கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:|
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:|
''புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்'' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது. 'த்ருஷ்ட்வா' என்று ஸ்லோகத்தில் வருவதற்கு 'பார்த்தால்' என்று அர்த்தம். வ்ருக்ஷம் - மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா? தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. 'பார்த்தால்' என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ''பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை; இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்''- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.
முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன? சின்ன அகலமாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment