Thursday, 29 November 2012

எங்கே பிராமணன்?


நான் பிராமணன் என்று சொல்வதில் அநேகமாக அனைவருக்கும் ஏதோ ஒரு தயக்கம். மிகவும் மெதுவாக காதில் விழுந்தும் விழாத மாதிரியான குரலில் கூறும் பழக்கம் ஏன் நம்மிடம் வந்தது? ஒரு விதமான கூச்சம் ஏன் பற்றிக்கொள்கிறது. காரணம் நாம் பிராமணர்களாய் வாழ்கிறோமா? அந்தணர் என்று அடித்துக் கூறும்படி அந்தத் தகுதியை நாம் பெற்றுள்ளோமா? என்ற சந்தேகம் நமது ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. “பிராமணன்” என்கிற உயர்வை உணர வேணுமானால், மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டு, பளிச்சென்று தெரியும்படி குறை விலாசங்களை வளர்த்துக்கொண்டுள்ளோமா? என்றால் இல்லை என்று கூறும்படிதான் நாம் வாழ்கிறோம்.

நாம் முதலில் தெரிவித்தது, பொதுநல மனப்பான்மை, சுயநலம், நான் என் மனைவி மக்கள் குடும்பம் என்று குறுகிய சிந்தனைகளை உரமிட்டு வளர்த்துவிட்டோம். நாம் பரோப காரியாக, லோகஷேமத்தை முதலில் மனதில் நிறுத்தி வாழ்ந்த அந்த உத்தம குணங்களைத் தெரிவித்துவிட்டோம். இதுதான் நம்மை நமது உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிய முதல் காரணமாக நான் கருதுகிறேன். அடுத்ததாக பிராமணர் பொய் கூறமாட்டார். காயத்ரி ஜபிக்கும் நாக்கு பொய் சொல்லாது என்ற அந்த நம்பிக்கையை நாம் குலைத்துவிட்டோம். “காயத்ரி ஜபித்தால்தானே சத்யவாதியாக இருக்கணும் எதற்கு வீண் கஷ்டம்” என்று ஜபிப்பதையே விட்டுவிட்டோம்.

நம்மவர்கள் எத்தனை கோபம் வந்திடினும், இறைவனின் நாமத்தைக் குரல் ஏற்ற இறக்கத்துடன் கூறி, தனது கோபத்தை தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. ‘வசவு’ என்பது நம் அஹங்களில் மிகவும் கண்டிக்கப்பட்ட விஷயம் ‘வசை’ பாடாதே, போனாப் போறது போ... என்று தணிந்து செல்லக் கற்றுக் கொடுக்கப்பட்டது. மற்ற இனத்தவர்களின் வாயில் விழுந்து புரளும் சரளமான, காதைச் சுடும் வசவுகள் நம்மிடையே இருந்ததில்லை. ஆனால் இன்று நம்மவர்கள் வண்டி ஓட்டும்போது, சாலையில் தவறாகச் செல்லும் ஓட்டுனர்களை வசை பாடும் விதத்திலிருந்து அலுவலகம், வீடு என்று பல இடங்களிலும் கூச்சமின்றி வசைகள் வருகின்றன. நாவடக்கம் நம்மைவிட்டுச் செல்ல விட்டுவிட்டோம். வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். தவறான வார்த்தைகள் நம்மவர்களின் மரியாதையை இன்னும் ஒரு அடி அதிகமாகப் புதைத்துவிட்டது என்பது என் கருத்து.

அடுத்தபடியாக - பிராமணர்கள் வெளி இடத்தில் எதுவும் உண்ணமாட்டார்கள். மடி, ஆச்சாரமாய் இருப்பவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றிவிட்டோம். தற்காலத்தில் மிகவும் அதிகமாக வெளியில் சாப்பிடுவர்கள் நாம்தான்! பிராமணர்கள் மிகவும் ஜீவகாருண்ய முள்ளவர்கள். ஈ எறும்புக்குக்கூடத் துன்பம் நினைக்காதவர்கள் என்னும் எண்ணத்திலும் மண்ணை அள்ளிப் போட்ட பிராமணர்கள் ஏகம்! மிகவும் நாகரிகமாக நாங்கள் Egg-tarians., என்றும் வெளிநாட்டுக்குச் சென்றபோது, வேறு வழியின்றி மீன் மட்டும் உண்ணப் பழகிக் கொண்டோம் என்றும் கூறும் பிராமணர்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! “I don’t mind” என்ற வாசகம் நம் வாழ்க்கையில் நுழைந்த நாள் முதல் நம்மை நாம் சீராக இழந்துகொண்டே வந்துள்ளோம்.

அடுத்தபடியாக நம்மை உயர்த்திக் காட்டிய உயரிய குணம் “எளிமை”. நமது உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு, (தயிர் சாதம் என்று செல்லப் பெயர் இருந்தது)! நமது நடை உடை பாவனைகள், பேச்சு, செய்கை, மேலும் நாம் வாழும் தரம், அனைத்துமே எளிமையைப் பறைசாற்றியது. வசதி இருப்பினும், ஒரு பாயில் படுத்து உறங்கத்தான் செய்தோம், நமது வீடுகளில் புழங்கப்படும் பாத்திரங்கள், பீரோக்கள், இன்றும் இதர சாமான்கள் வழி வழியாக உபயோகப்படுத்தப்பட்டது. அதனால் குறைந்து போய்விடவில்லை. செழிப்பாகவே வாழ்ந்தனர். இன்று அதை அறவே காணாமல் போகவிட்டு, பகட்டும், பெருமையும் ப்ரதானமாய் வாழ்கிறோம். ப்ரளயத்தின்போது, இறைவன் பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களின் ஒரு மாதிரியைப் பத்திரப்படுத்தி அடுத்த யுகத்திற்கு எடுத்துச் செல்வாராம்! அதுபோல, கடைத்தெருவில் கிடைக்கும் அத்தனை சாமான்களிளும் ஒன்று நம் வீட்டில் உண்டு என்னும் நிலைமையில் எளிமையா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நாம்!!

