Monday 17 December 2012

உபநயனம் செய்விப்பதை தள்ளிப்ப்போடக்கூடாது - காஞ்சி மஹா பெரியவாளின் ஆக்ஞை




உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit (கீழ் வரம்பு) , பதினாறு வயசு upper limit (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸ¨ரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல. 

இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு டிலே செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள். பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது. கலியாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனால் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலம் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கலியாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

இதிலே ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், ஸ¨த்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது;ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது. போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெனகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல. 

உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு.

 கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் 'ஷோ'அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது.

பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமானதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை.

அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது, வெறும் vanity, ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. 'அது காம்யோபநயனம்'எனப்படும். 'காம்யம்'என்றால் ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு ஏற்பட்டானதற்குப் பிறகு உபநயனம் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோது பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் 'ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது!ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!)

No comments:

Post a Comment