Monday, 22 July 2013

சேமிப்புக்கு சேமிப்பும் ஆச்சு ! பரோபகாரம் பண்ணின புண்ணியமும் ஆச்சு !!

சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது;பட்டுத் துணி வேண்டாம் என்று விடுவது;ஸ்வயம்பாக நியமத்தால் (தன் சாப்பாட்டைத் தன் கையாலேயே சமைத்துச் சாப்பிடுவது என்ற நெறியால்) ஹோட்டல் செலவை அடியோடு குறைப்பது;ஸினிமாவுக்குப் போவதை நிறுத்துவது என்ற இந்த நாலை மட்டும் செய்து விட்டால் போதும். எவனும் கடன் கஸ்திப்படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் ஏதோ கொஞ்சமாவது உபகரிக்க முடியும். இதெல்லாம் ஒரு குடும்பத்தில் தினப்படி ஸமாசாரங்கள். இவற்றோடு ஸமூஹ ப்ரச்னையாகிவிட்ட வரதக்ஷிணையையும், ஆடம்பரக் கல்யாணத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வரதக்ஷிணை இல்லை, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது. பொதுப் பணிகளுக்கு உதவ ஸம்ருத்தியாகக் கிடைக்கும்.

எது இன்றியமையாதது, எதெது இல்லா விட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும்; எதெதுகள் இல்லாமலும் நம் அப்பன் பாட்டனெல்லாரும் ஸந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று ஆலோசித்துப் பார்த்துத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழவேண்டும். முதலில் சிரமமாக இருக்கும். சபலங்கள் இழுத்துக்கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் தாயான அம்பாளை வேண்டிக்கொண்டு, அநுக்ரஹ பலத்தில் தேஹித் தெளிந்து ஜயிக்க வேண்டும். அப்புறம் தெரியும், அந்த எளிய வாழ்க்கையில்தான் எத்தனை நிம்மதி இருக்கிறதென்று!

போக்ய வஸ்துக்களைத் தேவை தேவை என்று சேர்த்துக் கொண்டே போனால் அப்புறம் வீடு பெரிசாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால் வாடகைச் செலவு ஏறுகிறது. இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக நமக்கே வருமானம் போதாமல் ஆக்கிக்கொண்டால் பரோபகாரம் பண்ணி நம் கர்மாவைக் கழுவிக் கொள்வதெப்படி?அநாவசியங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டால் நமக்கும் நிம்மதியாக, பிறருக்கும் உதவியாக ஜன்மாவை உயர்த்திக் கொள்ளலாம். அம்பாள் தாயாக, அந்த ஒரே தாயாருக்கு நாம் அத்தனை பேரும் குழந்தைகளாக, ஒரு குடும்பத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் அவை ஒட்டிக் கொண்டு இருக்கிறாற்போல், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணிக்கொண்டு வாழலாம். இந்த உபகாரம்தான் என்று generalise பண்ணவேண்டியதில்லை;அவாவாள் ஸ்திதியில் எது ஸாத்யமோ அந்த உபகாரத்தைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்.

No comments:

Post a Comment