எது வேத தர்மம்?
மேல் நாடுகளில் பெரிதாக ஸ்தாபன ரீதியில் institutionalise செய்து பரோபகாரப் பணிகள் செய்கிறார்கள். இப்படித் தனி ஸ்தாபனங்கள் இல்லாமலே தனி மனிதர்களாகவும், ஸங்கமாகவும் பொதுநலப்பணி புரிவது நமது வைதிக தர்மத்துக்கு ஆதாரமான ஓர் அம்சமாக ஆதியிலிருந்து இருந்து வந்திருக்கிறது.
'இன்ஸ்டிட்யூஷனலைஸ்' செய்யாமல் தன்னியல்பாக நம் வாழ்முறையிலேயே கண்ணுக்குத் தெரியாமல், ஒட்டிக்கொண்டு பரோபகாரம் நடைபெறுதில் ஒரு உத்தமமான அம்சம் என்ன என்றால் இங்கேதான் அஹங்காரம் தலைதூக்கவே இடமில்லாமலிருக்கிறது. 'இன்ஸ்டிட்யூஷன்' என்றால் office-bearer s (அதில் பதவி வகிப்பவர்கள்) எலெக்ஷ்ன், போட்டா போட்டி, ப்பளிஸிடி எல்லாமும் வந்துதான் சேரும். அதனால்தான் நான் ஸங்கமாகச் செய்ய வேண்டிய அநேகப் பணிகளைச் சொல்கிறபோதுகூட, இதற்காகத் தனி ஆர்கனைஸேஷனும் office-bearer s-உம் வேண்டாம். ஏற்கனவே இருக்கிற வார வழிபாட்டுக் கழகம், பாவை கமிட்டி, பஜனை கோஷ்டி, ஸத்ஸங்கம் ஏதாவது ஒன்றின் மேற்பார்வையிலும் பொறுப்பிலும் இந்தப் பணிகளையும் கொண்டுவந்து விடுங்கள் என்கிறேன்.
ரொம்பப் பெரிசாக திட்டம் போடவேண்டாம், அவசியத்துக்கு அதிகமாக வசூல் பண்ணவேண்டாம் என்றெல்லாம் நான் எச்சரிப்பதற்கும் காரணம், இப்படிப் பெரிசாகக் கால் வைத்தால் முதலில் இதைச் செய்யும் நம் ஸ்தாபனத்துக்கு பப்ளிஸிடி தேடவேண்டிவரும். அது அப்படியே வழுக்கி விட்டு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருக்கிற நமக்கும் self-publicity தேடிக்கொள்கிற சபலத்தில் கொண்டுவிடும். ஆண்டு விழாவில் நாம் வரவேற்பு சொல்ல மாட்டோமோ, வந்தனோபசாரம் சொல்ல மாட்டோமோ, வருகிற முக்கியஸ்தர்களுக்கு மாலையாவது போடமாட்டோமா, ஃபோட்டோவிலாவது தெரியும்படி நிற்கமாட்டோமா என்று இப்படியெல்லாம் மனஸை அலையச்செய்யும்.
அதாவது அஹங்காரத்தை அழித்துக்கொள்ளவே ஏற்பட்ட பொதுத்தொண்டு, நேர்மாறாக அஹங்காரத்தை விருத்தி செய்கிறதாக விபரீத ரூபம் எடுத்துவிடும். தான் இருக்கிற இடமே தெரியாமல், தன் காரியம் மட்டுமே தெரிவதுதான் தொண்டின் லக்ஷணம். இதனால்தான் ' தர்மே க்ஷரதி கீர்த்தநாத் ' என்று சொல்கிறது. அதாவது, பாபம் பண்ணிவிட்டேன் என்று ஒருத்தன் வெளியில் சொன்னாலே எப்படி அவனுடைய பாபம் நசித்துவிடுமோ, அப்படி ''தர்மம் பண்ணுகிறேன்'' என்று தண்டோரா போட்டுக்கொண்டால் அதனால் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புண்யமும் நசித்துவிடுமாம்! ஸம்ஸ்க்ருதத்தில் subtle -ஆக (நுட்பம் மிக்கதாக) ''தர்ம த்வஜன்'' என்பார்கள். தர்ம த்வஜன் என்றால் தர்மக்கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவன் என்று அர்த்தம். இது பாராட்டுகிற டைட்டில் மாதிரி தொனித்தாலும் இதற்கு உள்ளர்த்தம் ''போலி தர்மவான்'' என்பதே! தன் தர்மத்தை உசத்திக் காட்டுவதாலேயே அதை இவன் போக்கிக் கொண்டுவிடுகிறான் என்பது தாத்பர்யம்!
'இன்ஸ்டிட்யூஷனலைஸ்' பண்ணுவதுபற்றிச் சொல்ல வந்தேன்.
மேல்நாடுகளில் Orphan-home (அநாதை இல்லம்) என்று தனியாக வைக்கிறார்களென்றால், நம் சாஸ்த்ரப்படி ஒவ்வொரு இல்லத்திலும் அநாதைக்கும் அதிதிக்கும் இடமுண்டு. மேல் நாட்டுக்காரர்களின் வீட்டுக்குள் அநாதைகளோ அதிதிகளோ நுழையக்கூட முடியாமல் நாய் கட்டியிருக்கும்! அவன் வாழ்க்கையோடு, ரத்தத்தோடு அதிதி ஸத்காரமும், அநாதை பராமரிப்பும் ஒட்டாமல் அவைபாட்டுக்கு மெகானிகலாக ஸ்தாபன ரீதியில் நடக்கும். (எல்லாரும் இப்படி என்று நான் சொல்லவில்லை. எந்த தேசத்திலும் உத்தமர்கள், பரோபகாரிகள், த்யாகிகள் உண்டு. அப்படியே ஸ்வயநலக்காரர்களும் உண்டு. பொதுவாகச் சொன்னேன்.)
மேல்நாட்டானைக் காப்பியடித்து, '' அதிதி தேவோ பவ '' என்ற கொள்கையைக் கொண்ட நம் தேசத்திலும் வீட்டு வாசல்களில் ''நாய் ஜாக்கிரதை!'' போர்டு தொங்குவதைப் பார்த்தால் வேதனையாயிருக்கிறது. ''வா வா'' என்று வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுப் படுக்க வைத்துக்கொள்ளவே 'திண்ணை' என்பது நம்முடைய வைதிகமான க்ருஹ சில்பத்தில் இருந்தது. இப்போது அதெல்லாம் போச்சு. இப்படியே அன்றன்றும் வைச்வதேவ பலியில் தெருவில் போகிற எவனோ பஞ்சமன் சாப்பிடக்கூட ஒரு பங்கு அன்னம் போடப்பட்டு வந்த இந்த தேசத்தில் இம்மாதிரி அநுஷ்டானங்களை 'ஸ¨பர்ஸ்டிஷன்' என்று தள்ளி வைத்து விட்டதும் மனஸுக்கு க்லேசமாயிருக்கிறது.
மேல்நாட்டு மோஸ்தரில் இங்கேயும் தனி மநுஷ்யனின் குடும்பம் தனக்கே என்று ஆனபிறகு, இங்கேயும் அங்கே மாதிரி ஸமூஹப் பணிகளை இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்வதாகவும் என்பதாக ராஜாங்கமே அநாதையில்லம், வயஸானவர் பென்ஷன் என்றெல்லாம் நடத்துவதுமாக ஆகிவிட்டது. இன்றைய ஸெட் அபிபில் இதுவுமில்லாவிட்டால் நிராதரவானவர்களின் பாடு ரொம்பவும் கஷ்டமாகத்தான் ஆகிவிடும். ஆனாலும் பூர்வத்தில் ஒவ்வொருவரும் வஸுதைவ குடும்பகம் (லோகம் முழுக்க ஒரு குடும்பம்) என்ற அன்பான எண்ணத்தோடு தாங்களே ஆதரவற்றவர்களைத் தாங்கி தரித்த முறையோடு பார்த்தால் இப்போது ராஜாங்க ரீதியில் ஆபீஸாக ஸமூஹ காரியங்களை நடத்துவது இரண்டாம் பக்ஷம்தான்.
