Sunday, 12 May 2013

' இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - (பகுதி 1 - ஆவி பிரியும் காலத்தில்)



உயிர் போனபிறகு உடம்புக்குப் பண்ண வேண்டிய கார்யத்தைச் சொன்னேன். உயிர் போகிற சமயத்தில் செய்யவேண்டிய பணி ஒன்றும் இருக்கிறது. இதைவிட ஒரு ஜீவனுக்குச் செய்யக்கூடிய பெரிய பரோபகாரம் எதுவுமில்லை. அது என்ன?

க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், ''உடம்பு போனாலும் ஆத்மா சாகிறதில்லை. அதனால் ஒரு பெரிய தர்மத்தை உத்தேசித்து நீ யுத்தம் பண்ணவேண்டிய கடமை, ஸ்வதர்மம் இருக்கிறபோது, 'பந்துமித்ரர்களைக் கொல்லமாட்டேன்' என்று பின் வாங்குவது ஸரியில்லை'' என்று உபதேசம் பண்ணினார். அந்த உபதேசந்தான் பகவத்கீதை. 

ஸரி, ஆத்மா செத்துப்போகவில்லை. உடம்பு போன பிறகு அது என்ன ஆகிறது? எல்லா உ.யிர்களும் உடனே பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறதா? க்ருஷ்ண பரமாத்மா அப்படிச் சொல்லவில்லை. அந்த உயிர் அதன் கர்மத்தைப் பொறுத்து இன்னோர் உடம்பில் புனர்ஜன்மம் எடுக்கிறது என்றுதான் சொல்கிறார். 'மஹா புண்யசாலிகள் ஸ்வர்க்கத்துக்குப் போய்ப் புண்யப்பலனை அநுபவித்து விட்டு, அது தீர்ந்ததும் மறுபடியும் இந்த பூமியிலேயே மநுஷ்யர்களாகப் பிறக்கிறார்கள் (9.21) ; த்வேஷமும், க்ரூரமும் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன்' (16.19) என்றெல்லாம் சொல்கிறார். அப்படியானால் இந்த ஜனன மரண சக்கரத்திலிருந்து மீட்சியே இல்லையா? இருக்கிறது. அதையும் சொல்கிறார்.

பக்தி யோகத்தாலோ ஞான யோகத்தாலோ தன்னை உபாஸிப்பவர்களை மறுபடி இந்த லோகத்துக்குத் தள்ளாமல் பரமாத்மாவான தன்னிடமே அடக்கம் பண்ணிக்கொண்டு விடுவதாக பகவான் சொல்கிறார். பக்தன் ஞானியாகிவிட்டால் செத்துப்போன அப்புறம்தான் பரமாத்மாவிடம் ஐக்யமாகவேண்டும் என்றில்லை. அவன் இந்த லோகத்தில் இருக்கிற மாதிரி பிறத்தியாருக்குத் தோன்றும்போதே மோக்ஷத்தில்தான் இருந்து கொண்டிருப்பான். ஸகல துக்கங்களிலிருந்தும் விடுபட்ட ஸதானந்த நிலைதான் மோக்ஷம். இப்படி பக்தியோகம், ஞானயோகம் அப்யாஸம் பண்ணுவதற்கு பகவான் அத்யாயம் அத்யாயமாக வழி சொல்லிக் கொடுத்துக்கொண்டே போகிறார். ஆனால் இந்தமாதிரிப் பண்ணி ஜயித்து மீளுகிறவன் எங்கேயாவது கோடியில் ஒருத்தன்தான் இருப்பான். இதையும் அவரே சொல்கிறார். 'மநுஷ்யர்களில் ஆயிரத்தில் ஒருத்தன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்' என்கிறார் (7.3) .

இப்படியானால் என்ன பண்ணுவது? எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழி இருக்கிறதே, அந்தமாதிரி ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு short-cut இல்லையா?

ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார் 'ஒருத்தன் செத்துப்போகிற ஸமயத்தில் எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ, அதையே மறுஜன்மாவில் அடைகிறான். என்னையே ஸ்மரித்துக்கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை அடைந்துவிடுகிறான்' என்று சொல்லி '' நாஸ்தி அத்ர ஸம்சய :'' - ''இதில் ஸந்தேஹமே இல்லை'' என்று 'காரன்டி'கொடுத்திருக்கிறார்!

'ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும், அந்திம ஸமயத்தில் மட்டும பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே! அதனாலேயே இந்த ஜனன-மரணச் சக்கரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியுமாமே!' என்று தோன்றுகிறது.

