பின்னாடி சொன்னவர்கள் பொலிடிகல் லீடர்களாக இருக்கிறார்கள். லேபர், ஸ்டூடன்ட் மூவ்மெண்ட், ஸ்த்ரீ ஸ்வதந்திரம் என்றெல்லாம் சொன்னாலும் இதெல்லாம் ஒரு மாதிரிப் பொலிடிக்லாகவேதான் இருக்கின்றன. ஸோஷல், பொலிடிகல் என்று வார்த்தை வித்தியாஸத்துக்காகப் பிரித்துப் பேசுகிறார்களென்றாலுங்கூட நம் தேசத்தில் எல்லாமே தெரிந்தும் தெரியாமலும் பொலிடிகலாகத்தான் ஆகியிருப்பது நம்முடைய துர்த்தசை. ரிலிஜனில்கூட பாலிடிக்ஸ்தான்! இது இருக்கட்டும். இந்த ஸோஷல் ரிஃபார்மர்கள் பூர்வாசாரங்களை, பரம்பரையாக ஜனங்களுக்கு ஏற்பட்ட கார்யங்களை எடுத்துவிட்டு, அவர்களை வெறும் வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டும் வெறிப்படுத்தி அதற்கான காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். இதில் அங்கமாகவே ஸ்ட்ரைக், டொமான்ஸ்ட்ரேஷன், அடிதடி, ரகளை எல்லாமும் நிறையக் கிளறிவிடப்பட்டிருக்கின்றன.
இதெல்லாமும் கார்யம், சாஸ்திரத்தில் பிள்ளை பிறப்பதற்கும் பண ஸம்பாதனைக்கும் சொன்னதும் கார்யம்தான் என்றாலும் இரண்டையும் செய்வதிலே எத்தனை வித்யாஸமிருக்கிறது? இரண்டுக்கும் லக்ஷ்யம் லௌகிகம்தான். இருக்கட்டும். ஆனாலும் மதத்திலே ஒரு கார்யத்தைச் சொல்லியிருக்கும்போது அதை தெய்வ பரமான லக்ஷ்யமாக இல்லாமல் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே பண்ணும்போதுகூட தெய்வத்தின் நினைப்பு இருக்கிற விதத்திலேயே செய்திருக்கிறது. ஈஸ்வரனுக்கு, தேவதைகளுக்கு, சாஸ்திரங்களுக்கு, பெரியவர்களுக்கு அடங்கி பக்தியுடனே, நாம் வேண்டுகிற வாழ்க்கை நலத்தை நம்மைவிடப் பெரிய ஒரு சக்திதான் தருகிறது என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கார்யங்களைப் பண்ணுகிறோம். அதாவது, ... கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கிறது ... உலக ஸம்பந்தமான உபாயங்களைக் கொண்டே உலகுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பிடிப்பதற்குத்தான் மதாசாரம் என்பது ஒரு பக்கம் உண்மையென்றால், இங்கேயோ ஒருவிதத்தில் அந்த ஈஸ்வர சக்தியை உபாயமாக வைத்துக்கொண்டு, உலக வாழ்க்கையிலே நன்மை பெறக் கார்யங்களைப் பண்ணுகிறோம் இப்படிப்பட்ட கட்டுத் திட்டங்களுக்கு உட்பட்டுப் பண்ணு என்று சாஸ்திரம் சொல்கிறபடி கட்டுப்பட்டு ஒழுங்கோடு பண்ணுகிறோம். இப்படி இதிலே தொக்கி நிற்கிற தெய்வ பக்தி, நம்பிக்கை ஆகியவற்றாலும், side effect -ஆக உண்டாகிற அடக்கம், ஒழுங்குமுறை இவற்றினாலும், நாம் கேட்காமலே நமக்குக் கொஞ்சம் இவற்றினாலும், நாம் கேட்காமலே நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்த சுத்தியும் உண்டாக ஆரம்பிக்கிறது. அதிலே மேலே மேலே தேறிப் போகிறபோதுதான் தன்னாலே இதுபோன்ற அல்ப பலன்களுக்காக இல்லாமல் ஈஸ்வரனுக்காகவே மதாநுஷ்டானங்கள் பண்ண வேண்டும் என்ற பக்வம் உண்டாகிறது.
இப்படி ஏதோ ஒரு விதத்தில் தெய்வ சிந்தனை, பூர்விக ஆசாரத்தில் ஒரு சிரத்தை இவற்றோடு கார்யம் பண்ணுவதற்கும், அடிமுதல் நுனிவரை எங்கேயும் தெய்வத்திற்கோ, ட்ரெடிஷனுக்கோ கட்டுப்படாமல், முழுக்க லௌகிகமாக தற்குறியாக, தறிகெட்டுக் கார்யம் பண்ணுவதற்கும் ரொம்ப வித்தியாஸமிருக்கிறது. அதனால் தான் லோக வாழ்க்கைக்கானதையே பண்ணும்போதுகூட, மத ஸம்பந்தமானவை ஒருத்தனுக்கு சித்த சுத்தியைக் கொடுக்க ஆரம்பிக்கிறதென்றால், வேறு விதமாகச் செய்வது சித்தத்தில் மேலும் அழுக்கையேற்றி அஹங்காரத் தடிப்பை ஜாஸ்தி பண்ணுகிறது.
