பரோபகாரத்தைப் பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தபோது, 'நம் எல்லோராலும் அஸ்வமேத யாகம் பண்ணமுடியுமா?'என்று ஒரு கேள்வி கேட்டேன். அப்புறம் 'எதற்காக அஸ்வமேதம்?'என்று கேட்டேன். '' ஹயமேத ஸமர்ச்சிதா '' - ''அஸ்வமேதத்தால் விசேஷமாக வழிபடப்படுபவள்''என்று அம்பாளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆன அம்பிகையின் பூர்ண அநுக்ரஹத்தைப் பெறுவதற்காகவே அஸ்வமேதம் செய்யவேண்டும் என்று பதில் சொன்னேன்.ஆனால் இந்தக் கலிகாலத்தில், ரொம்பவும் நியமங்கள் தேவைப்படும் அஸ்வமேதம் செய்வது அஸாத்யமாயிற்றே, இதற்கு என்ன பண்ணவது என்று கேட்டேன். பரோபகாரங்களில் ஒன்றை பண்ணினால் அதுவே அஸ்வமேதத்துக்கு ஸமானம் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது என்றும் ஆகையால் இந்தப் பரோபகாரத்தைப் பண்ணிவிட்டால் நாம் அம்பாளின் பூர்ணாநுக்ரஹத்தைப் பெற்றுவிட முடியும் என்று இதற்கு பதில் சொன்னேன். அப்புறம் பரோபகாரங்கள், ஜீவகாருண்யப் பணிகள் பலவற்றைப் பற்றிக் கதை அளந்துகொண்டே போனேன். ஆனால் இதுவரை அஸ்வமேதத்துக்கு ஸமமான பலனைத் தருகிற அந்த ஒரு பணியைச் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி என்னவென்றால் அதுதான் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம்.
அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அஸ்வமேத பலம் லபேத்
என்பது சாஸ்த்ர வசனம்.
பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம்.
டாக்டர் ஒருத்தர் கேட்டார், ''Uncl aim ed bodies ஆகச் சில அநாதைப் பிரேதங்கள் கிடைப்பதிலும் ஒரு உபகாரம் இருக்கிறது. இந்தமாதிரிப் பிணங்களைத்தான் நாங்கள் போஸ்ட்-மார்ட்டம் பண்ணி, பரிசோதனைக்காக உறுப்புக்களை எடுத்துக்கொள்ள முடிகிறது. மெடிகல் காலேஜ், மெடிகல் எக்ஸிபிஷன் முதலானவற்றில் anatomy (தேக இயல்) -ஐ விளக்க இந்தப் பிரேதங்கள்தான் உதவுகின்றன. இவற்றையும் உங்கள் ஜீவாத்ம கைங்கர்யக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டால் மெடிகல் லயன்ஸ் அபிவிருத்தி என்ன ஆவது?''என்று கேட்டார். அப்படியானால் டாக்டர்கள் வேண்டுமானால் தாங்கள் போன பிற்பாடு தங்கள் சரீரத்தைப் போஸ்ட் மார்டத்துக்குக் கொடுத்துவிடலாம் என்று பதில் சொன்னேன். சாஸ்த்ரோக்தமாக இதில் கொஞ்சம் தோஷமிருந்தாலும், இதிலே ஒருத்தன் மனமறிந்து, மனப்பூர்வமாகச் செய்கிற தியாகம் இருப்பதால் தோஷ நிவ்ருத்தி என்று வைத்துக்கொள்ளலாம். அதோடுகூட, முன்னே, அவனவன் தன் தொழிலில் ஏற்படுகிற தோஷம் போக அந்தத் தொழிலாலேயே தியாக ரூபமாக உதவி செய்ய வேண்டுமென்றேனே, அதில் மேலும் ஒருபடியாக, தொழிலால் பிறருக்கு உபகரித்து மட்டுமில்லாமல், சாவிலும் தன் தொழிலுக்கு மூலமான வித்யைக்கே உபகரித்ததாகவும் இது இருக்கும்.
'இதர மதஸ்தர்கள் ஜெயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்தெருவிலும் ஸம்பவிக்கும் அநாதை மரணங்களில் ஒன்றுகூட விட்டுப்போகாமல், தங்கள் தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் செய்கிறார்கள்;இப்படிப்பட்ட ஹிந்து ப்ரேதங்கள் மாத்திரம் பெரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாலேயே ஒருவிதமான சடங்கும் இல்லாமல் புதைக்கப்படுகின்றன'என்கிற பாபமும், அவமானமும் நம்மைச் சேராமலிருக்க இப்போதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக வேண்டும்.
தர்மத்தை நமக்கெல்லாம் நடத்திக்காட்ட வந்த ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியே இந்த ப்ரேத ஸம்ஸ்காரத்தை விசேஷமாகச் செய்து காட்டியிருக்கிறார். ஜடாயு மாதிரியான ஒரு பக்ஷிக்குக்கூட அவரே ஸம்ஸ்காரம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை, வாலியையும் பரம வைரியான ராவணனையுங்கூட அவர் வதைத்தவுடன் அங்கதனையும் விபீஷணனையும் கொண்டு அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் தஹனம் பண்ணச் செய்திருக்கிறார். ஏனென்றால் அந்த சரீரங்களுக்குள் இருந்த மனஸ்தான் அவற்றை துஷ்டத்தனமாக நடத்திற்று. உயிரோடுகூட அந்த மனஸ் வெளியேறிய அப்புறம் ஸ்வயமாகக் கெடுதல் இல்லாத, பகவானுடைய அத்புத ஸ்ருஷ்டியான அந்த உடம்புகளுக்கும் உரிய மரியாதையைச் செய்வதில் ராமரே கண்ணும் கருத்துமாக இருந்து, யதோக்தமாக ஸம்ஸ்காரம் பண்ணுவித்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மாவும் கௌரவர்கள் உள்பட எல்லாருக்கும் குருக்ஷேத்ரத்தில் அந்திம ஸம்ஸ்காரம் பண்ணுவித்து, அப்புறம் த்ருதராஷ்ட்ரனையும் பாண்டவர்களையும் கங்காதீரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் தர்ப்பணாதிகள் செய்வித்திருக்கிறார்.
ஆனதால், அநாதை ப்ரேத ஸம்ஸ்கார விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது நம்முடைய ஹிந்து ஸமூஹத்துக்கு உள்ள பெரிய தோஷம் - மன்னிக்க முடியாத தோஷம். இனிமேலாவது இதற்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.
அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், தீண்டாதவனாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, யதோக்தமாக ஸம்ஸ்காரம் செய்வதற்குப் பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். ஏகதேசமாகச் செய்ய சக்தியுள்ள தனிகர்கள் இதைப் பெரிய தர்மம் என்று புரிந்துகொண்டு விசேஷமாக உதவி செய்ய வேண்டும். அநேக தர்ம ஸ்தாபனங்கள், ட்ரஸ்ட்டுகள் நம் ஹிந்து ஸமூஹத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களும் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் உத்தமமான கைங்கர்யம் என்று 'ஸ்பெஷல் இன்டரெஸ்ட்'எடுத்துக்கொண்டு, இதற்காக தாராளமாகப் பொருளுதவி செய்ய வேண்டும்.
அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் விளக்கம் அருமை...
ReplyDeleteநன்றிகள் பல...
Thanks for your comments. The above information from MAHAPERIYAVAA's "Deivaththin Kural"
Delete