சுருக்கமாக வேத தர்மம் என்பது நம்மிடத்தில் இருக்கும்படியான எல்லா சக்திகளும் ஈஸ்வர சக்தியில் துளித்துளிதான். இந்த சக்திகளை ஈஸ்வரனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். நாவினாலே அவன் நாமாவைச் சொல்வது, மனஸினாலே த்யானம் பண்ணுவது, சரீரத்தாலே பூஜை பண்ணுவது என்று எல்லாம் ஈஸ்வர ஸம்பந்தமாக்க வேண்டும். பூஜை என்பதில் கர்மாவைச் செய்வதும், கடமையைச் செய்வதும் அடக்கந்தான். ஆசார்யாள் முடிவாக உபதேசித்த ஸோபான பஞ்சகத்தில் கர்மாவைப் பண்ணுவதுதான் ஈஸ்வர பூஜை என்று நிர்த்தாரணம் செய்திருக்கிறார். ஸ்வதர்மப்படி அவரவருக்கு ஏற்பட்ட கர்மாவோடு, ஸர்ஜனங்களுக்கும் ஏற்பட்ட ஸாதாரண தர்மங்களைச் சேர்ந்த ஒரு முக்யமான கர்மா இந்தப் பரோபகாரம் என்பது.
அதனால் நாக்கால் நாமா சொல்கிறதோடு ஜனங்களுக்கு நல்லதாக, மதுரமாக நாலு வார்த்தை சொல்லவேண்டும். மனஸால் த்யானம் பண்ணுவதோடு, 'லோகமெல்லாம் க்ஷேமமாயிருக்கணும்' என்று ஒவ்வொரு நாளும் நாலு க்ஷணமாவது அன்போடு நினைக்க வேண்டும். சரீரத்தால் பூஜை, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் செய்வதோடு கொஞ்ச நேரமாவது வெட்டியோ கொத்தியோ வேறு தினுஸிலோ ஒரு பொதுத்தொண்டு பண்ணவேண்டும். திரவ்யத்தையும் இப்படியே தேங்காய், பழம், புஷ்பம் வாங்குவதோடு தான தர்மத்துக்கும் கொஞ்சமாவது செலவழிக்க வேண்டும். இவற்றையும் ஈஸ்வர ப்ரீதிக்காக ஈஸ்வர பூஜையாக நினைத்தே செய்ய வேண்டும். இதுவே நம் பூர்விகர்கள் போன வழி. அதாவது தெய்வகார்யம், ஸமூஹ கார்யம் இரண்டில் ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும்.
பரோபகாரம் நம் மதத்தில் சொல்லப்படவில்லை என்ற தப்பான பிரசாரத்தை நம்பக்கூடாது. குழந்தையாக இருக்கிறபோதே 'ஸுபாஷிதம்','நீதி சாஸ்திரம்' என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிலேயே பரோபகாரத்தைப் பற்றிய அநேக போதனையிருக்கிறது. ' பரோபகாரார்த்தம் இதம் சரீரம் ' - 'உலகத் தொண்டு பண்ணவே இந்த உடம்பு வாய்த்திருக்கிறது' என்று அப்போதே கற்றுக் கொடுத்து விடுவார்கள். இன்னொன்றும் சொல்வதுண்டு, ' பரோபகாராய ஸதாம் விபூதய :' - 'நன்மைகளின் ஸகல சக்திகளும், உடைமைகளும் பரோபகாரத்துக்காகவே ஏற்பட்டவைதான்' என்று அர்த்தம். இதை இரண்டு விதத்தில் சொல்லி இளமனஸில் ஆழமாகப் பதிப்பிப்பார்கள். ஒன்று: பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் மரம் பழுக்கிறது ( பரோபகாரார்த்தம் பலந்தி வ்ருக்ஷா: ); பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் ஆறுகள் ஜலத்தைச் சுமந்து ஓடுகின்றன (பரோபகாரார்த்தம் வஹந்தி நத்ய:); பிறருக்குப் பயனாவதற்கேதான் பசுக்கள் பால் கொடுக்கின்றன (பரோபகாரார்த்தம் துகந்தி காவ:); அப்படியே இந்த மநுஷ்ய காயம் ஏற்பட்டிருப்பதும் பிறருக்கு உதவும் பொருட்டே (பரோபகாரார்த்தம் இதம் சரீரம்). இன்னொன்று: இப்போது சொன்னதையே இன்னும் கொஞ்சம் நயத்தோடு சொல்வது - மரம் தன் பழத்தைத் தானே சாப்பிட்டுக் கொள்வதில்லை (காதந்தி ந ஸ்வாது பலாநி வ்ருக்ஷா:); ஆறு தன் ஜலத்தைத் தானே குடித்துக் கொள்வதில்லை (பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப:); மேகம் தன் மழையாலுண்டாகிற பயிரைத் தானே சாப்பிடுவதில்லை(பயோதரா: ஸஸ்யமதந்தி நைவ); இதேபோல ஸஜ்ஜனங்களின் (நல்லோரின்) எல்லாத் திறமைகளும், செல்வமும் பரோபகாரத்திற்குத்தான்(பரோபகாரய ஸதாம் விபூதய : ) .
