Monday, 6 May 2013

உற்றமும் சுற்றமும், எளிய வாழ்க்கை மற்றும் வைதிக முறைகள் வளர உபகாரம்

உற்றமும் சுற்றமும்

ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுப காரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுப கார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். 'பரோபகாரம்' என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், 'பந்துத்வ'த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.

அப்போது 'கிழவர் பராமரிப்பு இல்லம்'' விதவை விடுதி' என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்ததுதான். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தைப் பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா தாத்தா என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும்கூட வெறும் 'ஷோ'வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள் அல்லது பேப்ரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.

அவிபக்த குடும்பமுறை (Joint- family system ) போனபின் அண்ணன் தம்பி என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்-ஃபாமிலியாக இருக்கும்போது, தாயார்-தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான தூர பந்துக்கள் நாலைந்து பேரைக் கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் என்று போவதால் கூட ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப்போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.

முதலில் ஏழையான பந்துக்களைக் கவனிக்க வேண்டும். சுபாசுப கார்யங்களுக்கு நாம் செலவழித்துக்கொண்டு நேரில் போகவேண்டும் என்பது கூட இல்லை. இந்தச் செலவையும் சேர்த்து அந்த வசதி இல்லாத உறவுக்காரனுக்கு அனுப்பி வைத்தால் அவனுக்கு எத்தனையோ உதவியாக இருக்கும்.

கல்யாணத்தில் நாம் பண்ணுகிற ஆடம்பரங்களையெல்லாம், 'வேஸ்ட்'களையெல்லாம் குறைக்க வேண்டும். இப்போது ஒரு கல்யாணம் என்றால் அதற்கு அவச்யமான வைதிக தக்ஷிணைகளுக்குக் கொடுப்பதில்தான் சுஷ்கம் பிடிக்கிறோம்! பாட்டுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, நாயனம், பான்ட் ஊர்வலம் என்று வேண்டாத விஷயங்களுக்கு வாரிவிடுகிறோம்.

இது தேவைதானா என்று எல்லோரும் தீவிரமாக யோசித்தாலே போதும், தானாக வெட்டிச் செலவுகள் குறைந்து, பந்துக்களுக்கும், இயலாதவர்களுக்கும் நிறைய பரோபகாரம் செய்யும் மனசு தானா வந்துடும்.


எளிய வாழ்க்கை

'நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும்'என்று நினைப்பது உத்தமமான எண்ணம். ஆனால் எண்ணம் உத்தமமாயிருந்து விட்டால் போதுமா? நாம் டாம்பீகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? அப்படியே நடந்து, அமெரிக்கா மாதிரி எல்லாரும் 'லக்க்ஷ¨ரியஸாக' வாழ முடிந்தாலும் அது நல்லதுதானா? லௌகிகமான ஸெளக்யங்கள் ஜாஸ்தியாக ஆக, ஆத்மாபிவிருத்திக்கே வழியில்லாமல்தானே ஆகியிருக்கிறது.

எத்தனை போட்டாலும் த்ருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணுகிற நெருப்பு மாதிரித்தான் இந்த ஆசை என்பது. அது எவ்வளவு ஸெளகர்யம் இருந்தாலும் த்ருப்திப்படாமல் இன்னும் புதிசு புதிசாக ஸெளக்ய ஸாதனங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். அத்ருப்தி, குற்றங்கள் இத்யாதியைத்தான் அமெரிக்காவில் பார்க்கிறோம். ஸெளக்ய ஸாதனங்கள் என்று நினைக்கிறவைகளை விட்டால்தான் சாந்தி கிடைக்கும் என்று அங்கே புத்திசாலிகளாக இருக்கப்பட்டவர்கள் புரிந்துகொண்டுதான் த்யானம், யோகம், பஜனை என்று கிளம்பியிருக்கிறார்கள்.

மநுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு ப்ரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை, அபகாரம்தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்க்ஷேமம். ஆனதால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது?

நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அதாவது, 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழவேண்டும்' என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். 'ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழவேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்' என்று முதலில் தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு - இம்மாதிரியான அடிப்படை (basic) தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல் ஆசைக்குமேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழவேண்டும்.


வைதிக முறைகள் வளர உபகாரம்

கல்யாணம், உபநயனம் முதலியவற்றில் குறைவில்லாமல் தக்ஷிணை தருவது மட்டுமின்றிப் பொதுவாகவே வைதிகர்களுக்கு உபகாரம் செய்கிற எண்ணம் வளர வேண்டும். இது இல்லாததால்தான் அடுத்த தலைமுறைக்கு வைதிக கார்யம் செய்து வைக்கவே ஆள் கிடைக்காத மாதிரிச் செய்திருக்கிறோம். வேத ஸம்பந்தமான கார்யங்கள் லோகத்தில் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கும்படி பண்ணுவதைவிட ஜன ஸமூஹத்துக்குப் பெரிய பரோபகாரம் எதுவும் இல்லை. இப்போது விநோபா 'பூதான்' என்று சொல்வதற்கு முன்னோடி பழைய காலத்தில் ராஜாக்களும், பிரபுக்களும் வேத வித்துக்களுக்கு நிலம் மானியம் பண்ணினதுதான்.

பரம தரித்ரர்களும் சாஸ்தரப் பிரகாரம் சுபாசுபங்களைச் செய்ய நாம் உபகரிக்க வேண்டும். 'ஷோ' இல்லாமல் சாஸ்த்ரப்படி மட்டும் செய்வதற்கு நிறையச் செலவே இராது.

என் பரோபகார லிஸ்ட் நீண்டுக்கொண்டே வருகிறது. அதிலே ஒவ்வொரு 'லொகாலிடி'யிலும் பரம ஏழைகளும் சொற்ப வாடகையில் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம், ஒரு அபர காரிய ஸ்தலம் (உத்ர க்ரியைகள் செய்யுமிடம்) ஏற்படுத்துவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment