தர்மபுத்ரர் அஸ்வமேத யாகத்துக்கு அங்கமாக ஏராளமான அன்னதானம் பண்ணினார். அந்த மாதிரி ஸகல ஜனங்களுக்கும் வயிறும் மனஸும் ரொம்பிப் போகிற முறையில் எவருமே அன்னதானம் பண்ணினதில்லை என்று எல்லோரும் ஏகமாகக் கொண்டாடினார்கள். வயிறு ரொம்பப் போட்டு விடலாம். அது பெரிசில்லை அதே ஸமயத்தில் மனஸும் ரொம்புகிற மாதிரி பரம அன்போடு போடுவதுதான் விசேஷம். 'இது யாகத்தின் அங்கம். இதைப் பண்ணினால்தான் தனக்குப் பலன் கிடைக்கும்' என்று காரியார்த்தமாக மட்டுமில்லாமல், கடனே என்று இராமல், நிஜமான பரிவோடு, பாண்டவர்கள் இப்படிப் பெரிய அன்னதானம் செய்து லோகமெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது, இதனால் அவர்களுக்கு கர்வம் வந்துவிடக் கூடாதே என்று பகவான் பார்த்தார். கர்வம் வந்ததோ அத்தனை தர்மமும் அதிலே ''ஸ்வாஹா'' ஆகிவிட வேண்டியதுதான்! அதனால் இந்த ஸமயத்தில் அவர்களைக் கொஞ்சம் மட்டம் தட்டினாலும் நல்லதுதான் என்று பகவான் நினைத்தார். வெறுமனே மட்டம் தட்டினால் மட்டும் போதாது; அதோடு ஸர்வ லோகத்துக்கும் தானத்தின் உத்க்ருஷ்டமான தத்வம் தெரியும்படியாகவும் பண்ண வேண்டும் என்றும் நினைத்தார். இந்த இரண்டு லக்ஷ்யங்களையும் பூர்த்தி பண்ணுகிற ஒரு ஸம்பவம் அப்போது பகவத் ஸங்கல்பத்தால் நடந்தது.
ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து தர்மபுத்ரரை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருந்த அந்த ஸந்தர்ப்பத்தில் அங்கே திடீரென்று ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை தோன்றிற்று. விசித்ரம் என்னவென்றால் அந்தக் கீரிப்பிள்ளையின் உடம்பில் சரியாக ஒரு பாதி மட்டும் பளபளவென்று தங்கம் மாதிரி பிரகாசித்தது.
அந்தக் கீரிப்பிள்ளை போஜனசாலையில் சிந்தியிருந்த அன்னாதிகளின்மேல் புரண்டுவிட்டு, மநுஷக் குரலில், ''இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு இது வீசம்கூடக் காணாது'' என்று தூக்கி எறிந்து பேசிற்று.
பார்வைக்கே பாதித் தங்கமாக அது விசித்ரமாக இருந்தது என்றால், மநுஷக் குரலில் பேசினது அதைவிட விசித்ரம். பேசிய விஷயமோ எல்லாவற்றையும் விட விசித்ரமாக இருந்தது. லோகம் முழுவதையும் கட்டி ஆள்கிற ஸார்வபௌமரான தர்மபுத்ரர் செய்ததைவிடப் பெரிய தானத்தை உஞ்சவ்ருத்தி பிராம்மணன் எப்படிப் பண்ண முடியும்?
உஞ்சவ்ருத்தி என்றால் தற்காலத்தில் பிச்சை எடுப்பது, வீடு வீடாகப் போய்த் தான்ய பிஷை வாங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி தெருத் தெருவாகப் போய் அக்ஷதை வாங்குவதை உஞ்சவ்ருத்தி பஜனை என்றுகூட பஜனை ஸம்ப்ரதாயத்தில் சொல்கிற ஒரு பழக்கம் வந்துவிட்டது. ஆனால் ஆதி காலத்தில், நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால், உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேறே. சாஸ்த்ரப்படி, களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும். இதைத்தான் சோற்றுக்கு வேறு வழி இல்லாத பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் 'உஞ்சம்' என்றால்' சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது' என்றே அர்த்தம்.
கீரிப்பிள்ளை உஞ்சவ்ருத்திப் பிராம்மணனை ஓஹோ என்று புகழ்ந்ததும் ஸபையில் கூடியிருந்தவர்கள் அதனிடம், "நீ யார்? நீ சொல்கிற உஞ்சவ்ருத்தி பிராம்மணன் யார்? அவன் பண்ணின மஹா பெரிய தானம் என்ன?'' என்று கேட்டார்கள்.
கீரிப்பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தது. அந்தக் கீரி ரொம்ப வயஸானது. அதனால் எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்லிற்று.
அப்போது குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய ப்ரபுக்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்டியான ஸ்திதி ஏற்பட்டது. அப்போது உஞ்சவ்ருத்தி பிராம்மணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமையில் தான் கொஞ்சம் குப்பையும் கூளமுமாக மட்கி, நாற்றமெடுத்துக் கை வசம் இருந்தது. அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்மணன், அவனுடைய பத்னி, பிள்ளை, மாட்டுப்பெண் - இந்த நாலு பேருக்கு ஒரு வேளைக்குத்தான் இந்த மாவு போதும். 'ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம்; அடுத்த வேளை இதுவும் இல்லாமல் ப்ராணன் போக வேண்டியதுதான்' என்று நினைத்து நாலு பேரும் வெறும் மாவை ஆளுக்கு ஒரு பிடி தின்னலாம் என்று உட்கார்ந்தார்கள்.
இந்த ஸமயம் பார்த்து ''தேஹி!'' என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார்.
'கலத்திலே சோற்றை இட்டுக் கைப்பிடித்து இழுப்பது' என்பார்களே, அந்த மாதிரியான ஸந்தர்ப்பம்.
அந்த ஸந்தர்ப்பத்திலுங்கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது விருந்தோம்பல் பண்பில் பின்வாங்கவில்லை. பிராம்மணன், அவனுடைய பத்னி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு மாவைக் கொடுக்க முன்வந்தார்கள்.
அதிதி ஸத்காரம் - அதாவது விருந்தோம்பல் - என்பது ஸமூஹ தர்மம், social duty . இதோடு குடும்ப தர்மம், domestic duty என்றும் ஒன்று இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இன்னின்னார் இன்னின்ன கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நிர்ணயிக்கிற தர்மம் இது. நாலு பேருமாக ஸோஷல் ட்யூட்டியைப் பண்ண முன்வருகிறபோதே, தங்களுக்குள் டொமெஸ்டிக் ட்யூட்டியை எடுத்துக் காட்டிக் கொண்டார்கள். ''புருஷன் இல்லாமல் ஒரு பத்னி இருப்பாளா? உங்கள் பங்கைக் கொடுத்துவிட்டு நீங்கள் உயிர் விட நான் பார்ப்பேனா? அதனால் என் பங்கை நான் தருகிறேன்'' என்று பத்னி பிடிவாதம் பிடித்தாள். பிள்ளையோ, ''ப்ரத்யக்ஷ தெய்வமான மாதா பிதாக்களுக்குப் பிராணாபத்து என்கிறபோது ஒரு புத்ரன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?'' என்று அவர்களைத் தடுத்து, அதிதிக்குத் தன் பங்கைத் தரப்போனான். உஞ்சவ்ருத்தி பிராம்மணனிடம் அவனுடைய பத்னி எந்தப் பதிவிரதா தர்மத்தை எடுத்துச் சொன்னாளோ, அதையே மாட்டுப்பெண் பிள்ளையிடம் சொல்லி, ''நான்தான் என் பங்கைத் தருவேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள்.
நாமாக இருந்தால் ஏதாவது ஒரு வஸ்து நமக்குக் கிடைக்கிறதென்றால் நான் முந்தி, நீ பிந்தி என்று போட்டி போடுவோம். கொடுக்கிறதென்றால் அவரவரும் பின் வாங்கத்தான் செய்வோம். இந்த ஏழை பிராம்மணக் குடும்பத்திலோ உயிரையே கொடுப்பதற்கு, பிராணத்யாகத்துக்குப் போட்டி போட்டார்கள். த்யாகம், தானம் எல்லாம் பணக்காரர்களால்தான் முடியும் என்றில்லை! பரம ஏழைகளாலும் முடியும். பெரிய ராஜாவான ரந்திதேவன் குடும்பத்தினர் செய்த அதே த்யாகத்தைத்தான் இப்போது பரம தரித்திரர்களான இவர்களும் செய்கிறார்கள்!