பிராமணருக்கு மகுடமாய்த் திகழ்ந்த ஆச்சாரம், மடி இரண்டையும், தெரிந்து விரும்பித் தொலைத்தோம்! இவை இரண்டும் நமது மனதில் இறையுணர்வைத் தக்கவைத்தன. ‘சந்தி’ பூஜை, ஹோமம் போன்றவற்றை வேதத்தின் பாடமாக ஏற்று ஸ்ரத்தையுடன், பக்தியுடன், கடைபிடித்ததால், பிராமணர்கள் ஒழுக்கத்தில் முதல் நிலையில் இருந்தனர். Self discipline நம்மைச் சமூகத்தில் உயர்த்திக் காட்டியது. மாயையில் சிக்கி சின்னா பின்னமாகாமல் நமது மனிதப் பிறவியின் மேன்மையை உணர்ந்து, ஆன்மீக சிந்தனை நம்மை வழி நடத்த பரம்பொருளை அடையும் சரியான பாதையில் பயணித்திருந்தோம். அதனாலேயே நம்மவர்களின் முகங்களில் “ப்ரம்ம தேஜஸ்” என்பது மிளிர்ந்தது. ‘பதி’ என்னும் உயர்ந்த ஸ்தானத்தை உணர்ந்து மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்த அந்நாளைய ஆண்கள் கம்பீரமாக வாழ்ந்தனர். தவறு கண்டுபிடிக்க முடியாத நிலையில் பத்னிகள் தர்மப் பத்னிகளாக கணவர் சொல்லை மீறத் துணிவின்றி அடக்கமாய் வாழ்ந்து பெருமையைச் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இன்று, ஆண்கள் (90%) நமது குலாச்சார வழியை அறவே மறந்து, அனைத்துத் தீய வழக்கங்களையும் கற்றுக் கொண்டு Company demands என்று குடிப்பதையும் justify பண்ணிக் கொண்டு, மற்ற வர்ணத்தார்களின் அதீத உறவால், நமது பிராமண பாஷைகூட மறந்து, மேலே குறிப்பிட்ட உன்னத குணங்கள் அனைத்தையும் இழந்து வலம் வருவதால் தர்மப் பத்னிகள் உருவாக சாத்யமே இல்லாமல் போனது. இத்தகைய சூழலில் வளரும் சந்ததியர்கள் பிராமணரை என்னும் Identificationஆக Surnameஇல் மட்டுமே இருப்பர். காலம் மாறிவிட்டது!

அதெல்லாம் அந்தக் காலம்! இந்தக் காலத்தில் சாத்யமா என்ன! என்று சாக்கு போக்கு கூறாமல், ஒரே ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசிப்போமேயானால் புரியும்! ஒவ்வொரு பிராமணரும், தனிமனித உரிமையின் வட்டத்துக்குள் வந்துவிடும் “இந்த” விஷயங்களை மனம் உவந்து பின்பற்றினால் போதும். நமது பெருமைகள் தானாகவே நம்மை அடையும். இந்தக் காலப் படிப்பு, உத்யோகம், சம்பாத்யம், அனைத்தும் அப்படியே இருக்கட்டும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த “நாலு பேருக்காக” நமது குலாசாரங்களை நமக்கே நமக்குச் சொந்தமானவற்றை விட்டுவிட்டு இன்று நாமே நம்மைப் பார்த்து வெட்கப்படவேண்டா மோல்லியோ?

சற்றே சிந்தித்து உணர்ந்து செயல்பட்டு பழைய காலப் பெருமைகளை மீண்டும் பெற்றுச் சமூகமும் சமுதாயமும், அய்யர் வர்றாருப்பா...! நமஸ்காரம் ஐயா என்று மனதில் மரியாதையோடு கூறவைப்பது நம் கையில்தானே இருக்கிறது...!

Sunday, 25 November 2012

உண்மையைச் சொன்னாள் கோபம் கோபம் வருகிறது., பொய் சொன்னால் சந்தோஷப்படுகிறோம் - மஹா பெரியவா



ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் ¢விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு மிகவும் சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த புத்திசாலித்தனத்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருவனைப்பற்றி யாராவது எத்தனை புத்திசாலி என்று பேசினால் எத்தனை சந்தோஷப்படுகிறோம். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ட லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்றால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது.அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளா தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே.

புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவளுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். 

இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார். இதற்குமேல் வேறென்ன வேண்டும்?என்று தோன்றலாம். 
ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஒட்டியாச்சு. இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்?இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதையும் பெற்றதாகத் தெரியவில்லையே. 

இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?என்கிற கோள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும் என்பதெல்லாம் நம்மை மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். 

பாசம் என்றால் கயிறு. பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்த்துக்கொண்டு, அசட்டுத் தனமாக இதுவே எல்லாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌகரியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம். பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் பரம்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளாள் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை.

Friday, 23 November 2012

யார் பகவான் கிருஷ்ணன் மேல் அதீத பக்தி கொண்டவர்கள்?