படிக்கிற காலத்திலேயே, ''உன்னை சாச்வதமாக உயிர்வாழ்கிற தேவஜாதியாக நினைத்துக்கொண்டு கல்வியையும் பொருளையும் நிறுத்தாமல் மேலே மேலே ஸம்பாதித்துக்கொண்டே போ'' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, அதே மூச்சில், அந்த ஸ்லோகத்திலேயே, ''தர்மம் பண்ணுவதில் மட்டும் அப்புறம் என்று ஒத்திப்போடாமல், எப்போதும் யமன் உன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடனே பண்ணிவிடு'' என்று சொல்லிக் கொடுத்தார்கள்:
அஜராமரவத் ப்ராஜ்ஞ : வித்யாம் அர்த்தம் ச ஸாதயேத் |
க்ருஹீத இவ கேசேஷ§ ம்ருத்யுநா தர்மம் ஆசரேத் |
வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் ''ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்'', ''ச்லோகார்தேந ப்ரவக்யாமி யதுக்தம் க்ரந்த கோடிஷூ|'' என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:
'' பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||''
இருக்கிற அத்தனைகோடி தத்வம் என்னவென்றால், ''புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு'' என்பதுதான் - என்று இதற்கு அர்த்தம்.
பாபம் எது என்று தெரிந்துகொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்துகொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை.
'ஆத்மாத்தமாக, ஒருத்தன் தனக்குப் பண்ணிக் கொள்வதைப்பற்றித்தான், வேத மதத்தில் நிறைய இருக்கிறது. பிறத்தியாருக்குப் பண்ணுவதைப்பற்றி இல்லை' என்று சில பேர் criticise பண்ணினாலும் இப்படி இவன் ஸ்வய உபகாரம் பண்ணிக்கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாலன்றி இவன் செய்கிற பரோபகாரத்துக்கு effect இருப்பதில்லை என்பதால்தான், தன்னுடைய spiritual power (ஆத்ம சக்தி) -ஐக் கொண்டு ஒருத்தன் 'ஸோஷல் ஸர்வீஸ்' பண்ணணும்; அந்த 'ஸோஷல் ஸர்வீஸா'லேயே இந்தப் 'பவரை'விருத்தி செய்து கொள்ளணும் என்பதாக இரண்டையும் கைகோர்த்துக் கொண்டு, ஒன்றால் மற்றது புஷ்டி பெறுகிற ரீதியில், நம்முடைய மதத்திலே அமைத்துக் கொடுத்திருக்கிறது.
வேத தர்மத்தைப் பூர்ண ஜீவசக்தியுடன் ப்ரகாசமாகத் தூண்டிவிட்ட ஆசார்யள் வினா-விடை ரூபத்திலே 'ப்ரச்நோத்தர ரத்நமாலிகா' என்று அநுக்ரஹித்திருக்கிறார் அதிலே ஒரு கேள்வி:
'' கிம் மநுஜேஷ§ இஷ்டதமம் ?''
''மநுஷ்யனாகப் பிறந்தவன் விரும்ப வேண்டியவற்றில் தலை சிறந்தது எது?'' என்பது கேள்வி.
'' ஸ்வ பர ஹிதாய உத்யதம் ஜந்ம '' என்பது இதற்குப் பதில். 'ஸ்வஹிதம்'- தனக்கு நன்மையானது அதாவது ஸ்வயோபகாரம் இதோடு 'ப்ரஹிதம்' என்கிற பரோபகாரம். இரண்டுக்காகவும் பாடுபடும் வாழ்க்கைதான் மநுஷ்யன் வேண்டத் தக்கவற்றில் உச்சியானது என்று பதில் சொல்கிறார். இங்கே ஆசார்யாள் நவீனர்களின் 'க்ரிடிஸிஸ' த்துக்கு ஆணி அடித்தாற்போல் விடை சொல்லியிருக்கிறார்.
இதே க்ரந்தத்தில் இன்னோரிடத்தில் சந்திர கிரணத்துக்கு ஸமானமான மனிதர்கள் ஸஜ்ஜனங்களே என்கிறார். சந்திர கிரணம் லோகத்துக்கெல்லாம் தாப சமனம் தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து, இதற்காக அது ப்ரயத்தனப்படவேண்டும் என்று இல்லை. தன்னியல்பாகவே அது லோக ஹிதத்தை உண்டாக்குகிறது. அதேபோல லஜ்ஜனங்கள் என்கிற ஸாதுக்கள் ''ஸோஷல் ஸர்வீஸ் பண்ணணும்'' என்று அரிப்புப் பட்டுக்கொண்டு, தண்டாரோ போட்டுச் செய்யணும் என்றே இல்லை. அவர்கள் தங்களுடைய 'நேச்சர்'படி இருப்பதே, நடப்பதே லோகஹிதமாக, பரோபகாரமாகத்தானிருக்கும். இதையேதான் ஸஜ்ஜனங்களுக்கெல்லாம் சிகரமாகப் பரம சாந்தர்களாக, மஹாந்தர்களாக இருக்கப்பட்ட ஜீவன் முக்தர்களின் லக்ஷணமாகவும் (ஆசார்யாள்) ''விவேக சூடாமணி''யில் சொல்கிறார். இங்கே 'சந்திர கிரணம் மாதிரி' என்றவர் அங்கே ''வஸந்த காலம் மாதிரி'' என்கிறார்.
வஸந்தவத் லோகஹிதம் ச்ரந்த:
வஸந்தகாலம் போல உலக நலனைப் பண்ணியபடி உலாவுகிறார்களாம் மஹான்கள். வஸந்தம் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிகிறதோ? சந்திரனாவது தெரிகிறது. மஹான்கள் தங்களை இப்படிக் காட்டிக் கொள்வதுகூட இல்லை! ஆனாலும் வஸந்தம் வந்தால் தன்னால் தென்றல் ஹிதமாக வீசுகிறது. புஷ்ப ஜாதிகள், மல்லிகை முக்யமாக, எங்கே பார்த்தாலும் மலர்ந்து கம்மென்று வாசனை வீசுகின்றன. மா முதலான பழங்கள் குலுங்க ஆரம்பிக்கின்றன. சிசிர ருது என்கிற பின்பனிகாலத்தில் இலையை உதிர்த்துவிட்டு நின்ற மரமெல்லாம் வஸந்தம் வந்ததும், அதற்குப் பச்சைக்கொடி காட்டுகிறதுபோல பச்சைப்பசேல் என்று தளிர் விடுகின்றன இப்படித்தான் இந்த சரீரத்திலிருக்கும்போதே 'தான் பிரம்மம்' என்று தெரிந்துகொண்டுவிட்ட ஜீவன்முக்தனும்கூட un conscious -ஆக (தன்னுடைய புத்தி பூர்வமாக இல்லாமலே) , unnoticed ஆக (தன்னைக் காட்டிக் கொள்ளாமலே) லோக ஹிதத்தை உண்டாக்குகிறான் என்று இப்படி இருந்து காட்டிய ஆசார்யாளே, unself- conscious ஆக (தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்கிறோம் என்ற நினைப்பேயில்லாமல்) சொல்லியிருக்கிறார்!
''பொதுவாகவே ஹிந்து மதத்தில் பரோபகாரம் கிடையாது. அதிலும் அந்த மதத்தில் உள்ள அத்வைதத்தில் லோகமே மாயை; ஆத்மாவைத் தவிரப் பிறத்தியானென்றே இல்லை' என்று சொல்லித் துளிக்கூடப் பரோபகார ப்ரக்ஞைக்கு இடமேயில்லாமல் அடைத்து விட்டிருக்கிறது'' என்று ஒரு criticism இருந்தாலும், அத்வைத ஆசார்யாளே அத்வைத ஸித்தியை அடைந்து விட்டவனும் லோக ஹிதத்துக்காகத்தான் உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறான் என்கிறார்.
