Wednesday, 11 March 2015

வைஷ்ணவநுக்கு அத்வைத குரு மந்த்ரஉபதேசம்......

ஒரு நாள் மஹாபெரியவாள் காளஹஸ்தியில், சமீபத்தில் இருந்த ஒரு பழைமையான சிவன் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். நானும் என் மனைவியும் அவர் இருந்த இடம் நாடிச் சென்றோம். 

மிகச் சிறிய கோவில்; வெளிப்ராகாரத்தில் புல் மண்டியிருந்தது. கர்ப்பக்ருஹத்தின்
அடிப்பீடத்தில் உள்ள கருங்கல் ஓரமாக குந்தியவாறு உட்கார்ந்திருந்தார்கள். அச்சமயம் அவருடன் வெகு சிலரே இருந்தனர். அவர்களை விஜாரித்தோம். 'ஸ்ரீபெரியவாள் ரொம்ப நேரமாக இங்கே உட்கார்ந்திருப்பதையும், காரணம் தெரியவில்லை என்பதாகவும் சொன்னார்கள். 

நாங்கள் இருவரும் திகைத்து நின்றோம்! ஸ்ரீபெரியவாள் நாங்கள் வந்ததைக் கவனித்தார்.

என்னை நோக்கி சமிக்ஞை செய்து அருகே அழைத்தார். அடியேன் அருகில் சென்றேன்.
ஸ்ரீபெரியவாள் தன் கையில் உள்ள தண்டத்தால் கருங்கல் பீடத்தைக் காண்பித்து'' இது உனக்குப் படிக்க வருமா?'' என்று கேட்டார். நான் அந்தக் கல்வெட்டு எழுத்துகளைக்
கூர்ந்து பார்த்து'' எனக்குப் படிக்கத் தெரியவில்லை'' என்றேன்.

ஸ்ரீபெரியவாள் ''நான் சொலேன் கேளு ஹரி:ஓம் என்று ஆரம்பித்து தொடர்ந்து வாசித்துக் காண்பித்தார். உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

மடத்திற்கு சென்ரவுடன் அம்மாவிடம் இது பற்றிக் கேட்டோம்.

அம்மா சொன்னாள்:- சில மாதங்களுக்குமுன், உங்கள் அகத்திற்கு கும்பகோணத்திலிருந்து வந்த ஒரு சுமங்கலி மாமி காமாக்ஷி அம்மனை உங்கள் அகத்து விளக்கில் ஆவாஹனம் செய்து, அம்பாளின் பீஜாக்ஷரங்களை உபதேசம் செய்தாள் அல்லவா?

அவள் வாக்குப் படி நீயும் ஆவஹனாதிகள் செய்து பூஜை செய்து வந்தாய் என்றாயே? அவள் வாக்குப்படி பெரிய ஞானிகளின் உபதேசம் கிடைக்கும் என்றாளல்லவா? அதுதான் உன் அகத்துக்காரருக்கு மஹாபெரியவா மந்த்ரோபதேசம் செய்திருக்கிறார்! என்று தோன்றுகிறது
என்றாள் அம்மா.

ஒரு வைஷ்ணவருக்கு அத்வைத குருவான தான் உபதேசம் செய்து அதனை நீ பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற மரபை மீறக்கூடாது என்பதற்காக, கல்வெட்டைப் படித்துக் காண்பிக்கும் பாவனையில் ஒரு மஹாமந்த்ரத்தை ஒரு பரம பக்தனுக்கு உபதேசம் செய்திருக்கிறார்!

எவ்வளவு பொருள் பொதிந்த, யுக்திக்கு உகந்த , நுட்பமான தெய்வீக லீலை
இது, அ
ற்புதச் செயல் இது!

இதுபோன்ற கலையெல்லாம் பெரியவாளுக்கு கைவந்த ஒன்றல்லவா?

நெல்லிக்குப்பம் தம்பதியினரின் அனுபவம்

தகவல் கோதண்டராம சர்மாவின் தரிசன் அனுபவங்கள்.

"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி !"

விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில் மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில் தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.
படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி "நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்"-என்று சொல்ல திடுக்கென்று விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி.
எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும் என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய் போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்று காசாக்கிக் கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லைஎன்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.
அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த 'ஏகாம்பர குப்பம்' என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.
"ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே! வெளிலே வா!" என்று கத்த ஆரம்பித்தான்.
ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு, "அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு. நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.
ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று, "நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!" என்று
விவரம் கேட்க,
"ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும் சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப் பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து என்னை வந்து பாருன்னு சொன்னாரு" என்றான்.
மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார். 
அவன், "சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே இருக்கேன்" என்று கதறி விட்டானாம்.
பெரியவா " நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க. உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ. எல்லாம் சரியாப்போகும்" என்று சொல்லி அவனுக்கு பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம் பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

Tuesday, 10 March 2015

மஹா பெரியவா கருணையை என்னவென்று சொல்வது? எவ்வளவுதான் சொல்வது???

1988 வருடம்.பல ஊர்களுக்கு வங்கி அலுவல்நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை உடம்பு முழுவதும் அரிப்பு.எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் பரமாசாரியரிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டி சரியாகவில்லை.சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .
ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா பெரியவா சாதூர் மாஸ்யம் விரதம் ஆரம்பிக்கபோரா தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.

ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி,அரிசி, மளிகை சாமான்களோடு பரமாச்சாரியார் இருக்கும் தேடி சென்றோம். ரிக்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு.கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பரமசாரியரிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.
எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்ட்டானதுக்கு நதிக்கரபோகப்போறளாம் உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் .பாலு மாமா நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்ப சொல்லிட்டார்.

ஏதன் மத்யே எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு. எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் செட்சைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு அவர் பாத்துக்கட்டும் என்றுஅவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம்.

வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச்சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……..
நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்கால் மாதிரி முன்று பிரிவாக ஜாலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டணம் முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது நான் குளித்த ஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.

அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன் .குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து.அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறிதட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்ட ஜலம்தான் என்மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.

பெரியவா அதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார் .நானும் கரை ஏறினேன்.உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்து பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டோம்.

பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது.பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் " வந்த காரியம் முடிந்ததா" என்று.எனக்கு அப்போதுதான் உறைத்தது என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று .
இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை.என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் 
.
நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார் " தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்." என்றார் .அவளவுதான் அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது.இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை, இதை எண்ணிப்பாக்காமல் இருக்க முடியவில்லை.

நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்.