கோகுலத்தில் ஒரு முறை பகவான் கிருஷ்ணனுக்கே தலைவலி ஏற்பட்டதாம். யாராலும் குணப்படுத்த முடியவில்லையாம். சத்யபாமா, ருக்மணி உள்பட அனைவரும் அரண்மனையில் கவலையுற்று இருந்தார்கள்.அவ்வமயம் நாரத மகரிஷி அங்கு வந்தார். அவர்களின் கவலைக்கு காரணம் கேட்க, அவர்கள் காரணம் சொல்ல, நாரத மகரிஷி பகவான் கிருஷ்ணனிடம் சென்றார்.

"என்ன இது விளையாட்டு? எதற்காக இந்த நாடகம்" என்று நாரத மகரிஷி கேட்டார். 

பகவான் கிருஷ்ணன், "இல்லை, எனக்கு உண்மையிலேயே தலைவலி" என்றார். 

நாரத மகரிஷி இதை நாடகம் என்று புரிந்து கொண்டாலும், காட்டிக்கொள்ளவில்லை. "சரி அப்படியானால், இந்த தலைவலிக்கு மருந்து என்னவோ? அதையும் தாங்களே கூறலாமே" என்று கிருஷ்ணனிடம் கேட்டார் நாரத மகரிஷி.

"யார் என்னிடம் மிக மிக பக்தி கொண்டவர்களோ, அவர்களின் பாத தூசியை என் நெற்றியில் பூசிகொண்டால், குணமாகும்" என்று பகவான் கிருஷ்ணன் கூறினார். 

நாரத மகரிஷி நேரே ருக்மணியிடம் சென்று, பகவான் கிருஷ்ணன் சொன்ன விவரம் கூறி, "அவரின் பத்தினியான நீங்கள் அவரது ஹிருதயத்திலேயே இருப்பவர்., உங்களைவிட அவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர் வேறு யார் இருக்க முடியும் என்று சொல்லி, தங்களின் பாத தூசியை அவரின் நெற்றியில் பூசி விடவும்" என்று கேட்டுக்கொண்டார். 

ருக்மணி அதை கேட்டதும், பதறி அடித்துக்கொண்டு, "ஐயோ, என் பாத தூசியா? அதை அவரின் நெற்றியில் இடவா? அவரின் பத்தினியான நான் இதைச் செய்து பெரும் பாபம் வந்து என்னை பற்றிக்கொள்ளவா ? என்னால் முடியாது " என்று உள்ளே சென்று விட்டாள். 

சத்யபாமா இருக்கும் இடம் சென்று, அவரிடமும் நாரத கேட்க, "ஐயையோ, இது மிகப் பெரும் பாபம். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்" என்று சத்யாபாமாவும் நழுவிகொண்டார்.

இப்படியே எல்லோரும் சொல்ல, இறுதியில் நாரத மகரிஷி, கோபிகா ஸ்திரீயிடம் சென்றார். அவர்களிடம், நாரதர், பகவான் கிருஷ்ணனின் தலைவலி பற்றிச் சொல்லி, "உங்களில் யார் அவருக்கு உங்கள் பாத தூசியை தர தயாராக இருக்கறீர்கள்" என்று கேட்டார். 

கோபிகா ஸ்திரீகள், பகவான் கிருஷ்ணனின் பக்தைகள் என்பதால் அவர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்று எண்ணினார்.

ஆனால், கோபிகா ஸ்திரீகளோ, "இதோ நான் தருகிறேன்., நான் தருகிறேன்" என்று எல்லோருமே முண்டியடித்துகொண்டார்கள். 

வியப்புற்ற நாரதர், "என்ன, நீங்கள் எல்லோருமே தர தயாராக இருக்கிறீர்களா? அவர் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம். உங்கள் பாத தூசி அவர் நெற்றியில் படுவதால், உங்களுக்கு தாங்கவொண்ணாத பாபம் வந்து சேருமே ! பரவாயில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு கோபிகா ஸ்திரீகள், "பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தலைவலி சரியாகும் என்றால், நாங்கள் எத்தகைய பாபத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று கோரஸாக ஒரு சேர சொன்னார்கள்.அவர்களின் பதிலைக்கேட்டு, புல்லரித்துப்போன நாரதர், கோபிகா ஸ்திரீகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார்.

பகவான் கிருஷ்ணன் தலைவலியும்,கோபிகா ஸ்திரீகள் அங்கு வந்ததுமே சென்று விட்டது. 

"என்ன நாரதா? இப்போது புரிகிறதா? யார் என் மேல் அதீத பக்தி கொண்டவர்கள் என்று?" என்று கிருஷ்ணன் கேட்க, நாரத மகரிஷியும், பகவான் கிருஷ்ணன் மேல் கொண்ட கோபிகா ஸ்திரீகளின் அதீத பக்தியைப் புரிந்து கொண்டார்.

Thursday, 1 November 2012

அருமையான குரு அபிமான சிஷ்யன்



கூரேசனை (கூரம் என்கிற ஊர்காரர். பின்னர் கூரத்தாழ்வான்) பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ சொன்னாலும், எழுதினாலும், பாடினாலும், அலுக்காத காரணம், அவருடைய குரு பக்தி. ரொம்ப வசதியான குடும்பம். நிலம், நீச்சு என்று ஏராளமான சொத்து.  அருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மா)  அமைந்தது தான்விசேஷம். தம்பதியர் இருவருமே தான தர்மத்தில் ஒருவரையொருவர் மிஞ்சினர்.

காஞ்சி வரதனிடம் அளவற்ற பக்தி. காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக விசிஷ்டாத்வைத பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்த ராமனுஜரிடம் அமோக பக்தி கூரேசருக்கு. காந்தம்போல் கவரப்பட்டார். அவரது எண்ணற்ற சீடர்களில் தானும் ஒருவராக இணைந்துகொண்டார்.

