வைரத்திலும் பட்டிலும் நம் ஸ்திரீகளுக்கு எப்படியாவது மோஹம் போய்விட்டால் போதும், நம்முடைய குடும்ப வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் ஸ்திரீதர்மமே பிழைத்துப் போய்விடும். 'லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரமா? சாப்பாட்டிலே நாம் சைவம் என்று சொல்லிக் கொண்டால் போதுமா? இத்தனை பட்டுப் பூச்சிகளின் கொலை பாவத்துக்கு ஆளாகிறோமே!' என்கிற எண்ணம் பெண்களுக்கு வந்துவிட்டால் போதும். இதிலே இன்னொரு அம்சம், இதனால் வசதியில்லாதவர்களுக்கும் பட்டிலும், வைரத்திலும் ஆசையைத் தூண்டி விடுவது. பிள்ளை வீட்டுக்காரர்கள் "இத்தனை பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும், வைரத் தோடு போட வேண்டும்" என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அநேகப் பெண்களை கல்யாணமாகாது நிறுத்தி வைக்கும்படி பண்ணுவது பாபம்.
கல்யாணத்தை economic problem (பொருளாதாரப் பிரச்சனை) -ஆகப் பண்ணியிருப்பது அக்கிரமம். "அக்கிரமம்" என்கிற வார்த்தையைத்தான் சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு பெண்ணோடு பிறந்தவர்கள்தானே? நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், "வரதக்ஷிணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு" என்று ஷைலக் மாதிரி கன்டிஷன் போட்டுப் பெண் குழந்தைகளை கல்யாணமாகாமல் கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதற்கேயில்லை. பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா?
'நம் அகத்தை விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்தக் குழந்தை வரவேண்டும்' என்று ஸந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல் கலியாணம் பண்ணிக்கொள்கிற நல்ல மனஸ் நம் ஜனங்களுக்கு வரவேண்டும். இதில் ஸ்திரீகளின் பங்கு விசேஷமானது. பெண்ணாக பிறந்தவர்களுக்குத்தான் தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும் அநுதாபமும் இருக்க வேண்டும்.
தங்கள் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணுகிற ஸமயத்தில் பெண்டுகள் குறிப்பாக நான் சொன்ன விதத்தில் உயர்ந்த பண்போடு நடந்து கொள்ளவேண்டும். 'அந்த அகத்தில் அப்படிச் சீர் செய்தார்களே; அந்த பிள்ளைக்கு அவ்வளவு செய்தார்களே; அந்த மாதிரி நம் பிள்ளைக்கு நடக்காவிட்டால் எப்படி? அது நமக்குக் குறைவு இல்லையா? என்ற மாதிரி அசட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற பிள்ளையகத்துக்காரர்களுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
'இதுவரை மற்றவர் பண்ணின தப்பை, அக்ரமத்தை ஏன் நாம் follow பண்ண வேண்டும்? இனிமேலே மற்றவர்கள் நம்மை follow பண்ணும்படியாக இப்போது நாம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவேயல்லவா நமக்குப் பெருமை?' இப்படிப்பட்ட உணர்ச்சி தாய்க்குலத்துக்கு உண்டாக வேண்டும். 'நம்மகத்துப் பெண்ணுக்கு நாம் வரதக்ஷிணை கொடுத்தோமே! நமக்கே நம் அப்பாவும் அந்த காலத்தில் வரதக்ஷிணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை' என்று தாங்களாக நியாயம் கற்பித்துக் கொண்டுவிடக் கூடாது. இந்தக் கெட்ட பழக்கம் - நம் தர்மத்தைச் சிதைக்கிற பழக்கம் எப்படியாவது நிற்க வேண்டும்.
இதற்காக யாராவது இப்போது தியாகியாக முதலடி எடுத்து வைத்துத்தான் ஆகவேண்டும். எதெதற்கோ தியாகம் என்று கிளம்புகிறார்களே! ஒரு ஊர் இந்த ஜில்லாவில் இல்லாமல் இன்னொரு ஜில்லாவுக்குப் போகிறது என்றால் அதற்காக நூறு பேர், ஆயிரம் பேர் மறியல் செய்து ஜெயிலுக்குப் போகிறார்கள்; எவனாவது ஒருத்தன் கெரஸினைத் தன் மேலே கொட்டிக் கொளுத்திக் கொண்டு, உயிரையே விடுகிறான்! நம்முடைய உயர்ந்த ஸ்திரீ தர்மத்தைக் காப்பாற்ற நாம் கொஞ்சம் பண நஷ்டம் படக் கூடாதா?
"ஸெளந்தர்யலஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம்"என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம்தான். ஆசீர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய பிரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதக்ஷிணை, வைரத்தோடு, சீர் ஸெனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் நான் சொன்ன மாதிரிக் கலியாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால்தான் முடியும்.
தங்கள் மாதிரியான பெண்கள் வயசு வந்தும் கலியாணமாகாமல் நிற்பது, அதனால் மனோ விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு இவர்களுக்கு மனசு இரங்கினால், இவர்களிடம் அம்பாளுக்கு மனசு தானாக இரங்கும்.
'நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று ஸ்வயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்' என்று சொல்வதுகூட தப்பு. ஏனென்றால் ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரிப் போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமலே ஒருத்தர் வரதக்ஷிணை கொடுத்தாலும் இதனால் அவர் தன் பிள்ளைக்கும் கலியாணம் பண்ணும்போதும் வரதக்ஷிணை எதிர்பார்க்கத்தான் செய்வார். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும்கூட, "வேண்டாம்" என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும்.
