Thursday, 10 January 2013

பிராமணனைப்பற்றிய ஒரு தப்பப்பிராயம் - மஹா பெரியவா.


இப்போது ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய தப்பபிப்ராயம் என்னவென்றால் சாஸ்திரோக்தமான வர்ணாஸ்ரம தர்மத்தில் பிராமணனுக்குத்தான் ஸெகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்ற எண்ணம். இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில் பிராமணன் சரீரத்தால் உழைத்த உழைப்பு ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானது அல்ல. பிராமணனின் கர்மாநுஷ்டானங்களைப் பற்றித் தெரியாததால், அவன் மற்றவர்களை பிழிய பிழிய வேலை வாங்கிவிட்டு, தான் ஹாயாக உட்கார்ந்து சாப்பிட்டான் என்று இந்தக் காலத்தில் தவறாக நினைக்கிறார்கள். பிராமணனானவன் காலம்பர (காலை) நாலு மணிக்கே முழித்துக் கொண்டு, மழைநாளாலும், பனிநாளானாலும் பச்சைத் தண்ணீரில் ஸிநானம் செய்ய வேண்டும். 

அதிலிருந்து அவனுக்கு ஒயாக கர்மாநுஷ்டானம்தான். ஸந்தி, பிரம்மயக்ஞம், ஒ£பாசனம், தேவ பூஜை, வைச்வ தேவம், இது தவிர இருப்பத்தியோறு யக்யங்களில் ஏதாவது ஒன்று என்றிப்படி சக்கையாக உழைத்தாக வேண்டும். ஹோமஜ்வாலையிலும், புகையிலும் நாலுநாள் உட்கார்ந்து பார்த்தால் தெரியும், எத்தனை சிரமம் என்பது. இவனுக்கு எத்தனை வ்ரதாநுஷ்டானங்கள்? உபவாஸம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்?

இந்த சிரமங்கள் மற்ற ஜாதியினருக்கு இல்லை. ஒரு குடியானவன் விடிந்தெழுந்ததும் வயறு நிறைய ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரச் செய்ய பிராமணனுக்கு ரைட் கிடையாது. தன் ரைட்டுக்காகவும் செனகர்யத்துக்காகவம் பிராம்மணன் தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொள்ளவே இல்லை. அப்படி இருந்தால் இத்தனை கடுமையான விதிகளை, rigorous discipline -களைத் தனக்கே போட்டுக் கொண்டிருப்பானா? அவன் போஜனம் பண்ணுகிற போது பகல் 1 மணி 2 மணி ஆகிவிடும். (சிராத்தம், யாக தினங்களில் 3 மணி 4 மணி ஆரும்) 

குடியானவன் இறண்டாந்தரங்கூடச் சாப்பிட்டு விட்டு வயலோரத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்கிற சமயத்தில் தான் பிராம்மணனுக்கு முதல் சாப்பாடே, அதுவும் எப்படிப்பட்ட சாப்பாடு, அந்தக் குடியானவன் சாப்பிடுகிற மாதிரி மிகவும் எளிமையானதுதான். குடியானவன் தேக புஷ்டி தருகிற பழையது சாப்பிடலாம். இவன் புது அன்னம்தான் சாப்பிட வேண்டும் என்பது தவிர அதிக வித்தியாசம் இருக்கக் கூடாது. 

குடியானவன் குடிசைக்கும்-பிராம்மணன் குடிசைக்கும்மே வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல்துணிதான். குடியானவனானது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ரைட் கிடையாது.

மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ
அந்ணீச (அ) ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ

ஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில் ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா அந்த வேலையில்கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம்கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. சாகம் பசதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, போன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது யார் இந்தப் பார்ப்பான். பிடுங்கித் தின்ன வந்தான். என்று யாறும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போதும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புள்ளைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிறது.

இப்போது சர்க்காரிலிருந்து ஆரம்பித்து பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்பட எல்லோருக்கும் கடன்தான். சாஸ்திரம் சொன்னபடி, கடன் இல்லாமலும், பிறகு ஏவுதலுக்கு ஸலாம் போடாமலும் தன் தர்மத்தைச் செய்து கொண்டு இப்போது யாராவது இருக்கிறார்களா என்றால் அது நரிக்குறவர்கள்தான் என்று தோன்றுகிறது.