ஆனால் பகவான் இங்கே 'பொடி' வைத்துப் பேசுகிறார். 'கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு' என்பதற்கு ' அந்தகாலே மாம் ஸ்மரன் ' என்று சொன்னால் போதும். ஆனால் பகவான் அப்படிச் சொல்லவில்லை. 'அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்' என்று ஒரு ' ச ' வும் ' ஏவ ' வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார்! இந்த ' ச ' வுக்கும் ' ஏவ ' வுக்கும் என்ன அர்த்தம்?'அந்த காலே ' ச ' என்றால் 'சாகிற ஸமயத்திலும்' என்று அர்த்தம். 'மாம் ' ஏவ ' என்றால் 'என்னை' என்று மட்டும் அர்த்தமில்லை; 'என்னை மட்டுமே' என்று அர்த்தம்.

அவரை மட்டுமே அந்திமத்திலும் 'ஸ்டெடி'யாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் மோக்ஷம். நம் மனஸ் லகான் இல்லாத குதிரையாக ஓடுகிற ஓட்டம் நமக்குத் தெரியும். ஏதோ இந்த க்ஷணம் அது அப்படியே பரமாத்மாவிலேயே தோய்ந்து விட்டாற்போல இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணமே அது பிய்த்துக் கொண்டு ஏதாவது குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். நமக்கே ஆச்சர்யமாக, தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் - 'அவ்வளவு நல்ல சாந்த நிலையில் இருந்தோமே; இது எப்படி அங்கேயிருந்து அறுத்துக்கொண்டு கிளம்பிற்று? என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்களே, அதுமாதிரி, ஒரு ஸெகண்டில் வீசம் பாகங்கூட இந்த மனஸ் ஒன்றில் நிலைத்து நிற்க மாட்டேன் என்கிறது. எனவே, 'மாம் ஏவ ஸ்மரன்'- பகவானை மாத்திரமே நினைப்பது - என்பது ரொம்பக் கஷ்டம்தான்.

சாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும். அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவோடு, இந்த க்ஷணம் உயிர் போகிறது என்றால்கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது ஐகாக்ரியத்தோடு (ஒரு முகமான சிந்தனையோடு) பகவானை மட்டுமே நினைக்க வேண்டும். அப்படி ஒரே க்ஷணத்தில் ப்ராணன் போய்விட்டால் நல்லது. பகவானை விட்டு ஸ்மரணை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம். ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே! குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது அத்தனை நாழி -அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக்கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா? 'எலக்ட்ரிக் ஷாக்' மாதிரி அடித்து உடனே சாவு instantaneous வருகிறது என்றால், அந்த 'இன்ஸ்டன்ட்'டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே! வராவிட்டால்? பயம் வரக்கூடாதே! அல்லது, அப்படியே உணர்ச்சி மரத்துப்போய் ப்ரக்ஞையில்லாமலும் சாகக்கூடாதே!

உடனே ப்ராணண் போகாமல் எந்த க்ஷணமும் போகலாம் என்று அது பாட்டுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டிருந்தால், அத்தனை நாழியும் (அது நாள் கணக்கில் கூட இருக்கலாம்) பகவானையே நினைத்தாக வேண்டும்; அல்லது நினைக்கிறதற்குக்கூட அவகாசம் தராத விதத்தில் மஹா பீதியையே துளியூண்டு நாழிகைக்குள் தருகிற விதத்தில் - எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அடித்துச் சாவதானாலும், அந்த fraction of a second -லும் பகவத் ஸ்மரணை பூர்ணமாக ரொம்பிக்கொண்டு வந்து நிற்க வேண்டும்.

இது தானாக, அந்த ப்ராணாவஸ்தை ஸமயத்தில் கைகூடுகிற விஷயமா? இல்லை. அதனாலேதான் 'அந்த காலே ச' என்று ஒரு 'ச' போட்டார். இதைப்பற்றி மேலேயும் சொல்கிறார்.

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் ''போ, போ'' என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான - 'ஏகம் ஸத்'தான - பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை 'வா, வா' என்று-சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டால் அது இருந்து இடம் தெரியாமல் போகிறது.

கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும் மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

ஆனாலும் அந்திமத்தில் நினைப்பதற்கு ஏன் இந்த முக்யத்வம்? இப்படி அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் நான் இங்கே எடுத்துக்கொண்ட பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

'மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன? இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது' என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். 'இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கிடையாதா?' என்று கேட்டால், 'ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்திபண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக்கொள்ள வேண்டாம்' என்கிறார்.

'சாவு ஒன்றும் பெரிய விஷயமில்லை; சட்டை கிழிகிற மாதிரிதான்' என்று சொல்லிவிட்டு, 'சாகிற ஸமயத்தில் என்னை நினைத்தால் என்னிடமே வந்து அடுத்த ஜன்மா இல்லாமல் ஆக்கிக் கொள்ளலாம்' என்று சொன்னால், சாவு ஒரு பெரிய விஷயம் மாதிரிதானே இருக்கிறது? அந்த ஸமயத்தில் நினைப்பதற்கு என்ன இத்தனை முக்யத்வம்!                  (தொடர்ச்சி பகுதி 2 ல்)

No comments:

Post a Comment