Monday, 29 July 2013

ஆசாரம் குறித்து மஹாபெரியவா கூறும் விளக்கம்

பூர்விகர்கள் ஒழுகிய வழியில் போவதற்கே 'ஆசாரம்' என்று பெயர். ஆசார-வ்யவஹாரங்கள் என்று சொல்வதுண்டு. வ்யவஹாரம் என்பது நிகழ்கால நடப்பாக மட்டும் இருப்பது. ஆசாரம் என்பது பூர்வத்தில் நெடுங்காலமாக நம் முன்னோர்கள் தங்கள் நன்னடத்தைக்கு ஆதாரமாக என்ன செய்தார்களோ அது. அதற்கு நீண்ட காலம் நிலைத்து நின்றதால், நெடுங்கால மரத்தில் உண்டாகிற வஜ்ரம் போன்ற உறுதி உண்டு. அந்த உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நாமும் நம் வாழ்முறையை எழுப்பிக்கொண்டால்தான் நமது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும்.

நம் பூர்விகர்கள் எப்படிப்பட்ட நெறிகளைக் கைக் கொண்டிருந்தார்களென்றால், நம் சாஸ்திரங்களிலும் ஸம்பிரதாயங்களிலும் என்னென்ன உண்டோ அவற்றைத்தான். அவற்றை அவர்கள் அநுஷ்டித்த சிறப்பினால்தான் நம் தேசமே தொன்றுதொட்டுப் பாரமார்த்திகத்திலும், ஞானத்திலும், பக்தியிலும், அது மட்டுமின்றி எல்லாக் கலைகளிலுங்கூட லோகத்திலேயே முதன்மை ஸ்தானம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு நாம் இவ்வளவு சீரழிந்துவிட்ட பிறகுங்கூட நாம்தான் ஆத்யாத்மிகத்தில் தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று மற்ற தேசத்தவர்கள், மற்ற மதஸ்தர்கள் இங்கே உள்ள ஆச்ரமங்களுக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது பூர்வாசாரம் 'பெடல்' பண்ணிவிட்ட வேகத்தின் எஞ்சிய பலத்தால்தான்!

இந்த ஆசாரங்களில் பெரும்பாலானவற்றை விட்டுவிட வேண்டுமென்றுதான் ஸமீப காலமாக, ஓரிரு நூற்றாண்டாக, நம் நாட்டில் சீர்திருத்தக்காரர்கள் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொரு சீர்திருத்தக்காரரும் வரும்போது, நம்முடைய மதம் என்னும் வயலில் இதுதான் களை, இதை எடுத்துவிட்டால் போதும், பயிர் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படி அவரவருக்குத் தோன்றுகிறபடி ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் பயிர் என்றே ஒன்றும் மிஞ்சாது! ஆனதால் நம்மைவிட அறிவிலும், அருளிலும், அநுக்ரஹ சக்தியிலும் எவ்வளவோ மேல் நிலையிலுள்ள ரிஷிகள் தர்ம சாஸ்திரங்களில் என்னென்ன சொல்லியிருக்கிறார்களோ அவற்றைப் பூர்ணமாக அநுஸரிப்பதற்குத்தான் நாம் ப்ரயத்தனப்பட வேண்டும். அதற்கான மன உறுதியைத் தரும்படி பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும்.

இன்னொன்று யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனை சீர்திருத்தத் தலைவர்கள் வந்து இவ்வளவு சீர்திருத்த இயக்கங்களை ஆரம்பித்தும் இவற்றிலிருந்து நாம் மஹானாக ஞானியாக எத்தனை பேரைப் பெற முடிந்திருக்கிறது? யாரை வேண்டுமானாலும் அவதாரம், Messenger of God என்று சொல்லிவிடலாம். ஆனால் வாஸ்தவத்தில் ஜனங்களின் தாபத்தை சமனம் செய்கிற அநுக்ரஹ சக்தி இவர்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. 
ஸம்பிரதாயமாக வருகிற குரு உபதேசத்தால் இப்போதும் பலபேர் பெற்று வருகிற அநுக்ரஹமும் ஸ்வாநுபூதியும் இந்த reform -காரர்களிடமிருந்து வருமா? நேற்றைக்கொன்று, இன்றைக்கொன்று என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களுக்காக tradition என்ற வஜ்ரம் பாய்ந்த ஸம்பிரதாய விருக்ஷத்தை வெட்டி விடுவதா? இப்படி நான் கேட்கவில்லை. பத்துப் பன்னிரண்டு வெள்ளைக்காரர்களே - அவர்கள் ஆத்ம ஸம்பந்தமாக நிறையப் படித்து ரொம்பவும் ஸாதனைகளும் செய்தவர்கள் - என்னிடம் வந்து இப்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

