Saturday 8 June 2013

எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம். - மஹா பெரியவாளின் தன்னிலை விளக்கம்


இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு அளக்கிறேனென்றால், நான் நம் ஹிந்து தர்மப்படி பரோபகாரம் செய்ய வேண்டும் என்பதை emphasize பண்ணினதில் தனி ஆள், குடும்பம் இவற்றின் கார்யம் கெட்டுபோகும்படிப் பண்ணிவிட்டேன் என்று ஒரு 'கம்ப்ளெய்ன்ட்'வந்திருக்கிறென்றால், இதற்கு நேர்மாறாக, நம் மதத்துக்கே தனிஆளும், அவனை உருவாக்குகிறதும் அவனால் உருவாக்கப்படுவதுமான அவனுடைய குடும்பமுந்தான் அச்சாணியாயிருக்கிறதேயொழிய, பொதுப்படையான ஜன ஸமூஹமல்ல என்றும் ஒரு 'கம்ப்ளெய்ன்ட்' இருக்கிறது என்று காட்டத்தான்!

பரோபகாரத்தை விஷயமாக எடுத்துக்கொண்டபோது நான் தனிஆளின் கடமை, குடும்பக் கடமை இவற்றை neglect பண்ணிவிட்டேன் என்கிறமாதிரியே, நம்முடைய ஸமயசாரங்களைப்பற்றி நான் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு ஸொஸைட்டியை நான் ignore பண்ணினதாகச் சண்டை போட்டவர்களும் உண்டு. சண்டை என்றால் சண்டை இல்லை. வசவு என்று நான் சொன்னதை கௌரமான முறையிலேயே அவர்கள் பண்ணினார்கள் என்பதைப்போல, சண்டையும் மரியாதையாகத்தான் போட்டார்கள். நான்தான் அதில் இருக்கக்கூடிய நியாயம் எனக்கு நன்றாக உறைப்பதற்காகச் 'சண்டை' என்று சொல்லிக்கொள்கிறேன்.

நான் சொன்னது எல்லாவற்றையும் பேப்பர்காரர்கள் போடவில்லை என்று ஸமாதானம் சொல்லி நான் தப்பித்துக்கொள்ள இஷ்டப்படவில்லை அந்தந்த ஸமயத்தில் எந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிறேனோ அதில் கேட்பவர்களுக்குக் கெட்டியான பிடிமானம் உண்டாகவேண்டும் என்றே அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாக stress செய்துவிடுகிறேன் என்று தோன்றுகிறது. இப்படிச் சொன்னால்கூடப் பிறத்தியாரை உத்தேசித்துத்தான் இப்படி செய்கிறேன் என்று காட்டி எனக்கு நல்லபேர் கேட்கிற மாதிரி இருக்கிறது. அதனால் இப்படியெல்லாம் நியாயம் கல்பித்துக் கொள்ளாமல் எந்த ஸப்ஜெக்டை எடுத்துக்கொள்கிறேனோ அதுவே என்னைக் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது, அதன் பக்ஷமாகவே என் கண்ணைத் திருப்பிவிட்டு விடுகிறது என்று வேண்டுமானால் ஒப்புக்கொண்டு விடுகிறேன்.என் விஷயம் இருக்கட்டும். இப்போது பொது விஷயத்தைப் பார்க்கலாம். வைதிக ஸமயாநுஷ்டானம் என்பதைப்பார்த்தால் அது முக்யமாக தனி மநுஷ்யனைத்தான் centre -ல் வைத்திருக்கிறது. அதில் ஒரு ஸமூஹப்பணி. ஸமூஹத்தை நலமடையச் செய்யும்போதே, அப்படிச் செய்வதாலேயே இந்தத் தனி மநுஷ்யன் ஆத்ம பரிபக்குவம் அடைவதுதான் இந்தப் பரோபகாரத்துக்கும் குறிக்கோள்*. 

ஸேவைக்குப் பாத்திரமாகிறவனும், அதாவது தானம் பெறுகிற தீனன், சிகித்ஸை பெறுகிற நோயாளி, வித்யாதானத்தால் ப்ரயோஜனமடையும் மாணவன், இப்படியாகப் பலவித பரோபகாரங்களுக்கும். பாத்ரமாக இருக்கப்பட்டவனும் இந்த லௌகிக உபகாரங்களைப் பெற்றதோடு த்ருப்தி பெற்று நின்றுவிடக்கூடாது. இவனும் தன்னுடைய இந்த லௌகிகமான problem தீர்ந்தது, இதற்கான விசாரம் இனி இல்லாமல் ஆத்மா பக்கம் விச்ராந்தியாகத் திரும்புவதற்குத்தான் என்று புரிந்து கொண்டு அந்த வழியில் போக வேண்டும். வெறுமே லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பரோபகாரம் நின்றுவிடுமானால் அது செய்தவனுக்குத் தான் சித்த சுத்தி என்ற பெரிய லாபத்தைக் கொடுப்பதாகுமேயழிய உபகாரம் பெற்றவனுக்கு சாச்வதமான லாபம் தரவில்லை என்றேயாகும்.

