நான் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு. வேத பாஷைக்கு 'ஸம்ஸ்க்ருதம்' என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம்(meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட 'சந்தஸ்'என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்ப்ட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். 'வேத பாஷையில் இப்படி இருக்கிறது'என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, 'இதிசந்தஸி' என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது 'இதி லோகே'என்பார்.
அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை.
வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது;சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. "எந்த தேசத்து சந்திரன்?எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்"என்பார்களா?
தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லியுள்ளார். மந்திராக்ஷரம், 'அந்தணர் மறைத்தே'என்று எழுத்ததிகாரத்தில் (102ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
'நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது; வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை.
ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!
ஒரு பக்கத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!
மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்; உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா? நமக்குப் பெரிய ரக்ஷையாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான்.
No comments:
Post a Comment