பகுதி 2
பிராம்ணராகப் பிறந்ததும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் அவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகப் குத்திக் காட்டிப் பேசிய போதெல்லாம் பகவான் ஆக்ஷேபித்ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகின்ற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால் ஏன் குண கர்ம விபாகச: என்றார்., என்றால்.....
இந்த ஜாதி மதமேதான் உள்ளூர அவரவருக்குப் பாரம்பரியமாக ஏற்பட்ட குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான், ஒன்றுக் கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கின்ற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.
பரசுராமர், த்ரரோணாச்சாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே. தர்ம புத்திரர் க்ஷதிரியராயினும், பிராம்மண குணத்தோடு இருந்தாரே., விச்வாமித்திரர் புஜபல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால், இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exception கள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் எக்ஸப்ஷன் உண்டோ இல்லியோ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்த போது கூட உள்ளூரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்ராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத்தான் தெரிகிறது.
அதெப்படி பிறப்பையே குணத்தைத் தொழிலுக்கேற்றதாக அமைத்துக் கொடுத்து என்றால், INDIVIDUALITY யுடன் (தனித்தன்மையுடன்) HEREDITY (பாரம்பரியம்) என்பதும் சேர்ந்தேதான் ஒரு மனுஷனை உருவாக்குகிறது என்று ஸைக்காலஜியும் சொல்கிறதல்லவா. ஒருத்தனின் குணம் உருவாகும் முன்பே அவன் தலைமுறை தத்துவமாக வந்த ஒரு தொழிலின் சூழ்நிலையிலேயே வளர்ந்து தானாகவும், கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொண்டும் அந்தத் தொழிலை எடுத்துக் கொண்டதால் குணமே தொழிலை அநுஸரித்து ஏற்பட்டது. நமக்கு என்று ஏற்பட்ட தொழில் இது என்று அவரவரும் துராசையோ, போட்டியோ இல்லாமல் நிம்மதியாகப் பிரிந்திருந்து தொழில்களைச் செய்து கொண்டு மொத்த ஸமூஹம் ஒற்றுமையாக இருந்த காலத்தில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து, அதிபால்யத்திலேயே அந்தத் தொழ்லைப் பார்த்து அதிலே ஒரு பற்று, aptitude உண்டானதால், பிறப்புப்படி செய்வது குணப்படி செய்வதாகவும் ஆயிற்று.
இப்போது சீர்திருத்தங்கள் என்ன சொன்னாலும், பழைய ஏற்பாட்டில்தான் திறமை, குணம் இவையும் தொழிலோடு அநுஸரனையாகக் தொழிலைச் செய்தான் என்றால், அது பழைய தர்மப்படி செய்த போதுதான் இருந்தது என்பேந். இப்போது இதைத் தலைகீழாக மாற்றித் திரித்துப் பேசுகிறார்கள்.
இப்போது மனோதத்துவத்தை ரொம்பவும் ஆராய்ச்சி செய்கிறவர்கள்கூட என்ன சொல்கிறார்கள்? ஒருத்தனின் குணத்தை, திறமையை, மனோபாவத்தை நிர்ணயம் பண்ணுவதில் heredity -க்கும் (பாரம்பரியத்துக்கும்) அவன் இருக்கிற environment -க்கும் (அதாவது) சுற்று வட்டாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது என்கிறார்கள். பழைய நாளில் பாரம்பரியப்படிதான் அப்பன், பாட்டன், முப்பாட்டன் தொழிலை ஒவ்வொருவனும் பண்ணினான். இரண்டாவதாக, ஒவ்வொரு தொழில்காரரும் ஒரே கிராமத்தில், அக்ரஹாரம், பண்டாரவாடை, சேரி, சேணியர்தெரு, கம்மாளர் தெரு என்று, தனித்தனியாக, ஒவ்வொரு சமூகமாக வசித்தபோது என்வைரன்மென்டும் (சுற்றுச் சூழ்நிலையும்) ஸாதகமாக இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் அழுத்தமான விதத்தில் ஒருத்தனுடைய குணத்தை அவனுடைய பரம்பரைத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாகச் செய்து வந்தன.
இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படி சொல்கிறார்.
"கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்று தான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகின்றனவையே"*
ஆகையால் கிருஷ்ண பரமாத்மா கொள்கை ஒன்று. காரியம் வேறொன்று என்று முரணாகப் பண்ணவில்லையென்பது சீர்திருத்தவாதிகள் எல்லோரும் தலைவராக ஒப்புக்கொள்ளும் காந்தியின் வார்த்தையாலேயே உறுதியாகிறது. நவீனக் கொள்ளைக்காரர்கள் தங்கள் இழுப்புக்கு வேத சாஸ்திரங்களையும் கிருஷ்ண பரமாத்மாவையும் இழுத்து வளைக்கக்கூடாது.
