Sunday, 30 June 2013

கடன் அனைவருக்கும் தீங்கு - மஹா பெரியவா


சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல், பரோபகார உத்தேசத்தின்மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது ஒரு கடன். அடைந்த பிறகு, ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க்கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது?

ஆசார்யாள் 'ப்ரச்நோத்ர ரத்ன மாலிகா' என்று கேள்வியும் பதிலுமாக ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அதிலே ஒரு கேள்வி, ''உலகத்தில் தீட்டாக ஆவது எது?'' என்பது: '' கிமிஹ ஆசௌசம் பவேத் ?''

சுசி என்றால் சுத்தம். அசுசி (என்றால்) அசுத்தம். அசுசியுள்ளது ஆசௌசம். தேவ கார்யங்களுக்கு உதவாத படி ஆக்குகிற சாவுத் தீட்டு, பிரஸவத் தீட்டு முதலானவற்றையே சாஸ்திரங்களில் ஆசௌசம் என்று சொல்லியிருக்கிறது. இங்கே, சிஷ்யன் ''ஆசௌசம் எது?'' என்று கேட்பதாகவும், அதற்கு குரு பதில் சொல்வதாகவும் ஆசார்யாள் சொல்லுகிறார். அந்தப் பதில் என்ன?

ருணம் ந்ருணாம்

''ந்ருணாம்''என்றால் ''மநுஷ்யனுக்கு'', ''மநுஷ்யனாகப் பிறந்த எல்லாருக்கும்'' என்று அர்த்தம். ''ருணம்'' என்றால் 'கடன்', ''மநுஷ்ய ஜன்மா எடுத்தவனுக்குப் பெரிய தீட்டு கடன் படுவதுதான்'' என்று ஆசார்யாள் சொல்கிறார். ஏன் அப்படிச் சொன்னார்?

தீட்டு வந்தால் என்ன பண்ணுகிறோம்? இந்தக் காலத்தில் ஒன்றும் பண்ணுவதில்லை. ''தீட்டாவது, துடக்காவது? எல்லாம் ஸ¨பர்ஸ்டிஷன்'' என்று ஆலய ஸந்நிதானம் உள்பட எல்லா இடத்திலும் ஆசௌசங்களைக் கலந்து கொண்டிருக்கிறோம். பலனாகத்தான் துர்பிக்ஷம், நூதன நூதன வியாதிகள், மஹாக்ஷேத்ரங்களிலேயே விபத்துக்கள் என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஆகையால் ஐம்பது வருஷத்துக்கு முன்வரை இருந்த நடைமுறையை வைத்தே, ஆசார்யாள் எழுதினதற்கு அர்த்தம் சொல்கிறேன். இரண்டாயிரம் வருஷம் முந்தி அவர் இருந்தபோதும், அவருக்கும் எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியும் இதே ஆசார - ஆசௌசங்கள்தானே அநுஷ்டானத்திலிருந்திருக்கின்றன? 

ஒருத்தனுக்குத் தீட்டு ஸம்பவித்துவிட்டால் அந்த நாளில் என்ன பண்ணுவார்கள்? மற்றவர்கள் அவன் கிட்டேயே வரமாட்டார்கள். மேலே பட்டு விடப்போகிறான் என்று தள்ளித் தள்ளியே போவார்கள். கடனாளியாக இருக்கிறவனைக் கண்டும் பயந்து, ''எங்கே நம்மைக் கேட்டுவிடுவானோ?'' என்று மற்றவர்கள் ஒதுங்கித்தானே ஓடுகிறார்கள்! இவனும் கடன் கொடுத்தவன் எங்கே எதிர்ப்பட்டு விடுவானோ என்று பயந்துகொண்டு ஜன ஸமூஹத்தின் கண்ணில் படாமல் ஒளிந்துகொண்டுதான் போவான். தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போவது என்பார்கள், அடையாளம் தெரியாமலிருப்பதற்கு தன்னைத்தானே இப்படிப் பெரிய ஆசௌசம் ஏற்பட்டு விட்டதுபோலக் கடனாளி ஸமூஹ ப்ரஷ்டம் செய்து கொண்டுவிடுகிறான்.

ஒருத்தன் கடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதால் அத்தனை பேருக்கும் கஷ்டம். ''கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்'' என்று கம்பரே சொன்னபடி, கடன் வாங்கிவிட்டவன் கொடுத்தவனை நினைத்து எப்போதும் பயந்துகொண்டு கஷ்டப்படுகிறான்; தப்பித்துக்கொள்வதற்காகப் பொய் சொல்கிறான்; மிஞ்சினால் கடனை அடைப்பதற்காகத் திருடவும் துணிகிறான். கடன் பட்டாரைப் போல, அல்லது அதை விடவும், ''கடன் கொடுத்தார் நெஞ்சமும்'' கலங்கிக் கொண்டுதான் இருக்கம் - பணத்தை அழுதவன் இவன் தானே? அது திரும்பி வருமா வராதா என்று எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். கடன் கொடுத்தவனான இவனுக்கு எத்தனை எரிச்சலும் மனக் கொதிப்பும் உண்டாயிருக்கிறது என்பது ''கடன்காரன், கடன்காரி'' என்று வசவு ஏற்பட்டிருப்பதிலிருநந்தே தெரிகிறது.

கடன்காரன் என்றால் கடன் கொடுத்தவன், வாங்கினவன் என்று இரண்டு தினுஸாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ள இடமிருக்கிறது! வளர்ந்த குழந்தைகள் செத்துப்போனால், ''கடன்காரன் (கடன்காரி) போயிட்டானே (போயிட்டாளே) ''என்று தாயாக இருக்கப்பட்டவள் மனஸ் நொந்து பிரலாபிப்பதுண்டு. இங்கே கடன்காரன் என்றால் பூர்வ ஜன்மத்தில் நமக்குப் பணமாகவோ உழைப்பாகவோ கொடுத்தவன் என்று அர்த்தம். அப்படிக் கொடுத்ததை, கடனைத் திருப்பி வாங்கிக்கொள்கிற மாதிரி வாங்கிக்கொள்ளவே இப்போது பிள்ளையாகப் பிறக்கிறான். பெற்றவர்களுக்குச் செலவு, தேஹ ச்ரமம் எல்லாம் வைக்கிறான். இவற்றில் தான் முன் ஜன்மாவில் கொடுத்த அளவுக்குத் திரும்ப அவர்களிடம் வாங்கிக் கொண்டவுடன் கடன் தீர்ந்தாயிற்று என்று கண்ணை மூடிக்கொண்டு போய்விடுகிறான்.

''ஜன்மாந்தர கடன்காரன்'' என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம். ஒருத்தன் கடன் படுவதனால், கடன் படுகிறவன் மட்டுமில்லாமல் கடன் தருகிறவனும் கஷ்டத்துக்கு ஆளாகிறான் என்று சொல்ல வந்தேன். இப்போது நவீன 'ஐடியாலஜி' போய்க்கொண்டிருக்கிற போக்கில் கடன் கொடுத்தவர்தான் அதிகக் கஷ்டத்துக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. 

