ரதோத்ஸவத்தை விட்டுவிட்டு, ஸோஷல் ஸர்வீஸுக்கு வாருங்கள் என்று சொல்வது தப்பு. நமக்கு இரண்டும் வேண்டும். இப்போதெல்லாம் தெய்வ கார்யத்தை விட்டு விட்டு ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும் என்பவர்கள் திருமூலர் திருமந்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கதாமே.
என்ற திருமந்திரத்தை quote செய்கிறார்கள்.
'மக்களுக்குச் செய்கிற தான தர்மங்கள் பகவானுக்குப் பண்ணுகிற பூஜையாகும்' என்று இதற்கு அர்த்தம் . ஸ்ரீமத்பாகவதத்திலும் பகவான். லோகத்தையெல்லாம் பகவத் ஸ்வரூபமாக பார்த்து ஸேவை செய்வதும் பூஜைதான் என்கிறார்*.
இப்படிச் சொன்னதால் பூஜை கூடாது, உத்ஸவம்கூடாது என்று அர்த்தமில்லை. பரோபகாரம் பண்ணி ஜனங்களுக்கு சாப்பாடும், துணியும் மற்ற ஸெளகர்யங்களும் கிடைக்கிற மாதிரி செய்துவிட்டு, அவர்கள் தின்று தின்று என்றைக்கோ ஒருநாள் பரமார்த்த ஸத்யத்தைத் தெரிந்து கொள்ளாமலே சரிகிற மாதிரி விட்டு விட்டால் என்ன ப்ரயோஜனம்? திருமூலரோ, க்ருஷ்ணரோ இப்படி விட்டு விடவேண்டும் என்று அபிப்ராயப்படுகிறவர்கள் அல்ல. சாச்வத ப்ரயோஜனம் பகவானைக் காட்டிக் கொடுப்பதுதான். இந்த உடம்புக்கு சோறு போட்டு, இதற்கு வியாதி வந்தால் சிகித்ஸை பண்ணி, அறிவை வளர்க்கும் படியான கல்வியைத் தந்து உபகாரம் பண்ணுவதெல்லாம். ஆலய தர்சனம், உத்ஸவாதிகள் முதலியவற்றை நன்றாக அநுபவித்துப் பயன் அடைவதற்குத்தான் மற்ற ஸோஷல் ஸர்வீஸ் எல்லாமே. ''நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணி ஆயுஸை நீடிக்கப்பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாபத்தை வ்ருத்தி செய்துகொள்ள இடம் தருவதாக ஆவதால், அவனுக்கு வைத்யம் பண்ணாதே!'' என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ஆனபடியால் மக்கள் பணியெல்லாம் அந்த மக்களை பகவானிடம் சேர்ப்பதற்குத்தான். அதனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி செய்தால் மெய் வருத்தி ஒரு கோயிலுக்கு மதில் கட்டினால், அதுதான் ஜனங்களுக்கான மஹா பெரிய ச்ரமதானம்.
ஆத்மார்த்தமாகவே சில ஸமூஹ ஸேவைகள் உண்டு. உதாரணமாக, மஹான்களுடைய நூல்கள், மஹான்களைப் பற்றிய நூல்கள், புராணங்கள், ஸ்தோத்ர க்ரந்தங்கள், துதிப்பாடல்கள் முதலியவற்றை அச்சிட்டு ஜெயிலில் இருக்கிறவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் இருக்கிறவர்களுக்கும் இலவசமாகக் கொடுப்பது ஒரு பெரிய பரோபகாரம். அந்தந்த அதாரிடி (நிர்வாகிகள்) அனுமதித்தால் இந்த இடங்களில் மத ஸம்பந்தமான பேச்சு, பஜனை, காலக்ஷேபம் இதெல்லாம் நடத்தலாம்.
No comments:
Post a Comment