கிருஷ்ணர், "நான் சொல்கிறேன்; நீ கேள்"என்று அடித்துப் பேசுகிறவர்தான். ஆனால் அவரே ஜனங்கள் எப்படி காரியம் பண்ணவேண்டும் என்கிறபோது நான் இப்படி சொல்கிறேன் என்று சொல்லாமல் சாஸ்திரம் எப்படி சொல்கிறதோ அதுவே பிரமாணம் என்று அழுத்திச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத, விஷ்ணு புரணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது.
பிறப்பால் ஜாதி என்கிற சாஸ்திரங்களே கிருஷ்ணர் காலத்துக்குப் பிறகுதான் வந்தது என்றுகூட இக்கால ரிஸர்ச்காரர்கள் சொல்லக்கூடுமாதலால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன். கிருஷ்ண பரமாத்மாவின் காலத்தில் வர்ணாச்ரம விபாகங்களைச் சொல்கிற சாஸ்திரங்கள்தான் தர்மப் பிரமாணமாக இருந்தன என்று பாரத, பாகவத, விஷ்ணு புரணாதி க்ரந்தங்கள் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் சொல்கின்றன. இவ்வாறாக பிறப்பின்படியே வர்ணவிபாகம் செய்யும் சாஸ்திரங்கள் அநுஷ்டிக்கப்பட்ட காலத்தில்தான் பகவான் ஸ்வஷ்டமாக,
ய:சாஸ்திர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: |
ந ஸ ஸித்திம் அவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ||
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ |
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்துமிஹார்ஹஸி||
எவன் சாஸ்திர வித்யைமீறி சொந்த ஆசைகளின் வசப்பட்டு தொழிலை எடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு ஸித்தியில்லை, ஸுகமில்லை, கதி மோக்ஷமும் இல்லை. எந்தத் தொழில் செய்யலாம். எது கூடாது என்று வரையறுத்துக் கொள்வதற்கு சாஸ்திரம்தான் பிரமாணம். இப்படி சாஸ்திரோக்தமான வழியை உணர்ந்து அதன்படி தொழில் செய்வதற்கு உரியவனாகவே இருக்கிறாய் என்று சொல்லியிருக்கிறார். இதனால் அவர் பிறப்புப்படி ஜாதி என்பதைத்தான் நிர்த்தாரணம் பண்ணுகிறார் ( வலியுறுத்தி நிலைநாட்டுகிறார்) என்பதில் லவலேசமும் ஸந்தேஹமேயில்லை.
சரி, வேதமும் கிருஷ்ண பரமாத்மாவும் ஜாதி தர்மத்தைச் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பக்ஷபாதாகத்தான் இருக்கிறது. அவரவர், குணப்படி, மனோபாவப்படி தொழிலைத் தேர்ந்தெடுத்து நடத்துவதற்குத்தான் வசதி செய்து தரவேண்டுமே தவிர, ஜாதிப்படி செய்ய வேண்டும் என்று வைக்கக்கூடாது. இந்த வித்தியாஸத்தைத் தொலைத்துவிட வேண்டும் என்று சொல்லலாம்.
இருக்கட்டும் இந்த குணம், மனோபாவம் என்பதற்கும் நவீன ஸெட்-அப்பில் ஒருத்தர் எடுத்துக் கொள்ளும் தொழிலுக்கு என்ன சம்பந்தம். நன்றாக யோசித்துப் பார்த்தால் இது இந்த காலத்தில் வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொல்கிற விஷயமாகத்தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் ரொம்ப ஸ்வதந்திரம் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டியிருக்கிறது.
