Monday, 25 July 2011

கருணை தெய்வம் காஞ்சி மகான் 2





மகா பெரியவர் மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது.  அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது. அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மகா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.
1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன். ஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.
பின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.
‘நுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது!’ என்றார் முதன்மை மருத்துவர்.
விஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், ‘சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்!’ என்றார். அதன்பின், சென்னை- அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர். அவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.
‘இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்!’ என்றார்.
இதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன். அவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரியனின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது.  ’இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்!’ என்றார் அவர்.
பாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார். அங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபினாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, ”நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்!’ என்றார்.
சுவாமிநாதனுக்கு மகா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு. அவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. ஆரம்பத்திலேயே மகா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்று
வருத்தப்பட்டார். எத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.
அப்போது, கர்நாடக- மகாராஷ்டிர எல்லையில் மகா பெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தார்.
சுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.
அதன்பின், மகா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.
அப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ‘அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்!’ என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.
சற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா. எதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, ‘அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது!‘ என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.
ஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி! இனம் தெரியாத புத்துணர்ச்சி! ஜோஷியின் வார்த்தைகள் மகா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.
அன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது.  முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.
ஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன.  கேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.
அந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது. படத்தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது. சுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார்.  ’உடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்!’ என்றார்.  அவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று. மறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார். அங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.
சுவாமிநாதன் நடுநடுங்கிப்போனார். மீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, ஜோஷியும் மகா பெரியவாளை மீண்டும் தரிசித்து, ‘சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிஷை கேட்கிறேன், சுவாமி!’ என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.
பக்தரின் அபாய நிலை தெரிந்தும், மகா பெரியவா சும்மா இருப்பாரோ?  சிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்னானம் செய்யப் புறப்பட்டர். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.
நீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார். சுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார். ‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!‘ என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.
ஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
நவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது? எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்?
மறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன. மகா பெரியவாளே ‘அவனுக்குப் புனர்ஜன்மம்’ என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ? அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன. எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது. திருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தில் காணப்பட்ட கரு நிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.
டெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன. சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும்போதெல்லாம் சளி வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது. அதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.
சுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார். மூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.
அவர் மகா பெரியவாளை தரிசனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், ‘சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா?  புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.
மகானின் கருணைக் கடாட்சம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?

Sunday, 17 July 2011

சூரிய சந்திரர்கள் உள்ளவரை, எம்.எஸ். அவரது புகழ் இருக்கும் - மஹா பெரியவர் அனுக்கிரஹம் !

“சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும்.  அதை அடையவே முடியாது. 

சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும்.  இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும். 
 
அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்!  இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!” 
 
காஞ்சி மஹா பெரியவர் கூறிய அழகான உவமை இது. 
 
இந்த விளக்கத்துக்கு வாழும் உதாரணமாக இருந்தவர் எம்.எஸ்.  ஈசுவர அனுக்ரஹத்தினால் அவருக்கு மிக இனிய குரல் வளம் வாய்த்தது.  அந்தக் குரல் வளத்தை, சங்கீதம் என்கிற தேவதைக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம்.  வாழ்நாள் முழுதும் இந்த இலட்சியத்தை நோக்கி அவர் சென்றார்.  அதை அடையவும் செய்தார். 


மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு.  அது தப்பு.
ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது.  நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.  அவ்விதம் பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.
ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு.  பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார்.  ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம்.  உங்களைத் தரிசித்ததே போதும்.  அதற்கு மேலான வரம் எது ?”  என்றான்.
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம்.  என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு.  ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்”  என்றார்.  அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்”  என்றான்.
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில் அப்படித்தான்.  மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:).  ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:).  அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘  பாடலை இயற்றித் தந்தார்.
அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இதற்கு என்ன அர்த்தம்…?   ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்;  பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’  என்று அர்த்தம்.
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா !  இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ?


மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:
“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன்.  செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது.  இது சத்தியம்.  நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.
இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார்.
செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர்.  ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா.  அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார்.
இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்’ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.
எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை.  அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.
“தாமரை நன்றாக வளர  வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்;  தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்”  என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).
சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.
‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது.  அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.
“வீழி!  கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”
போனேன்.  ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹாபெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.
பெரியவர் காதில் விஷயத்தைப் போட்டபோது,
“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ?  எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.
அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன்  காசுகள்  வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது.  (அந்தக் காணிக்கையைப் பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.)
எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக் கொடுத்தார்.  குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.
அவர்கள் சென்ற பின்பு பெரியவர் சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன்.  நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”
மஹா பெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார்.  மேளராக மாலிகை இவர் உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது.  பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில் சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான்.  உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி.  இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.
Balaji Pancharatnamala Sri Annamcharya Samikirtanas Vol - 2Sri Venkateswara (Balaji) Pancharatnamala - Vol 4Sri Venkateswara (Balaji) Pancharatnamala - Vol 5
எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா.  ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது.  அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது.  அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது!  அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம்.  மேளராக மாலிகையின் வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும். 
‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘  என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும்.  ’ஹரிதம்பர சத்தம்‘  என்பது பரமேசுவரனைக் குறிக்கும்.  (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்) .  இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம் ‘இது எப்படி சாத்தியம் ?’ என்று கேட்டேன்.  அதற்கு அவர் சொன்னார்:
“நீயா பாடப் போறே…?  அவா பாடிடுவா…  நீ ஏன் கவலைப்படறே!”
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர் எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !”  என்றார்.
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும் ?

நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.

அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.
எங்கள் எம்.எஸ். என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர்.  அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

தொடர்புடைய பதிவு

Monday, 11 July 2011

காவிரி ஸ்நானமும்-பெரியவாளின் அநுக்ரஹமும்

நடமாடும் தெய்வம்
பல வருடங்களுக்கு முன்காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.


ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளேநீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.
உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.

காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சேஉங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.
சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்என்ற என் தகப்பனார், ”அது சரிமத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.

ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றாஎன்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.
சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

பேஷா நடக்கட்டுமேஎன்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்
ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.
இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாகஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.
என்ன சந்தானம்நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.
அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோஅது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.
அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.
திடீரென, ”ஏன் சந்தானம்இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோதெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.
போயிண்டிருக்கு பெரியவாஎன்றார் தகப்பனார்.

பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”
ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார்.
அதிருக்கட்டும்இப்ப ஜலம் போயிண்டிருக்கோதெரியுமோ?” – இது பெரியவா.
உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவாஎன்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னாபுரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!

தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.

சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு , காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”
தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோபுண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வானு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளேஇங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.
கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோஎன்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!
நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளேஎன்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.
அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளேஎன முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோஎன்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.