பெண்வீட்டாருக்கு மிதமிஞ்சிப் பணம் இருந்தால் கூட, "எங்களுக்குப் பணம் தராதீர்கள்". உங்கள் பெண்ணுக்கே
ஸ்ரீதனமாகப் போட்டு வையுங்கள்" என்று சொல்ல வேண்டும். பிள்ளை வீட்டுக்காரர்களின் செலவுக்கு - அதாவது பிள்ளையின் உறவுக்காரர்களுக்கு துணிமணி வாங்குகிறது; இவர்கள் கலியாணத்துக்குப் போகிற பிரயாணச் செலவு முதலானதுகளுக்கு - பெண் வீட்டுக்காரர் 'அழ'வேண்டும் என்பது துளிக்கூட நியாயமே இல்லை.
நம் பிள்ளைக்கு தானே கல்யாணம்? நாமே ஏன் அதற்கு செலவழிக்கக் கூடாது? எவனோ கொடுக்கிற பணத்தில் நாம் டிரஸ் வாங்கிக் கொள்வது அவமானம்தான். நமக்கு வக்கில்லை என்றுதான் அர்த்தம். இதையே 'பிள்ளையகத்து ஸம்பந்தி' என்று பெரிய பெயரில் தங்கள் 'ரைட்' மாதிரி மிரட்டி உருட்டிச் செய்து வருகிறோம்!
வரதக்ஷிணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி. திருட்டுச் சொத்து மாதிரி என்ற பயம் வேண்டும். இது இரண்டு தரப்போடு நிற்காமல் vicious circle -ஆக (விஷ வட்டமாக) ஸமூஹத்தையே பாதிப்பதால் எப்படியாவது இதை ஸமாப்தி பண்ண வேண்டும்.
வரனாக இருக்கப்பட்ட பிள்ளைகளும் இதற்கு ஸஹாயம் செய்ய வேண்டும். சாதாரணமாக, மாதா பிதாக்களின் வார்த்தைக்குப் புத்திரர்கள் மாறு சொல்லவே கூடாதுதான். அப்படிச் சொல்லும்படி நான் புத்திரர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாதுதான். ஏற்கெனவே முன்னாளைப் போலப் பிள்ளைகள் அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்டிராத இக்காலத்தில் நானும் அவர்களைக் கீழ்ப்படியாமல் இருப்பதில் ஊக்கக்கூடாதுதான். இதெல்லாம் எனக்குத் தெரிந்தாலும், விவாஹ விஷயத்தைப் பண ஸம்பந்முள்ளதாகப் பண்ணிப் பிராசீனமான நம் ஸ்திரீ தர்மத்துக்கு உண்டாக்குகிற பெரிய ஹானியைப் பார்க்கிறபோது, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக அப்பா, அம்மாவிடம் வாதம் பண்ணி, "வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
நிஜமான ஸத்யாக்ரஹமாக இருக்கவேண்டும். பெற்றோர் கேட்கவில்லை என்பதற்காக பிள்ளை அவர்களை ஒதுக்கிவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அது ஸத்யாகிரஹம் இல்லை. ஸத்யாக்ரஹம் என்றால் அதிலே தியாகம் இருக்கவேண்டும். அதனால் வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டீர்களா? ஸரி, அப்படியானால் நான் கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் பிரம்மசாரியாக இருந்து விடுகிறேன்' என்று தியாகமாக எதிர்ப்பு செய்தால்தான் ஸத்யாக்ரஹம். இப்படி பண்ணினால் எந்தத் தாயார்-தகப்பனார் மனசும் மாறாமல் போகாது. இதுதான் இப்போது இளைஞர்கள் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம்.
கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு பதில் சாஸ்திரோக்தமான இந்த வரதக்ஷிணையழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும். மாதா-பிதா-குரு என்று மூன்றை வேதமே சொல்லியிருக்கிறதோ இல்லையோ? அதனால் மாதா-பிதாவைத் தானாக ஒரு புத்திரன் எதிர்த்துக் கொள்ளக் கூடாது என்றாலும் இப்போது நான் - குரு என்று பேர் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறன் - சொல்வதால் வரதக்ஷிணை விஷயத்தில் மட்டும் மாதா பிதாவின் அபிப்ராயம் சாஸ்திரப்படி இல்லாவிட்டால் பிள்ளைகள் அவர்கள் எதிர்த்து வாதம், ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.
இது நம் யுவர்கள், கான்ஸர் மாதிரி நம் சமூகத்தில் புரையோடி அரிக்கிற ஒரு கொடுமையை அகற்றி நம் ஸமுதாய மறுமலர்ச்சிக்குச் செய்கிற மகத்தான தொண்டாக இருக்கும். நம் மதத்தின் மேன்மையில் உள்ள நம்பிக்கைக்காக மட்டும் இன்றி, மனிதாபிமானக் கடமையாகவும் இதை நம் இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டும். நெடுங்காலப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மிகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாஹம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும். ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷிணை கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது.
தன பிறந்தகத்து மனிதர்களையெல்லாம் தியாகம் செய்துவிட்டு, நம் வீட்டு பெண்ணாக வரும் அவளை வரவேற்க பிள்ளை வீட்டார் முன்வரவேண்டுமே ஒழிய, அவளின் பிறந்தகத்து சொத்துக்கு பேராசைப்படக்கூடாது.
அப்பா, அம்மா சொற்படி கேட்பதோடு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறதல்லவா? வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இது குடும்பத்துக்கு, மடத்துக்கு, சமூகத்துக்கு, பெண் குலத்துக்கு எல்லாவற்றுக்கும் செய்கிற தொண்டு. இப்படியாக இளைஞர்கள் எல்லாரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment