Friday, 14 December 2012

"ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி"- மஹா பெரியவாளின் நயமான விளக்கம்




மரயானைப் பொம்மையைப் பார்த்தால் குழந்தை அது யானை என்றே எண்ணுகிறது. பெரியவர்களுக்கு அது யானை மாதிரி இருந்தாலும் மரம்தான் என்று தெரிகிறது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை தெரிகிறது. பெரியவர்களுக்கு யானை மறைந்து மரம் தெரிகிறது. இப்படியே பார் (உலகம்) முதலாக பஞ்ச பூதங்களும் பரமாத்மா என்ற மரத்தால் பண்ணின பொம்மைதான். பரமாத்மாதான் இத்தனையும் என்று நாம் பார்க்கவேண்டும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

என்று திருமூலர் சொன்னபடி, பஞ்ச பூதங்களையே பார்த்துக்கொண்டு, அதன் காரணமான பரமாத்மாவை மறந்திருப்பதை விட்டு, இவற்றால் பரமாத்மா மறைந்துப்போகவிடாமல், இவற்றிலும் வியாபித்திருப்பது பரமாத்மாதான் என்று, அனைத்தையும் ஈச்வர வியாபகமாகப் பார்க்க வேண்டும்.

ஒரு வஸ்துவை நாம் பார்க்கிறோம் என்றால், பார்க்கப் படுகிற object என்றும், பார்க்கிறவனான subject என்றும் இரண்டு ஏற்பட்டுவிடுகின்றன. நம் உடம்பை நம்மால் object -ஆகத் தெரிந்து கொள்ள முடிகிறது. "என் உடம்பு நன்றாயிருக்கிறது;அல்லது நன்றாக இல்லை"என்று நாம் அதைப்ப பற்றித் தெரிந்து கொள்கிறோம் என்றால், அப்போது அது object - ஆகி விடுகிறது. அதிலிருந்து வேறாக, 'நாம்'என்ற ஏதோ ஒன்று Subject - ஆக இருந்து கொண்டு, அதைப் பார்க்கிறது என்று ஏற்படுகிறது. அப்படிப் பார்ப்பது எதுவோ அதுதான் ஆத்மா. இந்த Subject -ஐ எதனாலும் தெரிந்து கொள்ள முடியாது. அப்படித் தெரிந்துகொள்ள முடிந்து விட்டால் அதுவும் Object -ஆகி, அதைப்பார்க்கிற இன்னொரு subject - தான் நிஜ நாம் என்றாகிவிடும். நிஜமான நாமான ஆத்மா subject - ஆகத்தான் இருக்கமுடியுமே தவிர object ஆகாது. எனவே சரீரம் முதலான object - களைத் தள்ளவிட்டு இந்த subject -ஆக நாம் அநுபவத்தில் தனித்து இருந்து கொண்டுதான் இருக்க முடியுமே தவிர அதை அறிந்து கொண்டு இருக்க முடியாது. அறிவது என்றால், இதைவிட இன்னொன்று இதை object ஆக்கி ஆராய்ந்தால்தான் முடியும். ஆத்மாவின் விஷயத்தில் இது அஸம்பாவிதம். ஆத்மாதான் நிஜமான நாம், அதை அறியவேண்டும் என்றால், அப்படி அறிகிற வஸ்து ஆத்மாவுக்கு வேறானதாகத்தான் இருக்க வேண்டும். நம்மில் நம்முடைய நிஜமான ஸ்வரூபத்துக்கு வேறாக என்ன இருக்கமுடியும்?ஆத்மாவுக்கு அந்நியமாக அதை அறிய எது உண்டு? எதுவும் கிடையாது. அதனால், "ஆத்ம ஞானம்", "ஆத்மாவை அறிவது" என்ற வார்த்தைகளைச் சொன்னால்கூட, இங்கெல்லாம் ஞானம், அறிவது என்பதற்கு ஒரு ஸப்ஜெக்ட் இன்னொரு ஆப்ஜெக்டை அறிகிறது என்று அர்த்தமில்லை. தன்னைத்தானே அநுபவித்துக் கொள்வதைத்தான் இந்த இடங்களில் 'ஞானம்', 'அறிவது'என்ற வார்த்தைகளால் சுட்டிக் காட்டுகிறோம். இதனால் தான் கேனோபநிஷத், எவன் ஆத்மாவை அறிந்துவிட்டேன் என்கிறானோ அவன் அறியவே இல்லை;எவன் அறியவில்லை என்ற நிலையில் இருக்கிறானோ அவன்தான் அறிகிறான். தெரியும் என்று நினைக்கிறவனுக்குத் தெரியாது; தெரியாது என்ற நிலையில் இருக்கிறவனுக்கே தெரிந்தது"என்கிறது. "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்"என்று சொல்வதும் இதைத்தான்.