'' Tradition என்கிற சாஸ்திர மரபு, அதன்படியே சொந்த வாழ்க்கையை நடத்தினதால் பரிசுத்தி பெற்ற குருமார்கள், அப்படிப்பட்டவர்களின் அநுபவத்தில் ஊறிப் பக்குவமாகி வருகிற உபதேசம் தீக்ஷை முதலானவை, இவை சிஷ்யனுக்குள்ளேயும் போய் அவனை சுத்தி பண்ணுவது - என்றிப்படியில்லாமல் ஆத்மாநுபவம் எப்படி வர முடியும்? எத்தனையோ மதங்கள், reform -கள் வந்துவிட்டாலும் பூர்வாசாரத்தில் ஊறிய ஆசார்யர்களைப் பின்பற்றா விட்டால் ஆத்மாபிவிருத்தி என்பது மிகவும் துர்லபமாகத் தானே இருக்கிறது?''என்று அவர்கள் கேட்டார்கள்.

அநுபவிகளுக்குள்ளேயே வித்யாஸம் உண்டுதான். அதனால்தான் அநேகமாகப் பெரிய மத ஸ்தாபகர்கள் எல்லாரும் அநுபவிகளாயிருந்தாலும் ஸமயாசாரங்கள் வித்யாஸப்படுகின்றன. ஆனாலும் எவனொருவன் எங்கே பிறந்திருந்தாலும் அந்த மதத்துக்கான ஆசாரங்களைப் பின்பற்றினால் அவனுடைய ஆத்மா கடைத்தேறிவிடும். ஆத்மா கடைத்தேறச் சீர்திருத்தக்காரர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை. அநேகமாக இந்த reform மீக்ஷீ-கள் ஸமத்வம், அது, இது என்று சொல்லி, இந்த லோக வாழ்க்கையில் எல்லோருக்கும் பெருமையான ஸ்தானம் வாங்கித் தருபவர்களாயிருக்கிறார்களே தவிர, ஆத்ம லோகத்தில் இவர்களால் ஒன்றும் ப்ரயோஜனமில்லை என்பதுதான் அந்த வெள்ளைக்காரர்கள் கட்சி.

எனக்கு எந்தக் கட்சியும் கிடையாது. ஒரு ஜட்ஜை எந்தக் கட்சி என்று கேட்டால் என்ன சொல்வது? 'லா'வை (சட்ட புத்தகத்தை)ப் பார்த்து, சொந்த அபிப்ராயமில்லாமல், அதன் பிரகாரம் சொல்லத்தான் ஜட்ஜ் இருக்கிறார். 'எடர்னல் லா' (ஸநாதன தர்மம்) என்கிற சாஸ்திரங்களைப் பார்த்து அதிலிருப்பதைச் சொல்லவும், என்னால் முடிந்தமட்டும் அப்படிச் சொல்லியிருப்பதன் பிரகாரமே நடக்கப் பிரயத்னப்படவுந்தான் நான் இருக்கிறேன். அந்த சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசாரங்களின்படி நீங்கள் நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதுதான் ஆசார்யாளின் சின்னப் பிரதிநிதியாக இருக்கிற என் பொறுப்பு. நான் சொல்வது உங்களுக்கு ஏறுவதும் ஏறாததும் நானே அந்த சாஸ்திரப்படி எவ்வளவுக்குச் செய்கிறானோ, செய்யவில்லையோ அதைப் பொறுத்ததுதான். எனக்கு அநுஷ்டான சக்தி இருந்தால் தான் என் சொல்லுக்கு அதன்படி சாஸ்திர ரீதியாக உங்களை நடக்கப் பண்ணுவிக்கிற சக்தி இருக்கும்.

வெவ்வேறு மதங்களுக்கிடையிலேதான் ஆசாரங்களில் வித்யாஸம் இருக்கிறதென்றில்லை. ஒரு மதத்திலேயேகூட பல கிளை ஸம்பிரதாயங்கள் உண்டாகி மாறுபட்ட ஆசாரங்கள் இருக்கின்றன. பௌத்தத்திலேயே ஹீனயானம், மஹாயானம், Zen என்றெல்லாம் வெவ்வேறு ஆசாரங்கள் இருக்கின்றன. கிறிஸ்டியானிடியில் காதலிக், ப்ராடெஸ்டென்ட், க்ரீக் சர்ச் என்று இருக்கின்றன. இஸ்ஸாத்தில் ஸியா, ஸுன்னி, அஹமதீயா என்று மூன்று பிரிவு உண்டு. ஹிந்து மதத்திலும் சைவம், வைஷ்ணவம், வைதிகம், தாந்த்ரிகம் என்றெல்லாம் பல இருக்கின்றன.