நான் ஸோஷல் ஸர்வீஸ் பற்றியும் பேசியிருக்கிறேன்;தனி மநுஷ்யனின் அநுஷ்டானங்கள் பற்றியும் பேசியிருக்கிறேன். ஸோஷல் ஸர்வீஸில் அநேக லௌகிகமான உபகாரங்களைச் சொல்லியிருக்கிறேன். அன்னதானம் செய்வது, வைத்யசாலை வைப்பது, வித்யாதானம் (ஸெக்யூலர் எஜுகேஷனையும் சொல்லியிருக்கிறேன்) , வேலையில்லாதவர்களுக்கு உத்தயோக வசதி பண்ணித்தருவது, ஏழைகளுக்கு விவாஹத்துக்கு உதவி செய்வது என்று நான் சொன்ன அநேக விஷயங்கள் லௌகிகமானவைதான். இவை நேரே ஆத்மாபிவிருத்திக்கு உதவுகிற பணிகளல்ல.

ஆனால் ஒரு இன்டிவிஜுவலின் ஆத்மாபிவிருத்திக்காக நான் அநுஷ்டானங்களைப் பற்றிச் சொல்லும்போது ஜெனரலாக க்ருஹஸ்த தர்மம், ஸ்த்ரீ தர்மம் என்றெல்லாம் சொன்னாலும், லௌகிக அம்சங்களை விஸ்தாரப்படுத்திச் சொன்னதில்லை. ஆத்மாபிவிருத்தியை aim -ஆக (லக்யமாக) வைத்தே அதற்காக ஸ்த்ரீ புருஷர்கள் தனி வாழ்க்கையிலும் குடும்பத்திலும் என்ன செய்ய வேண்டும். என்பதை மாத்திரந்தான் சொல்லி வந்திருக்கிறேன். மற்றபடி 'ஒரு ஏழைக்குக் காசுபோடு' என்கிற மாதிரி 'உனக்குக் காசு தேடிக்கோ' என்று சொன்னதில்லை. கதியில்லாத ஒரு வியாதியஸ்தனுக்குச் சிகித்ஸை பண்ணு' என்று சொன்ன மாதிரி, 'உனக்கோ, வீட்டு மநுஷ்யர்களுக்கோ உடம்பு ஸரியில்லாவிட்டால் டாக்டரிடம் காட்டு' என்று நான் சொன்னதில்லை;' ஏழைப்பிள்ளை ஒருத்தனுக்குப் படிப்புக் கொடு; வேலை பண்ணி வை' என்று சொல்லியிருக்கிறேனே தவிர 'உன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து நல்ல உத்யோகமாக ஸம்பாதித்துக்கொடு' என்று சொன்னதில்லைதான்!' எவனோ ஒரு ஏழையின் பெண்ணுக்குக் கன்னிகாதான ஸஹாயம் பண்ணு' என்பேனே தவிர, 'உன் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணு' என்பதில்லை. 'ஊருக்குக் குளம் வெட்டு' என்பேனே தவிர 'உன் வீட்டுக்குக் குழாய் போட்டுக்கொள்' என்று சொன்னதில்லை.

ஏன்? இந்த லௌகிக உதவிகளை இன்னொருத்தனுக்குப் பண்ணுவதே இவனுக்கு ஆத்மிகமாக உதவி பண்ணுகிறது இவனுடைய சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்கிறது. ஆனால் இதே லௌகிக விஷயங்களைத் தனக்கும் தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களுக்கும் பண்ணிக்கொள்கிறபோது அதிலே ஆத்ம ஸம்பந்தமாக எந்த லாபமும் சேராமலே போகிறது. காரணம் - தான், தன் மநுஷ்யர் என்பவர்களுக்குச் செய்வது தனக்கே பண்ணிக்கொள்ளும் உபகாரந்தான். அதாவது லௌகிகமான லாபம் இவனுக்கே கிட்டுகிறது. நிறையப்பணம் நஷ்டப்பட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிப் பெரிய இடத்தில் ஒப்படைக்கிறான் என்றாலுங்கூட அதிலும் நம் பெண் நல்ல இடமாகப் போய் அடைந்தாளே என்ற ஸ்வயபாச திருப்தி என்ற லௌகிகமான ஸ்வயலாபம் இருக்கத்தான் செய்கிறது. லௌகிக லாபத்தைப் பிறத்தியானுக்குக் கிட்டப் பண்ணினால் அதற்குப் பிரதியாக இவனுக்கு ஆத்மலாபம் கிடைப்பதே நியாயம். லௌகிக லாபமே நேராக இவனுக்குக் கிடைக்கிறபோது அதற்கு குட்டிப் போட்டுக்கொண்டு ஆத்ம லாபமும் எப்படி கிடைக்கும்? 

