Friday 23 November 2012

யார் பகவான் கிருஷ்ணன் மேல் அதீத பக்தி கொண்டவர்கள்?




கோகுலத்தில் ஒரு முறை பகவான் கிருஷ்ணனுக்கே தலைவலி ஏற்பட்டதாம். யாராலும் குணப்படுத்த முடியவில்லையாம். சத்யபாமா, ருக்மணி உள்பட அனைவரும் அரண்மனையில் கவலையுற்று இருந்தார்கள்.அவ்வமயம் நாரத மகரிஷி அங்கு வந்தார். அவர்களின் கவலைக்கு காரணம் கேட்க, அவர்கள் காரணம் சொல்ல, நாரத மகரிஷி பகவான் கிருஷ்ணனிடம் சென்றார்.

"என்ன இது விளையாட்டு? எதற்காக இந்த நாடகம்" என்று நாரத மகரிஷி கேட்டார். 

பகவான் கிருஷ்ணன், "இல்லை, எனக்கு உண்மையிலேயே தலைவலி" என்றார். 

நாரத மகரிஷி இதை நாடகம் என்று புரிந்து கொண்டாலும், காட்டிக்கொள்ளவில்லை. "சரி அப்படியானால், இந்த தலைவலிக்கு மருந்து என்னவோ? அதையும் தாங்களே கூறலாமே" என்று கிருஷ்ணனிடம் கேட்டார் நாரத மகரிஷி.

"யார் என்னிடம் மிக மிக பக்தி கொண்டவர்களோ, அவர்களின் பாத தூசியை என் நெற்றியில் பூசிகொண்டால், குணமாகும்" என்று பகவான் கிருஷ்ணன் கூறினார். 

நாரத மகரிஷி நேரே ருக்மணியிடம் சென்று, பகவான் கிருஷ்ணன் சொன்ன விவரம் கூறி, "அவரின் பத்தினியான நீங்கள் அவரது ஹிருதயத்திலேயே இருப்பவர்., உங்களைவிட அவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர் வேறு யார் இருக்க முடியும் என்று சொல்லி, தங்களின் பாத தூசியை அவரின் நெற்றியில் பூசி விடவும்" என்று கேட்டுக்கொண்டார். 

ருக்மணி அதை கேட்டதும், பதறி அடித்துக்கொண்டு, "ஐயோ, என் பாத தூசியா? அதை அவரின் நெற்றியில் இடவா? அவரின் பத்தினியான நான் இதைச் செய்து பெரும் பாபம் வந்து என்னை பற்றிக்கொள்ளவா ? என்னால் முடியாது " என்று உள்ளே சென்று விட்டாள். 

சத்யபாமா இருக்கும் இடம் சென்று, அவரிடமும் நாரத கேட்க, "ஐயையோ, இது மிகப் பெரும் பாபம். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்" என்று சத்யாபாமாவும் நழுவிகொண்டார்.

இப்படியே எல்லோரும் சொல்ல, இறுதியில் நாரத மகரிஷி, கோபிகா ஸ்திரீயிடம் சென்றார். அவர்களிடம், நாரதர், பகவான் கிருஷ்ணனின் தலைவலி பற்றிச் சொல்லி, "உங்களில் யார் அவருக்கு உங்கள் பாத தூசியை தர தயாராக இருக்கறீர்கள்" என்று கேட்டார். 

கோபிகா ஸ்திரீகள், பகவான் கிருஷ்ணனின் பக்தைகள் என்பதால் அவர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்று எண்ணினார்.

ஆனால், கோபிகா ஸ்திரீகளோ, "இதோ நான் தருகிறேன்., நான் தருகிறேன்" என்று எல்லோருமே முண்டியடித்துகொண்டார்கள். 

வியப்புற்ற நாரதர், "என்ன, நீங்கள் எல்லோருமே தர தயாராக இருக்கிறீர்களா? அவர் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம். உங்கள் பாத தூசி அவர் நெற்றியில் படுவதால், உங்களுக்கு தாங்கவொண்ணாத பாபம் வந்து சேருமே ! பரவாயில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு கோபிகா ஸ்திரீகள், "பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தலைவலி சரியாகும் என்றால், நாங்கள் எத்தகைய பாபத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று கோரஸாக ஒரு சேர சொன்னார்கள்.அவர்களின் பதிலைக்கேட்டு, புல்லரித்துப்போன நாரதர், கோபிகா ஸ்திரீகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார்.

பகவான் கிருஷ்ணன் தலைவலியும்,கோபிகா ஸ்திரீகள் அங்கு வந்ததுமே சென்று விட்டது. 

"என்ன நாரதா? இப்போது புரிகிறதா? யார் என் மேல் அதீத பக்தி கொண்டவர்கள் என்று?" என்று கிருஷ்ணன் கேட்க, நாரத மகரிஷியும், பகவான் கிருஷ்ணன் மேல் கொண்ட கோபிகா ஸ்திரீகளின் அதீத பக்தியைப் புரிந்து கொண்டார்.

No comments:

Post a Comment