ராமானுஜரிடம் வேதச் சாஸ்த்ரங்களைக் கற்று. மீமாம்ச சூத்ரங்களையும் தெரிந்துகொண்டார். இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நேசம், நட்பு, பாசம், சகலமும்  உண்டானது. 

காஞ்சியே வாசமானார் கூரேசர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர் போக நேரிட்டது. அங்கு அப்போது சைவர்களின் ஆக்ரமிப்பு கெடுபிடி கொஞ்சம் அதிகம். சூரியனை தாமரை பிரிந்தது. கூரேசன், கூரத்திலேயே  ஐக்கியம்.  ஆனால், காஞ்சிவரதனும் பெருந்தேவிதாயாரும் வேறுதிட்டம் வைத்திருந்தார்களே..!

நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து, அவர்களின் மாளிகை கதவு தாழ்  போடப்பட்டது. கோட்டைக்கதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை, பெருந்தேவி தாயார் "நாதா! இது என்ன சப்தம்? எங்கிருந்து வருகிறது? எனக் கேட்டாள். 

"தெரியவில்லையே. கேட்டுச் சொல்கிறேன்” என்று வரதராஜ பெருமாள், ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்துக்  கேட்டார். "சுவாமி, நானும் கேட்டேன். அது கூரத்தில் அன்றாட அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு, தாழ்ப்பாள் போடும் சப்தம்".

கபட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்! தெரியாதது போல் "அடேடே, அப்படியா! கூரேசனும், ஆண்டாள் அம்மாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா. எனக்கு  அவர்களைப் பார்க்கவேண்டும், அழைத்து வா" என  திருக்கச்சி நம்பிக்கு  கட்டளை இட்டார். 

அம்பு போல் விரைந்து கூரேசரிடம், பெருமாளின் விருப்பத்தைத் தெரிவிக்க, கூரேசர் வெகுண்டார்.  "என்ன அக்ரமம் செய்துவிட்டேன். பாவி, நான். அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வதுபோல் கதவு தாழ்ப்பாள் சத்தம் போட்டு தம்பட்டம் அடித்துவிட்டேனே. பெருமாளுக்கும், தாயாருக்கும் சத்தத்தால் அமைதி இழக்கச் செய்து மகாபாவத்தைத் தேடிக்கொண்டு விட்டேனே” ஆடிப்போய் விட்டார் கூரேசர்.

இனி நான் செய்யவேண்டியது சொத்து, சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடி, குருநாதர் ராமானுஜரை சரண் அடைவது ஒன்றே.  "அடியே ஆண்டாளு, கட்டினதுணியோட உடனே கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்”. அவ்வாறே இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர்.

வழியே சில இடம் காட்டுப் பாதை. கள்வர் பயம். ஆண்டாளைக் கலக்கியது கண்டார். "என்ன பயம், நம்மிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் எதாவது பொருள் உள்ளதா, சொல்?" என்று கேட்ட கூரேசரிடம், உண்மையை உடைத்தாள் ஆண்டாள் அம்மாள். 

"வழியில் உங்களுக்கு எதாவது தாக சாந்திக்காவது உதவுமே என்று நினைத்து இந்த சிறிய தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்தேன்" என்று புடவை முடிச்சிலிருந்து அந்த சிறியப் பாத்திரத்தை நீட்டினாள் ஆண்டாள் அம்மாள். "பேதைபெண்ணே, எல்லாவற்றையும் துறந்து வா என்று சொன்னபோது அதில் இந்த பாத்திரமும் சேர்ததுதான்” அந்தப் பாத்திரத்தை வாங்கி வீசிஎறிந்தார். "அப்பாடா! இனி உனக்கு பயம் தேவை இல்லையே, எது காரணமோ அதை வீசி எறிந்தாயிற்றே.

"ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளைப் பார்த்த மகிழ்ச்சி.  விரைவில் ஸ்ரீராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார்.

சுருக்கமாகச் சொன்னால், கூரேசர், ஸ்ரீராமானுஜரின் நிழலானார். ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது, தத்துவம் கொள்கை, சீர்பட வேண்டுமெனில் முறை ஒன்று   தேவை.

எனவே, ஸ்ரீராமானுஜர் "ஸ்ரீராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார். நான்கு முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர். இரவும், பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய்மொழி போன்று எல்லாவற்றையும் அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உருபெற்றது. ஸ்ரீராமானுஜர் வியாசரின் பிரம்மசூத்ரதுக்கும் பாஷ்யம் எழுதத்  தொடங்கினார். "கூரேசா, நீதான் நான் சொல்லச்  சொல்ல என்னோட பாஷ்யத்தை எழுதணும், ஏதாவது தடம் மாறிச் சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே, நான் புரிஞ்சிப்பேன்". இப்படித்தான் ஸ்ரீராமானுஜரின், ஸ்ரீபாஷ்யம் தோன்றியது.  

ஒருநாள் ஸ்ரீராமானுஜர், ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது, கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கினார். பல நாட்கள்  இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடைபட்டதில் ஆச்சார்யனுக்கு கோவம் வந்தது. 

வயதாகிவிட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்துவிட்டார் ஆச்சர்யன். "கூரேசா, என்னைக் காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக  எழுதுவதாக நினைத்தால் நீயே எழுது. போ” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள் ஏன் இவ்வாறு செய்தாய் என வினவினர். என்ன விபரீதம் இது? என நடுங்கினர்.

"நண்பர்களே, கவலை வேண்டாம். நான், ஆச்சர்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்". இதற்கிடையில், கூரேசர், எழுதியிருந்ததைப் படித்த ஸ்ரீராமானுஜர், தான் சொல்லிக்கொண்டு வந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும், கூரேசர் அதை சுட்டிக் காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். 