கடைசீயில் சொன்ன அப்ரவாசம் என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம். மனமோ, அவமானமோ, கஷ்டமோ, நஷ்டமோ, நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும். இப்போது இங்கிலாந்தில் ஸெட்டில் ஆகிறோம், அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிறோம் என்று வெறும் பணத்துக்காக ஆசாரங்களை விட்டுப் பறந்து கொண்டு, இததைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இதை சாஸ்திரத்தில் ரொம்பவும் நிஷித்தமாக(இழுக்காக)ச் சொல்லியிருக்கிறது.

எல்லா ஜாதியாரும் நன்றாக உழைப்பது. எல்லா ஜாதியாரும் பரம எளிமையாக வாழ்வது என்று ஏற்பட்டு விட்டால் ஜாதி-த்வேஷமும், ஜாதிகள் போய்விட வேண்டும் என்ற பேச்சும் வரவே வராது. இப்போது ஒரு ஜாதிக்கு ஜாஸ்தி பணம்-சௌகரியமும், இன்னொன்றுக்கு தரித்திரம்-உழைப்பும் வரும்படியாக ஜாதிமுறை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு ஏற்பட்டிருப்பதால்தான் இந்தச் சீர்திருத்தம் எனப்படுகின்ற அபிப்ராயங்கள் வந்திருக்கின்றன.

எளிமையும் உழைப்பும்தான் திருப்தி தருவது. சித்த சுத்தி தருவது. ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது. வர்ணாச்ரமத்தைச் சொன்ன சாஸ்திரங்கள் இவற்றையும் வலியுறுத்தியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குணம் அல்லது மனோபாவம் என்பதை வைத்து இக்காலத்திலும் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னேன். இப்போது பணம், வசதி இவற்றை மட்டும் பார்த்து வேலை தேடுவதில்தான் அத்தனை கஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லா வேலைக்கும் வந்து விழுந்து போட்டியும், பொறாமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக ஆகியிருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதியில் பிறப்பினால் தொழிலை நிர்மித்துக் கொடுத்தபோது, அதிலேயே தன்னால் ஒவ்வொருவனுக்கும் ஒரு aptitute, அதை சுலபத்தில் கற்றுக் கொண்டு செய்கிற திறமை எல்லாம் ஏற்பட்ட மாதிரி இப்போது இல்லை. பிதுரார்ஜிதச் சொத்துபோல அப்போது பெருமிதத்தோடு, பிடிமானத்தோடு ஒவ்வொருவனும் தன் தொழிலை எடுத்துக் கொண்டதனால் அதில் நல்ல செய்நேர்த்தி இருந்தது. இப்போது inefficiency (திறமையின்மை) யைத்தான் எல்லாத் துறைகளிலும் பார்க்கிறோம்.

தர்ம சாஸ்திரங்களை பிராம்மணர்களின் ஸ்வய நலத்துக்காகவே எழுதி வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பது அந்த ஜாதிக்கே மிகக் கடுமையா நியமமும், ரொம்ப எளிமையான வாழ்க்கையும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்து தெளிவாவது மட்டுமில்லை; தர்ம சாஸ்திரங்களின் நிஷ்பக்ஷபாதத்துக்கு இன்னொன்றும் இதைவிடப் பெரிய சான்றாக இருக்கிறது. 

ஸகல கலைகளையும், வித்யைகளையும் பிராம்மணன் கற்றாலும் பிறருக்குத்தான் அவற்றை போதிக்கலாமே தவிர, வைதிகாநுஷ்டானங்களைப் போல கஷ்டமாயில்லாததும், அதிகப் பண லாபம் தருவதுமான அந்தக் கலைகளில் ஏதொன்றையும் தானே தொழிலாக நடத்தக் கூடாது என்று கட்டிப் போட்டிருப்பதைத்தான் சொல்கிறேன். 