அதனால்தான் தங்கள் தங்கள் மனோபாவத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். அது ஸமூகத்திற்கு உதவுகிற நல்ல மனோபாவமா, கெட்ட மனோபாவமா, கெட்டதனால் நல்லதாக்கிக் கொள்ளவேண்டுமே, அதற்காக ஒரிடத்தில் ஸ்வதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே என்பதை எல்லாம் நினைக்காமல் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஸ்வதந்திரம் கேட்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மனோபாவம் அல்லது குணத்துக்கும் தற்காலத்தில் ஒருத்தன் விரும்பும் வேலைக்கும் எந்த அளவுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சம்பந்தமேயில்லை. ரொம்பக் குஞ்சம் பேர் விஷயத்தில்தான் குணத்துக்கும் தொழிலுக்குமிடையே சம்பந்தமிருக்கும். ரொம்பவும் வைராக்ய குணமுள்ளவன் எந்த வேலையிலும் ஒட்டாமலிருப்பான். துருதுருவென்று ப்ளான் போட்டு யோஜனை பண்ணுகிற ஸ்வபாவமுள்ளவனுக்கு மெஷின் மாதிரி வேலை செய்வதான தொழில்கள் பிடிக்காமலிருக்கும். ஆர்மிக்கு (தரைப்படைக்கு) த்தான் போவது, நேவிக்கு (கடற்படைக்கு) த்தான் போவது என்று சில பேருக்கு ஒரே ஆர்வம் இருக்கும். இன்னும் சிலபேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் ஸைதன்யத்தில் சேருவதில்லை என்று இருப்பார்கள். எழுதுவது, பாடுவது, சித்திரம் போடுவது என்கிறவற்றில் ஆசை உள்ளவர்கள் வேறு எந்த வேலையிலும் பிடிமானம் வைக்க மாட்டார்கள்.
இப்போது நான் சொன்ன இத்தனை பேரும்-அதாவது தங்கள் இயற்கை மனோபாவப்படிதான் தொழில் பண்ணுவது என்று இருக்கிற அத்தனை பேரும்- மொத்தமுள்ள ஜன சமூகத்தில் கால்வாசிகூட இருக்கமாட்டார்கள். பத்து பெர்சன்ட் (சதவிகிதம்) கூட இருக்க மாட்டார்கள்.
இங்கே என்னை ஒரு மடத்துக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறது என்றாலும் என்னிடம் எல்லா தினுசு ஜனங்களும் வந்து அவரவர் பிரார்த்தனையை, ஆசையைச் சொல்லிவிட்டுத்தானே போகிறார்கள். இதிலிருந்து எனக்கு தெரிவது, விசேஷமாக ஒருத்தனும் தொழிலைக் குணத்தோடு சம்பந்தப்படுத்தவில்லை என்பதுதான். ஒரு அப்பாக்காரர் வருகிறார். பையனுக்கு எஞ்சினியர் காலேஜிலும் மனுப்போட்டிருக்கிறது. பி.காமும் போட்டிருக்கிறது. எஞ்சினியரிங் கிடைக்காவிட்டால் பி.காம் சேர்த்தாக வேண்டும். எஞ்சினியரிங்கே கிடைத்துவிட்டால் சிலாக்கியம். அநுக்ரஷம் பண்ணவேண்டும் என்கிறார். பி.காம் படித்தால் படிக்கிற ஆர்ட் வேலைக்கும், எஞ்சினியரிங் படித்து சர்வே, கிர்வே பண்ணுவதற்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதோ?
ஆனால் இந்தப் பையன் இந்த இரண்டுக்கும் தயாராக இருக்கிறான். இன்னொரு பையன் வருகிறான். இண்டர்மீடியட் ரொம்ப ஹை யாகப் பண்ணிவிட்டேன். மெடிகல் காலேஜில் சேரலாமா. எம்.ஏ. படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று தெரியவில்லை என்கிறான். வைத்தியத் தொழிலுக்கும் கலெக்டர் வேலைக்கும் என்ன சம்பந்தம். குணத்தை வைத்து தொழில் என்றால் மெடிகல் காலேஜுக்குப் போகிறவன் எப்படி எம்.ஏ. ஐப் பற்றி நினைப்பான். ஒருத்தர் வக்கீலாக இருக்கிறார். அல்லது இண்டஸ்ட்ரி (தொழிற்சாலை) வைத்திருக்கிறார். அப்புறம் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விடுகிறார். மந்திரியாகி இருக்கிறவர்களில் வக்கீலாக இருந்தவர், அதிகாரியாக இருந்தவர், ப்ரோஃபஸராக இருந்தவர், டாக்டராக இருந்தவர் என்று பல தொழில்களில் இருந்தவர்களைப் பார்க்கிறோம். மந்திரித் தொழிலுக்கு எந்த குணங்கள் இருக்க வேண்டுமோ அது எப்படி இந்தத் தொழில்களுக்கும் வேண்டும் என்று சொல்ல முடியும்?
இப்படி பெரிய லெவலில்தான் என்று இல்லை. ஸினிமாக் கொட்டகையில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறேன், ஆசீர்வாதம் வேண்டும் என்று ஒருத்தன் வருகிறான். ஹோட்டல் சர்வராக இருந்து பெட்டிக்கடை வைத்திருக்கிறேன். என்று இன்னொருத்தன் வருகிறான். இந்த இரண்டு தினுஸான வேலைகளுக்கு என்ன சமபந்தம்?