ஜீவாத்மா தனித்துவம் கொண்டதாக இருந்தாலும், இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்றுதான் கூரேசன் திருத்தியபடி இருக்க வேண்டும் என தனது தவறை அறிந்தார். அடேடே, வெளிச்சத்தைப் பற்றி சொல்லும்போது, அதற்கு காரணமான, சூரியனை மறந்து போனேனே என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா.

"என் மகனே, நீதான் சரி. ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்" இவ்வாறே ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீசம்ப்ரதாயம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தசாரம், வேதார்த்த சங்க்ரகம், கீதாபாஷ்யம் உருப்பெற்றது.

எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், வியாசரின் "போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல்  அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? 

காஷ்மீரத்தில் ராஜாவுடைய நூலகத்தில் கிடைக்குமா?  மற்ற பாஷ்யகாரர்கள் உரை (குகதேவர்,பருசி,தங்கா, திராமிடர்) எல்லாம்கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே! ஸ்ரீராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார்.

போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்! அப்படியே, காஷ்மீரம். எங்கெங்கெல்லாம் தங்கினாரோ  அங்கெல்லாம், ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன், முதலான சிஷ்யகோடிகள்  ஸ்ரீரங்கத்திலிருந்து பின் தொடர்ந்தனர். 

காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக்கொள்வானா?  

நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். கூரேசனுக்கு, ராஜாவின் நூலகத்தில் வேண்டிய ஓலைச்சுவடி தேட அனுமதி கிடைத்தது. 

தோற்ற அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை. ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி நூலகத்தை விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின் அனுமதி பெற்றார்கள்.

ஸ்ரீராமானுஜரும், கூரேசரும் அங்கேயே படிக்கத் தயாரானார்கள். ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்கக் கூடாது என்று மற்றொரு கெடுபிடியும் போடப்பட்டது.  விடுவாரா கூரேசர். ஆஹா, அப்படியே அன்று அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர். வேறு வழியில்லை, இந்த இருவரையும் கொல்வதுதான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க, இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.

ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீபாஷ்யம் எழுதத் தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால், ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தைப் பூர்த்தி செய்ய. ஸ்ரீராமானுஜருக்கு பரமதிருப்தி. கூரேசனின் புத்திக்கூர்மையால்தான், தன் எத்தனையோ வருடகனவு  நிறைவேறியது என்ற மனநிறைவு.

"ஸ்ரீவைஷ்ணவமும், ராமானுஜ ப்ரபாவமும்" நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீரங்கம்தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று.

ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு. கூரேசருக்கு மட்டும் தனக்கு ஒரு பிள்ளை இல்லை என்ற குறை. உஞ்சவ்ரத்தியில் தான் காலம் சென்றது அவருக்கு. ஒரு நாள் கொட்டும் மழை நிற்கவில்லை. எனவே கூரேருக்கும், ஆண்டாள் அம்மாளுக்கும் உஞ்சவ்ரத்திக்கு வெளியே போக முடியாததால் உணவில்லை.

பெருமாளின் துளசி ஜலம்தான் ஆகாரம். அன்றிரவும் வாயு பக்ஷணம்தான் போலும். ஆனால், கூரேசருக்கோ பரம சந்தோஷம். இன்று திருவாய்மொழி படிக்க நிறைய நேரம் கிடைத்ததே என்று! ஆண்டாளுக்கோ, நெஞ்சிலும் வயிற்றிலும் வலி. தனக்குப் பசி என்பதற்காக அல்ல, கணவர் பட்டினி கிடப்பதைப் பார்த்து!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மணி சாயந்தர நைவேத்ய பூஜையை அறிவித்தது. ஆண்டாள் அம்மாள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர். அவள் மனம் "ஹே... ரங்கநாதா, உன் பக்தன் இங்கே ஆகாரமின்றி வாட, உனக்கு மட்டும் உண்ண மனம் வருகிறதா?” 

ரங்கன் இதைக் கேட்டு சும்மாவா இருப்பான்? கோவில் பிரதான பட்டாச்சார்யர் உத்தம நம்பியின் கனவில் ரங்கனின் கட்டளை: "உடனே பிரசாதங்களுடன் கூரேசன் வீட்டுக்குப் போ. பசியோடு உள்ளான். என் ஆசிகளையும் பிரசாதத்துடன் அனுப்பினேன் என்று சொல்".உத்தம  நம்பிக்கு உடல்சிலிர்த்தது. வியர்க்க, விறுவிறுக்க ஓடினார். 

மேள-தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய பிரசாதங்களுடன் அனைவரும் புடைசூழ நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு நடந்தார். வெறும் ஜலம் அருந்தி படுத்திருந்த கூரேசன் திடுக்கிட்டார். உத்தம நம்பி சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.

ரங்கனின் கருணை அவரை, திக்குமுக்காட வைத்தது.  ஆண்டாள் அம்மா மனதில் நன்றியுடன் ரங்கனை வணங்கினாள். "இது ரங்கன் அனுப்பியது. அவசியம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றாள். கூரேசன்  மனதில் ஒரு ஐயம். இது ஆண்டாளின் வேலையோ? என்று. அவரது கேள்விகளுக்கு  விடையாக, தான்  ரங்கனிடம் முறையிட்டதை சொன்னாள். "ஆண்டாள் நீ என்ன காரியம் செய்து விட்டாய்? ஒரு கவளம் சோற்றுக்காக அந்த பேர்அருளாளனை சோதிக்கலாமா?" என்று கேட்டார்.

