Monday, 25 April 2011

Sri Vidyaranya.- மகான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி - 3 ம் பகுதி



மகாலக்ஷ்மியின் பரமாநுகிரகத்தைப் பெற்ற இன்னொரு மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆச்சாரியார்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் அவருக்கு உண்டு. ஆனால், இது மட்டுமல்ல அவருடைய முழுப்பெருமை.


நாலு வேதங்களுக்கும் சேர்ந்து பாஷ்யம் பண்ணின மகாபுர்ஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்த்திரம், தர்ம சாஸ்த்திரம் (இது ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்),அர்த்த சாஸ்த்திரம், இலக்கியத்துறை என்றிப்படி எல்லாவற்றிற்கும் கிரந்தங்கள் உபகரித்தவர் அவர். அவருடைய பெயரே காரணப் பெயராக இருக்கிறது.  வித்யா - அரண்யர். அரண்யம் என்றால் காடு. ஒரு பெரிய காட்டில் பல தினுசான மரம், செடி, கொடிகளும் மண்டியிருக்கிற மாதிரி, விதையின் பல துறைகளும் அவரிடம் செழித்திருந்தன. 

இவரைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ மாட்டார்களோ ? ' ஹிஸ்டரி 'க்காரர் 'மிஸ்டெரி ' (அற்புத நிகழ்ச்சி) வந்தால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்றைக்கும் ஸயன்ஸுக்குப் பிடிபடாத அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். 

விஷயத்துக்கு வருவோம்...

பூர்வாசிரமத்தில் வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலக்ஷ்மியைக் குறித்துக் கடும் தவம் இருந்தார். இவருடைய சிரத்தையை மெச்சி மஹாலக்ஷ்மி பிரசன்னமானாள். ஆனால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். "இந்த ஜென்மாவில், உனக்கு திரவியம் பெறுகிற யோக்கியதை இல்லை. அது விதியின் நிர்ணயம். அடுத்த ஜன்மாவில் அநுக்கிரகிக்கிறேன்"   என்று கூறி அந்தர்த்தானமாகி விட்டாள்.

பிற்காலத்தில், ' இரண்டாவது சங்கரர்" என்கிற அளவுக்குப் பிரக்யாதி (பிரசிச்தி) பெறப் போகிறவர் இவர். அதற்கேற்றாற்போல்,  இப்போதே ஆதிசங்கரர் செய்த ஒரு 'சாமர்த்தியத்தை' இவரும் செய்து காட்டி விட்டார். அது என்ன சாமர்த்தியம்?

தாம் சந்நியாசம் வாங்கிக் கொள்வதற்கு அம்மாவின் அநுமதியைப் பெறுவதற்காக ஆதிசங்கரர் செய்த சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அம்மோவோடு குளிக்கப்போன பிரம்மச்சாரி சங்கரர் ஆற்றில் முதலையின் பிடிப்புக்கு வேண்டுமென்றே ஆளானார். தாயார்காரி பதறினாள். "அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள அநுமதி தந்தால் முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்று விட்டால் அது மறு ஜன்மம் போலாகும். இந்த ஜன்மாவில் முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்த ஜன்மாவில் அது என்னை பாதிக்காது" என்றார் சங்கரர். 

அதற்கு தர்மசங்கடமான நிலையில், பெற்ற தாயார் ஒருத்தி அனுமதி தராமலிருக்க முடியுமா? இவ்விதமாக ஆசார்யாள் சாமர்த்தியம் பண்ணி - தாயாரின் அங்கீகாரம் பெற்று - சந்நியாசியாவதாக அப்போதே சங்கற்பம் பண்ணிக் கொண்டார். உடனே முதலையும் அவரை விட்டு விட்டது. 

" இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை " என்று மஹாலக்ஷ்மி வித்யாரண்யரிடம் சொன்னவுடன், இவரும் அதே தந்திரத்தை (tactics) மேற்கொண்டார். அதாவது உடனே சந்நியாச ஆசிரமம் வாங்கிக்கொண்டுவிட்டார். 