கடைசியில் பிராம்மணன் மற்றவர்களை அடக்கிவிட்டு, ''குடும்பத் தலைவன் என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிற என் கடமை உங்கள் மூவரையும் ரக்ஷிப்பது. மனஸறிந்து உங்களில் எவரையும் பட்டினி போட்டு மரணத்துக்கு ஆளாக்கினால் நான் ப்ரஷ்டனாகி விடுவேன்'' என்று தீர்மானமாகச் சொல்லித் தன் பங்கு மாவை யாசகருக்கு அன்போடு தானம் செய்தான்.
அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீரவில்லை என்றார்.
உடனே பத்னி தன் பங்கை அவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள்.
அதையும் சாப்பிட்டுவிட்டு, 'இன்னமும் கொண்டா!' என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கொஞ்சம்கூடக் கோபமே இல்லாமல் பிள்ளையும் தன் பங்கு மாவை அவருக்குக் கொடுத்தான்.
அதையும் ஏப்பம் விட்டுவிட்டு, இன்னும் வந்தாலும் கொள்ளும் என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கடைசியில் மாட்டுப்பெண்ணும் அவருக்கு மனஸாரத் தன் பங்கு மாவைக் கொடுத்தாள்.
அதிதி அதைச் சாப்பிட்டு முடித்தாரோ இல்லையோ, ஆளைக் காணவில்லை!
அந்த நாலு பேர் மேலே ஆகாசத்திலிருந்து புஷ்ப வ்ருஷ்டி பொழிந்தது.
''நான்தான் தர்மதேவதை. உங்களைப் பரிசோதிக்கவே யாசகப் பிராம்மணனாக வந்தேன். பரீக்ஷையில் நீங்கள் அற்புதமாக ஜயித்துவிட்டீர்கள். உயிரைக் கொடுத்தாவது விரும்தோம்பலை நடத்திக் காட்டுவதில் உங்கள் குடும்பத்தைப்போல் எங்குமே கண்டதில்லை. அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்கத்திலேயே இடம் 'பிடி'த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான தேவலோகத்துக்கு வந்து சேர்வீர்களாக'' என்று அசரீரி கூறிற்று.
(அசரீரி கேட்டதா, தர்மதேவதை நேரில் வந்ததா என்று ஸரியாக நினைவில்லை. தாத்பர்யம் இதுதான்.)
உடனே தேவர்கள் அங்கே அலங்கார விமானத்தோடு வந்தார்கள். உஞ்சவ்ருத்தி பிராம்மணக் குடும்பத்தினர் அதிலே ஏறிக்கொண்டு ஸ்வர்கத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
ஸ்வர்கத்துக்குப் போனார்கள் என்றால் இந்த லோகத்தில் ப்ராணனை விட்டார்கள் என்று அர்த்தம். குசேலர் மாதிரி இந்த லோகத்திலேயே அவர்களுக்கு ஸகல ஸம்பத்தும் வந்ததாகச் சொல்லவில்லை. இவர்கள் ஸ்வர்கவாஸம் கிட்டும் என்று அபேக்ஷித்து தானம் செய்யவில்லை. விருந்தோம்பல் பண்புக்காகவே உயிரைவிட்டார்கள். தானாக ஸ்வர்க்கம் ஸித்தித்தது.
இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ''அந்த மையத்தில் நான் குருக்ஷேத்திரத்தில் அந்த வீட்டில்தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவு ஏதோ துளித் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே ஸ்வர்ண வர்ணமாகி விட்டது''....
இப்போது கூட ரொம்ப நல்லவர்களைத் 'தங்கமான மனஸு' என்றுதான் சொல்கிறோம். இங்கிலீஷில்கூட 'Golden hearted' என்கிறார்கள் அல்லவா? தங்க மனஸு படைத்த த்யாகக் குடும்பம் செய்த தானத்தில் இது ஸ்தூலமாகவே நிஜமாயிருக்கிறது!
''அதற்கப்புறம், இப்படி ஒரு பக்கம் மட்டும் தங்கமாக இருக்கிறதே, இதே மாதிரி வேறெங்காவது பரம உத்க்ருஷ்டமான தானம் நடக்கிற இடத்தில் சிந்திப்போனது இன்னொரு பக்கத்தில் பட்டால் அதுவும் தங்கமாகி, முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் நானும் பெரிய பெரிய ஸந்தர்ப்பணைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்மபுத்ரர் மஹா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே சிந்திப் போனதிலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!'' என்று கீரிப்பிள்ளை முடித்தது.
No comments:
Post a Comment