Sunday, 24 June 2012

சொல்லாமலே உணர்ந்து,குறை தீர்த்து ஆசிக்கும் கருணை காஞ்சி மஹான்


எனது ஆசான் சுப்ரமணியன் ராமபிரான் மீது அழ்ந்த பக்தி உடையவர். பள்ளி செல்லும் நாட்களில் தொடங்கி இன்றும் (வயது92) தினமும் 1008 முறை "ஸ்ரீராமஜெயம்" எழுதாமல் தூங்கமாட்டார். 
அவரிடம் டியூசன் படித்துகொண்டிருந்த மாணவர் ஒருவர் எப்போதும் சோகத்துடன் இருந்ததை பார்த்து அவர் காரணம் கேட்க, "தன் சகோதரியின் திருமணம் நீண்ட நாட்களாக தள்ளி போய் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் கவலையுடன் இருக்கிறோம். மேலும் கோயில், பரிகாரபூஜை என வேண்டாததெய்வங்கள் இல்லை" என்றான் மாணவன்.
உடனே ஆசிரியர், "நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை பார்த்து ஆசிபெற்று வருவோம். நிச்சயம் ஒரு தீர்வு கிட்டும்" என்றார் .
புறப்படும்போது ஆசான் கிட்டதட்ட இரண்டு லட்சம் தடவைக்கு மேல் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை கட்டி தன்னுடன் எடுத்துகொண்டார்.
இருவரும் காஞ்சி சங்கர மடத்தை அடைந்தனர். அவர்கள் போன சமயம் பெரியவாள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார். 
மகாசுவாமிகளை பார்க்கும்போது என்னென்ன அவரிடம் கேட்க வேண்டும் என்பதை தயார் செய்து வைத்திருந்தனர்.
தங்களை அழைத்தவுடன் ராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை அவர் முன் வைத்தனர். பரமாச்சாரியார், "என்ன இது" என வினவினார். இரண்டு லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகள் என்றவுடன் ஆச்சாரியார் முகத்தில் புன்னகையுடன் கலந்த மகிழ்ச்சி அரும்பியது. அருகில் இருந்த மாலையை அந்த புத்தகங்கள் மீது போட்டார். பின் இருவருக்கும் ஆரஞ்சு மற்றும் பூ மாலையை கொடுத்து ஆசீர்வதித்தார்.
எதிர்பாராமல் கிடைத்த இப்பேறு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். எனவே, இருவரும் திக்குமுக்காடி போய்விட்டனர்.
வெளியே வந்ததும் மாணவர், "ஒன்றுமே கேட்காமல் வந்து விட்டோமே? எனப் பதற்றமாக கேட்டார். அதற்கு ஆசான், "நாம் எதற்கு வந்திருக்கின்றோம், என்ன கோரிக்கை என்பதெலாம் பெரியவாளுக்கு தெரிந்திருக்கும். கவலைபடாமல் திரும்பி செல்வோம். எல்லாம் நல்லதே நடக்கும்," என்றார் .
என்ன ஆச்சரியம்! அடுத்த வாரமே அந்த மாணவனின் அக்காளுக்கு ஒரு நல்ல வரன் அமைந்து விரைவிலேயே திருமணமும் சிறப்புற நிறைவேறியது. தம்பதியினர் ஆச்சாரியாளிடம் நேரில் சென்று ஆசி பெற்று புது வாழ்வைத் தொடங்கி இன்று குழந்தை செல்வங்களுடன் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லாமல் உணர்த்தும் தட்சிணாமூர்த்தியைப் போல தன்னிடம் வருவோர் சொல்லாமலே உணர்ந்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்திட்ட பெரியவாளின் ஆசிக்கும் கருணைக்கும் எல்லையை இல்லை.

No comments:

Post a Comment