ஸப்ஜெக்ட் - ஆப்ஜெக்ட் பற்றி நான் சொன்னது இந்த உபநிஷத்தின் கடைசியில் ரொம்பவும் அழுத்தமாக, உபதேசிக்கப் பட்டிருக்கிறது. பயிர்த்தண்டிலிருந்து கதிரை உருவி எடுக்கிறோம் அல்லவா?ஒரு ஈர்க்குச்சியில் மேல் தோலிலிருந்து உள்ளேயிருக்கும் ஈர்க்கை அப்படியே உருவி விடுகிறோம் அல்லவா?அந்த மாதிரி, ஆப்ஜெக்டான சரீரத்திலிருந்து ஸப்ஜெக்டான ஆத்மாவைத் தைரியமாக உருவி எடுத்துக்கொண்டு, அதுவாகவே இருக்கவேண்டும் என்று அந்த மந்திரம் (vi:17) சொல்கிறது. 'காமம்,க்ரோதம், த்வேஷம், பயம் எல்லாம் மனஸை சேரந்தனவே ஒழிய, ஆத்மாவான எனது அல்ல. பசி, தாகம் முதலியன உடம்பைச் சேர்ந்தனவே, தவிர என்னுடையன அல்ல, என்று ஆத்மாவைச் சேராத எல்லா அநாத்மவஸ்துக்களையும் object ify பண்ணி, வெளியே தள்ளுவதற்கு ஸதா பழகிக் கொண்டேயிருக்க வேண்டும். இம்மாதிரி எப்பொழுதும் அநுஸந்தானம் செய்து வந்தால், உடம்பும் மனஸும்தான்நாம் என்பதாக வேரூன்றியிருக்கும் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, மறைந்தே போய்விடும். உடம்புக்கும் மனஸுக்கும் இருக்கப்பட்ட அழுக்குகள் எதுவுமில்லாத சுத்தமான ஆத்மாவாக நாம் இருக்கலாம். இப்படி, சரீரத்திலிருந்தும் மனஸிலிருந்தும் ஆத்மாவைப் பிரிப்பதற்கு, முஞ்சம் புல்லுக்குள்ளிலிருந்து ஈர்க்கு பளிச்சென்று சுத்தமாக வழவழவென்று பிரிந்து வருவதைத் திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறது. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த வாழைக்கட்டை வாடி வதங்கிப் போனால், நாம் வாடி வதங்குகிறோமா?அந்த வாழைக்கட்டையை விட, இன்னம் கொஞ்சம் கிட்டேயிருக்கும் மாம்ஸக் கட்டை என்றே இந்த சரீரத்தை எண்ணவேண்டும். அந்த வாழைக்கட்டை ஸப்ஜெக்டான நாமாக இல்லாமல் ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாக இருக்கிற மாதிரியே ஆத்மா என்ற ஸப்ஜெக்டுக்கு இந்த நம் உடம்பையும் வேறான ஆப்ஜெக்டாகப் பார்க்கப் பழக வேண்டும்.

இந்த லோகத்தில், நாம் சரீரத்தில் இருப்பதாகத் தோன்றும் இப்போதே, இப்படி சரீரத்தை நானல்ல, என்னுடையதல்ல என்று பண்ணிக்கொள்ள வேண்டும். அப்போது, செத்துப் போனபின் தான் வேறு ஏதோ கைலாஸ வைகுண்டாதி லோகங்களுக்குப் போய் மோக்ஷம் அடையலாம் என்று இல்லாமல், இங்கேயே மோக்ஷமாகி விடும்! மோக்ஷம் என்றால், எந்த பாரமும் இல்லாமல் விடுபட்ட ஸதாநந்தம் என்றே அர்த்தம். அப்படி இந்த லோகத்திலேயே சரீரப் பிரக்ஞையை விட்டு, ஆத்மாராமனாக இருப்பவனைத்தான் ஜீவன் முக்தன் என்பது. வேத வேதாந்தங்களின் பரம தாத்பர்யம் ஒருத்தனை இப்படி ஜீவன் முக்தனாக்குவதுதான். கீதையில், பகவான் ப்ராக் சரீர விமோட்சனாத் (சரீரத்திலிருந்து உயிர் வெளியே போகிறதற்கு முந்தியே) , இந்த லோகத்தில் இருக்கும்போதே -இஹைவ - எவன் காம க்ரோத வேகங்களை அடக்கி விடுகிறானோ அவனே யோகத்தில் நிலைத்து நித்ய ஸுகத்தை அநுபவிக்கிறவன் என்று, இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். இஹைவ - இஹ ஏவ - அதாவது இங்கே இந்த பூலோகத்தில் இருக்கிற போதே, இப்படி ஆத்மாவைத் தெரிந்து கொண்டுவிட்டால் (அதாவது அநுபவித்து விட்டால்) , சரீரம் போனாலும் போகிறது தெரியாது. சரீரம் இருக்கிறபோதேதான் அது தன்னுடையதல்ல என்று போக்கிக் கொண்டாகி விட்டதே! ஆகையால், சாவு என்று ஒன்று வந்து சரீரத்தைப் போக்கடிக்க வேண்டுமா என்ன?

1 comment: