Tuesday, 13 October 2015

'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - மஹா பெரியவா - பகுதி மூன்று

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி ( short-cut ) சொன்னமாதிரி இருக்கிறது. 'ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்' என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித :

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ராணன் போகிறபோது, நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். 'இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!' என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப 'ஷார்ட்-கட்'தானே?

ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி 'ஷார்ட்-கட்'? சும்மாவுக்காக 'ஷார்ட்-கட்'மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது;அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம் !

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது - அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால், அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே'' என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. 

நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலை பாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட, நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ ? உயிர்கொண்டு போம் பொழுது ?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ ?

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது, அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். 

புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு, அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். 

Monday, 12 October 2015

'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' -மஹா பெரியவா-பகுதி இரண்டு

'ப்ராண ப்ரயாண ஸமயே கபாவத பித்தை:' - உயிரின் நெடும் ப்ரயாண ஸமயத்தில் கபாவத பித்தங்கள் கட்டியிழுக்கிறபோது உன்னை எப்படி நினைப்பேனோ? என்று குலசேகரர் மாதிரிப் பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவத் பாதாளும் இந்த 'ப்ராண ப்ரயாண' பதப்பிரயோகம் பண்ணியிருக்கிறார்.

ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்2

உயிர் கிளம்புகிற ஸமயத்தில் ஏற்படுகிற பயத்தைப் போக்க, ஸகல பயத்தையும் நிவ்ருத்தி பண்ணும் லக்ஷ்மிநரஸிம்ம மூர்த்திதான் கைப்பிடிப்பாக (கர அவலம்பம்) வந்து ரக்ஷிக்க வேண்டும் என்கிறார். இதேமாதிரி ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்திலும், ' ப்ரயாணேன்முகே மயி அநாதே ' - 'அநாதையான நான் நெடும் பயணம் கிளம்பும்போது, அப்பா குஹனே!தயாளுவே! நீ முன்னே வந்து நிற்கவேண்டும் என்கிறார். 

இதையே அச்சடித்த மாதிரி 'திருப்புகழி'லும் சொல்லியிருக்கிறது. அது மஹான்கள் எப்போதும் பகவத் ஸ்மரணம் அல்லது ஆத்மாநுஸந்தானத்தில் இருந்தவர்கள். அதனால் நிஜமாக அவர்களுக்கு இந்த பயம் இல்லை. நம்மை உத்தேசித்து, நமக்குப் பிரார்த்திக்கக் கற்றுக்கொடுக்கத்தான் இப்படியெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள்.

பெரியாழ்வார் இன்னும் கொஞ்சம் ஸ்வாதீனமாகக்கூட பகவானிடம் சொல்கிறார்: '' அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் '' . '' சாகிற ஸமயத்தில் உன்னை நான் நினைக்காமலும் போகலாம். அதற்காக நீ என்னை விட்டுவிடாதே. இப்போது உன்னை என்னால் நினைக்க முடிகிறது. அதனால் இப்போது செய்கிற இந்த 'ஸ்மரணை'யையே அப்போதைக்கென்று 'ரிஸர்வ்' பண்ணினதாக வைத்துக்கொள்' என்கிறார்!

ஆனால் கீதா வாக்யத்தைப் பார்த்தால், இப்படி என்றைக்கோ செய்த ஸ்மரணத்தை பகவான் 'ரிஸர்வேஷ'னாக நினைக்கவில்லை; கடைசிக் காலத்தில் நினைக்கத்தான் சொல்லுகிறார். 'ச' போட்டு 'கடைசிக் காலத்திலும்' என்கிறார். அதாவது வாணாள் பூராவும் என்னை நினைத்துக் கடைசியிலும் நினை என்று இந்த ஸ்லோகத்தில் சொல்லாமல் சொல்கிறார். மேலே இரண்டு ஸ்லோகம் தள்ளி, ஸ்பஷ்டமாகவே சொல்கிறார்.

'' தஸ்மாத் ஸர்வேஷூ காலேஷூ மாம் அநுஸ்மர ''

ஆனபடியால் என்னை ஸர்வகாலங்களிலும், எப்போதும் நினைத்துக்கொண்டே இரு என்கிறார். இப்படி எப்போதும் நினைத்தால்தான் முடிவில் அந்த நினைவு வரும்.

ஆனாலும் அந்திமத்தில் நினைப்பதற்கு ஏன் இந்த முக்யத்வம்? இப்படி அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும், "நான் இங்கே எடுத்துக்கொண்ட பரோபகாரம்" என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

'மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன? இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது' என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். 

'இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும்?

இதற்கு ஒரு முடிவு கிடையாதா?' என்று கேட்டால், 'ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக்கொள்ள வேண்டாம்' என்கிறார்.

'சாவு ஒன்றும் பெரிய விஷயமில்லை; சட்டை கிழிகிற மாதிரிதான்' என்றுசொல்லிவிட்டு, 'சாகிற ஸமயத்தில் என்னை நினைத்தால் என்னிடமே வந்து அடுத்த ஜன்மா இல்லாமல் ஆக்கிக் கொள்ளலாம்' என்று சொன்னால், சாவு ஒரு பெரிய விஷயம் மாதிரிதானே இருக்கிறது? அந்த ஸமயத்தில் நினைப்பதற்கு என்ன இத்தனை முக்யத்வம்!

ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக்கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? 

சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம்.

ஆத்மா மாறாதது என்றாலும் நமக்கு அது தெரியாத விஷயம். மனஸின் ஆட்டங்கள்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம். அந்த மனஸின் வளர்ச்சி - அது நல்ல வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி, கெட்ட வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி - பெரிய அளவுக்கு சூழ்நிலையினால் உருவாக்கப்படுகிறது. இந்த ஆயுஸ் பூராவும் நாம் ஒருமாதிரி சூழ்நிலையில் பழகி வளர்ந்து விட்டோம். குறிப்பிட்ட ஸம்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டோம். குறிப்பிட்ட ஸம்ப்ரதாயங்களை அநுஸரித்து அவற்றில் ஒட்டிக் கொண்டு விட்டோம். இதெல்லாம் சாவோடு கத்தரித்துப் போகிறது என்பதைப் பார்க்கிறபோது, (சாவு ஆத்மாவைக் கொஞ்சம்கூட பாதிப்பதில்லை என்றாலும்) ஆத்மாவாக இருக்கத் தெரியாத நம்மை ரொம்பவும் பாதிக்கத்கதானே செய்கிறது?

'அடுத்த ஜன்மாவில் எந்த மாதிரிப்பிறவி ஏற்படுமோ? எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?' என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? 'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ?' என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!

இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் ''ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, 'அடியைப் பிடிடா பாரதபட்டா' என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக்கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? 

அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப்பண்ணி வீணாகுமோ?' என்று பரம கருணையோடு நினைப்பான போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ''ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக்கொண்டு விடலாம்''என்று பெரிய 'கன்ஸெஷன்'தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ¬க்ஷ வைத்துக் கொள்ளலாம் அதாவது:

அன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். 

இப்படி தினமும் நாம் 'சாகிற'போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். 

காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ - எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். 

ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடமால் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.

ஆக வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது ஸித்திக்கும். ஸரி, அது தானாகவே ஸித்தித்துவிட்டுப் போகிறது. ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, 'ஆடோமாடிக்'- ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப்போகிறது. ஆனதால் ''ஸர்வகாலத்திலும் என்னை நினை'' என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா ''அந்திமத்திலும் என்னை நினை'' என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது !

அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective - ஆக ''கடைசியில் எதெதை நினைத்தாலும் அததை அடைகிறான்'' என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்; நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா? இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

இந்த மஹா பெரிய தர்மத்தை, தவறாமல் செய்ய வேண்டும். 

'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - மஹா பெரியவா - முதல் பகுதி

உயிர் போனபிறகு உடம்புக்குப் பண்ண வேண்டிய கார்யத்தைச் சொன்னேன். உயிர் போகிற சமயத்தில் செய்யவேண்டிய பணி ஒன்றும் இருக்கிறது. இதைவிட ஒரு ஜீவனுக்குச் செய்யக்கூடிய பெரிய பரோபகாரம் எதுவுமில்லை. அது என்ன?

க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், ''உடம்பு போனாலும் ஆத்மா சாகிறதில்லை. அதனால் ஒரு பெரிய தர்மத்தை உத்தேசித்து நீ யுத்தம் பண்ணவேண்டிய கடமை, ஸ்வதர்மம் இருக்கிறபோது, 'பந்துமித்ரர்களைக் கொல்லமாட்டேன்' என்று பின் வாங்குவது ஸரியில்லை'' என்று உபதேசம் பண்ணினார். அந்த உபதேசந்தான் பகவத்கீதை. 

ஸரி, ஆத்மா செத்துப்போகவில்லை. உடம்பு போன பிறகு அது என்ன ஆகிறது?எல்லா உ.யிர்களும் உடனே பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறதா? க்ருஷ்ண பரமாத்மா அப்படிச் சொல்லவில்லை. அந்த உயிர் அதன் கர்மத்தைப் பொறுத்து இன்னோர் உடம்பில் புனர்ஜன்மம் எடுக்கிறது என்றுதான் சொல்கிறார். 'மஹா புண்யசாலிகள் ஸ்வர்க்கத்துக்குப் போய்ப் புண்யப்பலனை அநுபவித்து விட்டு, அது தீர்ந்ததும் மறுபடியும் இந்த பூமியிலேயே மநுஷ்யர்களாகப் பிறக்கிறார்கள் (9.21); த்வேஷமும், க்ரூரமும் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன்' (16.19) என்றெல்லாம் சொல்கிறார். அப்படியானால் இந்த ஜனன மரண சக்கரத்திலிருந்து மீட்சியே இல்லையா? இருக்கிறது. அதையும் சொல்கிறார்.

பக்தி யோகத்தாலோ ஞான யோகத்தாலோ தன்னை உபாஸிப்பவர்களை மறுபடி இந்த லோகத்துக்குத் தள்ளாமல் பரமாத்மாவான தன்னிடமே அடக்கம் பண்ணிக்கொண்டு விடுவதாக பகவான் சொல்கிறார். பக்தன் ஞானியாகிவிட்டால் செத்துப்போன அப்புறம்தான் பரமாத்மாவிடம் ஐக்யமாகவேண்டும் என்றில்லை. அவன் இந்த லோகத்தில் இருக்கிற மாதிரி பிறத்தியாருக்குத் தோன்றும்போதே மோக்ஷத்தில்தான் இருந்து கொண்டிருப்பான். 

ஸகல துக்கங்களிலிருந்தும் விடுபட்ட ஸதானந்த நிலைதான் மோக்ஷம். இப்படி பக்தியோகம், ஞானயோகம் அப்யாஸம் பண்ணுவதற்கு பகவான் அத்யாயம் அத்யாயமாக வழி சொல்லிக் கொடுத்துக்கொண்டே போகிறார். ஆனால் இந்தமாதிரிப் பண்ணி ஜயித்து மீளுகிறவன் எங்கேயாவது கோடியில் ஒருத்தன்தான் இருப்பான். இதையும் அவரே சொல்கிறார். 'மநுஷ்யர்களில் ஆயிரத்தில் ஒருத்தன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்'என்கிறார் (7.3) .

இப்படியானால் என்ன பண்ணுவது?எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழி இருக்கிறதே, அந்தமாதிரி ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு short-cut இல்லையா?

ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார் 'ஒருத்தன் செத்துப்போகிற ஸமயத்தில் எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ, அதையே மறுஜன்மாவில் அடைகிறான். என்னையே ஸ்மரித்துக்கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை அடைந்துவிடுகிறான்' என்று சொல்லி '' நாஸ்தி அத்ர ஸம்சய:'' - '' இதில் ஸந்தேஹமே இல்லை'' என்று 'காரண்டி' கொடுத்திருக்கிறார்!

'ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும் அந்திம ஸமயத்தில் மட்டும பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே ! அதனாலேயே இந்த ஜனன-மரணச் சக்கரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியுமாமே !' என்று தோன்றுகிறது.

ஆனால் பகவான் இங்கே 'பொடி' வைத்துப் பேசுகிறார். 'கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு' என்பதற்கு ' அந்தகாலே மாம் ஸ்மரன் ' என்று சொன்னால் போதும். 

ஆனால் பகவான் அப்படிச் சொல்லவில்லை. 'அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்'என்று ஒரு ' ச ' வும் ' ஏவ ' வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார்!

இந்த ' ச ' வுக்கும் ' ஏவ ' வுக்கும் என்ன அர்த்தம்?'அந்த காலே ' ச ' என்றால் 'சாகிற ஸமயத்திலும்' என்று அர்த்தம். 'மாம் ' ஏவ ' என்றால் 'என்னை'என்று மட்டும் அர்த்தமில்லை; 'என்னை மட்டுமே' என்று அர்த்தம்.

அவரை மட்டுமே அந்திமத்திலும் 'ஸ்டெடி'யாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் மோக்ஷம். நம் மனஸ் லகான் இல்லாத குதிரையாக ஓடுகிற ஓட்டம் நமக்குத் தெரியும். ஏதோ இந்த க்ஷணம் அது அப்படியே பரமாத்மாவிலேயே தோய்ந்து விட்டாற்போல இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணமே அது பிய்த்துக் கொண்டு ஏதாவது குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். நமக்கே ஆச்சர்யமாக, தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் - 'அவ்வளவு நல்ல சாந்த நிலையில் இருந்தோமே;இது எப்படி அங்கேயிருந்து அறுத்துக்கொண்டு கிளம்பிற்று? என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்களே, அதுமாதிரி, ஒரு ஸெகண்டில் வீசம் பாகங்கூட இந்த மனஸ் ஒன்றில் நிலைத்து நிற்க மாட்டேன் என்கிறது. எனவே, 'மாம் ஏவ ஸ்மரன்' - பகவானை மாத்திரமே நினைப்பது - என்பது ரொம்பக் கஷ்டம்தான்.

சாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும். அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவோடு, இந்த க்ஷணம் உயிர் போகிறது என்றால் கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது ஐகாக்ரியத்தோடு (ஒரு முகமான சிந்தனையோடு) பகவானை மட்டுமே நினைக்க வேண்டும். அப்படி ஒரே க்ஷணத்தில் ப்ராணன் போய்விட்டால் நல்லது. 

பகவானை விட்டு ஸ்மரணை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம். ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே! குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது. அத்தனை நாழி - அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக்கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா? 'எலக்ட்ரிக் ஷாக்' மாதிரி அடித்து உடனே சாவு instantaneous வருகிறது என்றால், அந்த 'இன்ஸ்டன்ட்'டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே! வராவிட்டால்? பயம் வரக்கூடாதே! அல்லது, அப்படியே உணர்ச்சி மரத்துப்போய் ப்ரக்ஞையில்லாமலும் சாகக்கூடாதே!

உடனே ப்ராணண் போகாமல் எந்த க்ஷணமும் போகலாம் என்று அது பாட்டுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டிருந்தால், அத்தனை நாழியும் (அது நாள் கணக்கில் கூட இருக்கலாம்) பகவானையே நினைத்தாக வேண்டும்;அல்லது நினைக்கிறதற்குக்கூட அவகாசம் தராத விதத்தில் மஹா பீதியையே துளியூண்டு நாழிகைக்குள் தருகிற விதத்தில் - எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அடித்துச் சாவதானாலும், அந்த fraction of a second -லும் பகவத் ஸ்மரணை பூர்ணமாக ரொம்பிக்கொண்டு வந்து நிற்க வேண்டும்.

இது தானாக, அந்த ப்ராணாவஸ்தை ஸமயத்தில் கைகூடுகிற விஷயமா? இல்லை. அதனாலேதான் 'அந்த காலே ச' என்று ஒரு 'ச'போட்டார். இதைப்பற்றி மேலேயும் சொல்கிறார்.

ஆயுள் முழுவதும் செய்வதே அந்திமத்தில் வரும்.

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். 

தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. 

சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. 

ஆனால் நாம் ''போ, போ''என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான - 'ஏகம் ஸத்'தான - பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை 'வா, வா' என்று- சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டால் அது இருந்து இடம் தெரியாமல் போகிறது.

கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும் மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

இப்போதும், எப்போதும் - இதுவரை செய்யாவிட்டாலும் இப்போதிருந்தாவது - நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். அப்படி வாழ்நாள் பூரா, வெளியில் எத்தனை கார்யம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளூர் ஓர் இழை பரமாத்மாவிடமே சித்தம் ஒட்டிக் கொண்டிருந்தால்தான் அந்திம காலத்தில் கன்னாபின்னா நினைப்புகள் வராமல் அவன் நினைவு மட்டும் - "மாம் ஏவ" என்ற மாதிரி 'அது மாத்திரமே - இருந்து கொண்டிருக்கும். இழுத்துப் பறித்துக்கொண்டு கிடந்தாலும்' அத்தனை இழுபறியிலும் விடாமல் பகவத் ஸ்மரணமே இருக்கும். 

அல்லது அநாயாஸ மரணமாக இயற்கையாக ஸம்பவிக்கும்போதும் அவனையே நினைக்கத் தோன்றி அந்த ஒரு சில க்ஷணங்களானாலும் அதிலேயே ஜகாக்ரியத்தோடு முழுகிவிட முடியும். அல்லது திடீரென்று ஒரு புலி வந்து அடித்துப் போட்டாலோ, அல்லது கரென்ட் ஷாக் அடித்தாலோ அப்போதுகூட பயமோ, அதிர்ச்சியோ இல்லாமல், ப்ரக்ஞை போய்விடாமல், 'டாண்' என்று பகவத் ஸ்மரணம் வந்து நிற்கும்.

Friday, 9 October 2015

உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு எதற்கு சடங்கு, மரியாதை செய்ய வேண்டும்? - மஹா பெரியவா

''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? இந்த வெறும் உடம்புக்கு எதற்கு சடங்கு, மரியாதை செய்ய வேண்டும்? - மஹா பெரியவா கொடுக்கும் மிக அற்புதமான விளக்கம், 

​தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி'என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது.  ​எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ​மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை தானே பண்ணிக் கொள்ள ,முடியாது. ​அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம். இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் ​​(உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.

''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது?ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்​ ​போட்டுக் கொள்ளவேண்டும்? ​​உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?''​ ​என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸ¨ர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் ​​தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி'என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது​.​. 

'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது'என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதைத் b) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்'என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. 

கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா - இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை;காதால் பார்க்க முடிவதில்லை!பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது. பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. 

அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்'பண்ண ஒன்று-எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். 

சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்'இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம். இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம்.​ இந்த​ ​தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்​​களா​ ​யிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்?​ ​அது என்ன பண்ணுகிறது?​ ​அது மனஸின் கருவி மட்டும்தானே?கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்;அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்'என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்''என்று திருமந்திரத்தில் சொல்கிறார்*2.

ஆனாதல் இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்'பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹ§தி பண்ண வேண்டும். ​​எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா?எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே​ ​!

ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்''என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டிசெய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். ​​மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா?அதனால் ​​அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்;போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்;ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?'என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்;உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது;அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது​ !

Friday, 2 October 2015

எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!" பெரியவா.

கோஸ்வாமி துளஸீதாஸர் தசரதரைப் பற்றி ஒரு
ரஸமான செய்தி கூறுகிறார்;

தசரதருடைய முற்பிறவியில் அவர் ஸ்வாயம்புவ மனு.
அவர் முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில்
அவருக்குத் தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார்.

அப்பொழுது ஸ்வாயம்புவ மனு ஒரு வரம் கேட்டார்;
"ஸ்வாமி.! என்னை யாராவது பைத்தியக்காரன் என்று
சொன்னால் சொல்லட்டும். ஆனாலும் தாங்கள் எனக்குப்
பிள்ளையாகப் பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு
பிள்ளையிடம் எவ்வித அன்பு இருக்கவேண்டிமோ,
அது மட்டும் இருக்கட்டும்.

"அப்படியே.!" என்று நாராயணனும் அருள் புரிந்தார்.

ராமனைப் புத்திரனாகப் பெற்ற தசரதர் அவரிடம் எவ்வளவு
பாசம் கொண்டிருந்தார்; பிள்ளையின் பிரிவு தாங்காமல்
எப்படிப் பிராணனை விட்டார் என்பது தெரிந்த விஷயம்.

காஞ்சி காமகோடி பீடம் பரமாசார்யாளிடம் பரம பக்தியும்
பிள்ளைப் பாசமும் ஒருங்கே பெற்ற பெருமை
எசையனூர்ப் பாட்டிக்கு உண்டு.

எசையனூர்ப் பாட்டி என்ற கோகிலாம்பாள் அம்மாள்
தென்னார்க்காடு மாவட்டத்தில் எசையனூர் என்ற
கிராமத்தில் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப்
பட்டு, இளமையில் கணவரையும், குழந்தைகளையும்
இழந்தவள்.ஞானபக்தி, வைராக்யங்கள் அவளிடம் அடங்கின.

பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள்.

'பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்' என்ற மரியாதையும்
பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும்,
பரிவும் மறு புறம்.

பாசத்தோடு,அக்கறையும் இணைந்து அதட்டி உருட்டத்-
தயங்க மாட்டாள், பாட்டி.அது ஒரு சிறப்புச் சலுகை.
.......................................................................................................

"ஏண்டா ராமமூர்த்தி, பெரியவா இன்னிக்குச்
..சரியா பிட்சை பண்ணினாளோடா? ஏன் தான்
..இந்த ஏகாதசி,துவாதசி,ப்ரதோஷம் சேர்ந்தாப்
..போல வரதோ.? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப்
...பட்டினியா.?இப்படிக் காய்ஞ்சா, அந்த
...உடம்பு என்னத்துக்கடா ஆகும்,?"

"மேலூர் மாமா,! நான் சொல்றதைக் கொஞ்சம்
..கேளுங்கோளேன். நீங்க சொன்னாத்தான்
..பெரியவா கேட்பா,! இப்படிப் பாறைமாதிரி
..கபம் கட்டிண்டிருக்கே,? இருமக்கூட முடியாமல்
..தவிக்கிறாளே,? வென்னீரில் ஸ்நானம்
..பண்ணச் சொல்லுங்களேன்."

"ஏண்டா, விச்வநாதா, பெரியவா கொஞ்ச நேரம்
..தூங்கட்டுமேடா.! எதற்கடா பேச்சுக்
..கொடுத்திண்டிருக்கேள்.

"இல்லே, பாட்டி.! பெரியவா பேசறா, நாங்க
கேட்டுண்டிருக்கோம்.

-இப்படி, எல்லோரிடமும் பேசுவதற்குத் தனி
உரிமை, பாட்டிக்கு.