இரவு ரங்கன் கூரேசன் கனவில் தோன்றி, "கூரேசா! நான் உனக்கு அனுப்பியது, வெறும் சோறு மட்டும் அல்ல. உனக்கும், ஆண்டாளுக்கும் பிறக்கப் போகிற இரண்டு குழந்தைகளுக்கான வரப்ரசாதமும் கூட. அவர்கள், எம் குழந்தைகளும் ஆவர். எம்மை அவர்களில் நீங்கள் இருவரும் காண்பீர்”. கூரேசர் குதித்து எழுந்தார். அடியே ஆண்டாளே, இந்த அதிசயத்தைக் கேள், என்று கூரேசர் அவளை எழுப்பி விவரம் சொன்னதில், அவளது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

ராமானுஜருக்கு விவரம் சென்றது. ஒரே வருடத்தில், இரு பிள்ளைகள் பிறந்தன. ராமானுஜரே அவர்களுக்கு, "வியாச பட்டர்”, "பராசர பட்டர்” என நாமகரணம் செய்வித்தார். பிற்காலத்தில் பராசர பட்டரே ராமானுஜரின் வாரிசாக ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீசம்பிரதாய ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர்.

ஸ்ரீராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீவைஷ்ணவம் வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரை போற்றினாலும், சில எதிரிகளும் முளைத்தனர். சைவ சமயம் அவரை எதிர்க்காவிட்டாலும், சில சைவர்கள் அவர் வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீவைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது.  அந்த சோழதேச ராஜா குலோத்துங்கன் வம்ச கிருமி கண்டசோழன் ஒரு வீர சைவன். தனது  ராஜ்யத்தில் வைஷ்ணவ பூண்டை வேரோடு ஒழிக்க நினைத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே  முடியும். "அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே” கட்டளைப் பிறந்தது. 

ராமானுஜரை தனது சைவகுருமார்களுடன் விவாதம் செய்ய வைத்து தோற்கடிக்கவேண்டும், வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்கச் செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிட வேண்டும். இந்த எண்ணம் செய்தியாகக் கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடன் ஓடினர்.  எக்காரணம் கொண்டும் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் செல்லக் கூடாது. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கெஞ்சினர். அரசனின்  ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரை தேடி. கூரேசர்  எப்படியோ ராமானுஜரைச் சம்மதிக்க வைத்து, தான் அரசனைச் சந்தித்தார். 

விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் மட்டும் கர்நாடகாவில் மேல்கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு  பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதிவசமாகியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீவைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீசம்பத் குமாரன்கோயில் கட்டினார். அவரது விடா முயற்சியில் மேல்கோட்டை ஸ்ரீரங்கத்துக்கு அடுத்ததாகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவ ஸ்தலமாகியது. ஒரு நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைஷ்ணவர் ராமானுஜரை சந்தித்தார். ஆர்வத்துடன், ஆசார்யன் மூச்சுவிடாமல் "என் உயிரான ஸ்ரீரங்கம் எவ்வாறு இருக்கிறது. என் பிள்ளைகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லாம் நலமா?”

"நீங்கள் இல்லை என்கிற குறை தவிர எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது அங்கு” என்றார் வைஷ்ணவர்.

"என் சீடன் கூரேசன் எப்படி இருக்கிறான்? அவனை இழந்து நான் தனியனாகிவிட்டேனே!" என்று ஆதங்கத்தோடு கேட்டார் ஆசார்யன். கண்களில் நீர் பெருக, நா தழுதழுக்க ஸ்ரீவைஷ்ணவர் சொன்னார்,

"சுவாமி தங்களை ஜாக்ரதையாக அனுப்பிவிட்டு கூரேசரும், மஹா பூரணரும் அரசன் ஆணைக்கு கட்டுப்பட்டு, கங்கை கொண்ட சோழபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். ராஜா அவர்களிடம் "சிவனை காட்டிலும் பெரிதொன்றும் இல்லை" என சம்மதித்து எழுதிக் கொடுங்கள் என்றான். கூரேசன் மறுத்தார். வேதம் சாஸ்த்ரம், உபநிஷத், ஸ்ம்ரிதி, புராணம்  இவற்றிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டி நாராயணனே மேலானவன் போற்றதக்கவன் என நிருபணம் செய்தார். ஏற்க மறுத்தான் சோழன்.  கையொப்பமிட்டு கொடு இல்லாவிட்டால், உன் கண் இங்கே பிடுங்கப்படும் என ஆணையிட்டான்.

"கெடுமதி கொண்ட அரசனே, உன் விருப்பம் நிறைவேறாது. உனக்கு வேலை மிச்சம் பண்ணுகிறேன், நானே என் கண்களைப் பிடுங்கி கொள்கிறேன்", என்று அவன் நீட்டிய எழுத்தாணியால் கண்விழி கோளங்களை வெளிக்கொணர்ந்து, அவன்  காலடியில் எறிந்தார். உன்னைப் பார்த்ததால் அந்தக் கண்கள் செய்த பாவத்திற்கு இது தண்டனையாகட்டும். "நீ கையொப்பமிடு" என மஹாபூர்ணர் நம்பிகளை ஆணையிட்டும், அவரும் மறுக்கவே அரசனின்  சேவகர்கள் அவர் நேத்ரங்களை அழித்தனர்.  