தேச வித்யாஸத்தாலும் ஆசார வித்யாஸம் ஏற்படுவதுண்டு. நம் தேசத்திலேயே வடக்கே குளிர்காலத்தில் ஜலமெல்லாம் ஐஸாகப் போகிற ஊர்கள் இருக்கின்றன. அதனால் அங்கே பண்டா சட்டை போட்டுக்கொண்டே பூஜை பண்ணுவான். அங்கங்கே கிடைக்கும் தான்யாதிகளைப் பொருத்து நைவேத்யம், போஜன ஆசாரம் முதலியன கொஞ்சம் மாறும்.

இதெல்லாம் எப்படியானாலும் ஸரி, எந்த இடத்தில் எந்த மதத்தில், கிளை மதத்தில், ஒருவன் பிறந்திருந்தாலும் அந்த இடத்திலிருந்த அந்த மதத்து, கிளை மதத்து, பூர்விகப் பெரியவர்கள் எப்படிப்பட்ட வாழ்முறையை, வாழ்க்கை நெறியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அதுவே தனக்கான ஆசாரம் எனக் கொண்டு பின்பற்றவேண்டும். இப்படி அவனவனும் தன்னுடைய மூதாதைகள் போன வழியில்தான் போக வேண்டும்;இல்லாவிட்டால் அவன் பதிதனாகிவிடுகிறான் என்று சொல்லியிருக்கிறது.

சிகாம் ஸ¨த்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச * பூர்வை-ராசரித குர்யாத் அந்யதா பதிதோ பவேத் **

சிகாம் :- சிகை எப்படியிருக்க வேண்டும்? துருக்கர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். ஸிக்கியர்கள் முடி, தாடி வளர்க்கிறார்கள். கிறிஸ்தவர்கள் க்ராப் பண்ணிக் கொள்கிறார்கள். ஹிந்துக்கள் குடுமி வைத்துக்கொள்வது சாஸ்திரத்தில் மந்த்ர பூர்வமாகச் சொல்லியுள்ள ஒரு சடங்கு. இதிலும் பல வித்யாஸம். சோழியன், நம்பூதிரி, சிதம்பரம் தீக்ஷிதர்கள், மற்றவர்கள் ஆகியோருக்குள் குடுமியை முடிந்துகொள்வதில் வித்யாஸங்கள் இருக்கின்றன. சிலர் ஊர்த்வ சிகை என்பதாக உச்சியில் முடிந்துகொள்கிறார்கள். சிலர் பூர்வ சிகை என்று தலைக்கு முன்பக்கமாக முடிந்து கொள்கிறார்கள். ''இவற்றில் நீ பிறந்த மரபிலே எப்படி சிகை வைத்துக் கொண்டார்களோ, அப்படியே நீயும் பண்ணு'' என்று சாஸ்திரம் சொல்கிறது.

சிகைக்கு அப்புறம் 'ஸ¨த்ரம்' என்றது பூணூலை அல்ல. ஏனென்றால் பூணூல் விஷயத்தில் அத்தனை குலசாரங்களுக்கும் ஒரே விதிதான். என்னென்ன அநுஷ்டானம் செய்ய வேண்டுமென்று விரிவாக codify செய்து ஆச்வலாயன ஸ¨த்ரம், ஆபஸ்தம்ப ஸ¨த்ரம், போதாயன ஸ¨த்ரம் என்றெல்லாந்தான் வெவ்வேறு பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் பிறந்த குடும்பதாருக்கு எது ஸ¨த்ரமோ அதில் சொல்லியிருப்பவற்றையே எடுத்துக் கொள்ளவேண்டும்.

'புண்ட்ரம்' என்று சொன்னது நெற்றிக்கு இட்டுக் கொள்வதை. விபூதி, கோபி சந்தனம், நாமம், கரிப்பொட்டு, இவற்றிலும் வெவ்வேறு வகைகள் என்று இருப்பதில் குலாசாரப்படி இட்டுக்கொள்ள வேண்டும்.