இப்போது எல்லாரும் எல்லாவற்றிலும் ஸமம், முக்யமாக நீதிக்கு முன் அனைவரும் ஸமம் என்றெல்லாம் நிறைய கோஷம் போட்டாலும், சட்டசபை, பார்லிமென்ட், கோர்ட் என்று எதை எடுத்தாலும் அததைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்ற பொது ஜனங்களோடு ஸமமாக வைக்கக் கூடாது என்று privileges (சலுகையான உரிமைகள்) எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை யாராவது ஏதாவது (கண்டனமாகச்) சொன்னால் contempt charge (அவமதிப்புக் குற்றம்) என்று கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படி நான் சொல்வதைக் கூட contempt என்று கொண்டு வரக்கூடும். இதே மாதிரி தங்களுக்கு அலவன்ஸ் வேண்டும், ரயில் பாஸ் வேண்டும் என்றெல்லாம் மற்றவர்களுக்கில்லாத சலுகைகளைத்தான் ஜனநாயக அபேதவாதிகளும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் மாறாகத் தங்களையே வறுத்தெடுத்துக் கொண்டு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டவர்கள்தான் தர்ம சாஸ்திரங்களை ரக்ஷித்த ஜாதிக்காரர்கள். 

வேறொருத்தனால் இவர்களுக்கு அநாசாரம் வந்தால்கூட அவனுக்குத் தண்டனை இல்லை; தாங்கள்தான் ஸ்நானம் பண்ணி பட்டினி கிடக்க வேண்டும் என்ற அளவுக்குத் தங்களையே கஷ்டப்படுத்திக் கொண்டதைத்தான் சாஸ்திரங்களில் பார்க்கிறோம். பிராம்மணனுக்குப் பதினெட்டு வித்தைகளும் தெரிய வேண்டும். லோகத்திற்கு வேண்டியவைகளெல்லாம் தெரிய வேண்டும். 

ஸங்கீத வித்தையான காந்தர்வ வேதம் தெரிய வேண்டும். கிருஷி சாஸ்திரம் (உழவு) தெரிய வேண்டும். அது ஜ்யோதிஷத்தில் ஸம்ஹிதை என்னும் பிரிவில் வந்து விடும். வீடு கட்டத் தெரிய வேண்டும். இப்படி எல்லாத் தொழில்களையும் தெரிந்து கொண்டு அந்த அந்த வித்தைகளுக்கும் ஏற்ற ஜாதியினருக்கு அந்த அந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவனே அவற்றில் ஒரு விருத்தியிலும் (தொழிலிலும்) நுழையக் கூடாது. வேத அத்தியயனம்தான் பண்ண வேண்டும். வேறே தொழில் நடத்தி அதிக லாபம் ஸம்பாதிக்க வரக்கூடாது. 

தநுர்வேதம் க்ஷத்ரியர்களுக்கு யுத்த அப்பியாஸத்தைத் தருவது. இங்கே தநுஸ் (வில்) என்பது எல்லா ஆயுதங்களையும் குறிக்கும். தேச ரக்ஷணைக்காக என்னென்ன ஆயுதங்களைஎப்படிப் பிரயோகம் பண்ண வேண்டும் என்ற அறிவைத் தருகிற இதுவும் நேராக ஆத்ம சுத்திக்கு ஏற்பட்டதில்லைதான்.

தநுர்வேதம் விச்வாமித்ரருக்குத் தெரியும். விச்வாமித்ரர் யாகம் பண்ணினார். அதை ஸுபாஹூ, மாரீசன் என்னும் ராக்ஷஸர்கள் வந்து கெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர், "எனக்குத்தான் தநுர்வேதம் தெரியுமே! நானே இவர்கள் பேரில் அஸ்திரங்களைப் போடுகிறேன்"என்று எண்ணிப் போடவில்லை. ராம லக்ஷ்மணர்களைக் கூட்டிக் கொண்டு வந்தே அந்த ராக்ஷஸர்களை தொலைக்கச் சொன்னார். வழியிலே இவரேதான் அவர்களுக்கு அஸ்திர-சஸ்திர வித்தை உபதேசித்தார்! 