ஒரு சின்ன த்ருஷ்டாந்தம் சொல்கிறேன். பலனை உத்தேசித்துத்தான் அநேகச் சடங்குகள் பண்ணுகிறோம். ஆனால் உத்தேசித்தபடி பணம் வரவில்லை, பிள்ளை பிறக்கவில்லை. என்ன பண்ணுகிறோம் அப்போதைக்கு ஒரு ஏமாற்றம் உண்டாகத்தான் செய்கிறது. ஆனால் அது ஆழமாகப் போய்விடுவதில்லை. என்ன இருந்தாலும் சாஸ்திரத்தை நம்பித்தானே செய்தோம் அந்த சாஸ்திரத்தின் ஆணிவேரான கொள்கை என்ன கர்மாப்படி நடக்கும் என்பதுதானே ஈஸ்வராநுக்ரஹ பலத்தால் அந்தக் கர்மாவை நமக்குக் கொஞ்சம் ஸாதகமாக்கிக் கொள்ளலாமென்றுதான் சாஸ்திரம் சொன்ன ஏதோ ஒன்றைப் பண்ணினோம். பலிக்கவில்லை. பலிக்காவிட்டாலும் அந்த சாஸ்திரமே நம்மை, ''கர்மா!அநுபவித்துத்தானாகணும்!"என்று தேற்றிக்கொள்ளும்படி பண்ணுகிறது. நாம் எதையோ உத்தேசித்து தெய்வ ஸம்பந்தமான ஒன்றைச் செய்தோமென்றாலும், உத்தேசம் ஃபெயில் ஆனபிற்பாடும் அந்த தெய்வ ஸம்பந்தத்தையும், சாஸ்திர ஆசரணையையும் அதோடு விட்டு விடுவதற்கு மனஸு வருதில்லை. இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாக நல்ல வழியிலேயே திருப்பிவிடப் படுகிறோம். நெருங்கின பந்துக்களின் ஆயுஸுக்காக எத்தனையோ பிரார்த்தனை, ஹோமங்கள் செய்து அது பலிக்காமல் பெரிய சோகம் ஏற்பட்டு விட்டது என்பதில்கூட frustrate -ஆகி (ஏமாற்றத்தில் மனம் சிதைந்து) நாஸ்திகர்களாகப் போனவர்கள் அபூர்வமாகவே இருப்பார்கள்.
ஆனால் இதுவே ஸோஷல் அல்லது பொலிடிகல் ரீதியில் ஒரு கார்யத்தைப் பண்ணி (கார்யம் என்றாலே இந்த நாளில் 'போராட்டம்'தான்!) அது தோற்றுப் போனால் என்ன நடக்கிறது?''நம் கர்மா''என்று சொல்லிக் கொண்டு எவராவது பேசாமல் இருப்பார்களா? உடனே இன்னம் பெரிய போராட்டம், கிளர்ச்சி என்று ஊரை இரண்டாக்குகிறார்கள், த்வேஷம் நாளுக்கு நாள் ஜாஸ்தி தான் ஆகிறது. இது சித்தத்துக்கு அழுக்குதானே?
கார்யம் தோற்றுப் போகாமல் ஜயித்தாலும் இதே வித்தியாஸத்தைப் பார்க்கலாம். சாஸ்திரப்படி பண்ணி ஒரு லாபத்தை அடைந்து விட்டால், மறுபடி அதே லாபத்துக்காக பகவானிடம் போவதற்குத் தன்னாலேயே ஒரு லஜ்ஜை உண்டாகிறது. "அவன் இத்தனை பண்ணினதே பெரிசு"என்று அவனைச் சும்மா சும்மா வேண்டிக் கொண்டு தொந்தரவு பண்ணாமல், "அன்பாக பக்தி பண்ணணும், நாம் இப்படிப்பட்ட ஆசைகளைக் குறைத்துக் கொள்ளணும்"என்ற அறிவு துளித் துளியாவது வருகிறது. அந்த அளவுக்கு அது சித்த சுத்தி. 'போராட்டம்'நடத்தி கார்யத்தை ஸாதித்துக் கொள்ளும்போது என்ன ஆகிறது?" நாம் சக்தியைக் காட்டினால் பயப்பட்டுக்கொண்டு, கேட்டதைப் பண்ணுகிறார்களல்லவா? இன்னம் கொஞ்சம் மிரட்டிப் பார்ப்போம்" என்று புதுப்புது ரைட்கள் கொண்டாடிக் கொண்டு, மேலே மேலே டிமான்ட் செய்வதையே பார்க்கிறோம். தோற்றால் த்வேஷம் ஜாஸ்தியாகிறது என்றால், ஜயித்தாலோ ஆசையும் அஹங்காரமும் ஜாஸ்தியாகிறது. இதுவும் அழுக்குத்தான்.