கூரேசர் வயதில் இளையவராதளால் நம்பிகளை தாங்கி வர, ரத்தம் பீறிட, வழியெல்லாம் ஆறாக பெருக அரண்மனை விட்டு வெளியேறினர். கங்கை கண்ட சோழபுரம் தாண்டி வந்தவுடன் நம்பிகளின் பெண் அத்துழாய்,பிராட்டி அவருக்காக காத்திருந்தவள் கண்ணற்ற தந்தையைக் கட்டிக்கொண்டு கதறினாள். நம்பிகளால் மேற்கொண்டு நகர இயலவில்லை. கூரேசன் மடியில் தலையும், அத்துழாய் மடியில் காலுமாக சோழ மண்ணிலே சாய்ந்தார். 

"சுவாமி! ரங்கனை விட்டு பிரிந்ததும், ஸ்ரீரங்கத்தைப் பிரிந்ததும், ராமானுஜரை பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசத்தில் வாழ்வு முடிவதால் உங்களுக்கு மனமொடிந்து விட்டதா?” என கூரேசர் வினவ, "கூரேசா! நீ அறியாததா? ஒரு வைஷ்ணவனின் அந்திம நேரத்தில் நாராயணனே அருகில் இருப்பான்.  ஜடாயுக்கு ஸ்ரீராமன் அருகில் வந்து அருளவில்லையா? இதில் காடென்ன, நாடென்ன?  மேலும் கேள், ஒரு சுத்த ஸ்ரீவைஷ்ணவன் மடியிலோ வீட்டிலோ மரணம் சம்பவித்தால், அதற்கு மேல் எது சிலாக்கியம்? நான், ஸ்ரீரங்கத்தில்  மரணமடைந்தால் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் மரணம் தான் வைஷ்ணவனுக்கு சிறந்தது என நினைப்பரே!  நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன சொல்கிறது? பெருமாளிடம் பிரபத்தி சரணாகதி பண்ணினவனுக்கு எங்கு மரணம் சம்பவித்தாலும் நாராயணன் அருகில் இருப்பது சத்ய வாக்காயிற்றே! இதென்ன அனாமதேய இடமா! இங்கல்லவோ என் குருநாதர்கள் நாதமுனிகளும் குருகை காவலப்பனும் வைகுண்ட ப்ராப்தி பெற்ற இடம். விசனப்படாதே. நான் மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்”-மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார்.

நிகழ்ந்ததை பூரா கேட்ட ராமனுஜரின் கண்களில் பிரவாகம். தனது குரு பெரிய நம்பிகளுக்கு, தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு  கூர்ந்தார். தனக்காக அவர் உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டவில்லையே என நொந்தார். 

பெருமாளே என்ன பாக்கியம்! கூரேசனுக்கு என்னால் முடியாததை அவன் நிறைவேற்றினானே! அவனல்லவோ குருவை மிஞ்சிய சீடன்! கூரேசன்  ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான், திருவரங்கபெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறையலானார்கள். திருப்பதியில் ராமானுஜரின்  நெருங்கிய உறவினர் ஸ்ரீசில பூரணரும் திரு.கச்சி நம்பிகளும் விண் எய்தினர். கூரேசருக்கு ஸ்ரீரங்கம்  வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ? 

கண்ணற்ற கூரேசர் ரங்கநாதனே கதி என்று  தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது, காவலர்கள் தடுத்தனர்.  அரசனின் ஆணை!  "யார் ராமானுஜரை தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கபடுவர்."

"அய்யா,உங்கள் அரசரிடம் சொல்லுங்கள், ராமானுஜரை  இகழ்ந்து புறக்கணித்துவிட்டு, கூரேசனுக்கு ரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, வரும் ஜென்மத்திலும் தேவையில்லை” என்றார் வீடு திரும்பினார். "ஆண்டாள், பசங்களை கூப்பிடு இனி ஸ்ரீரங்கம் நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்”. அவர்கள் அவ்வாறே திருமாலிருன்சோலை (மதுரை அருகே) குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம்  மாறியது. 

கிருமி கண்ட சோழன் மாண்டான். கொடிய ஆட்சி விலகியது. பல வருஷங்கள் சென்றது. நூறு  வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு. பிரபந்தங்கள், பாசுரங்கள் எதிரொலிக்க, ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ, கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.

திருமாளிருன்சோலையிலிருந்து கூரேசர் குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் விரைந்தார். கண்ணிழந்த கன்று, தாய் பசுவை ஆர்வமாக நாடியது. தன் வீடு தேடி ஆசார்யன் வந்தார் எனக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசன்.  ஆச்சர்யனும் பிரதம சீடனும் பல வருஷங்கள் கழித்து சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின. காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில் ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனையோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை,எத்தனை இடையூறுகள், இன்னல்கள், எதிப்புகள், விவாதங்கள் ஒன்றாக அல்லவா எல்லாம் கடந்தோம்.

ராமானுஜர் கண்களில் காவேரி. கூரேசருக்கோ கண்ணே இல்லையே! விழியற்று, பேச்சற்று தடுமாறி தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தார் கூரேசன்.  குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது.  பாசத்தோடு கூரேசனை தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர். "என்  குழந்தாய்! என்ன செய்தாய்? நீ எனக்காகவும் ஸ்ரீமத் வைஷ்ணவதுக்காகவும் உன் கண்களையே தியாகம்  செய்தாயே”!

பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனின் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.

"சுவாமி, நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவனின் நெற்றியை பார்த்து, இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாத்திக்  கொண்டிருக்கிறான் பார், என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவபிராயச்சித்தமாக எனக்கு  விழிகள் இழக்கும் தண்டனை கிடைத்ததாக கருதுகிறேன்”

”நீயாவது பாவம் செய்வதாவது! குழந்தாய், நான் செய்த பாபத்திற்காக தான் உனக்கு இந்த  தண்டனை. நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வா. நீயும்-நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும்  உள்ளது” கை பிடித்து கூரேசனை ஆசார்யன் கூட்டிச் சென்றார், "நிஜமும்-நிழலும்" ரங்கநாதர் ஆலயம் அடைந்தது.

