உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம்(கர்மா) உபநயனமே.
மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாப தோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் (கர்ப்ப சம்பந்தமான) கார்ப்பிகம் என்றும் (பீஜ சம்பந்தமான) பைஜிகம் என்றும் இரண்டு தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக அதாவது கர்பாதானம் முதற்கொண்டு, பும்ஸுவனம், ஸீமந்தம்,நாமகரணம் உள்பட மற்றும் பின்னர் உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள்.
உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான (தகுதியான) வயது வரவில்லை.
எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.
நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம்.தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுசாகப் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்;வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்;காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ -வாக் - காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.
இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக (நேராக) உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் (கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் [சௌளம் என்பது சத்கர்மா செய்வதற்கு வைக்கப்படும் சிகை - குடுமி] வரையிலான) கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதை செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்'என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்குஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான்.
இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய் விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.
நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment