Thursday, 16 May 2013

40 - 50 வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இப்போதுபோல் நோய்நொடி எல்லாம் இல்லை.



ஏகப்பட்டதாகப் பரோபகாரங்களைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிறேன். பொதுவாகப் பரோபகாரம் என்றே நினைக்காத சில விஷயங்களைக்கூட இந்தப் பெரிய 'லிஸ்ட்'டில் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன்.

இம்மாதிரி இன்னொன்று அவனவனும்:தன் உடம்பையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே பெரிய பரோபகாரம்தான். துர்ப்பழக்கங்களால் ஒருத்தன் வியாதியை ஸம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ண முடியும்? இது மட்டுமில்லை. இவனுடைய வியாதி பிறத்தியாருக்குப் பரவக்கூடும். அதனால் நம் அஜாக்ரதையால், துர்ப்பழக்கத்தால் வியாதியை வரவழைத்துக்கொள்கிறபோது பர அபகாரமும் பண்ணிவிடுகிறோம். நம்மை மீறி வந்தால் அது வேறே விஷயம்.

இந்தக் காலத்தில் எல்லோரும் நோயும் நொடியுமாக அவஸ்தைப்படுகிற மாதிரி நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இல்லை. காரணம் என்னவென்றால் இப்போது அநேகருக்கு மனஸில் நெறியில்லாமல் இருப்பதும், அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான். '' சாஸ்த்ராய ச ஸுகாய ச '' என்பார்கள் - அதாவது சாஸ்த்ர ப்ரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் ஸெளக்யமாக, ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவது என்று அர்த்தம். இப்போது எச்சில் தீண்டல் பார்காததாலேயே அநேக வியாதிகள், தொத்து நோய்கள் பரவிக்கொண்டு வருகின்றன. இப்படி வியாதிக்குக் காரணமாயிருக்கிற அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறோம்!

சரீர வியாதிதான் தொத்துகிறது என்றில்லை. எண்ணங்களும் பிறத்தியாரை பாதிக்கவே செய்கின்றன. இப்போது ஸயன்ஸில்கூடச் சொல்கிறார்கள், 'மூளை எண்ணங்களாக வேலை செய்வதுகூட ஒரு எலெக்ட்ரிக் கரென்ட்தான்; சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறரையும் பாதிக்கிற தன்மை இருக்கிறது' என்று. அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதாலும் பிறரின் தேக மன ஆரோக்கயங்களுக்கு உபகாரம் பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகிறோம்.

நேராக மூளையை சுத்தப்படுத்திக் கொள்கிறேன் என்று உட்காருவதைவிட, நான் சொன்ன அநேக தினுஸான பரோபகாரங்களை - எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ நிறையச்செய்து கொண்டிருந்தாலே, தானாகச் சித்தம் சுத்தமாகிவிடும்.

பரோபகாரம் சித்தசுத்திக்கு உதவ வேண்டுமானால் அதற்கு உயிர்நிலை அஹங்காரம் என்பது லவலேசங்கூட இல்லாமல் தொண்டு செய்வதுதான். 'நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம்' என்ற நினைப்பை தலையெடுக்கவே விடக்கூடாது. கொஞ்சம் அப்படி நினைத்தாலும் அது உபகாரம் பண்ணுவதன் பலனை - சித்த சுத்தியை - சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். இரண்டாவது, (அதிலேயே இதுவும் அடக்கம்தான்) ப்ரதி ப்ரயோஜனத்தை துளிக்கூட எதிர்பார்க்கக்கூடாது. உபகாரம் செய்தால் நமக்கு ஸித்திக்கிற சித்த சுத்தியேதான் பெரிய ப்ரயோஜனம்.

அவரவரும் தம் நிலையில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல் இவைகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பரோபகாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யவேண்டும். உடம்பிலே எந்த அவயவத்துக்குத் துன்பம் வந்தாலும் கண் அழுகிறது அல்லவா? அதைப்போல், உலகத்தில் எங்கே, யாருக்குத் துன்பம் உண்டானாலும் நாம் மனம் கசிந்து, ஒவ்வொருவரும் நம்மாலான உதவியைச் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் பெருமைக்காகச் செய்வது எதுவும் இல்லை. பிறத்தியாரின் வற்புறுத்தலுக்காகவும் செய்ய வேண்டியதில்லை. லோகம் முழுக்க பகவத் ஸ்வரூபம் என்று மனஸில் வாங்கிக்கொண்டால், தன்னால், ஸ்வபாவமாக, பிறர் துயரத்தை நிவ்ருத்தி செய்வதில் ஈடுபடுவோம். இதிலே நமக்கு ச்ரமம் வந்தால்கூட, அது ச்ரமமாகவே தெரியாது. எத்தனை த்யாகம் செய்தாலும் அதுவே பரமானந்தமாக இருக்கும். இப்படி த்யாகம் பண்ணுவதற்கு எல்லையே இல்லை. உபகரிக்கப்பட்டவன் முகத்தில் மகிழ்ச்சி தவழப் பார்க்கிறோமே, அந்த ஆனந்தத்துக்கு எத்தனை த்யாகமும் ஈடாகாது என்றுதான் தோன்றும்.

2 comments:

  1. அந்தளவிற்கு ஃபாஷன் மனதை சீரழித்துள்ளது... கலிகாலம்... கலிகாலம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவிற்கு நன்றி :-)

      Delete