ஸ்ரீவைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் ஆலயத்தையும், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள், நூலகம் எல்லாம்  நாசமாக்கியிருந்தான். இருவரும் தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர். ராமானுஜர், ஆதிசேஷன் அவதாரம். லக்ஷ்மண பெருமாளாக ராமருக்கு அவர் ஆற்றிய தொண்டு ராமரை நெகிழ வைத்தது. எப்படி கைம்மாறு செய்வது எனத் தோன்றி, கூரேசனாக அவதரித்து, ராமானுஜருக்கு சேவை செய்வதன் மூலம் கடனை தீர்த்துக் கொண்டார் எனச் சொல்வதுண்டு.    

ராமானுஜருக்கு 115  வயதாகிவிட்டது.  கூரேசரும் இப்போ கிழவர், கண்ணற்றவர். ஒரு நாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு அங்கேயே நின்றார் கூரேசர்.

"என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே?” என்றான் ரங்கன் 

"எனக்கு குறையொன்றுமில்லை கோவிந்தா!  ஏதோ உன் முன்னால் நின்று ஆத்ம திருப்திக்கு மனசுக்குள்ளேயே பாடவேண்டும் எனத் தோன்றியது.”

"எனக்கு, இன்று உன்னை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ஏதாவது என்னிடம் கேளேன்”.

"ரங்கா! என்ன விளையாடுகிறாயா? எனக்குத்தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லையே. நான் என்ன கேட்பது உன்னிடம்?”

"அப்படியொன்றுமில்லை. நீ எதாவது கேட்டே ஆக வேண்டும். உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள் !”

"சரி ரங்கா, என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்து கொள்ளேன்!”

"ஹும்-ஹும்” வேறே ஏதாவது கேள் கூரேசா!”

"வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்?” 

"சரி உன் விருப்பபடியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, உன்னை சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம்  அளிக்கிறேன்!”  

பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார்.  ராமானுஜருக்கு மேற்கண்ட சம்பாஷனை தெரியவந்தது. ஆனந்தத்தில் கூத்தாடினார்.

ஒரு சிஷ்யன் கேட்டான், ஆச்சார்யரே என்ன ஆயிற்று?  "ச்ரேஷ்டன் கூரேசனால் எனக்கும், நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனை  சார்ந்தவனல்லவா”-தொண்டு கிழவர் கூரேசர் வீடு சென்றார்.

"கூரேசா”, நீ என்ன கார்யம் செய்துவிட்டாய் உன் குருவாகிய என்னை கேட்காமலேயே?”

கூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை, பதில் சொல்லவில்லை. விழியின்றி விழித்தார்

"ஏன் பேச முடியவில்லை உன்னால்? எதற்காக  ரங்கனிடம் உடலிலிருந்து விடுபடகேட்டாய்? நான் உன்னைவிட முதியவன் இருக்கும்போது எனக்கு முன்பு நீ இடம் பிடிக்கவா? சொல் கூரேசா ஏன் அவ்வாறு கேட்டாய்?”

"சுவாமி! நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்”

"புரியும்படியாக சொல் கூரேசா! மழுப்பாதே”

"நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்களே "முடியுடை" என்கிற பாசுரம். அதில் வருமே "பரம பதம் சென்ற மூத்தவர்கள்,  இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது  வாசலில் நின்று வரவேற்பர் என்று". எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று, மூத்தவர்கள் வரும்போது முறையாக மரியாதையுடன் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகவே, நான் முன்பாக செல்ல வரம் கேட்டேன்” என்றார் கூரேசர். ஆடிப்போனார் ஆசார்யன்.

சிரித்துகொண்டே "என்னருமை கூரேசா வைகுண்டத்தில், வயது ஏது? இளையவர் யார்?  முதியவர் யார்? பாபி யார்? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்? தெரிந்தும்கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உன் மனம் விழைந்தது புரிகிறது. என் குழந்தாய்! உனக்கு ஈடேது?” ஆசார்யன்கண்களில் நீர்மல்க கூரேசனை  தழுவிக்கொண்டார். 

"நீதான் என் ஆத்மா, உன்னை நான் எப்படி பிரிய முடியும்? இந்த தள்ளாத 115 வயது கிழவனை விட்டு போகப் பார்க்கிறாயா? என்னையும் உன்னோடு கூட்டிச் செல்”. கூரேசன் சிலையாக நின்றார். இறைவன் முன்பு  நின்றிருந்தபோதும், இந்த எண்ணம் தோன்றாமல் போனதே எனச் சிந்தித்தார். "என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!” என்று ராமனுஜரின் கால்களைப் பிடித்தார்.

"கூரேசா, உனக்கு வரமளித்த ரங்கநாதன், எனக்கும்  வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன். எனக்கு முன் போகாமல்,உன்னை தடுக்க வரம் தேடுகிறேன்---இல்லை. தவறு,தவறு, ரங்கனின் ஆக்ஞையை மாற்ற நான் யார்?. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை”

ஒரு கணம் யோசித்த ஆசார்யன் தொடர்ந்தார். "கூரேசா!   நீ போய்விட்ட பிறகு, நான் எப்படி இங்கு வாழமுடியும்? 
பரமபதநாராயணன் உன்னைக் கவர்ந்தான். நீ அங்கே செல். நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் இருக்கிறேன்”.

சில மணி துகள்கள் உருண்டன. கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந்தனர். அவர்களில், ஒருவராவது கூரேசனாக முடியுமா....???