ஆத்ம லாபத்துக்கு உதவாத விஷயம் என்பதால்தான் சொந்தப் பணியைப் பற்றி நான் சொல்வதில்லை. உபதேசம் செய்கிற எவருமே சொல்வதில்லை. சொல்லாமலே அவனவனும் இவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறான். லோகமெல்லாம் நன்றாயிருக்ககணும் என்று பிரார்த்திக்க வேண்டுமென்றுதான் யாரும் உபதேசிப்பார்களே தவிர, 'நான் நன்றாயிருக்கணும்; என் மநுஷ்யாள் நன்றாயிருக்கணும்' என்று பிரார்த்தித்துக் கொள்ளும்படிச் சொல்வதில்லையே!

யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவனவனும் தானாகவே இப்படித் தன்நலத்தை, தன் குடும்ப நலத்தைப் பிரார்த்தித்தபடிதான் இருக்கிறான். அந்த நலம் ஆத்மாவைப் பொருத்ததாயிருந்தால் இப்படிப்பட்ட பிரார்த்தனை நியாயமானது தான். லௌகிகமாகவும் ஜீவனத்துக்கு அவசியமான அளவுக்கு மட்டும் வேண்டிக்கொண்டால் தப்பில்லைதான். ஆனால் எல்லாரும் இந்த லௌகிக 'நலம்' என்பதையே ஆத்மாவுக்கு ஹானி உண்டாக்குகிற அளவுக்குப் பிரார்த்திக்கிறார்கள். 


பிரார்த்திப்பதோடு அதற்கான முயற்சிகளை ஓயாமல் பண்ணியபடி இருக்கிறார்கள். இதிலேயே ஓவராக ஈடுபட்டு பாசத்தினால் தர்மாதர்மங்களைக்கூட மறந்து, தப்பு வழியில் போயும் இம்மாதிரி லௌகிக அபிவிருத்தியிலேயேதான் அநேகமாக எல்லாரும் கண்ணாயிருக்கிறார்கள். இதனாலேயே பரோபகாரத்துக்குப் பொழுதோ, மனஸோ, த்ரவ்யமோ எதுவும் கொடுக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனதால் இப்படிப்பட்டவர்களை ஸ்வயவிஷயம், ஸ்வயகுடும்ப விஷயம் இவற்றைக் குறைத்துக்கொண்டு ஸமூஹ க்ஷேமத்துக்கானவற்றைக் கவனிக்கும்படித் திருப்ப வேண்டியதுதான் எங்களைப் போன்றவர்களின் கடமையாயிருக்கிறது. ஆனதால், நான் மட்டுமில்லை, ஜனங்களை நல்ல வழியில் திருப்புவதற்குப் பிரயத்தனப்படுகிற பொறுப்பு கொண்டே எவருமே, ''சொந்த விஷயங்களை கவனித்துக்கொள்; வீட்டுக் கார்யங்களை கவனித்துக்கொள்'' என்று உபதேசம் பண்ணுவதில்லையென்பது மட்டுமில்லாமல், ''சொந்த விஷயங்களையே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. இப்படிப்பட்ட ஆசைகளை, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அதனால் லௌகிக உழலலையும் குறைத்துக்கொண்டு, கொஞ்சமாவது ஆத்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்கு வழியாக, ஒரு அங்கமாக ஸமூஹத்தை, லோகத்தை கவனித்துத் தொண்டு செய்யுங்கள்''- என்றே சொல்லும்படியிருக்கிறது. 

எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ என் ஜாக்ரதைக் குறைவால், நான் பரோபகாரத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு qualifying clause (நிபந்தனைப் பிரிவு) போடாமலே இருந்துவிட்டேன் என்பதற்காக என்னை வையத்தான் வேண்டும்.  தம்பதியாக இரண்டு பேர் வந்து இதைப்பற்றிய வேறே தினுஸான அபிப்ராயம் சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்களில் அகமுடையான் கொஞ்சம் எடுத்துக்கொடுத்தவுடன், பெண்டாட்டியும் சேர்ந்து கொண்டுவிட்டான். 'வசவு, வசவு' என்று நான் சொன்னாலும் அவர்கள் தாபத்தை ரொம்ப அடக்கிக்கொண்டு, வார்த்தையில் கொஞ்சம்கூடப் பதட்டப்படாமல், மரியாதைக் குறைவாக ஒரு சொல்கூடச் சொல்லாமல்தான் பேசினார்கள். 

கோபப்பட வேண்டிய இடத்தில் துக்கப்பட்டுக்கொண்டே சொன்னார்கள். ஆனாலும் அதை வசவு என்று வைத்துக் கொண்டால்தான் எனக்கு ரோஷம் வந்து கொஞ்சம் deep -ஆக என்னை நானே அலசிப் பார்த்துக்கொள்வேன் என்று தோன்றியதால் ''வசவு, வசவு''என்று சொல்கிறேன்.

அதனால் அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம் யதார்த்தத்தில் ஏற்பட்டுவிட்டதால் திட்டித்தானிருக்க வேண்டும். ஆனால் வயஸு, லாயக்கிருக்கோ இல்லையோ அதுவாக வந்து சேர்ந்துவிட்ட 'குரு ஸ்தானம்', இதுகளை உத்தேசித்துத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள். 

அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுவிட்டது அவர்கள் வீட்டுப் பிள்ளை, பிரம்மசாரிப் பையன், வேலையிலிருக்கிறவன், என் பரோகார உபதேசங்களைப் படித்துவிட்டு அதிலேயே ஓவராக ஈடுபட்டு விட்டானாம். தன் கார்யம், வீட்டுக் கார்யம் எதையும் கவனிப்பதில்லையாயம். ஆபீஸ் கார்யம்கூட ச்ரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போர்து பார்த்தாலும் பிடி அரிசி கலெக்ஷன், (மாடுகளுக்காக) காய்கறித் தோல் கலெக்ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்ன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் - ஆஸ்பத்திரியில் பிரஸாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம்.

''தான் கட்டிக்கொண்ட துணியைக்கூடத் தோய்க்கிறதில்லை; இவள்தான் தோய்த்துப்போட வேண்டியிருக்கு'' என்று அந்த மநுஷ்யர் கம்ப்ளெயின் பண்ணினார். உடனே அவர் behalf -ல் அந்த அம்மாள் பரிந்துகொண்டு, ''வீட்டுக்கு ஒரு ஸாமான், காய்கறி பார்த்து வாங்கிப் போடுகிறதில்லை. சொன்னால்கூடக் காதில் போட்டுக்கொள்வதில்லை. 

இத்தனை வயஸுக்கு இவரேதான் பண்ணும்படி இருக்கிறது'' என்று சொன்னாள்.''ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம். ஏதோ கொஞ்சம் அகத்தில் தலைகாட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்று முடிந்த மட்டும் நாங்களும் வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் மநுஷ்யர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை. நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்'' என்று சொன்னார்கள். பெற்ற மனஸு!

அவர்கள் அப்படிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், ''இந்தக் கஷ்டம் உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை ஸரி பண்ணணும்'' என்று அவர்கள் இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். இனிமேலே எனக்குப் பிரஸங்கம் பண்ணுகிற உத்தேசமில்லை*. ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரஸங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவச்யமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, ''without prejudice to'' (இன்னதற்கு ஹானி இன்னியில்) என்று அநேக ஒப்பந்தங்களில் qualifying clause போடுகிறார்களே, அந்த மாதிரி இதற்கும் ஒரு நிபந்தனை, 'தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்' என்றும் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது ஸமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த (பரோபகார) ஸப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.

''தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்'' என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா?'' சொல்லிக்கொள்வதே 'பெரியவா' மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?'' என்றே பலபேர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.


இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? 'வசவு', 'வசவு' என்று இத்தனை நாழி நான் சொன்னதை 'உபதேசம்' என்று சொல்லியிருக்கலாம். வசவானால்தான் feeling -ஐக் கிளப்பிவிடும் என்று அப்படிச் சொன்னேன். அதனால் உண்மையை அலசிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வழி ஏற்படுமென்றேன். அதைவிட 'உபதேசம்' என்று அடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டால் இன்னம் ச்லாக்யம் என்று தோன்றுகிறது. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் 'ஜெனரல் ரூல்' என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்துகொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், ''சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது'' என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, ''அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது'' என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம். 

No comments:

Post a Comment