பகவானும் (ஸ்ரீ கிருஷ்ணரும்) ஜீவன்முக்தர்களான ஜனகாதியர்கூட 'லோக ஸங்க்ரஹ'த்துக்காக கார்யம் பண்ணிக்கொண்டு தானிருக்கிறார்கள் என்று (கீதையில்) சொல்கிறார். 'ஸங்க்ரஹம்' என்றால் அன்போடு வழிகாட்டி உசத்துவது. தன்னில்தானே ஸகல ஸாதனைகளுக்கும் லக்ய ஸ்தானமாயிருந்தபோதிலும், தான் பண்ண வேண்டிய ஸாதனையோ, அடைய வேண்டிய லக்ஷ்யமோ எதுவும் இல்லாதபோதிலும், பகவானான தாமும் லோகத்தார் எப்படி வாழவேண்டும் என்ற 'ஐடிய'லை அவர்களுக்குக் காட்டிகொடுப்பதற்காகவே ஓயாமல் ஒழியாமல் கார்யங்கள் பண்ணிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். எதுவும் ஸாதிக்க வேண்டாத பகவானும் பரோபகாரத்தை ஸாதிக்கிறார்! இதையேதான் ''ப்ரச்னோத்தர ரத்நமாலிகா''விலும் (ஆசார்யாள்) , ''கிம் ஸாத்யம்?''- ''ஸாதிக்கத் தக்கது என்ன?'' என்று கேட்டு, ''பூத ஹிதம்''-''உயிர்க்குலத்துக்கு நன்மை செய்வது''என்று பதிலாகக் கொடுக்கிறார்.
'டாப் லெவ'லில் இருப்பவனுக்கே பரோபகாரத்தைச் சொன்ன அத்வைத ஆசார்யாள் ஸாதாரண மநுஷ்யனுக்கும் அந்த லெவலுக்கு ஏறுகிற வழியில் இதை அங்கமாகச் சொல்லித்தானிருக்கிறார். ''பணம் ஸம்பாதிக்கிறாயா? ஸம்பாதித்துவிட்டுப்போ. ஆனால் அதை தார்மிகமாக ப்ரயோஜனப்படுத்தினாயானால் அதுவே உன் சித்தத்தைப் பரிசுத்தி பண்ண உதவும்''-
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம்
என்று 'பஜகோவிந்த' த்தில் சொல்கிறார். அதிலேயே ஆத்ம ஸம்பந்தமாக, பகவத் ஸம்பந்தமாக, ''கீதையைச் சொல்லு, ஸஹஸ்ரநாமம் சொல்லு, விடாமல் லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவை த்யானம் பண்ணு, ஸத்ஸங்கத்திலேயே மனஸை ஈடுபடுத்து''
என்றெல்லாம் சொல்லிவிட்டு, முடிவாக ''ஏழை எளியவர்களுக்குத் தான தர்மம் பண்ணு'' என்று பரோபகாரத்தோடு முடிக்கிறார்:
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் |
த்யேயம் ஸ்ரீபதிரூபம் அஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய ச வித்தம் ||
ஆனதால் வேத தர்மம் (லோகம், ஜீவன் எல்லாம் மாயை என்கிற அத்வைதமும்கூட) ஜீவாத்ம கைங்கர்யங்களை ஈஸ்வர ஸம்பந்தத்துடனே சேர்த்துச் சேர்த்து எல்லாரும் பண்ணியைக வேண்டுமென்று கொடுத்திருப்பதைப் புரிந்து கொண்டு அப்படியே செய்ய வேண்டும். நம் பூர்விகர்கள் போனவழி அதுதான். அதிலேயே நாமும் போய் அத்வைத த்ருஷ்டியில் எல்லா உயிர்களையும் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்துத் தொண்டு செய்து ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்துத் தொண்டு செய்து ஈஸ்வர ப்ரஸாதத்தை அடைய வேண்டும்.
ஸர்வேஜநா : ஸுகிநோ பவந்து |
லோகா : ஸமஸ்தா : ஸுகிநோ பவந்து |