"அம்மா" மறு ஜன்மம் வந்து விட்டது; இப்போது ஐசுவர்யத்தைக் கொடு" என்று லக்ஷ்மியிடம் சொன்னார் வித்யாரண்யர். 

அவளும் தன வாக்குப் பிரகாரம் ஸ்வர்ணத்தை வர்க்ஷித்துவிட்டாள்.

சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் தங்கமும், நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. 'அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்தல்லவோ போய்விட்டேன். வீட்டின் ஏழ்மை போவதற்காக தனம் யாசித்தேன். இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? சந்நியாசி பணத்தை நீண்டவே கூடாதே. சுயம்கிருத அனர்த்தமாக தானாகவே அசட்டுத்தனமாக உபத்திரவத்தை வேண்டி வாங்கி கொண்டிருக்கிறேனே ! விதிபிரகாரம் ஏழையாகவே வாழ்ந்து ஆயுளை விட்டிருந்தாலும், அடுத்த ஜன்மாவிலாவது இத்தனை ஐஸ்வர்யமும் பெற்று ராஜ போகமாக இருந்திருக்கலாமே ' என்று அழ ஆரம்பித்து விட்டார். 

வித்யாரண்யர் மட்டுமில்லை; நம்மில் ரொம்பப் பேர் இப்படித்தான் வேண்டாதற்கெல்லாம் ஸ்வாமியை வேண்டி கொண்டு, அவர் நம்மிஷ்டப்படி கிருபை செய்தபின் ' அட்ட, நம்மிஷ்டம் என்று ஏன் இருந்திருக்க வேண்டும்?  அவர் இஷ்டம் என்று விட்டிருக்ககூடாதா? இப்போது அறியாமையால் அனர்த்த பரம்பரையை அல்லவா வலிய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம்" என்று விசனிக்க வேண்டியதாகிறது. நமக்கு எது வேண்டும் என்று அவருக்கே தெரியும் என்று விடுவதுதான் புத்திசாலித்தனம் 

வித்யாரண்யர் மகா புத்திமானாதலால் விசனம் உடனே தெளிந்தது. ஒரு காரணமாகத்தான் அம்பாள் மஹாலக்ஷ்மி விளையாடிருக்கிறாள் என்று புரிந்து கொண்டார். 

மஹாலக்ஷ்மியின் அநுகிரகத்தால் கிடைத்த ஐசுவரியத்தை வைத்து 
வித்யாரண்ய என்ன செய்தார் என்பது சுவையான் வரலாற்று சம்பவம். 

அச்சமயத்தில், ஹிந்து கோயில்களை ஹதாஹதம் செய்து கொண்டிருந்த துர்க்கனான மாலிக்காபூரை வெற்றி கொள்ளவும், ஹரிஹரர்-புக்கர் என்ற அண்ணன் தம்பிகளைக்கொண்டு (கர்நாடக பெல்லாரி மாவட்டத்தில்) விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவவும், சிதறுண்ட ராஜ்ஜியங்களை ஒன்று சேர்க்கவும், ராஜ்யம் ஸ்திரப்பட்டபின்,   சனாதன் ஹிந்து தர்மத்துக்கு உற்சாகம் கொடுக்கவும், வைதீக சம்பிரதாயத்துக்கு புனர் ஜீவன் தரவும், வேதம், கோயில், தர்மம் எல்லாம் நிலைக்கவும், ஆதி சங்கர பகவத் பாதர்களின் அத்வைத சம்பிரதாயம் மறுபடியும் ஜொலிக்கவும்,  ஆந்திரா, கன்னட தேசங்களில் உள்ள பழைய சங்கர மடங்களை எல்லாம் உத்தாரணம் செய்யவும், விரோத ராஜ்ஜியங்களால் தீமை ஏற்பட்டால், காப்பாற்றிக்கொள்ள சஸ்திரமும், நம்மை நாமே கெடுத்துக் கொள்ளாமல் காப்பாற்றிக்கொள்ள சாஸ்திரமும் தேவையாய் இருக்க, வித்யாரண்யர் ராஜ்ய ஸ்தாபனத்தில் மறைமுகமாக சஸ்திரப் பிரயோகமும், ஸ்ரீ சங்கர மடங்களின் புனருத்தாரணத்தால், தானே நேராக சாஸ்திரப் பிரயோகமும் செய்து, ஹிந்து சமூகம் முழுவதையும் துர்க்கர்களிடமிருந்து காப்பாற்றி, கர்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று மார்க்கங்களுக்கும் உபகாரம் செய்த மஹான். அவர் செய்த இத்தனை ப்ரமோபகாரத்துக்கும் முதலில் ஊக்கச் சக்தி தந்தது, மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தால் அவர் பெற்ற நவநிதிதான். 

பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட, பணத்தை கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அநுகிரகம் செய்வாள். எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் (வாழ்க்கை) நடத்துவதற்கு மஹாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆதிசங்கரர், தேசிகர், வித்யாரண்யர் மாதிரி சொந்த நலத்துக்காக இல்லாமல், பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.

Friday, 22 April 2011

Vethantha Desikar - மகான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி - 2ம் பகுதி

" ஸ்ரீஸ்துதி " ஸ்தோத்திரம் உருவான் கதை. 
வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதான பொருளில் " நிகமாந்த மஹா தேசிகன் " என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரை  சொல்வார்கள். ' நிகமாந்த ' என்றாலும் ' வேதாந்த ' என்றாலும் ஒன்றுதான்.  "ஸர்வதந்திர ஸ்வதந்திரர் " என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு.  குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சம்.  வடகலை சம்பிரதாயத்துக்கு மூலபுருஷர் அவர். 

தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிஷை எடுத்துத்தான் ஜீவித்து வந்தார். 

பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள். 

ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். "ஸர்வதந்திர ஸ்வதந்திரர் " என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்ககூடியவராக இருக்க வேண்டும்.  இந்த தேசிகன் அப்படி எதையும் சாதித்து விட முடியாது என்று நிரூபித்து விடவேண்டும். "ஸர்வதந்திர ஸ்வதந்திரப்பட்டம் அவருக்கப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி, மானபங்கப் படுத்த வேண்டும் " என்று அவருடைய விரோதிகள் நினைத்து ஒரு சூழ்ச்சி செய்தார்கள். 

பரம ஏழையான ஓர் அசட்டு பிராமணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகனின் விரோதிகள் இந்தத் தடிமண்டுப் பிரம்மசாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். 

" இந்தப் பையன் போய் அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிராத்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக்கூடாது.  ' ஸர்வதந்திர ஸ்வதந்திர ' என்றால், அவராகவே எப்படியோ இவனுக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும்.  வரால் ப்படிச் செய்ய முடியாது. உடனே, ' எப்படி ஐயா பெரிய பட்டத்தை  வைத்துக் கொள்ளலாம்? ' என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் " என்று திட்டம் போட்டார்கள். 

அந்தப் பிரகாரமே ஏழைப்பையனை அவர்கள் ஏவினார்கள்.  ஸ்ரீதேசிகனிடம் ஏழைப்பிரம்மசாரி போய்த் தன கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான். 

(எழுநூறு வரூஷத்திய முந்தைய காலம் அது. பிள்ளை வீட்டுக்காரன், பெண் வீட்டுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிகொண்டதாகவும் வரதஷிணை வாங்குகிற வழக்கம் இல்லை என்பதாகவும் நிரூபணம் ஆகிறது )

வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். மஹாலக்ஷ்மியை மனமுருக வேண்டி, ஒரு 'ஸ்துதி'  செய்தார். அதுவே, உத்தமமான "ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம் ".  உடனே பொன் மழை பொழிந்தது. 

அதை பிரம்மசாரிக்கு கொடுத்தார்.  விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப்  பெருமை உண்டாயிற்று.