'ஸமயாசாரம்' என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள், நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental -ஆக) நேர்ந்ததில்லை;உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி.

'' பூர்வை : ஆசரித குர்யாத் ''என்றால் ''உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு''என்று அர்த்தம். அதாவது முன்னே சொன்ன சிகை, ஸ¨த்ரம், புண்ட்ரம், ஸமயாசாரம் எல்லாவற்றிலும் உன் மூதாதைகள் கடைப்பிடித்த ஆசாரங்களையே நீயும் கைக்கொள்ளு என்று அர்த்தம்.

அந்யதா பதிதோ பவேத்

இப்படிச் செய்யாமல், அதாவது தன் குலமுன்னோர் வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால் வேறுவித வாழ்க்கை முறைகளையும் வெளி அடையாளங்களையும் மேற்கொண்டால், அதாவது தன் மதத்திலிருந்தும் கிளை ஸம்பிரதாயத்திலுருந்தும் வேறொன்றுக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான் என்று சொல்லியிருக்கிறது.

பதனம் என்றால் விழுவது. பதிதன் என்றால் 'விழுந்தவன்' என்று அர்த்தம். அதாவது ஸன்மார்க்கத்தில் நடந்து போகாமல், அதோ கதியில் விழுந்து விட்டவன் என்று அர்த்தம். பாதிவ்ரத்யத்தில் (கற்பு நெறியில்) தப்பாகப் போனவர்களைப் பதிதை என்பார்கள். அதைத்தான் சறுக்கிக்கொண்டு விழுந்தவள் என்ற அர்த்தத்தில் 'சறுக்கி', 'சிறுக்கி' என்பது. ''வழுக்கி விழுந்தவர்கள்'' என்று நவீன எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இவள் புருஷனுக்கு த்ரோஹம் செய்கிற மாதிரி ஈஸ்வரனுக்கு, பரமபுருஷனுக்கு த்ரோஹம் செய்து கீழ்லோகத்துக்கும், இப்போதைவிட ரொம்ப ஹீன ஜன்மாவுக்கும் விழுந்துவிடுகிறவன்தான் பதிதன். பூர்விகர்களின் ஆசாரப்படி செய்யாதவன் இப்படிப்பட்ட பதிதன் ஆகிவிடுகிறான். லௌகிகத்திலும் பல தினுஸில் கஷ்டப்பட்டுக்கொண்டு, ஆத்மாவையும் உசத்திக்கொள்ள முடியாத கஷ்ட ஜீவனமாகவே அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

பகவான் நம்மை ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஸமூஹ தர்மத்தில், குலாசாரத்தில் பிறப்பித்திருக்கிறான். என்ன அர்த்தம்? புருஷனை அநுஸரித்துப் பத்தினி கடைத்தேற வேண்டுமென்பதுபோல், ஜீவன் இவ்வாறு தனக்குப் பிறப்பால் எந்த சாஸ்திரமும் ஸம்பிரதாயமும் ஏற்பட்டிருக்கிறதோ அதை அநுஸரித்து ச்ரேயஸ் அடைய வேண்டுமென்றுதான் அர்த்தம். ''மாட்டேன்; இந்த ஆசாரப்படி செய்ய முடியாது'' என்றால் அது பதியைத் திரஸ்காரம் பண்ணுவது போன்ற பெரிய தோஷந்தான். ''இந்த ஸமயாசாரத்தை விட்டு இன்னொன்றுக்குப் போவேன்; வேறே மதத்தில் சேருவேன்'' என்றால் இன்னம் தப்பு. அது பதியை விட்டு விட்டுப் பரபுருஷனிடம் போகிறது போல, அதனால்தான் ''பதிதோ பவேத்'' என்றது.

இப்படி ஆகாமல் தப்புவதுதான் நமக்கு முக்கியம். சீர்திருத்தவாதி ஏதோ இந்த லோகத்துக்கு, இப்போது நடத்துகிற வாழ்க்கை உயர்வுக்கானவற்றை மட்டும் பார்த்து மதுரமாகச் சொல்கிறாரென்பதால் அதன்படிச் செய்து நரக விஷத்தில் போய் விழக்கூடாது. ஆசாரம் ஒருவனை விழாமல் காப்பது மட்டுமில்லை;அவனை இப்போதைய ஸ்திதியிலிருந்து இன்னமும் தூக்கிவிட்டு ஈஸ்வர ஸந்நிதானத்தில் கொண்டு நிறுத்திவிடும்.

No comments:

Post a Comment