Monday, 31 December 2012

குறளானது வேதத்துக்கு சமமானது - மஹா பெரியவர் விளக்கம்



திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திற்கு கௌரவம் என்னவெனில், எந்த உயர்ந்த நூலானாலும் "இது வேதத்துக்கு சமானம்" என்பதுதான்.

தமிழில் மிகவும் பிரசித்தமான நீதி சாஸ்த்திரங்களில் குறளும்கூட "தமிழ் வேதம்" என்றுதானே சொல்லப்படுகிறது?  திருக்குறளை "தமிழ் மறை" என போற்றப்படுவதும் இதனால்தானே.

அக்காலத்தில் மதுரையில் கடைச்சங்கம் ஒன்று இருந்தது. அங்கே ஸுந்தரேச்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று இருந்தது. அதன்மேல் யோக்யதை இருந்தவர் உட்காரலாம். யோக்கியதை இல்லாவிட்டால் தள்ளிவிடும். 

அது எப்படி? இதை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒரு மெஷினில்  காசு போட்டால், அது டிக்கட்டை வெளியே தள்ளுகிறது என்பதை நம்புகிறோம்.

திருவள்ளுவர் தாம் செய்த குறளை எடுத்துக்கொண்டு அந்த சங்கத்திற்கு போனார். 
பொதுவாக வித்வான்கள் மற்றவர்களை அலக்ஷ்யம் பண்ணுவார்கள்.ஏகமாகப் பரீக்ஷைகள் வைப்பார்கள். அப்படிப் பண்ணுவதனால், அசடாயிருப்பவர்கள் "நானும் படித்தவன்" என்று சொல்லிக் கொள்ள முடியாது.கேட்ட சரக்கை எழுதிப் பிரசாரம் பண்ண முடியாது. ஆகையால், அப்படிப்பண்ணுவது ஒரு வகையில் நல்லதையே பண்ணுகிறது. ஆனால், அந்த அலக்ஷ்ய புத்தி அதிகமாகப் போகக் கூடாது.அது தப்பு.

திருவள்ளுவர் கொண்டு போன சுவடியை, அந்த சங்கப் பலகையில் வைக்கச் சொன்னார்கள்."இந்தச் சுவடிக்கு சங்கப் பலகை இடம் கொடுத்தால்தான், இதை இலக்கியத் தரமுள்ளது என்று ஒப்புக் கொள்ள முடியும்" என்று மற்றப் புலவர்கள் சொல்லி விட்டார்கள்.

திருவள்ளுவரும், "ஆஹா, அப்படியே" என்று அந்தச் சின்னச் சுவடியைப் பலகையில் வைத்தார். அது அந்தச் சுவடிக்கு இடம் கொடுத்து, மற்றவர்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டது. அப்பொழுது ஏனைய புலவர்கள் எல்லோரும் குறளின் பெருமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்யுளால் புகழ்ந்தார்கள். அவர்களுக்குள்ளே ஒருவர்,

         "ஆரியாமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது 
         சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் -ஆரியம் 
         வேத முடைத்து; தமிழ்த்திரு வள்ளுவனார் 
         ஓதுகுறட் பாவு டைத்து"                                        {திருவள்ளுவ மாலை)

என்று சொல்லி இருக்கிறார். "ஸம்ஸ்கிருதம் பெரியதா? தமிழ் பெரியதா? என்று கேட்டால், ஸம்ஸ்கிருதம்தான் என்று நேற்று வரையிலும் சொல்லியிருக்கலாம். இன்றிலிருந்து அப்படிச் சொல்லக் கூடாது. ஸம்ஸ்கிருதத்திற்கு உயர்வு அதில் வேதம் இருக்கிறது என்பதே..(வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை) அதற்கு சமானமாகத் தமிழில் இன்றைக்குக் குறள் வந்துவிட்டதே! அது எப்படி உயர்வுடையதாகும்?" என்று அவர் சொல்லியிருக்கிறார். இதனால், குறளானது வேத சமானம் என்பது தாத்பரியம்.

வேதத்தால்தான் ஸம்ஸ்கிருதத்திற்கு பெருமை., குறளாள்தான் தமிழுக்கே பெருமை என்ற கருத்துக்களும் இங்கே வெளிப்படுகின்றன.



No comments:

Post a Comment