ஸர்க்காரே கடன் வாங்கிப் பெரிய பெரிய திட்டம் போடுவதாக இருப்பதால் போலிருக்கிறது, கடன்பட்டவர்களுக்குத்தான் இப்போது ஸர்க்காரில் எல்லா சலுகையும்! வெளி தேசங்களில் உள்ள லக்ஷரிகள்தான் இப்போது நம் ஸர்க்காருக்கு 'டார்கெட்' (குறிக்கோள்) ! வாஸ்தவத்தில் தேசத்தில் திருப்தியும் ஆத்யாத்மிகமான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால், ஜனங்களுக்கு இடையில் பொறாமையும் போட்டிகளும் போகவேண்டுமானால், 'வாழ்க்கைத் தரம்' என்று சொல்வதைக் குறைப்பதற்குத் தான் திட்டம் போடவேண்டும். ஆனால் வாழ்க்கைத் தரத்தை மேல் நாடுகளின் தரத்துக்கு உயர்த்தியே தீரவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு வேண்டாத வஸ்துக்களை அத்யாவசியத் தேவையாக ஆக்குவதற்கே ஸர்க்கார் திட்டம், திட்டம் என்று ஓயாமல் போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, இந்த தேசத்திலுள்ள எல்லா ஜனங்களின் கடனையும் சேர்த்து வைத்து ஸர்க்காரே ஒன்றுக்கப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போடுகிற தொகை லோகம் பூராவும் கடன்பட்டிருக்கிறது. வேண்டாத வஸ்துக்களில் ஜனங்களுக்கு அபிருசியை உண்டாக்கி விட்டு, அதனாலேயே அவர்களை சம்பள உயர்வுக்காக எப்போது பார்த்தாலும் சண்டை, ஸ்டிரைக் என்று இறங்குவதற்குத் தூண்டிக்கொண்டிருக்கிறது. 

'திட்டம்' என்ற பெயரில் திட்டமில்லாமல் செய்கிற காரியத்தால் ஏற்பட்டிருக்கிற inflation -ல் (பணவீக்கத்தில்) என்ன (வருமானம்) வந்தாலும் போதமாட்டேனென்கிறது. ஜனங்கள் கடனாளியாக வேண்டியிருக்கிறது. இதற்கு ஸர்க்காரே 'இன்ஸென்டிவ்' தருவதாக இருக்கிறது! ஜனங்களைக் கடன் வாங்குவதற்கு நன்றாகப் பழக்கி வைக்கிற ரீதியில் கிராமத்துக்கு கிராமம் பாங்குகள் திறந்து அநேக ஜனங்களுக்கு 'லோன்' கொடுக்கிறது.

இதனாலே எத்தனையோ பொய், மோசடி, கரப்ஷன், பாங்கு சொல்கிற இனத்துக்காக் கடன் வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு அதை வேறு காரியங்களுக்குப் பிரயோஜனப்படுத்துவது, அதற்காக inspection staff -க்கு 'அழுவது' முதலில் பல பேர் மனுப்போடும் போட்டியில் 'லோன்' வாங்குவதற்கே அதிகாரிகளுக்கு 'நைவேத்யம் பண்ணுவது' என்றெல்லாம் ரொம்பக் குழறுபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

அப்புறம் கடனைத் திருப்பி வசூலிப்பதும் கஷ்டமாகிறது. கட்டாயப்படுத்தி வாங்கினால் 'வோட்' போய்விடப் போகிறதே என்ற பயத்தில் கடனை write off பண்ணி விடுகிறார்கள்! சொந்தப் பணமா என்ன, ஜனங்கள் வரி முதலானவைகளைக் கொடுத்துதானே என்பதால் ஸுலபமாகக் கடனை வஜா செய்துவிட்டு நல்ல பெயரும், வோட்டும் ஸம்பாதிக்கப் பார்க்கிறார்கள். அதோடு போகவில்லை. சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்தவன் அல்லது குத்தகைப் பணம் பெற வேண்டியவன் முதலியவர்களெல்லாருங்கூடத் தங்கள் பணத்தை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதாக அவர்களை வயிறெரிய வைத்து, 'மொரடோரியம்' என்று 'ஆர்டினன்ஸ்' போட்டு விடுகிறார்கள்.

ஏழைகளுக்கு வாஸ்தவமாக நன்மை பண்ணுவதை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் பொதுவாக அடக்கப் பண்பும் எளிமையும் உள்ள நம் ஏழை ஜனங்களை வீண் டாம்பீகத்திலும், பலவிதமான பொய் பித்தாலாட்டங்களிலும் தூண்டிவிட்டு, 'பட்ட கடனைத் தீர்க்கத்தான் வேண்டும் என்ற பெரிய தர்மத்துக்கு விரோதமாக நாம் போனாலும் ஸர்க்கார் நமக்குத்தான் ஆதரவாக இருக்கும்' என்று துணிச்சல் கொள்ள வைப்பது நன்மை இல்லவே இல்லை; தீமைதான். 'வோட்டுப் பெட்டி பலம் நமக்குத் தானிருக்கிறது' என்று அவர்களை எண்ண வைத்து, அதற்காக தர்ம பலத்தையும் தெய்வ பலத்தையும் அவர்கள் இழக்கும்படிச் செய்வது அவர்களுக்குச் செய்கிற தீமைதான்.

கடன் கொடுத்தவன் எப்படியெல்லாம் கடின சித்தனாகிக் கொடுமை பண்ணுகிறான் எனபதும் எனக்குத் தெரியாமலில்லை. அநியாய வட்டி வாங்குவது, எத்தனை திருப்பினாலும் அசலில் கழித்துக் கொள்ளாமல் வட்டியிலேயே கழித்துக் கொள்வது என்று அவர்களும் அநேக அக்ரமங்கள் பண்ணத்தான் பண்ணுகிறார்கள்.

கடன் வாங்குவது என்ற தப்பை ஒருவன் பண்ணுவதால்தான் இப்படி இன்னொருத்தன் (கடன் கொடுப்பவன்) பாவம் செய்பவனாக ஆகிறான். கடைசியில் ஸர்க்கார் அவனுக்கு நாமம் போடுகிறபோது அவனும் கஷ்டப்படுகிறான்.

ஆதலால், அடிமுதலில் எவனானாலும் கடன் என்றே போகாமல் தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். கடன் கஸ்தியால்தான் அநேகர் திருடர்களாவது போலி ஸந்நியாஸிகளாகி ஊரை ஏமாற்றுவது. மானஸ்தர்களில் பலர் குடும்பத்தோடு பிராணஹானி பண்ணிக் கொள்வதாகவும் அவ்வப்போது பேப்பரில் பார்க்கும்போது மனஸ் வேதனைப்படுகிறது.

முன்னயே சொன்ன மாதிரி கடன் கொடுத்தவன், கடன் பட்டவன் என்ற இரண்டு பேர் மட்டுமில்லாமல் ஊரார் எல்லாருமே ஒருவன் கடனாளி என்றால் ''அவன் எங்கே நம்மை உபத்ரவம் பண்ண வருவானோ?'' என்று ஓடும்படியிருக்கிறது. கடன் பழக்க்த்தினால் இப்படி லோகம் முழுக்க சிரமங்கள் ஏற்படுவதால்தான், இந்த லோகத்திலேயே அதுதான் பெரிய தீட்டு என்று ஆசார்யாள் தீர்ப்புப் பண்ணிவிட்டார். பரோபகாரம் என்பதைச் சொல்லும்போது, உபகாரம் பண்ணாவிட்டாலும் பர அபகாரம் எப்படியெப்படிப் பண்ணாமலிருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமல்லவா? Ten Commandments (கிறிஸ்தவர்களின் பத்துக் கட்டளைகள்) கூட எல்லாமே negative -ஆகத்தானே (இன்னின்னவற்றை செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் கூடாது என்பதாகத்தானே) இருக்கின்றன! வைதிகமான ஸாமான்ய தர்மங்களிலுள்ள அஸ்தேயம் (திருடாமை) , யோக சாஸ்திரத்திலுள்ள அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக்கொள்ளாமை) என்பதாக 'நெகடிவ்'ஆக உள்ள இரண்டுமே பரோபகாரத்துக்கு அங்கம்தான். இந்த இரண்டையும் பின்பற்றினால் கருமித்தனம், ஊதாரித்தனம், கடன் வாங்குவது எல்லாமே போய்விடும்.

