Monday 25 April 2011

Sri Vidyaranya.- மகான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி - 3 ம் பகுதி



மகாலக்ஷ்மியின் பரமாநுகிரகத்தைப் பெற்ற இன்னொரு மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆச்சாரியார்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் அவருக்கு உண்டு. ஆனால், இது மட்டுமல்ல அவருடைய முழுப்பெருமை.


நாலு வேதங்களுக்கும் சேர்ந்து பாஷ்யம் பண்ணின மகாபுர்ஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்த்திரம், தர்ம சாஸ்த்திரம் (இது ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்),அர்த்த சாஸ்த்திரம், இலக்கியத்துறை என்றிப்படி எல்லாவற்றிற்கும் கிரந்தங்கள் உபகரித்தவர் அவர். அவருடைய பெயரே காரணப் பெயராக இருக்கிறது.  வித்யா - அரண்யர். அரண்யம் என்றால் காடு. ஒரு பெரிய காட்டில் பல தினுசான மரம், செடி, கொடிகளும் மண்டியிருக்கிற மாதிரி, விதையின் பல துறைகளும் அவரிடம் செழித்திருந்தன. 

இவரைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ மாட்டார்களோ ? ' ஹிஸ்டரி 'க்காரர் 'மிஸ்டெரி ' (அற்புத நிகழ்ச்சி) வந்தால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்றைக்கும் ஸயன்ஸுக்குப் பிடிபடாத அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். 

விஷயத்துக்கு வருவோம்...

பூர்வாசிரமத்தில் வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலக்ஷ்மியைக் குறித்துக் கடும் தவம் இருந்தார். இவருடைய சிரத்தையை மெச்சி மஹாலக்ஷ்மி பிரசன்னமானாள். ஆனால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். "இந்த ஜென்மாவில், உனக்கு திரவியம் பெறுகிற யோக்கியதை இல்லை. அது விதியின் நிர்ணயம். அடுத்த ஜன்மாவில் அநுக்கிரகிக்கிறேன்"   என்று கூறி அந்தர்த்தானமாகி விட்டாள்.

பிற்காலத்தில், ' இரண்டாவது சங்கரர்" என்கிற அளவுக்குப் பிரக்யாதி (பிரசிச்தி) பெறப் போகிறவர் இவர். அதற்கேற்றாற்போல்,  இப்போதே ஆதிசங்கரர் செய்த ஒரு 'சாமர்த்தியத்தை' இவரும் செய்து காட்டி விட்டார். அது என்ன சாமர்த்தியம்?

தாம் சந்நியாசம் வாங்கிக் கொள்வதற்கு அம்மாவின் அநுமதியைப் பெறுவதற்காக ஆதிசங்கரர் செய்த சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அம்மோவோடு குளிக்கப்போன பிரம்மச்சாரி சங்கரர் ஆற்றில் முதலையின் பிடிப்புக்கு வேண்டுமென்றே ஆளானார். தாயார்காரி பதறினாள். "அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள அநுமதி தந்தால் முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்று விட்டால் அது மறு ஜன்மம் போலாகும். இந்த ஜன்மாவில் முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்த ஜன்மாவில் அது என்னை பாதிக்காது" என்றார் சங்கரர். 

அதற்கு தர்மசங்கடமான நிலையில், பெற்ற தாயார் ஒருத்தி அனுமதி தராமலிருக்க முடியுமா? இவ்விதமாக ஆசார்யாள் சாமர்த்தியம் பண்ணி - தாயாரின் அங்கீகாரம் பெற்று - சந்நியாசியாவதாக அப்போதே சங்கற்பம் பண்ணிக் கொண்டார். உடனே முதலையும் அவரை விட்டு விட்டது. 

" இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை " என்று மஹாலக்ஷ்மி வித்யாரண்யரிடம் சொன்னவுடன், இவரும் அதே தந்திரத்தை (tactics) மேற்கொண்டார். அதாவது உடனே சந்நியாச ஆசிரமம் வாங்கிக்கொண்டுவிட்டார். 

"அம்மா" மறு ஜன்மம் வந்து விட்டது; இப்போது ஐசுவர்யத்தைக் கொடு" என்று லக்ஷ்மியிடம் சொன்னார் வித்யாரண்யர். 

அவளும் தன வாக்குப் பிரகாரம் ஸ்வர்ணத்தை வர்க்ஷித்துவிட்டாள்.

சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் தங்கமும், நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. 'அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்தல்லவோ போய்விட்டேன். வீட்டின் ஏழ்மை போவதற்காக தனம் யாசித்தேன். இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? சந்நியாசி பணத்தை நீண்டவே கூடாதே. சுயம்கிருத அனர்த்தமாக தானாகவே அசட்டுத்தனமாக உபத்திரவத்தை வேண்டி வாங்கி கொண்டிருக்கிறேனே ! விதிபிரகாரம் ஏழையாகவே வாழ்ந்து ஆயுளை விட்டிருந்தாலும், அடுத்த ஜன்மாவிலாவது இத்தனை ஐஸ்வர்யமும் பெற்று ராஜ போகமாக இருந்திருக்கலாமே ' என்று அழ ஆரம்பித்து விட்டார். 

வித்யாரண்யர் மட்டுமில்லை; நம்மில் ரொம்பப் பேர் இப்படித்தான் வேண்டாதற்கெல்லாம் ஸ்வாமியை வேண்டி கொண்டு, அவர் நம்மிஷ்டப்படி கிருபை செய்தபின் ' அட்ட, நம்மிஷ்டம் என்று ஏன் இருந்திருக்க வேண்டும்?  அவர் இஷ்டம் என்று விட்டிருக்ககூடாதா? இப்போது அறியாமையால் அனர்த்த பரம்பரையை அல்லவா வலிய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம்" என்று விசனிக்க வேண்டியதாகிறது. நமக்கு எது வேண்டும் என்று அவருக்கே தெரியும் என்று விடுவதுதான் புத்திசாலித்தனம் 

வித்யாரண்யர் மகா புத்திமானாதலால் விசனம் உடனே தெளிந்தது. ஒரு காரணமாகத்தான் அம்பாள் மஹாலக்ஷ்மி விளையாடிருக்கிறாள் என்று புரிந்து கொண்டார். 

மஹாலக்ஷ்மியின் அநுகிரகத்தால் கிடைத்த ஐசுவரியத்தை வைத்து 
வித்யாரண்ய என்ன செய்தார் என்பது சுவையான் வரலாற்று சம்பவம். 

அச்சமயத்தில், ஹிந்து கோயில்களை ஹதாஹதம் செய்து கொண்டிருந்த துர்க்கனான மாலிக்காபூரை வெற்றி கொள்ளவும், ஹரிஹரர்-புக்கர் என்ற அண்ணன் தம்பிகளைக்கொண்டு (கர்நாடக பெல்லாரி மாவட்டத்தில்) விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவவும், சிதறுண்ட ராஜ்ஜியங்களை ஒன்று சேர்க்கவும், ராஜ்யம் ஸ்திரப்பட்டபின்,   சனாதன் ஹிந்து தர்மத்துக்கு உற்சாகம் கொடுக்கவும், வைதீக சம்பிரதாயத்துக்கு புனர் ஜீவன் தரவும், வேதம், கோயில், தர்மம் எல்லாம் நிலைக்கவும், ஆதி சங்கர பகவத் பாதர்களின் அத்வைத சம்பிரதாயம் மறுபடியும் ஜொலிக்கவும்,  ஆந்திரா, கன்னட தேசங்களில் உள்ள பழைய சங்கர மடங்களை எல்லாம் உத்தாரணம் செய்யவும், விரோத ராஜ்ஜியங்களால் தீமை ஏற்பட்டால், காப்பாற்றிக்கொள்ள சஸ்திரமும், நம்மை நாமே கெடுத்துக் கொள்ளாமல் காப்பாற்றிக்கொள்ள சாஸ்திரமும் தேவையாய் இருக்க, வித்யாரண்யர் ராஜ்ய ஸ்தாபனத்தில் மறைமுகமாக சஸ்திரப் பிரயோகமும், ஸ்ரீ சங்கர மடங்களின் புனருத்தாரணத்தால், தானே நேராக சாஸ்திரப் பிரயோகமும் செய்து, ஹிந்து சமூகம் முழுவதையும் துர்க்கர்களிடமிருந்து காப்பாற்றி, கர்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று மார்க்கங்களுக்கும் உபகாரம் செய்த மஹான். அவர் செய்த இத்தனை ப்ரமோபகாரத்துக்கும் முதலில் ஊக்கச் சக்தி தந்தது, மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தால் அவர் பெற்ற நவநிதிதான். 

பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட, பணத்தை கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அநுகிரகம் செய்வாள். எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் (வாழ்க்கை) நடத்துவதற்கு மஹாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆதிசங்கரர், தேசிகர், வித்யாரண்யர் மாதிரி சொந்த நலத்துக்காக இல்லாமல், பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.

No comments:

Post a Comment