இப்போதெல்லாம் ரொம்பப் பேருக்கு ஒரு தப்பு அபிப்பிராயம் இருக்கிறது. அதாவது 'புத்தர், ஜீஸஸ், நபி எல்லோரும் அஹிம்ஸை, அன்பு, ஸஹோதரத்வம் ஆகியவற்றைச் சொன்ன மாதிரி வைதிக மதத்தில் சொல்லவில்லை. வைதிக மதத்தில் எப்போது பார்த்தாலும் கர்மாநுஷ்டானம் என்று ஏதாவது யாகம், யஜ்ஞம், திவஸம், தர்ப்பணம் இந்த மாதிரியும், பெரிய பெரிய பூஜை உத்ஸாவதிகளும், விரதம், யோகம், ஞான விசாரம் இதுகளும்தான் சொல்லியிருக்கிறதே தவிர, ஜீவகாருண்யத்தைப்பற்றி ஒன்றுமே இல்லை' என்று ஓர் அபிப்ராயம் இருக்கிறது. நல்ல வைதிகமாக ஆசாரமாக இருக்கிறவர்களைப் பார்த்தாலும், என்னவோ வறட்டு வறட்டு என்று ஏதாவது சடங்குகளைப் பண்ணிக்கொண்டு, 'மடி' கொண்டாடிக் கொண்டு ஒதுங்கி ஒதுங்கித்தான் இருக்கிறார்களே தவிர, ஒரு மிஷனரி ஆர்வம் காட்டுகிற மாதிரிப் பரோபகாரப் பணிகளில் ஈடுபடுவர்களாக இல்லையே என்றுதான் தோன்றுகிறது.
வாஸ்தவத்தில் நம் சாஸ்திரங்களில் வர்ணாச்ரமப் படி அவரவருக்கான அநுஷ்டானங்களை, ஸம்ஸ்காரங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்க வேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறது; ஸாமான்ய தர்மங்கள் என்ற பெயரில் சில ஒழுக்க நெறிகளைச் சொல்லியிருக்கிறது. ஸாமான்ய தர்மங்களில் முதலாவதே அஹிம்ஸைதான். ஸத்யம்கூட இதற்கு அப்புறம்தான் வருகிறது. அந்த ஸத்யத்துக்கும் definition (லக்ஷணம்) கொடுக்கிறபோது,
"ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்..."
அதாவது, ஸத்யம் என்பது வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்திறது மட்டுமில்லை, எது ஜீவராசிகளுக்கு ஹிதமானதாக, பிரியமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்றுதான் சொல்லியிருக்கிறது.
இப்படியே நாற்பது ஸம்ஸ்காரங்களுக்கு முந்திச் சொல்லியிருக்கிற அஷ்டகுணங்களில் முதலாவதாக,
"தயா ஸர்வ பூதேஷூ..."
''எல்லா ஜீவராசிகளிடமும் அருள் இருக்க வேண்டும்'' என்று அன்புக்கே முக்யத்வம் தந்திருக்கிறது.
அன்புடைமை, அருளுடைமை இத்யாதிகளை ஒருத்தன் தான் அப்யாஸம் பண்ணாமல் பகவான் மட்டும் தனக்கு அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் இதுகள் செய்தும் பிரயோஜனமில்லைதான். இவனுக்குத் தன் மாதிரி இருக்கப்பட்ட மற்றவர்களிடம் ஒரு தயை, தாக்ஷிண்யம், ஈவு, இரக்கம் இவை இல்லாவிட்டால், தன்னிடம் மட்டும் பகவான் தயை காட்டவேண்டும் என்று கேட்க வாய் ஏது? முன்னாலேயே நான் சொன்ன மாதிரி பரோபகாரம், ஆத்மாபிவிருத்திக்கான ஸம்ஸ்காரங்கள், பூஜை முதலான ஸாதனங்கள் எல்லாம் கலந்து, கலந்து ஒன்றையன்று இட்டு நிரப்பிக் கொண்டு (Complementary) பரஸ்பரம் ஒன்றால் ஒன்று பரிசுத்தமாக்கப்பட்டுத்தான் அநுஷ்டிக்கப்பட வேண்டும்.