பரோபகாரத்துக்காகவே சிக்கனம் - மஹா பெரியவா


சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால்தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு, மேல்நாடுகளைப் பார்த்து material co விதி ort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால், தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும், தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைகிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறதிபோல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக - கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்னமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம்' என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் 'தனக்கு மிஞ்சி' தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

Thursday, 20 June 2013

கடமை தவறியவனுக்கு, பரோபகாரம், விபரீத பலனே தரும். -மஹா பெரியவா


''தன் கையே தனக்கு உதவி'' தன் கை பிறருக்கும் உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் தன் கை தன் கார்யத்துக்கு உதவியாக இல்லாமல், தன் கார்யத்துக்கு அகத்தின் மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் கையில் நம் கார்யப் பொறுப்பை போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம் பண்ணுவது என்பது தப்பு. 

ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாடமாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான்;அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.

தொண்டு உள்ளத்துக்கு லக்ஷணம் அன்பும் அடக்குமும்தான். ''தொண்டர் தம் பெருமை''என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயழிய, தொண்டு செய்கிறவனுக்குத் 'தான் பெரியவன்'என்ற எண்ணம்லவலேசங்கூட இருக்கக்கூடாது. தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கு ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்வதென்றால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம். அடக்கமும் அன்பும் இருந்தால் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும் அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் எவனும் வெளியிலே தொண்டு செய்யப் போகமாட்டான்.

தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்;தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமேயழியத் தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் கௌரவஹீனம் என்ற உணர்ச்சி பரோபகாரத்தில் ஈடுபடுகிற எவனுக்கும் basic -ஆக ஏற்பட்டுவிட்டால் இப்போது கம்ப்ளெய்ன்ட் வந்தது போலக் கோளாறாக ஆகவே ஆகாது. லோக ஸேவைக்குப் போகிறவர்கள், ' என் கார்யம் பூராவையும் நானே பார்த்துக் கொண்டுதான் பொதுத்தொண்டுக்குப் போவேன் ' என்று பிரதிக்ஞை பண்ணிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும்.

தன் கார்யம் என்பதில் தன் வீட்டுக் கார்யம், மாதா-பிதா-பத்னி-புத்ரர்-ஸஹோதரர் முதலான வீட்டு மநுஷ்யர்களின் கார்யம் அடக்கந்தான்.

இதெற்கெல்லாம், basic -ஆக ஒரு ஞானம் இருந்துவிட்டால் போதும். அதாவது நம்முடைய லோக ஸேவையால்தான் லோகம் நடக்கிறது என்ற பிரமை ஒருகாலும் இருக்கக்கூடாது. மரம் வைத்தவன் தண்ணீர் விடுகிறான். லோகத்தைப் பண்ணின ஒருத்தன் இருக்கிறானே அவனே அதை ரக்ஷித்துவிட்டுப் போவான். அதற்கு நாம் ஒரு கருவிதான். நம்முடைய பாப கர்மா கழியவே பரோபகாரமே தவிர நாமில்லாவிட்டால் அந்த உபகாரம் லோகத்துக்குக் கிடைக்காமல் போய்விடாது என்ற ஞானம் இருந்தால் அளவோடு நிற்போம். 

ஜீவனத்துக்கு அவச்யமான சொந்தக் கார்யங்கள், குடும்பக் கடமைகள் இவற்றைப் பண்ணிக் கொள்வதிலும் கர்மநாசம், சித்த சுத்தி ஏற்படத்தான் செய்யும். ஈஸ்வராநுக்ரஹத்தில் இப்படிப்பட்ட பொறுப்புகள் அதிகமில்லாதவர்கள் நிரம்பப் பரோபகாரப் பணிகளில் ஈடுபட்டே ஆத்மாவைப் பரிசுத்தி பண்ணிக்கொள்ள வேண்டும்;அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே ட்யூட்டி ஆகிறது. டொமெஸ்டிக் ட்யூட்டிபோல ஸோஷல் ட்யூட்டியும் உண்டுதான். எத்தனை டொமெஸ்டிக் ட்யூட்டி இருந்தாலும், அதைப்பண்ணிவிட்டு, அதைப் பண்ணின அப்புறந்தான் ஸோஷல் ட்யூட்டியும் செய்ய வேண்டும். ரொம்ப அதிகம் குடும்பப்பொறுப்பு இருக்கிற ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருக்குமே நியாயமான சொந்தக் கடமைகளைப் பண்ணிவிட்டும் ஸமூஹக் கடமை பண்ண அவகாசம் இருக்கவேசெய்யும். 

என் கடமையில் தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டே உன் குடும்பமான - வஸுதைவ குடும்பகம் : லோகமெல்லாம் ஒரு குடும்பம் என்கிறபடி - ஸகல மக்களுக்கும் என்னாலான பணியைச் செய்ய அருள் பண்ணப்பா''என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டால் அவன் அப்படி அனுக்ரஹம் செய்வான். அதுதான் நாம் பண்ணிக்கொள்ள வேண்டிய வேண்டுதல்.

எப்படியானாலும் தன் காரியத்தைப் பிறர் கையில் விட்டுவிட்டும், அகத்து வேலையைக் கவனிக்காமலும் ஊர்க் காரியம் என்று போவதில் பிரயோஜனமில்லை. இப்படிப் போனதில் அந்தப் பையன், வீடு என்றாலே எரிச்சல் படுகிறான் என்றார்கள். இப்படிக் கோபமும் தாபமும்தான் பரோபகாரம் பண்ணினதில் ஒருத்தனுக்கு மிஞ்சினது என்று ஏற்பட்டால் அது சித்த சுத்திக்குப் பதில் சித்த அசுத்திக்குத்தான் வழி பண்ணியிருக்கிறது என்றே ஆகிறது. அதாவது பரோபகாரம் நல்ல பலன் தராதது மட்டுமில்லாமல், விபரீத பலனே உண்டாக்கியிருக்கிறது!சாஸ்த்ர ரீதியான கடமையை விட்டதற்காக இப்படி நல்லதே தண்டனையாக ஆகிறது!

Wednesday, 19 June 2013

போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விளக்கம்

தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud (மோசடி) தான். தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் - ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது 'ஹிபாக்ரிஸி' (போலி வேஷம்) தான். 

இப்படியெல்லாம் பண்ணிவிட்டு பந்துக்கள் எடுத்துக்காட்டினால் கோபம் வருகிறது, எரிச்சல் வருகிறது என்றால் பரோபகாரத்தால் இவனுக்கு எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை என்றுதான் அர்த்தம். 'எல்லாரிடமும் அன்பாயிருக்கணும், மதுரமாய்ப் பழகணும்' என்பதுதான் தொண்டு செய்கிறவனுக்கு லக்ஷணம். 