ஆகையால் பிராம்மணன் வேத அத்யயனத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக ரக்ஷித்து வர வேண்டும். ஆனால் மற்ற எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொள்ள வேண்டும். 'கத்தி சுற்றத் தெரியுமா?' என்றால் 'தெரியும்' என்று சொல்ல வேண்டும். 'சிகிச்ஸை முறை தெரியுமா?' என்றால் 'தெரியும்' என்று சொல்ல வேண்டும். 'சித்திரம் எழுதுவாயா?' என்றால் 'எழுதுவேன்'என்று சொல்ல வேண்டும். வர்ணாச்ரம தர்மத்துக்குத் தக்கபடி அந்த அந்தத் தொழிலாளியைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அந்ச அந்த வித்யையைச் சொல்லிக் கொடுத்து அவன் தரும் குரு தக்ஷிணையைக் கொண்டு ஜீவிக்க வேண்டும். குரு தக்ஷிணை கொஞ்சமாக இருந்தாலும் திருப்தி அடைய வேண்டும். 

அப்படி எங்கேயானும் ஒரிரண்டு இடங்களில் ஒரு ஜாதிக் காரனுக்கு தனிச் சலுகை கொடுத்திருக்கிறது என்று தோன்றும்படியிருந்தாலும் அதற்கு நியாயமான காரணம் இருக்கும். டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் கொடுப்பவனை மட்டும் தனி ரூமில் வைத்து, மற்றவர்கள் வெளியிலிருந்து வாங்கிக் கொள்வது ஸமத்வமாகாது என்று எல்லாரும் உள்ளே புகுந்துவிட்டால் டிக்கெட் கொடுப்பவன் என்ன செய்வான்? மற்றவர்களுக்குந்தான் ஒழுங்காக டிக்கெட் கிடைக்குமா? ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் சில சௌகரியங்கள் இருக்க வேண்டும். 

ஒரு பொது குடும்பத்தில் ஒருவருக்கு வியாதி உண்டானால் அவருக்குச் சில ஸெளகரியங்கள் செய்து கொடுக்கிறோம். மற்றவருக்கும் அப்படி வேண்டுமென்பது நியாயமா? எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்குச் சில ஸெளகரியங்கள் வேண்டுமல்லவா? வாஸ்தவத்தில் அவை ஸெளகரியங்களல்ல; சலுகையுமல்ல. அவர்களுக்குள்ள அந்த விசேஷ தர்மம் ஸமூஹத்துக்குப் பயன்படுவதற்கே வேண்டியவைதாம் இந்த சில வசதிகள். இதை எல்லாரும் அங்கீகாரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல; 

பிராம்மணன் கொடுக்கும் வைச்வதேவத்தில் பஞ்சமனுக்கும் வீட்டு வாசலில் பலி போட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேதத்தில் சொன்ன ஸகல கர்மமும் "லோகா:ஸமஸ்தா:ஸுகினோ பவந்து" (உலகிலுள்ள உயிர்க்குலம் முழுவதும் இன்பம் அடைய வேண்டும்) என்ற லட்சியத்துக்காக ஏற்பட்டதுதான். வேத சப்தமும் யஜ்ஞமும் எல்லார் நலனுக்காகவும்தான். 

ஒரு க்ஷத்ரியன் அரசாள்வது, போர் செய்வது, police (காவல் பணி) செய்வது எல்லாம் ஸமஸ்த ஜனங்களின் நன்மையின் பொருட்டே யாகும். வைச்யன் வியாபாரம் பண்ணி லாபத்தை எல்லாம் தனக்கே மூட்டை கட்டிக் கொள்கிறான் என்று நாம் நினைத்தால் தப்பு. அவனும் பெரிய சமூக சேவை செய்கிறான்.