இன்னொன்று கூடச் சொல்லலாம். இப்போது ராஜாங்கமும் அபேத வார்த்தை ( ஸோஷலிஸத்தை) முக்கியமாகச் சொல்வதாகத்தான் ஆகிவிட்டது. அவனுக்கும் ஸ்வபாவப் படிப்பிற்கும் படிப்பு முதலான தகுதிப்படியும்தான் வேலைதரவேண்டுமேயன்றி ஜாதிப்படி இல்லை என்பதும்தான் சர்க்காரின் கருத்தும்.
ஆனால் இவர்களே பெரிய உத்தியோகத்திற்காகப் பரீக்ஷை வைக்கிறபோது, ஒரு பரீக்ஷையை எழுதினவர்களில்தான் சில பேரை ஐ.ஏ.எஸ் என்று செலக்ட் செய்கிறார்கள். சில பேரை போலிசுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கலெக்டர் வேலைக்கும், போலீஸ் ஸுப்பிரண்டு வேலைக்கும் மனோபாவ ரீதியில் பார்த்தால் என்ன சம்பந்தம்? டெக்னிகல் ஸப்ஜெட்டாக இல்லாத வரையில் ஒரு டிப்பாட்மென்ட்காரர்களை சம்பந்தமே இல்லாத வேறே டிபார்ட் மென்ட்களுக்கு மாற்றுகிறார்கள்.
குணம், மனோபாவம் என்று பார்த்தால் அவற்றுக்கு ஆதரவாகச் சொல்ல இங்கெல்லாம் ஒன்றுமெயில்லை.ஆகவே பெரும்பாலும் ஜனங்கள் தங்கள் குணத்தைப் பார்த்து அதற்கு அநுஸரணையான தொழிலாக ஒன்றை எடுத்துக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு பிடித்த தொழில் கிடைக்காவிட்டாலும், கிடைத்த தொழிலுக்கு எப்படியோ அட்ஜட்ஸ் செய்து கொள்கிறார்கள்.
பொதுவாக எதிலே ஜாஸ்தி பணம் கிடைக்குமோ, அசௌகர்யம் குறைவோ, அந்தத் தொழிலுக்குத்தான் எல்லோரும் ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்களேயொழிய, குணம், மனோபாவம், அது இது என்பதெல்லாம் அநேகமாகப் புரளிதான். ஜாஸ்தி வருமானமும், குறைச்சல் சிரமமும் உள்ள தொழிலுக்குப் போவேன் என்பதே ஸ்வதர்மம் என்றால் பரிஹாஸத்துக்கு இடமல்லவா.
குணத்தைக் கொண்டு காரியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று நவீனர்கள் சொல்வது வெற்றுச் சவுடாலாகத்தான் நிற்கிறது. நம்முடைய பூர்விகர்கள் கச்சிதம் பண்ணிக் கொடுத்திருக்கும் ஏற்பாட்டிலோ கார்யமே ஒருத்தனுக்கு இயற்கையாகவும் பாரம்பரியமாகவும் உண்டான குணத்தை அவனுடைய ஆத்மாபிவிருத்திக்கும், வெளிலோகத்தின் க்ஷேமத்திற்கும் ஏற்றபடி ஒரு ஒழுங்கில் ரூபப்படுத்திற்று. காயத்ரி அநுஷ்டானம், கத்தியைச் சுழற்றுவது (சுற்றுவது) Knack (நுணுக்கம்) தெரிந்து வியாபாரம் பேசுவது, மெய்வருந்த உழைப்பது, என்ற நாலு விதமான கார்யங்களே அததற்கான ப்ரஜையின் குணத்தை அந்தந்த துறையில் நன்றாகப் பிரகாசித்துத் தன்னையும் சுத்தி செய்து கொண்டு, ஸமுதாயத்தின் ஒட்டுமொத்த க்ஷேமத்திற்கும் உதவும்படிதாக ரூபப்படுத்தியது. காயத்ரி அநுஷ்டானக்காரனும் மெய்யை வருத்திக் கொண்டானென்று சொல்கிறேன்.[காயத்ரி அநுஷ்டானக்காரனும் எப்படி தன்னை வருத்திகொண்டான் என்பதை "பிராமணர் செய்ய வேண்டிய அன்றாட வேலைகள்" என்ற தலைப்பில் வந்துள்ளது., இதே blog ல்- அதை படித்து தெரிந்து கொள்ளலாம்]....(தொடர்ச்சி 3 ல்)
No comments:
Post a Comment