பொதுத்தொண்டு என்பதற்காகவே வீட்டு மநுஷ்யர்களிடம் அன்பு போய், எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் இவன் தொண்டு செய்து என்ன புண்யம்? இவனுக்கு என்ன சித்த சுத்தி ஏற்பட முடியும்? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கிற மாதிரி பண்ணிக்கொள்ளக் கூடாது. 

தன் லிமிடேஷனை எவனும் எப்போதும் உணர வேண்டும். மநுஷ்யராய்ப் பிறந்துவிட்டோம். அதனால் நாம் பல திநுஸில் கட்டுப்பட்டுதான் கிடக்கிறோம். ஆசைகள், ஆஸ்தைகள் பெரிசாய் இருக்கலாம். அவை நல்லதாகவும் இருக்கலாம். லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்றே ஆர்வமிருந்தாலும் நமக்கும் நம் குடும்பத்துக்கும் செய்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதை உணர்ந்து இந்த ட்யூட்டிக்கு ஹானியில்லாமல்தான் லோக ஸேவை செய்ய வேண்டும்.

''தன்னைப்பெற்ற தாயார் கிண்ணிப்பிச்சை எடுக்கிறபோது கோதானம் பண்ணினானாம்'' என்று சொல்வதுண்டு. முதலில் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். தன் சொந்தக் கார்யங்களை ஒருகாலும் பிறத்தியாரிடம் காட்டிக்கொடுக்கவே கூடாது. இதுதான் சாஸ்திரம். அவனவன் தன் வஸ்திரத்தை தானேதான் தோய்துக்கொள்ள வேண்டும். 'டயார்க்கி'யில் (இரட்டை யாட்சியில்) ராஜகோபலாச்சாரி மெட்றாஸ் ப்ரஸிடென்ஸிக்கு ப்ரைம் மினிஸ்டராக (அப்போது டில்லியில் ப்ரைம் மினிஸ்டர் இல்லாததால் ப்ரெஸிடென்ஸியில் பிரதான மந்திரியாக இருக்கப்பட்டவரை ப்ரைம் மினிஸ்டர் என்று சொல்வார்கள். இப்போது பிரெஸிடென்ஸியை ஸ்டேட் என்றும், இதன் ப்ரைம் மினிஸ்டரை சீஃப் மினிஸ்டர் என்றும் சொல்கிறார்கள். இப்படி அவர் ப்ரைம் மினிஸ்டராக) இருந்துபோதுகூடத் தன் துணியைத் தானேதான் தோய்த்துக் கொண்டார். 

இப்படியே பல பேர் பெரிய ஸ்தானத்திலிருந்தபோதுகூடத் தன் பூட்ஸுக்குத் தானேதான் பாலிஷ் போட்டுக்கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். நம் கார்யத்தை நாமே செய்து கொள்கிறதிலே கௌரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கௌரவக் குறைச்சல். நாம் பரோபகாரி என்று வெளியிலே 'ஷோ' பண்ணிக்கொண்டு ஊராரிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்வதற்காக வீட்டுக்காரர்களெல்லாம் நமக்கு பரோபகாரம் பண்ணும்படியாகத் தாழந்து போய் அவர்களுக்கு ச்ரமத்தைக் கொடுத்து நல்லெண்ணத்தையும் போக்கிக் கொள்வது நமக்கே நாம் பண்ணிக்கொள்கிற கௌரவக் குறைச்சல்தானே? 

இதிலே ஸைகலாஜிகலாக ஒன்று கவனிக்க வேண்டும். ஒருத்தன் தன் வேலை, வீட்டு வேலைகளை மற்றவர்களிடம் விட்டுவிட்டுப் பொதுப்பணிக்குப் போகிறான் என்னும்போது, வீட்டின் மற்ற பேருக்கு இவனிடம் ஏற்படுகிற அதிருப்தியில் ஸமூஹத்தொண்டே பிடிக்காமல் போய்விடுகிறது. ''போதும், இன்னொருத்தன் ஊர்க்கார்யம் என்று உழப்பறித்துக்கொண்டு அகத்துக் காரியத்தை விட்டிருப்பது. நமக்கு இந்த ஸேவையும் கீவையும் வேண்டாம்'' என்று அவர்களுக்கு ஒதுங்கிப்போகத் தோன்றிவிடும். அதுவே அவன் அளவறிந்து அகத்துக் காரியத்தையும் கவனித்துக் கொண்டு, பொதுக் காரியமும் பண்ணினானென்றால் அப்போது வீட்டின் மற்ற மநுஷ்யர்களும் இவனோடுகூடவெளித்தொண்டுக்கு வந்து தங்களாலானதைச் செய்வார்கள் வீட்டுக் காரியத்தைக் கவனிப்பதால் இவனொருத்தன் செய்யும் ஸோஷல் ஸர்வீஸ் குறைந்து போகிறதென்றால், இப்போது அதைவிட ஜாஸ்தியாக மற்றவர்களின் ஸர்வீஸ் ஸொஸைட்டிக்குக் கிடைத்துவிடும். இவன் அதியாகப் போய் வீட்டு மநுஷ்யர்களின் அதிருப்தியை ஸம்பாதித்துக் கொள்ளும்போதோ, தன் நோக்கத்துக்கே பாதகமாக, அவர்களால் ஏற்படக்கூடிய ஸோஷல் ஸர்வீஸைத் தடுத்துவிடுகிறான்!

தொண்டுக்குப் போகிறவர்களுக்கு ஒரு 'ட்ரிக்' சொல்லித் தருகிறேன். அன்போடு பதவிசாக நடப்பதுதான் 'ட்ரிக்'! வெளிமநுஷ்யர்களிடம் மட்டுமில்லை, அகத்துப் பேரிடமும் இப்படிப் பரிவாக, பணிவாக இருந்தானானால் அவர்களே, ''நாம்தான் வீட்டையே கட்டிக்கொண்டு அழுகிறோம். இவனாவது லோகத்துக்குப் பண்ணி, நமக்கும் சேர்த்துப் புண்யம் ஸம்பாத்தித்து தரட்டும்'' என்று நினைத்து அவனிடம் வீட்டு வேலைகளைக் கூடிய மட்டும் காட்டாமல் தாங்களே பண்ணுவார்கள். 

ஆனால், தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால், தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் - ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது 'ஹிபாக்ரிஸி' (போலி வேஷம்) தான். 

Friday, 14 June 2013

பிரகஸ்பதி கொடுத்த வரம் - மஹா பெரியவா

“இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை என்ன விலை?”

“நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!”

மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி முடித்ததும் “அது போலத்தான் அர்ச்சனை பூக்களும், வில்வத்திலேயும், துளசியிலேயும். எத்தனை ஓட்டை தெரியுமா! நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா? பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்” என்றார்.

வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா.. அவாளுக்கு கிரகங்களும் நிறைய உபசரணை பண்றா.

ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.

“வீட்டுலே யாருமே இல்லே…பொழுது போகலே..”ன்னு தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு புரியும்.

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா
ஆசிர்வாதம் பண்றார்.

தாயார், குடி இருந்த கோவிலில்லையா? இதேபோல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.

குருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும். பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.
  