(இந்த " ஸ்ரீஸ்துதி " ஸ்தோத்திரத்தைதான், இன்றும் வைணவர்களால் , செய்யப்படுவதுடன்,  லக்ஷ்மி குபேர பூஜையும் தனியாக செய்வதும் உண்டு.... Lakshmi Kuber Pooja  என்ற link ஐ click  பண்ணினால் லக்ஷ்மி குபேர பூஜையை காணலாம். )


வடமொழியில் இருக்கும் ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரத்தின்முதல் சுலோகம் இது. (Sanskrit Font என்னிடம் இல்லை. அதனால், தமிழில் உச்சரிப்பை தட்டெழுத்து செய்வது இயலாததால்  இங்கு ஆங்கிலத்தில் தந்துள்ளேன்.) 

MaanAtheetha praTitha vibhavAm MangaLam MangaLAnAm 
Vaksha: peeDeem MadhuvijayinO bhUshayantheem svakAnthyA 
prathyakshAnuSravika-mahima prArTithineenAm  prajAnAm 
SrEyO mUrthim Sriyam aSaraNa: ThvAm SaraNyAm prapadhyE

(  Meaning: 
AdiyEn performs Prapatthi to MahA Lakshmi (the refuge for all the beings of the 
world / SarvalOka SaraNyai) as one, who has no other refuge. She is the Mistress of 
the widely spread and limitless  Iswaryam (wealth). She is the 
MangaLam (Auspiciousness) of all MangaLa vasthus and Tatthvams. She is the 
embodiment of all MangaLams. She adorns  the chest of Her Lord with Her divine 
and incomparable JyOthi. She is the Vara Lakshmi (boon-granting Lakshmi) for all, 
who are eager to gain Her anugraham both in this and the other world.  )

மேலே உள்ளது முதல் சுலோகம்... இப்படி 25 ஸ்லோகங்கள் போகின்றன....
மேலும் கேட்க பிரியப்படுபவர்கள், கீழ் உள்ள link ஐ click பண்ணவும்.

Sri Sthuthi

Thursday, 21 April 2011

Adhi Sankarar - மகான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி - 1 ம் பகுதி

கனகதாரா ஸ்தோத்ரம் உருவான கதை
ஆதிசங்கரர் சந்நியாசம் வாங்கிக்கொள்வதற்கு முன், பால தசையில்,  காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து, வீடு வீடாகப் போய் பிஷை வாங்கி வந்த சமயம்,  ஒரு துவாதசியன்று, பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிஷைக்காகப் போனார். அன்று அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவே போனார் போலிருக்கிறது !

இவர் போனபோது, அந்த வீட்டின் உஞ்சவர்த்திப் பிராம்மணன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், "அடடா, எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி ! இவருக்குப் பிஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்" என்று நினைத்தாள். 

ஆனால், பிஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடிதேடிப் பார்த்ததில், ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப்பாரணைக்காக அவள் புருஷன் ' சேமித்து ' வைத்திருந்த நெல்லி !

' போயும் போயும் இதையா அந்த தெய்வக் குழந்தைக்குப் போடுவது ? '  என்று ரொம்பவும்  மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால், "பவதி பிஷாம் தேஹி" என்று கேட்டு விட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அனுப்பக்கூடாது என்பதால், வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்து, சொல்ல முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள்.

உள்ளே வந்த அவள்,  `ஐயோ, இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா? ' என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி கையைப் பிசைந்து கொண்டு, வாசலுக்கும், உள்ளுக்குமாகத் தவித்து, தவித்து நடமாடிவிட்டு கடைசியில், `அழுகலோ மட்டமோ?  நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்? " என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்காயை ஆசாரியளுக்குப் போட்டாள். 

பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் பாலச் சிறுவனான அந்த ஆச்சாரியாள் கண்டு, அவர் மனசு அவளுக்காக உருகிற்று. 

அம்பாளாகிய மஹாலஷ்மியைத் துதித்து,  ஸ்தோத்ரம் ஒன்றை மனம் உருக பாடினார்.  இவ்வாறு மஹாலஷ்மியை நினைத்து துதிக்கிறபோது, ஆகாசத்திளிருந்து அசரீரி கேட்டது.  "இந்த ஏழை பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். (தரித்திரம்-என்ற ஏழ்மைத்தனம் ) பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தை தருவதற்கில்லை" என்றது அந்த அசரீரி. 

