Tuesday, 20 December 2011

அருள் மழை - 1 - மஹா பெரியவாள் - தினம் தினம் திருநாளே!

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.
பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.
மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்!’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.
இளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.
இதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.
ஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி! ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே!’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.
அவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.
அப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.
‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.
இதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம்? இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய்? ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?” என்றார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.
இதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா...!!!



No comments:

Post a Comment