Saturday, 8 June 2013

எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம். - மஹா பெரியவாளின் தன்னிலை விளக்கம்


இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு அளக்கிறேனென்றால், நான் நம் ஹிந்து தர்மப்படி பரோபகாரம் செய்ய வேண்டும் என்பதை emphasize பண்ணினதில் தனி ஆள், குடும்பம் இவற்றின் கார்யம் கெட்டுபோகும்படிப் பண்ணிவிட்டேன் என்று ஒரு 'கம்ப்ளெய்ன்ட்'வந்திருக்கிறென்றால், இதற்கு நேர்மாறாக, நம் மதத்துக்கே தனிஆளும், அவனை உருவாக்குகிறதும் அவனால் உருவாக்கப்படுவதுமான அவனுடைய குடும்பமுந்தான் அச்சாணியாயிருக்கிறதேயொழிய, பொதுப்படையான ஜன ஸமூஹமல்ல என்றும் ஒரு 'கம்ப்ளெய்ன்ட்' இருக்கிறது என்று காட்டத்தான்!

பரோபகாரத்தை விஷயமாக எடுத்துக்கொண்டபோது நான் தனிஆளின் கடமை, குடும்பக் கடமை இவற்றை neglect பண்ணிவிட்டேன் என்கிறமாதிரியே, நம்முடைய ஸமயசாரங்களைப்பற்றி நான் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு ஸொஸைட்டியை நான் ignore பண்ணினதாகச் சண்டை போட்டவர்களும் உண்டு. சண்டை என்றால் சண்டை இல்லை. வசவு என்று நான் சொன்னதை கௌரமான முறையிலேயே அவர்கள் பண்ணினார்கள் என்பதைப்போல, சண்டையும் மரியாதையாகத்தான் போட்டார்கள். நான்தான் அதில் இருக்கக்கூடிய நியாயம் எனக்கு நன்றாக உறைப்பதற்காகச் 'சண்டை' என்று சொல்லிக்கொள்கிறேன்.

நான் சொன்னது எல்லாவற்றையும் பேப்பர்காரர்கள் போடவில்லை என்று ஸமாதானம் சொல்லி நான் தப்பித்துக்கொள்ள இஷ்டப்படவில்லை அந்தந்த ஸமயத்தில் எந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிறேனோ அதில் கேட்பவர்களுக்குக் கெட்டியான பிடிமானம் உண்டாகவேண்டும் என்றே அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாக stress செய்துவிடுகிறேன் என்று தோன்றுகிறது. இப்படிச் சொன்னால்கூடப் பிறத்தியாரை உத்தேசித்துத்தான் இப்படி செய்கிறேன் என்று காட்டி எனக்கு நல்லபேர் கேட்கிற மாதிரி இருக்கிறது. அதனால் இப்படியெல்லாம் நியாயம் கல்பித்துக் கொள்ளாமல் எந்த ஸப்ஜெக்டை எடுத்துக்கொள்கிறேனோ அதுவே என்னைக் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது, அதன் பக்ஷமாகவே என் கண்ணைத் திருப்பிவிட்டு விடுகிறது என்று வேண்டுமானால் ஒப்புக்கொண்டு விடுகிறேன்.என் விஷயம் இருக்கட்டும். இப்போது பொது விஷயத்தைப் பார்க்கலாம். வைதிக ஸமயாநுஷ்டானம் என்பதைப்பார்த்தால் அது முக்யமாக தனி மநுஷ்யனைத்தான் centre -ல் வைத்திருக்கிறது. அதில் ஒரு ஸமூஹப்பணி. ஸமூஹத்தை நலமடையச் செய்யும்போதே, அப்படிச் செய்வதாலேயே இந்தத் தனி மநுஷ்யன் ஆத்ம பரிபக்குவம் அடைவதுதான் இந்தப் பரோபகாரத்துக்கும் குறிக்கோள்*. 

ஸேவைக்குப் பாத்திரமாகிறவனும், அதாவது தானம் பெறுகிற தீனன், சிகித்ஸை பெறுகிற நோயாளி, வித்யாதானத்தால் ப்ரயோஜனமடையும் மாணவன், இப்படியாகப் பலவித பரோபகாரங்களுக்கும். பாத்ரமாக இருக்கப்பட்டவனும் இந்த லௌகிக உபகாரங்களைப் பெற்றதோடு த்ருப்தி பெற்று நின்றுவிடக்கூடாது. இவனும் தன்னுடைய இந்த லௌகிகமான problem தீர்ந்தது, இதற்கான விசாரம் இனி இல்லாமல் ஆத்மா பக்கம் விச்ராந்தியாகத் திரும்புவதற்குத்தான் என்று புரிந்து கொண்டு அந்த வழியில் போக வேண்டும். வெறுமே லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பரோபகாரம் நின்றுவிடுமானால் அது செய்தவனுக்குத் தான் சித்த சுத்தி என்ற பெரிய லாபத்தைக் கொடுப்பதாகுமேயழிய உபகாரம் பெற்றவனுக்கு சாச்வதமான லாபம் தரவில்லை என்றேயாகும்.

நான் ஸோஷல் ஸர்வீஸ் பற்றியும் பேசியிருக்கிறேன்;தனி மநுஷ்யனின் அநுஷ்டானங்கள் பற்றியும் பேசியிருக்கிறேன். ஸோஷல் ஸர்வீஸில் அநேக லௌகிகமான உபகாரங்களைச் சொல்லியிருக்கிறேன். அன்னதானம் செய்வது, வைத்யசாலை வைப்பது, வித்யாதானம் (ஸெக்யூலர் எஜுகேஷனையும் சொல்லியிருக்கிறேன்) , வேலையில்லாதவர்களுக்கு உத்தயோக வசதி பண்ணித்தருவது, ஏழைகளுக்கு விவாஹத்துக்கு உதவி செய்வது என்று நான் சொன்ன அநேக விஷயங்கள் லௌகிகமானவைதான். இவை நேரே ஆத்மாபிவிருத்திக்கு உதவுகிற பணிகளல்ல.

ஆனால் ஒரு இன்டிவிஜுவலின் ஆத்மாபிவிருத்திக்காக நான் அநுஷ்டானங்களைப் பற்றிச் சொல்லும்போது ஜெனரலாக க்ருஹஸ்த தர்மம், ஸ்த்ரீ தர்மம் என்றெல்லாம் சொன்னாலும், லௌகிக அம்சங்களை விஸ்தாரப்படுத்திச் சொன்னதில்லை. ஆத்மாபிவிருத்தியை aim -ஆக (லக்யமாக) வைத்தே அதற்காக ஸ்த்ரீ புருஷர்கள் தனி வாழ்க்கையிலும் குடும்பத்திலும் என்ன செய்ய வேண்டும். என்பதை மாத்திரந்தான் சொல்லி வந்திருக்கிறேன். மற்றபடி 'ஒரு ஏழைக்குக் காசுபோடு' என்கிற மாதிரி 'உனக்குக் காசு தேடிக்கோ' என்று சொன்னதில்லை. கதியில்லாத ஒரு வியாதியஸ்தனுக்குச் சிகித்ஸை பண்ணு' என்று சொன்ன மாதிரி, 'உனக்கோ, வீட்டு மநுஷ்யர்களுக்கோ உடம்பு ஸரியில்லாவிட்டால் டாக்டரிடம் காட்டு' என்று நான் சொன்னதில்லை;' ஏழைப்பிள்ளை ஒருத்தனுக்குப் படிப்புக் கொடு; வேலை பண்ணி வை' என்று சொல்லியிருக்கிறேனே தவிர 'உன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து நல்ல உத்யோகமாக ஸம்பாதித்துக்கொடு' என்று சொன்னதில்லைதான்!' எவனோ ஒரு ஏழையின் பெண்ணுக்குக் கன்னிகாதான ஸஹாயம் பண்ணு' என்பேனே தவிர, 'உன் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணு' என்பதில்லை. 'ஊருக்குக் குளம் வெட்டு' என்பேனே தவிர 'உன் வீட்டுக்குக் குழாய் போட்டுக்கொள்' என்று சொன்னதில்லை.