வைச்யர்கள் செய்யவேண்டிய தருமத்தை பகவான் கீதையில் ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்: 'கிருஷி'என்றால் பூமியை வைத்துக் கொண்டு உழுது சாகுபடி செய்து ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியது. அடுத்தது பசுவை ஸம்ரக்ஷிக்க வேண்டியது. மூன்றாவது, வியாபாரத்தினால் ஜனங்களுக்கு உபகாரம் செய்யவேண்டியது ஒரு வைசிய தர்மம். பசுவை நன்றாக ஸம்ரக்ஷணை செய்து அதன் கன்றுக்குக் கண்டு பாக்கியுள்ள பாலை யஜ்ஞங்களுக்கும் ஜனங்களுக்கும் உபயோகப் படுத்த வேண்டும். அவ்வளவு புஷ்டியாகப் பசுவை ஸம்ரக்ஷிப்பது இன்னொரு முக்கிய தர்மம். 

வியாபாரமானது வைச்யர்களுக்கு மூன்றாவது முக்கியமான தர்மம். அதாவது வெகு தூரமான தேசங்களில் விளையும் கோதுமை, பெருங்காயம், குங்குமப்பூ போன்ற ஸாமான்களை ஒர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதே ஒரு தர்மம். ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கான பணம் இருந்தும் பயிர் முதலியவை இல்லாத பாலைவனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால், இந்த பணத்தைக் கொண்டு மாத்திரம் அவன் ஜீவிக்க முடியுமா? அதே மாதிரி நெல் ஏராளமாக விளையும் தேசத்தில் நெல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவை இல்லாமல் ஜீவிக்க முடியுமா?

ஆகையால் வியாபாரம் என்பது பல இடங்களில் கிடைக்கும் ஸாமான்களை ஒர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்குக் கிடைக்கப் பண்ணும் பெரிய உபகாரம் என்று தெரிகிறது. இது வைசியருக்கு முக்கிய தர்மமாக ஏற்பட்டிருக்கிறது. வைசியர்கள் தமக்கு வியாபாரம் வேண்டாமென்றிருப்பது பாபம். 

ஏனென்றால் ஒரு ஸமயம் ஒரு வாரம் ஹர்த்தால் ஏற்பட்டுக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பொழுது ஒரு ஸாமானும் கிடைக்காமல் ஜனங்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஆகையால் வியாபாரம் பொதுப் பிரயோஜனத்தை மட்டும் உத்தேசித்ததல்ல. வைசியர்கள் வியாபாரத்தைத் தங்கள் லாபத்துக்காகச் செய்கிறோமென்று எண்ணாமல் ஸமூஹ நலனுக்காக பகவானால் ஏற்படுத்தப்பட்ட காரியத்தைச் செய்கிறோமென்று நினைத்து செய்ய வேண்டும். வியாபாரத்தை அவரவர்கள் லாபத்தை உத்தேசித்துச் செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. 

அதே மாதிரி ஒரு பிராம்மணன் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டுக் கண்ட தொழிலைப் பண்ணிக் கொண்டு பணம் ஸம்பாதித்தால் அதுவும் பாபம். 

வைதிக கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுவதானால் அதற்கு நிரம்ப ஆசாரங்கள், ஸ்நான-பான-ஆஹார நியமாதிகள் உண்டு. இந்த நியமம் என்ற பத்தியம் இருந்தால்தான் வேத மந்திரம் என்ற மருந்து வேலை செய்யும். ஆசாரம் தப்பினால் அபசாரம். அது பெரிய பாபம். அதற்காகக் கஷ்டம் அநுபவித்தாக வேண்டும். அதனால் எப்போதும் அவர்கள் கண்குத்திப் பாம்பாக ஆசாரங்களை அநுஷ்டித்தாக வேண்டும். 

நாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அவனுக்கு நியமங்கள் ரொம்பவும் குறைச்சல்தான். அவன் செய்கிற உழைப்பே அவனுக்கு சித்த சுத்தி, அதுவே அவனுக்கு வேத கர்மாநுஷ்டானம், ஸ்வாமி எல்லாமும்!