உடனே ஆசார்யாள், "இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷயமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டுருக்காளே. இந்த அன்பும் தியானமும் எத்தனை புண்ணியமானவை !  சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே !" என்றார். 

"அம்மா, மஹாலஷ்மி ! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய இருக்கிறதே ! அதனால், ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா" என்று லக்ஷிமியை பிரார்த்தித்தார். 

லக்ஷிமியிடம் இவர் இப்படி ஏழை பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு "கனகதாரா ஸ்தவ"த்திலேயே உட்சான்று இருக்கிறது.  "தத்யாத் த்யாநுபவனோ" என்கிற ஸ்லோகத்தில் இது வெளியாகிறது. 

"சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி இவர்களைத்  தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும்,  உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா ?  அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக்கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையை பொழியம்மா  !" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.

இப்படி அவர் ஸ்தோத்திரத்தை பாடி முடித்ததும், மஹாலக்ஷிமிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீடு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்த விட்டாள்.

இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்திற்கு "கனகதாரா ஸ்தவம்" என்கிற பெயரே உண்டாயிற்று.  `கனகதாரா ' என்றால் `பொன்மழை ' என்று அர்த்தம். `ஸ்தவம் ' என்றாலும் `ஸ்துதி ' என்றாலும் ஒன்றேதான். 

இந்த ஸ்துதிக்கு (ஸ்தோத்திரத்திற்கு) ஒரு விசேஷம் என்னவென்றால், ஆதிசங்கரர் முதன் முதலாக செய்த ஸ்துதி இதுதான். அவரின் அன்பு, அந்த ஏழை பத்தினியின் அன்பு, மகாலக்ஷிமியின் அன்பு என்ற மூன்றும் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாக காலக்ஷேபம் (வாழ்க்கை) நடத்துவத்ற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.


கீழே உள்ள link ஐ click பண்ணினால், கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கலாம்.

Very Rare Photos of Mahaperiyavaa


ஸ்ரீகாளஹஸ்தி தல வரலாறு

  
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்த முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. 

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்கு பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம்போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இருந்தது.


சிலந்தி கதை :
 இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது. 

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதேபோன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். 


இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். 

பிரம்மனின் படைப்பு : ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள்.

சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.


கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது. 


காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.
 
வாயு தலம் : 
கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.


தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு(காற்று)வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.


அமைவிடம் :
 ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் வரும் பக்தர்கள் 3 அல்லது 3-1/2 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம்.



தோஷங்கள் விலக பரிகார பூஜை : ஸ்ரீகாளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு-கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

தரை மட்டமான ராஜ கோபுரம்: இத்தகைய புராதன பெருமை வாய்ந்த பஞ்ச பூத சிவத் தளமான இத்திருத்தலத்தின் ராஜகோபுரம், கிருஷ்ண தேவராயர் மன்னரால் கி.பி.1510 ல் மிக கம்பீரமாக கட்டப்
பட்டதாக வரலாறு கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன, 
ஏற்பட்டவிரிசலை கண்டு கொள்ளவில்லை பின், திடீரென
கோபுரத்தின்  இடதுபுறம் முதல் நிலையிலிருந்து, ஆறாம் 
நிலை வரை,  இரண்டாகப் பிளவு பட்டதுபோல் காணப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் நள்ளிரவு 
புகழ் மிக்க இந்த ராஜகோபுரம் தரை மட்டமானது, ஆன்மிக 
பக்தர்களுக்கு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. கிருஷ்ணதேவராயர் சிலை மட்டும் அப்படியே எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதை மேலுள்ள படத்தில் காணலாம்.

முன்னைப்போல் மீண்டும் கம்பீரமாக காட்சிஅளிக்கும் விதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற செய்தி ஆன்மிக பக்தர்களுக்குஆறுதல் தருகிறது/