ஏன்? இந்த லௌகிக உதவிகளை இன்னொருத்தனுக்குப் பண்ணுவதே இவனுக்கு ஆத்மிகமாக உதவி பண்ணுகிறது இவனுடைய சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்கிறது. ஆனால் இதே லௌகிக விஷயங்களைத் தனக்கும் தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களுக்கும் பண்ணிக்கொள்கிறபோது அதிலே ஆத்ம ஸம்பந்தமாக எந்த லாபமும் சேராமலே போகிறது. காரணம் - தான், தன் மநுஷ்யர் என்பவர்களுக்குச் செய்வது தனக்கே பண்ணிக்கொள்ளும் உபகாரந்தான். அதாவது லௌகிகமான லாபம் இவனுக்கே கிட்டுகிறது. நிறையப்பணம் நஷ்டப்பட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிப் பெரிய இடத்தில் ஒப்படைக்கிறான் என்றாலுங்கூட அதிலும் நம் பெண் நல்ல இடமாகப் போய் அடைந்தாளே என்ற ஸ்வயபாச திருப்தி என்ற லௌகிகமான ஸ்வயலாபம் இருக்கத்தான் செய்கிறது. லௌகிக லாபத்தைப் பிறத்தியானுக்குக் கிட்டப் பண்ணினால் அதற்குப் பிரதியாக இவனுக்கு ஆத்மலாபம் கிடைப்பதே நியாயம். லௌகிக லாபமே நேராக இவனுக்குக் கிடைக்கிறபோது அதற்கு குட்டிப் போட்டுக்கொண்டு ஆத்ம லாபமும் எப்படி கிடைக்கும்? 

ஆத்ம லாபத்துக்கு உதவாத விஷயம் என்பதால்தான் சொந்தப் பணியைப் பற்றி நான் சொல்வதில்லை. உபதேசம் செய்கிற எவருமே சொல்வதில்லை. சொல்லாமலே அவனவனும் இவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறான். லோகமெல்லாம் நன்றாயிருக்ககணும் என்று பிரார்த்திக்க வேண்டுமென்றுதான் யாரும் உபதேசிப்பார்களே தவிர, 'நான் நன்றாயிருக்கணும்; என் மநுஷ்யாள் நன்றாயிருக்கணும்' என்று பிரார்த்தித்துக் கொள்ளும்படிச் சொல்வதில்லையே!

யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவனவனும் தானாகவே இப்படித் தன்நலத்தை, தன் குடும்ப நலத்தைப் பிரார்த்தித்தபடிதான் இருக்கிறான். அந்த நலம் ஆத்மாவைப் பொருத்ததாயிருந்தால் இப்படிப்பட்ட பிரார்த்தனை நியாயமானது தான். லௌகிகமாகவும் ஜீவனத்துக்கு அவசியமான அளவுக்கு மட்டும் வேண்டிக்கொண்டால் தப்பில்லைதான். ஆனால் எல்லாரும் இந்த லௌகிக 'நலம்' என்பதையே ஆத்மாவுக்கு ஹானி உண்டாக்குகிற அளவுக்குப் பிரார்த்திக்கிறார்கள். 


பிரார்த்திப்பதோடு அதற்கான முயற்சிகளை ஓயாமல் பண்ணியபடி இருக்கிறார்கள். இதிலேயே ஓவராக ஈடுபட்டு பாசத்தினால் தர்மாதர்மங்களைக்கூட மறந்து, தப்பு வழியில் போயும் இம்மாதிரி லௌகிக அபிவிருத்தியிலேயேதான் அநேகமாக எல்லாரும் கண்ணாயிருக்கிறார்கள். இதனாலேயே பரோபகாரத்துக்குப் பொழுதோ, மனஸோ, த்ரவ்யமோ எதுவும் கொடுக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனதால் இப்படிப்பட்டவர்களை ஸ்வயவிஷயம், ஸ்வயகுடும்ப விஷயம் இவற்றைக் குறைத்துக்கொண்டு ஸமூஹ க்ஷேமத்துக்கானவற்றைக் கவனிக்கும்படித் திருப்ப வேண்டியதுதான் எங்களைப் போன்றவர்களின் கடமையாயிருக்கிறது. ஆனதால், நான் மட்டுமில்லை, ஜனங்களை நல்ல வழியில் திருப்புவதற்குப் பிரயத்தனப்படுகிற பொறுப்பு கொண்டே எவருமே, ''சொந்த விஷயங்களை கவனித்துக்கொள்; வீட்டுக் கார்யங்களை கவனித்துக்கொள்'' என்று உபதேசம் பண்ணுவதில்லையென்பது மட்டுமில்லாமல், ''சொந்த விஷயங்களையே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. இப்படிப்பட்ட ஆசைகளை, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அதனால் லௌகிக உழலலையும் குறைத்துக்கொண்டு, கொஞ்சமாவது ஆத்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்கு வழியாக, ஒரு அங்கமாக ஸமூஹத்தை, லோகத்தை கவனித்துத் தொண்டு செய்யுங்கள்''- என்றே சொல்லும்படியிருக்கிறது. 

எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ என் ஜாக்ரதைக் குறைவால், நான் பரோபகாரத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு qualifying clause (நிபந்தனைப் பிரிவு) போடாமலே இருந்துவிட்டேன் என்பதற்காக என்னை வையத்தான் வேண்டும்.  தம்பதியாக இரண்டு பேர் வந்து இதைப்பற்றிய வேறே தினுஸான அபிப்ராயம் சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்களில் அகமுடையான் கொஞ்சம் எடுத்துக்கொடுத்தவுடன், பெண்டாட்டியும் சேர்ந்து கொண்டுவிட்டான். 'வசவு, வசவு' என்று நான் சொன்னாலும் அவர்கள் தாபத்தை ரொம்ப அடக்கிக்கொண்டு, வார்த்தையில் கொஞ்சம்கூடப் பதட்டப்படாமல், மரியாதைக் குறைவாக ஒரு சொல்கூடச் சொல்லாமல்தான் பேசினார்கள். 

கோபப்பட வேண்டிய இடத்தில் துக்கப்பட்டுக்கொண்டே சொன்னார்கள். ஆனாலும் அதை வசவு என்று வைத்துக் கொண்டால்தான் எனக்கு ரோஷம் வந்து கொஞ்சம் deep -ஆக என்னை நானே அலசிப் பார்த்துக்கொள்வேன் என்று தோன்றியதால் ''வசவு, வசவு''என்று சொல்கிறேன்.