எல்லோருக்கும் ஸெளக்யம் உண்டாவதற்காகவே அவர்கள் தங்கள் விசேஷ தர்மங்களை அநுஷ்டிக்கிறார்கள். ஹ்ருதயத்தில் அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே ஜாதி என்று சேருவதால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது. ஒன்றாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டும், ஒரே ஜாதியாகக் கட்டிப் புரண்டு கொண்டும் இருக்கிற மேல் நாடுகளில் இருக்கிற பரஸ்பரப் போட்டியும் த்வேஷமும் கொஞ்சமா நஞ்சமா? 

நம்முடைய சாஸ்திர தர்மப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்து கொண்டு மற்றவர்களுடைய காரியங்களும் நடக்கும்படி செய்து மனஸில் ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். மாமனாரிடம் மருமகள் பேசுவதில்லை; மரியாதைக்காக அப்படி இருக்கிறாள்; அது த்வேஷம் ஆகுமா?நமக்கு ரொம்பவும் நெருங்கிய நம் ஜாதிக்காரரான ஒருவருக்கே ஏதாவது தீட்டு வந்துவிட்டால் நாம் அவர் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டா? இந்த மாதிரி உள்ளவைகளை த்வேஷமென்று சொன்னால் அது நம் பார்வையில் உள்ள தோஷம்தான். நமக்குள்ள மனக் கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தோன்றுகின்றன.

இப்போது க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர ஜாதிகளின் தொழில் முறை கலந்தாங்கட்டியாக ஆகியிருந்தாலுங்கூட, எப்படியோ ஒரு தினுசில் ரா ¢ய பரிபாலனம் - ராணுவ காரியம், பண்ட உற்பத்தி - வியாபாரம், தொழிலாளர் செய்ய வேண்டிய ஊழியங்கள் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசத்தின் practical necessity -யாக (நடைமுறைத் தேவைகளாக) அன்றாட வாழ்வுக்கும் ராஜாங்கம் நடத்துவதற்கும் இந்தக் காரியங்கள் நடந்தே ஆகவேண்டியிருப்பதால், கோணாமாணா என்றாவது நடந்து விடுகின்றன.

மற்ற மூன்று வர்ணங்களின் தொழில் நடக்காவிட்டால் நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கே முடியாது என்பதை உணருவது போல, ஸகல காரியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிர தர்மங்களை எடுத்துச் சொல்லியும் வாழ்ந்து காட்டியும் பிரசாரப்படுத்துவது, வேதங்களைக் கொண்டு தேவ சக்திகளை லோகக்ஷமார்த்தமாக அநுக்கிரஹம் பண்ணவைப்பது, தங்களுடைய எளிய தியாக வாழ்க்கையால் பிறருக்கும் உயரந்த லட்சியங்களை ஏற்படுத்துவது, ஸமூஹத்தின் ஆத்மிக அபிவிருத்தியை உண்டாக்குவது, கலைகளை வளர்ப்பது - என்பதான பிராம்மண தர்மம் போயே போய்விடுகிற ஸ்திதியில் இன்று இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் வாஸ்தவத்தில் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து அது நிறைவான வாழ்க்கையாவதற்கு வழி செய்வது இதுதான். இதை விட்டு விட்டு மற்றவற்றில் மட்டும் கவனம் வைக்கிறோம். அவற்றில் உயர்வை அடைந்தால் prosperity, prosperity (ஸுபிக்ஷம்) என்று பூரித்துப் போகிறோம். ஆனால் ஆத்மாபிவிருத்தியும், கலாசார உயர்வுமில்லாமல் லௌகிகமாக மட்டும் உயர்ந்து என்ன பிரயோஜனம்? 

இந்த உயர்வு, உயர்வே இல்லை என்று அமெரிக்கர்களுக்கு இப்போது ஞானம் வந்திருக்கிற மாதிரி நமக்கும் ஒரு நாள் வரத்தான் செய்யும். அதனால், மற்ற ஜாதிக் குழப்பங்கள் எப்படியானாலும், தேசத்தின் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொடுக்க பிராம்மண ஜாதி ஒன்று மட்டுமாவது, ஒழுங்காக ஸகல ஜனங்களுக்கும் வழிகாட்டிகளாக இருந்து கொண்டு, எளிமையாக, தியாகமாக வாழ்ந்து கொண்டு, வைதிக கர்மாக்களைச் செய்து லோகத்தின் லௌகிக-ஆத்மிக க்ஷேமங்களை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக செய்யவேண்டும். 

இந்த ஒரு ஜாதியை நேர்படுத்திவிட்டாலே மற்ற ஜாதிகளில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களும் தீர ஆரம்பித்துவிடும். எந்த தேசத்திலும் இல்லாமல் தர்ம ரக்ஷணத்துக்கென்றே, ஆத்மாபிவிருத்திக்கென்றே யுகாந்தரமாக ஒரு ஜாதி உட்கார்ந்திருந்த இந்த தேசத்தில் அது எடுபட்டுப் போய் ஸகலருக்கும் க்ஷீணம் உண்டாக விடக்கூடாது என்று, இந்த ஒரு ஜாதியை உயிர்பித்துக் கொடுப்பதற்காகத்தான் இவ்வளவும் முக்யமாகச் சொல்கிறேன். 

தங்களுக்கு உசத்தி கொண்டாடிக் கொண்டு, ஸெளகர்யங்களை ஏற்படுத்திக் கொண்டு, ஹாய்யாக இருக்கிறதல்ல நான் சொல்கிற பிராம்மண ஜாதி, ஸமூஹ க்ஷேமத்துக்காக அநுஷ்டானங்களை நாள் பூரா பண்ணிக் கொண்டு, எல்லாரிடமும் நிறைந்த அன்போடு, பரம எளிமையாக இருக்க வேண்டியதே இந்த ஜாதி. இதை குல தர்மப்படி இருக்கப் பண்ணிவிட்டால் நம் ஸமூஹமே தர்ம வழியில் திரும்பிப் பிழைத்துப் போய்விடும் என்கிற உத்தேசத்தில் தான் இத்தனையும் சொல்வது.

வெள்ளைக்காரன் வந்தது, அதனால் பிராம்மணர்களுக்கு ராஜமானியங்கள் போனது, அதே சமயம் அவர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் உத்யோகங்கள் கிடைத்தது, மெஷின்களும் நகர வாழ்க்கையும் ஏற்பட்டுக் கைத்தொழிலும் கிராம வாழ்க்கையும் நசிந்தது, இதனால் மற்றவர்கள் தொழிலுக்குக் கஷ்டப்படும்போது இவர்கள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் சம்பாதித்தது, இதனால் ஏற்பட்ட போட்டி - இப்படி சாதுர்வர்ண்ய (நான்கு வர்ண) ஏற்பாட்டின் அஸ்திவாரத்தில் ஆட்டம் கொடுத்திருக்கிற சமயத்தில், வெள்ளைக்காரன் புதிய ஸமத்வக் கொள்கைகளையும், ரேஸ் தியரி (இனக் கொள்கை) யையும் கொண்டு வந்து விட்டதால் தான் சாஸ்திர நம்பிக்கையுள்ள பொது ஜனங்களின் மனசு மாறிவிட்டது. 

ஈச்வராநுக்ரஹத்தில் அது பழையபடி மாறினால், பிராமணனிலிருந்து பஞ்சமன் வரை ஒவ்வொருத்தனும் செய்கிற காரியம் அவனவனுக்குச் சித்த சுத்திக்கான ஸாதனம்;அதே சமயத்தில் ஒவ்வொருவன் செய்வதும் லோக க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் என்று புரிந்துவிடும்.

கைத் தொழில்கள் போய் ஆலைத் தொழில்களும், ஸமூஹம் சின்ன சின்னதாக வாழ்ந்த கிராம வாழ்க்கை போய் நகர வாழ்க்கை உண்டாகி, தேவைகளும் தொழில்களும் கணக்கில்லாமல் பெருகி, வாழ்முறையே சன்ன பின்னலாக ஆகிவிட்ட இப்பொழுது பழையபடி பாரம்பரியத் தொழிலையே ஏற்படுத்துவதென்பது அஸாத்யமாகத் தான் தோன்றுகிறது.



No comments:

Post a Comment