“சூரியனை நோக்கிப் போகிறபோது நமது நிழல் நம் பின்னாலேயே வரும்.ஆனால் திரும்பிப் பார்த்து நிழலைத் தொடர ஆரம்பித்தோமானால் அது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டேயிருக்கும். அதை அடையவே முடியாது.
சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கு உட்பட்டு, சூரியனாகிற நமது இலட்சியம் நோக்கி தைரியத்தோடும் நியமத்தோடும் நாம் போக வேண்டும். இதைப் பண்ணினோமானால், சூரியனை நோக்கிப் போகிறபோது, நிழல் எப்படி நாம் அறியாமலே பின்தொடர்கிறதோ, அப்படி பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் நாம் ‘வேண்டாம் வேண்டாம்‘ என்று சொன்னாலும் நம்மைத் துரத்திக் கொண்டு வரும்.அதை விட்டுவிட்டு, நிழலைப் பிடிக்கத் திரும்புகிற மாதிரி நாம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டால், நிழல் நம்மை விட்டுப் போகிற மாதிரி பணமும், புகழும், பதவியும் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்! இலட்சியத்தை அடைகிற மார்க்கத்திலிருந்து நாம் திரும்பினோம் என்பதுதான் மிச்சமாகும்!”
காஞ்சி மஹா பெரியவர் கூறிய அழகான உவமை இது.
இந்த விளக்கத்துக்கு வாழும் உதாரணமாக இருந்தவர் எம்.எஸ். ஈசுவர அனுக்ரஹத்தினால் அவருக்கு மிக இனிய குரல் வளம் வாய்த்தது. அந்தக் குரல் வளத்தை, சங்கீதம் என்கிற தேவதைக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதுதான் அவரது இலட்சியம். வாழ்நாள் முழுதும் இந்த இலட்சியத்தை நோக்கி அவர் சென்றார். அதை அடையவும் செய்தார்.
மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு. அது தப்பு.
ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது. நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம். அவ்விதம் பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.
ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு. பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார். ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம். உங்களைத் தரிசித்ததே போதும். அதற்கு மேலான வரம் எது ?” என்றான்.
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம். என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு. ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்” என்றார். அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்” என்றான்.
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில் அப்படித்தான். மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:). ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:). அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘ பாடலை இயற்றித் தந்தார்.
அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இதற்கு என்ன அர்த்தம்…? ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’ என்று அர்த்தம்.
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா ! இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ?
மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்: “மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள். இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார். செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார். இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்’ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு. எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார். “தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்” என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்). சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள். ‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார். “வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.” போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹாபெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார். பெரியவர் காதில் விஷயத்தைப் போட்டபோது, “பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது. அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள் வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது. (அந்தக் காணிக்கையைப் பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.) எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக் கொடுத்தார். குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை. அவர்கள் சென்ற பின்பு பெரியவர் சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !” மஹா பெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர் உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில் சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன். எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம். மேளராக மாலிகையின் வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும். ‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ’ஹரிதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்) . இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம் ‘இது எப்படி சாத்தியம் ?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: “நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!” அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும். இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர் எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…? “சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார். இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும் ? நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும். எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது. அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது. ’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர். நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும். எம்.எஸ். அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி. தொடர்புடைய பதிவு |
No comments:
Post a Comment