யக்ஞோபவீதம் இளம் பிராயத்திலேயே இப்போது செய்து வைப்பதும் இல்லை. காலம் கடந்து செய்து வைக்கப்படும் உபநயனத்துக்குபின், ஸந்தியாவந்தனம், காயத்ரி இதையெல்லாம் யாரும் இப்போது ஸ்ரத்தையா செய்யக் காணோம். நம்பிக்கை அற்ற தன்மையும், நாஸ்திகமும் வளர்ந்து இருக்கின்றன.
நல் கர்மாக்கள் செய்யாமல் இருக்க பயந்த காலம் போய், பாவம் செய்ய யாரும் பயப்படக் காணோம். அதனால், லோகக்ஷேமார்த்தமாக கடமையை செயத பிராமணர்களுக்கு இருந்த மரியாதை போய்விட்டதற்கு அவர்களே காரணம்.
அதனால் இன்று எங்கும் எதிலும் பொலிவு இழந்து, மலிந்து காணப்படுகிறது. தீமைகள் பெருகி துக்கம் அதிகமாகிவிட்டிருக்கிறது.
உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும் என்றுதான் இதைச் செய்யவேண்டும். ஆனால், "எனக்குச் சொல்ல வருகிறாயே! நீ என்ன பண்ணுகிறாய்?"என்று பிள்ளையே மாதாபிதாக்களிடம் திருப்பிக் கொண்டு விட்டாலும் கஷ்டந்தான்! இப்படிப்பட்ட ஒரு துர்த்தசையில், நான் உங்கள் 'டய' த்தை 'வேஸ்டா'க்கி கொண்டு, "சொல்ல வேண்டியது என் கடமை" என்பதற்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
குழந்தையாயிருந்தவனுக்கு அறிவு வந்து, தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் நடக்கிறது. "பிக்ஷாசர்யம் சர" (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் "பாடம்" ( baad `ham) (அப்படியே செய்கிறேன்) என்கிறான். அதனால் இவனுக்கு உபநயனத்துக்கு முன்பே "பிக்ஷாசர்யம் சர" என்று சொன்னால் அதைப் புரிந்துகொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் இருக்க வேண்டும். ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில் இப்படிப்பட்ட பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால் எட்டு வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.
எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றியிருக்கிறோம்!
No comments:
Post a Comment