அதனால் அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம் யதார்த்தத்தில் ஏற்பட்டுவிட்டதால் திட்டித்தானிருக்க வேண்டும். ஆனால் வயஸு, லாயக்கிருக்கோ இல்லையோ அதுவாக வந்து சேர்ந்துவிட்ட 'குரு ஸ்தானம்', இதுகளை உத்தேசித்துத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள். 

அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுவிட்டது அவர்கள் வீட்டுப் பிள்ளை, பிரம்மசாரிப் பையன், வேலையிலிருக்கிறவன், என் பரோகார உபதேசங்களைப் படித்துவிட்டு அதிலேயே ஓவராக ஈடுபட்டு விட்டானாம். தன் கார்யம், வீட்டுக் கார்யம் எதையும் கவனிப்பதில்லையாயம். ஆபீஸ் கார்யம்கூட ச்ரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போர்து பார்த்தாலும் பிடி அரிசி கலெக்ஷன், (மாடுகளுக்காக) காய்கறித் தோல் கலெக்ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்ன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் - ஆஸ்பத்திரியில் பிரஸாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம்.

''தான் கட்டிக்கொண்ட துணியைக்கூடத் தோய்க்கிறதில்லை; இவள்தான் தோய்த்துப்போட வேண்டியிருக்கு'' என்று அந்த மநுஷ்யர் கம்ப்ளெயின் பண்ணினார். உடனே அவர் behalf -ல் அந்த அம்மாள் பரிந்துகொண்டு, ''வீட்டுக்கு ஒரு ஸாமான், காய்கறி பார்த்து வாங்கிப் போடுகிறதில்லை. சொன்னால்கூடக் காதில் போட்டுக்கொள்வதில்லை. 

இத்தனை வயஸுக்கு இவரேதான் பண்ணும்படி இருக்கிறது'' என்று சொன்னாள்.''ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம். ஏதோ கொஞ்சம் அகத்தில் தலைகாட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்று முடிந்த மட்டும் நாங்களும் வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் மநுஷ்யர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை. நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்'' என்று சொன்னார்கள். பெற்ற மனஸு!

அவர்கள் அப்படிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், ''இந்தக் கஷ்டம் உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை ஸரி பண்ணணும்'' என்று அவர்கள் இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். இனிமேலே எனக்குப் பிரஸங்கம் பண்ணுகிற உத்தேசமில்லை*. ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரஸங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவச்யமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, ''without prejudice to'' (இன்னதற்கு ஹானி இன்னியில்) என்று அநேக ஒப்பந்தங்களில் qualifying clause போடுகிறார்களே, அந்த மாதிரி இதற்கும் ஒரு நிபந்தனை, 'தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்' என்றும் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது ஸமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த (பரோபகார) ஸப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.

''தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்'' என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா?'' சொல்லிக்கொள்வதே 'பெரியவா' மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?'' என்றே பலபேர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.


இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? 'வசவு', 'வசவு' என்று இத்தனை நாழி நான் சொன்னதை 'உபதேசம்' என்று சொல்லியிருக்கலாம். வசவானால்தான் feeling -ஐக் கிளப்பிவிடும் என்று அப்படிச் சொன்னேன். அதனால் உண்மையை அலசிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வழி ஏற்படுமென்றேன். அதைவிட 'உபதேசம்' என்று அடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டால் இன்னம் ச்லாக்யம் என்று தோன்றுகிறது. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் 'ஜெனரல் ரூல்' என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்துகொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், ''சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது'' என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, ''அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது'' என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம். 

மற்ற மதங்களுடன் வித்யாஸம் - மஹா பெரியவா


'' ஸங்கம் சரணம் கச்சாமி'' என்பதாக புத்தர் பல பேர் சேர்ந்து ஆர்கனைஸேஷனாக மதத்தைக் காப்பாற்றும்படிப் பண்ணினார். கிறிஸ்டியானிடியிலும் mass, congregation என்று எல்லாரும் சேர்ந்துதான் செய்கிறார்கள். மசூதியிலும் இப்படித்தான். இஸ்லாங்காரர்களுக்குள் இருக்கிற ஆர்கனைஸேஷனல் கட்டுப்பாடு சொல்லிமுடியாது. 

ஸிக்குகள், பார்ஸிக்காரர்கள் மாதிரி எண்ணிக்கையிலே குறைச்சலாயிருக்கிறவர்களைப் பார்த்தாலோ, அங்கேதான் எண்ணிக்கைக்கு எதிர் proportion -ல் ஆர்கனைஸேஷன், கட்டுப்பாடு இன்னும் ஜாஸ்தியாயிருக்கிறது. தங்களுடைய சின்ன ஸமூஹம் சிதறிவிடக்கூடாது என்பதாலேயே அவர்கள் ஸமய ரீதியில் ஸமூஹம் முழுவதும் பிரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும்படி வைத்து நடத்துகிறார்கள்.

ஹிந்துமதம் தவிர மற்றவை எல்லாமே social base (ஸமூஹத்தை அடிப்படையாகக் கொண்டவை) என்கிறபடிதான் அவற்றின் மத வழிபாடு அமைந்திருக்கிறது. தனியாக அவனவனும் meditate பண்ணுவது (தியானிப்பது) என்பது எந்த மதத்திலும் இல்லாமலில்லை. புத்தமதத்தில் குறிப்பாக இது விசேஷ ஸ்தானம் பெற்றுத்தான் இருக்கிறது. ஆனாலுங்கூட கூட்டுப்பூஜை தவிர வீட்டுப்பூஜை என்று மற்ற மதங்களில் இல்லை. எல்லோரும் சேர்ந்து கூட்டு வழிபாடு, வர்ண-ஆச்ரமங்களால் ஏற்படும் தனித்தனி அநுஷ்டானமில்லாமல் எல்லாருக்கும் ஒரேவிதமான அநுஷ்டானங்கள் என்பவைதான் மற்ற மதங்களில் முக்யமாக இருக்கின்றன.

''மற்றவர்கள் சர்ச்சில், மசூதியில், குருத்வாராவில் கூட்டு வழிபாடு பண்ணுகிறார்களென்றால் நாமும்தானே கோயிலில் சேர்ந்து உத்ஸவாதிகள் பண்ணுகிறோம்?'' என்று கேட்கலாம். வாஸ்தவந்தான். ஆனால் அவர்கள் மாஸ், நமாஸ் பண்ணுவது போலக் கோயில்களில் நாம் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றும் செய்வதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். கோயில்கள்தான் நம் வேத பாரம்பர்யத்துக்கே backbone (முதுகெலும்பு) -ஆக இந்த நாகரித்தைக் காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்றாலும், கோயில் மூலமாக நமக்குக் கிடைக்கிற ஈஸ்வர ப்ரஸாதத்தை இன்டிவிஜுவல் அநுஷ்டானத்தால் விருத்தி பண்ணிக் கொள்ளும்படியாகவே நம் மதம் அமைந்திருக்கிறது. 

ஆலயங்களில் ரிஷிகளின் தபஸை டெபாஸிட் மாதிரிப் போட்டு வைத்திருந்து அதிலுருந்து நாம் எடுத்துக் கொள்வது நிஜம். மூர்த்திகளிலிருந்து தெய்வாநுக்ரஹம் கிடைப்பது நிஜம். மந்த்ர பூர்வமான ஆராதனைகளால் நமக்கு ஆலயத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்மை நிறைய உண்டாவதும் நிஜம். இத்தனையும் இருந்தாலும் ஆலய வழிபாடும் நாம் தனிப்பட நம்மை உருப்பட வைத்துக் கொள்வதற்கு அங்கம்தானேயன்றி, community salvation -காக (ஒரு ஸமூஹம் முழுதும் மோக்ஷம் பெறுவதற்காக) அல்ல.