நடுவாந்தரத்தில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைக்கார ராஜ்யம் ஏற்பட்டு இங்கே இங்கிலீஷ்காரர்களின் வழக்கங்கள் புகுந்தபின்தான் நல்ல வைதிக ஆசாரத்துடன் இருப்பவர்களுக்கும் பொது ஸமூஹ ஸேவைக்கும் ஒரு பிரிவினை மாதிரி ஏற்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முந்தியெல்லாம் பரமசிஷ்டர்களும் கூட ஸகல ஸமூஹத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். அப்பைய தீக்ஷிதர், கோவிந்த தீக்ஷிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் சேரி ஜனங்கள் உள்பட எல்லாருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது.
லோக க்ஷேமார்த்தம் தொழில்களைப் பாரம்பரியமாகப் பங்கீடு பண்ணிக்கொண்டு, அந்தந்தத் தொழிலைப் பொருத்து அநுஷ்டானங்களும் ஆசாரங்களும் ஏற்படுவதால், இவற்றில் குழறுபடி உண்டாகி லோக க்ஷேமம் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பிரிந்து வாழ்ந்தாலும்கூட, பரோபகாரத்துக்கு அப்போது குறைச்சலே இருக்கவில்லை. இப்போது ''ஸோஷியல் ஸர்வீஸ்'' என்று பேச்சில் ரொம்பவும் அடிப்பட்டு, நியூஸ் பேப்பரில் ஃபோட்டோக்கள் போடுவதுபோல் அப்போது செய்யாவிட்டாலும், வாஸ்தவமான ஸமூஹ ஸேவை அப்போது ஸ்வபாவமாகவே செய்யப்பட்டு வந்தது.
வெள்ளைக்காரர்களோடு town- life (நகர வாழ்க்கை) என்று ஒன்று வந்து நம் ஆசாரங்களுக்கெல்லாமே ஹானியாக எல்லாரையும் போட்டுப் பலபட்டையாகக் குழப்புகிற நிலைமை ஏற்ப்பட்டபின் ரொம்பவும் ஆசார சீலர்கள் இந்தப் படையெடுப்புக்குப் பயந்து ஸமூஹத்திலிருந்தே ஒதுங்கிப் போன மாதிரி விலக வேண்டி வந்தது. அதனால்தான் சாஸ்திரோக்தமாக இருக்கிறவர்களுக்குப் பொதுத்தொண்டு மனப்பான்மை இல்லாதமாதிரி ஏற்பட்டுவிட்டது.
ரொம்பவும் கலந்து போகவும் கூடாது; ஒரேயடியாகப் பிரிந்தும் இருக்கக்கூடாது; அவரவரின் ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; ஆனால் மனஸிலே ஒன்று சேர்ந்து அனைவரும் 'அரன் குடிமக்களாக' ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும் என்ற உத்க்ருஷ்டமான ஏற்பாடு இதற்கப்புறம் வீணாய்ப் போக ஆரம்பித்து விட்டது.
ஒரு பக்கம் சீர்திருத்தக்காரர்கள்ஆசார அநுஷ்டானங்களையே கண்டனம் செய்தார்களென்றால், இன்னொரு பக்கம் ஆசாரக்காரர்களும் இந்த ஸமத்வம் என்கிற குழப்படிக்கு பயந்து ஒதுங்கி ஒதுங்கித் தனியாகப் போனதால், அவர்களுக்குப் பொதுவான ஸமூஹ உணர்ச்சியே குறைந்து பொதுத் தொண்டிலிருந்து விலகி விலகிப் போக ஆரம்பித்து விட்டார்கள். இப்படி ரொம்பவும் விலகிப் போகிறபோது மனஸில் அன்பு, ஐக்கிய பாவம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதனால்தான் ஒருவேளை இப்போது ஆசாரக்காரர்கள் என்றாலே மநுஷாபிமானம் இல்லாமல் வறண்டு போனவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் நம் ஸநாதன தர்மத்தை உள்ளபடி பின்பற்றுவதானால் அதற்கு ஸம்ஸ்காரங்கள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் ஆத்மகுண அபிவிருத்தியும் அப்படிப்பட்ட குணங்களில் முதலில் அருளுடைமையைத்தான் சொல்லியிருக்கிறது.
No comments:
Post a Comment