Saturday 4 May 2013

சரீர ஸாதனை, ஆத்ம ஸாதனை, மற்றும் ஸ்திரீயின் பங்கு குறித்து மஹா பெரியவா உபதேசம்


ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடுமாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக ஸெளக்கியமாக ஈஸ்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும் பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மநுஷ்ய ஜன்மா எடுத்தே ப்ரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்பபோது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்களில் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாக்காதான் இருக்கிறார்கள்.

மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைகாரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ?தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக்கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் 'கனெக்ட்'பண்ணுகிற nervous system -ஐ அவன் பாழ் பண்ணிக்கொள்கிறதில்லை.

சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்றுவிடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயகங்ளிலும் 'டச்'வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக 'டச்'பண்ணினால் மட்டும் போதாது, 'டச்'பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக்கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபிவிருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் 'டச்'சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே, அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, 'ப்ளான்'இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற்தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், ''ஒரு கையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப் பண்ணு'' எண்ணுகிறார்கள்.

முதலில் சரீர வேலை ஜாஸ்தி, ஆத்மார்த்த சிந்தனை குறைச்சல் பிறகு இரண்டும் ஸமம்;அப்புறம் ஆத்மார்த்தம் ஜாஸ்தி, சரீர வேலை குறைச்சல் என்று அதாவது எல்லா ஸ்டேஜிலும் இரண்டில் எந்த ஒன்றுமே இல்லை என்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கும் அப்புறம் ஈஸ்வரனே நம்மை நடத்தி வைப்பது தெரியும். அந்த ஸ்திதியில் பரமஞானிகளாக இருந்து கொண்டே ஓயாமல் ஒழியாமல் காரியம் பண்ணினவர்களும் உண்டு. லோகமே தெரியாமல் கல்லு மாதிரிக் கிடந்தவர்களும் உண்டு. அங்கே போகிற மட்டும் மெய் வருந்திப் பரோபகார மாக எல்லாரும் உழைக்கத்தான் வேண்டும். பலஹீனர்கள் தவிர மற்ற எல்லாரும் சரீர கைங்கர்யம் நிறையப் பண்ணத் தான் வேண்டும். பலஹீனர்கள் இதற்கு ஈடாக மற்ற தினுசுகளில் பொதுப்பணி செய்ய வேண்டும்.

ஸ்ரமதானம் மாதிரியே எல்லாரும் 'ஸம்பத்தி தான்' என்கிற பண தானமும் துளியாவது பண்ண வேண்டும். எத்தனை குறைச்சல் வருமானமானாலும் அதிலும் ஒரு காலணாவாவது தனக்கென்று இல்லாமல் தர்மத்துக்குப் போகணும். இதிலே ஸ்திரீகளால் ஆகக்கூடியது நிறைய இருக்கிறது. நகை, துணி, ஸினிமாச் செலவு, வரதக்ஷிணை சீர் செனத்தி ஆசை இவற்றால் ஸ்த்ரீகள்தான் புருஷர்களை விட தான தர்மம் முடியாத ஸ்திதியை ஏற்படுத்தி விடுகிறார்கள். ரேஸ், சீட்டு, குடி, ஸிகரெட் முதலான துன்மார்க்கச் செலவுகள் புருஷர்கள்தான் செய்கிறார்களெண்று எனக்குத் தெரியுமானாலும், அவர்களை விடவும் பெண் ஜன்மா எடுத்தவர்கள்தான் எல்லா உயிர்களுக்கும் தாயாக, தியாகிகளாக உபகரிப்பதில் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் சொல்கிறேன் அகமுடையான், பெண்டாட்டி இருவரும் ஒத்துழைத்து, தர்மம் செய்வதற்கென்றே மற்றச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு கொஞ்சமாவது மிச்சம் பிடிக்க வேண்டும். 'இருக்கிறவர்'களும் இதற்கெல்லாம் ஆகிற செலவைச் சேமித்துப் பரோபகாரத்துக்குப் பயனாக்க வேண்டும்.

No comments:

Post a Comment