"ஏண்டாப்பா,! நைவேத்ய கட்டிலே இத்தனை பேர்
..இருக்கேளே,? பெரியவாளை ஸ்நானத்துக்குக்
...கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை
...செய்து பிட்சை பண்ணட்டுமே.?"

சவாரிக்காரர்களிடம் போவாள்.
"நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள்.
..நன்னா இருங்கோ.! இந்தாங்கோ.! கொஞ்சம்
..பட்சணம் கொண்டு வந்திருக்கேன்.
..எல்லாருமாச் சாப்பிடுங்கோ.!
..(டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு
..நேரம் காலமே கிடையாது.

- அதுதான் (டின் நிறைய) பாட்டி நோக்கில்,கொஞ்சம்.!

"பெரியவா எப்ப கிளம்பறாளோ.?
..தயாரா இருக்கணும். வழியிலே
..ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ.!"

"இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியில்
..படுத்துக்கறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா.
..தீவட்டியை எடுத்துண்டு நாலு பக்கமும்
..சுத்திவரப் பாருங்கோ.பாம்பு,பல்லி
..இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா.!
..உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு" என்பாள்.
...................................................................................................

புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு
ஒரு அலாதித் தெம்பு.

அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி, தான்படும்
கவலையெல்லாம் மனம் விட்டுக்கொட்டுவாள்.
அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை
நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே 
கேட்பார்கள்.

..............................................................................................................
பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த
பாட்டி சொல்லுவாள்;

"நான் சொல்றதை நன்னாக் கேட்டுக்கோ.!..
(ஒரு மானசிகக் காட்சியை விவரிக்கிறாள்.)

"பெரியவா அப்படியே தண்டத்தைத் தோளோடு
அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா.
திடீர்னு சந்திரக் கல தெரியறது. கங்கை தெரியறாள்.
ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி.சாந்தமாகச்
சிரிச்ச முகம்.அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாகக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன்.! எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு."

(பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஸ்தாபகர்,
பண்டிட் மதன் மோகன் மாளவ்யா,மகாசுவாமிகளுக்கு
பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமாக மலர்களைப்
பொழிந்து அபிஷேகம் செய்ததை அந்தக்கால 
பக்தர்கள் வெகுவாகப் பாராட்டியதை எசையனூர்
பாட்டியும் அறிந்திருந்தார்.)
....................................................................................................................
பழைய மானேஜர் விச்வநாத அய்யர் சொல்வார்,
"பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப்
பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்" என்று.!.

"நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என்கிட்ட
சொல்லுங்கோ.!" என்று பாட்டியைப் பணிவுடன்
கேட்பார், மடத்து மானேஜர்.!

மடத்துச் சிப்பந்திகள் அனைவரிடமும் பாட்டிக்குப்
பிள்ளைப் பாசம். அவர்களுக்குப் பல வித உபகாரம்
செய்வாள்,பணத்தால் ஆக முடியாத ஊறுகாய்,பட்சணம்
என்று பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள்.
(அந்தக் காலத்தில் இவைகள் விற்பனைக்கு வரவில்லை.)

"எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா,
ஜாக்ரதையாக இருங்கோ.!" என்று பரமாசார்யாளே
தமக்குப் பணிவிடை செய்பவர்களைப் பார்த்து
சிரித்துக் கொண்டே எச்சரிப்பார்களாம்.

பரமாசார்யாள் மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில்
முகாம் இட்டிருந்தார்கள்.அப்பொழுது, "எசையனூர்ப்
பாட்டியை மாடு முட்டி விட்டது காலமானாள்."
என்ற செய்தி வந்தது. மகாஸ்வாமிகள் மூன்று
நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்கள்.

எசையனூர்ப் பாட்டிக்கு, இனி ஒருபோதும் இந்த
மண்ணுலகில் வேலையில்லை;ப்ரும்ம லோகத்திலும்,
மகாப்பெரியவாளையே ஸ்மரித்துக் கொண்டிருப்பாளோ?