கோயிலில் பலபேர் சேர்ந்து பூஜைகள், உத்ஸவங்கள், கும்பாபிஷேகங்கள் செய்து, பொன்னையும் பொருளையும். கந்தம், புஷ்பம், நைவேத்யம், மேளதாளம் எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணுகிறோமென்றால் இதற்குப் பர்பஸே (நோக்கமே) வேறு. இப்படிப்பட்ட கூட்டுப்பணிதான் மதத்தின் முடிவு என்ற அபிப்பிராயத்தில் இதைச் செய்யவில்லை. ஆனால், community thanks giving -ஆகவே இதைச் செய்கிறோம். ஈஸ்வரனிடமிருந்து ஸமூஹம் முழுதும் பலவிதமான அநுக்ரஹங்கள் பெறுகிறதல்லவா? அதற்காக ஸமூஹம் முழுவதும் சேர்ந்து அவனுக்கு நன்றி தெரிவ்ப்பதற்கு அடையாளமாக, நன்றிக்கும் அன்புக்கும் ஸ்தூலமான அடையாளமாக, அவன் நமக்குக் கொடுத்திலிருந்தே திரும்ப அவனுக்கு வஸ்திரம், நைவேத்யம், வாஹனம் என்றெல்லாம் அர்ப்பணிப்பதுதான் நம்முடைய கூட்டு ஆலயப்பணியின் பர்பஸ்.

'ஸால்வேஷ'னுக்கு (விடுதலைக்கு) இதோடு நின்றுவிட்டால் போதாது. ஈஸ்வரனின் பரம க்ருபையில் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தும், அந்த மூர்த்திகளில் அப்படியே உள்ளம் சொக்கி பக்தி பண்ணியுமே மோக்ஷ ஸாம்ராஜ்யத்துக்கும் போனவர்கள் உண்டுதான். ஆனாலும் இங்கேயுங்கூட அது அவர்கள் இன்டிஜுவலாக (தம்மளவில் மட்டும்) செய்து கொண்டதுதானே? பொதுவில் ஆலயத்திலிருந்து பெறுகிற சக்தியைத் தனி வாழ்க்கையின் அநுஷ்டான சுத்தத்தால் விருத்தி செய்து கொள்வதாகவே நம் மதம் இருக்கிறது. அவனவன் இப்படி சுத்தமாக அநுஷ்டானம் பண்ணித் தன்னைத்தானே கடைத்தேற்றிக் கொள்வதற்கான சக்தியையும் கோயிலுக்குப் போய்ப்போய், வேண்டி வேண்டியே பெறலாம்.

ரொம்பவும் controversial -ஆன (சர்ச்சைக் கிடமான) புஸ்தகம் எழுதின ஒரு வெள்ளைக்காரர்* என்னிடம், ''உங்கள் கோயில்களில் என்ன இப்படி ஒரே சத்தமும் கூச்சலுமாயிருக்கே?'' என்று கேட்டபோது நான் இதைத்தான் சொன்னேன். ''சர்ச்சில், மசூதியில் புத்தவிஹாரத்தில் silent prayer செய்கிறதுபோலக் கோயிலில் செய்யணும் என்பது முக்ய உத்தேசமில்லை; எங்களுக்கு ஏகாந்தத்தில் த்யானம்தான் முக்யம். த்யானம், congregational worship (கூடிப் பிரார்த்தனை சொல்லி வழிபடுவது) ஆகியவற்றிற்காகக் கோயில் இல்லை. ராஜா நம்மை ரக்ஷிக்கிறான் என்பதற்காக அவனுக்கு அரண்மனை, அலங்காரம், பரிவாரம், படாடோபம் எல்லாம் கொடுக்கிறோம்; வரியும் கொடுக்கிறோம் அல்லவா?

அதே மாதிரி ஸர்வலோக ராஜாவாக, ஸர்வ கால ரக்ஷகனாக இருக்கப்பட்ட பகவானுக்குப் பொன்னையும் பூஷணத்தையும் கொடுத்து பெரிசாகக் கோயில் கட்டி வைத்து, மேளதாள விமரிசைகளோடு உத்ஸவம் செய்யவே, community thanks- giving -ஆக (ஸமூஹ நனறியறிவிப்பாக) collective offering -ஆக (கூடிக் காணிக்கை செலுத்துவதாக) எங்கள் ஆலய வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது. இங்கே அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமர்க்களம், ஆரவாரம், மேளதாளம், கண்டாமணி அதிர்வேட்டு இருக்கத்தானிருக்கும். அமைதியாக த்யானம் பண்ண அவரவர் வீட்டிலும் பூஜாக்ருஹமுண்டு. ஆற்றங்கரை, குளத்தங்கரை உண்டு'' என்று சொன்னேன்.

இப்படிச் சொன்னதால் கோயிலில் அவரவர்களும் இரைச்சல் போட்டுக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பதற்கு லைஸென்ஸ் தந்ததாக அர்த்தமில்லை. சாஸ்த்ரோக்தாக அநுமதிக்கப்பட்டிருக்கும் ஓசைகளை - மணி அடிப்பது, வேத கோஷம், தேவாரம், பஜனை, மேளம், புறப்பாட்டில் வெடி இவற்றைத்தான் - நான் சொன்னது.

இந்த மாதிரி சாஸ்த்ரோக்தமான சப்தங்களுக்கே மௌன த்யானத்தில் ஒருத்தனை ஈடுபடுத்துகிற அபூர்வமான சக்தி உண்டு. இம்மாதிரி சப்தங்களுக்கு நடுவிலேயே ஸந்நிதானத்தில் சிறிது கண்ணை மூடிக்கொண்டால், அல்லது தக்ஷிணாமூர்த்திக்கு எதிரே ஐயம் பண்ண உட்கார்ந்துவிட்டால், சட்டென்று ஒரு லயிப்பு உண்டாகிவிடும். தனி மநுஷ்யன் தன்னைத் தனக்குரிய அநுஷ்டானத்தால் சுத்தப்படுத்திக்கொண்டு தன் வாழ்க்கை உதாரணத்தாலேயே மற்றர்களுக்கும் வழிகாட்டுவதுதான் ஹிந்து மதத்தின் உயிர்நிலை. சிறு வயஸில் இதை குருகுலத்திலும் விருத்தாப்பியத்தில் ஸந்நியாசியாக ஏதாவது மடம் அல்லது ஆச்ரமத்திலும் அப்யாஸம் பண்ணுவதுபோக, மீதம், வாழ்க்கையின் மிகப்பெரிய பாகம் இவன் க்ருஹஸ்தனாக வீட்டில்தான் இருக்க வேண்டும். 

இதனாலேயே நம் தர்ம சாஸ்த்ரத்தில் இவனால் கிருஹத்தில் இதரர்களுக்குச் செய்யப்பட வேண்டிய கடமைகள் பற்றியும், இவனுக்குப் பத்தினி, புத்ரர் முதலான அந்த இதரர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் வேறு இல்லாத அளவுக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆத்மாபிவிருத்தி பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்பட வேண்டியிருப்பதால் க்ருஹஸ்த தர்மம் என்று ஏகப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது.