கொஞ்சம் பழைய சம்பவம் இது.. காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.
'சதஸ்' என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே ""களை"" கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.
மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும்.
ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல் பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற
சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.
இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.
அது ஒரு வெள்ளிக்கிழமை....வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும் சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள், பண்டிதர்கள்
ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் கொண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம்
தெரிந்தது.
காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். "அவனுக்கும் நூறு ரூபாய்....எனக்கும் நூறு ரூபாய்தானா?" என்கிற வாட்டம்தான் அது.
பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா?
"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் "சந்தோஷம் பெரியவா.. நான் புறப்படுகிறேன்" என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு வெளியேறினார்.
உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.
"சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று" என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். "சரி...தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா"
என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.
முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள், புஷ்பங்கள், கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார்.
பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.
உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, "பெரியவா........ ஒரு விண்ணப்பம்..." என்று இழுத்தார் வக்கீல்
"சித்த இருங்கோ..." என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.
அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். "சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்.....நீதான் பார்த்திருப்பியே..
அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு.. பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா" என்றார்.
உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன். மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.
அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.
ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார். அவர் அருகே போய், "பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்" என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார் ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், "அம்பீ..... முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் போயிடுமேடா" என்றார்.
சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, "அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ.. கையோட
உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்" என்று அடமாகிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே "ஐயரே [ஐயங்காரே]... அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும். போய்ப் பாரேன்.
அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?" என்று சிடுசிடுவென்று சொல்ல.... வேஷ்டியில் சுருட்டி வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான் சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது.
உள்ளே நுழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.
"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?" என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.
சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.
சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென "பெரியவா...ஒரு விண்ணப்பம்.." என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.
"சித்த இருங்கோ...உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்.." என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு "வக்கீல் சார் இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ" என்றார் காஞ்சி மகான்.
இவருடைய அட்ரஸை நான் ஏன் குறித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கொண்டார் வக்கீல்.
"நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே... அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து. அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ" என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.
ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். "முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?" என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்?
யார் அவர்? அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?" என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.
பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.
சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.
விஷயத்துக்கு வருவோம்.
சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட சென்னை வக்கீல், "பெரியவா...ஒரு விண்ணப்பம்......
நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் ..." என்று தொய்வான குரலில் இழுத்தார். "உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே."
"இல்லே பெரியவா...என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே...".என்று தயங்கினார் வக்கீல்.
"உன்னோட விண்ணப்பம் என்ன.... கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே...அதானே?" என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம்.
வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை."ஆமாமாம் பெரியவா.... அதேதான்... அதேதான்!"
இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்....நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்?
இப்ப என்ன பண்றே..."-பெரியவா இடைவெளி விட்டார்.
"பெரியவா சொல்லணும்...நான் கேட்டுக்கணும்...."- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது.
ஏன்னா நாலு மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, "சும்மா மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா"னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்."
"பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்" என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி அடைந்தார் அந்த மகான்.