Wednesday 19 June 2013

போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விளக்கம்

தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud (மோசடி) தான். தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் - ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது 'ஹிபாக்ரிஸி' (போலி வேஷம்) தான். 

இப்படியெல்லாம் பண்ணிவிட்டு பந்துக்கள் எடுத்துக்காட்டினால் கோபம் வருகிறது, எரிச்சல் வருகிறது என்றால் பரோபகாரத்தால் இவனுக்கு எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை என்றுதான் அர்த்தம். 'எல்லாரிடமும் அன்பாயிருக்கணும், மதுரமாய்ப் பழகணும்' என்பதுதான் தொண்டு செய்கிறவனுக்கு லக்ஷணம். 

பொதுத்தொண்டு என்பதற்காகவே வீட்டு மநுஷ்யர்களிடம் அன்பு போய், எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் இவன் தொண்டு செய்து என்ன புண்யம்? இவனுக்கு என்ன சித்த சுத்தி ஏற்பட முடியும்? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கிற மாதிரி பண்ணிக்கொள்ளக் கூடாது. 

தன் லிமிடேஷனை எவனும் எப்போதும் உணர வேண்டும். மநுஷ்யராய்ப் பிறந்துவிட்டோம். அதனால் நாம் பல திநுஸில் கட்டுப்பட்டுதான் கிடக்கிறோம். ஆசைகள், ஆஸ்தைகள் பெரிசாய் இருக்கலாம். அவை நல்லதாகவும் இருக்கலாம். லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்றே ஆர்வமிருந்தாலும் நமக்கும் நம் குடும்பத்துக்கும் செய்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதை உணர்ந்து இந்த ட்யூட்டிக்கு ஹானியில்லாமல்தான் லோக ஸேவை செய்ய வேண்டும்.

''தன்னைப்பெற்ற தாயார் கிண்ணிப்பிச்சை எடுக்கிறபோது கோதானம் பண்ணினானாம்'' என்று சொல்வதுண்டு. முதலில் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். தன் சொந்தக் கார்யங்களை ஒருகாலும் பிறத்தியாரிடம் காட்டிக்கொடுக்கவே கூடாது. இதுதான் சாஸ்திரம். அவனவன் தன் வஸ்திரத்தை தானேதான் தோய்துக்கொள்ள வேண்டும். 'டயார்க்கி'யில் (இரட்டை யாட்சியில்) ராஜகோபலாச்சாரி மெட்றாஸ் ப்ரஸிடென்ஸிக்கு ப்ரைம் மினிஸ்டராக (அப்போது டில்லியில் ப்ரைம் மினிஸ்டர் இல்லாததால் ப்ரெஸிடென்ஸியில் பிரதான மந்திரியாக இருக்கப்பட்டவரை ப்ரைம் மினிஸ்டர் என்று சொல்வார்கள். இப்போது பிரெஸிடென்ஸியை ஸ்டேட் என்றும், இதன் ப்ரைம் மினிஸ்டரை சீஃப் மினிஸ்டர் என்றும் சொல்கிறார்கள். இப்படி அவர் ப்ரைம் மினிஸ்டராக) இருந்துபோதுகூடத் தன் துணியைத் தானேதான் தோய்த்துக் கொண்டார். 

இப்படியே பல பேர் பெரிய ஸ்தானத்திலிருந்தபோதுகூடத் தன் பூட்ஸுக்குத் தானேதான் பாலிஷ் போட்டுக்கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். நம் கார்யத்தை நாமே செய்து கொள்கிறதிலே கௌரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கௌரவக் குறைச்சல். நாம் பரோபகாரி என்று வெளியிலே 'ஷோ' பண்ணிக்கொண்டு ஊராரிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்வதற்காக வீட்டுக்காரர்களெல்லாம் நமக்கு பரோபகாரம் பண்ணும்படியாகத் தாழந்து போய் அவர்களுக்கு ச்ரமத்தைக் கொடுத்து நல்லெண்ணத்தையும் போக்கிக் கொள்வது நமக்கே நாம் பண்ணிக்கொள்கிற கௌரவக் குறைச்சல்தானே? 

இதிலே ஸைகலாஜிகலாக ஒன்று கவனிக்க வேண்டும். ஒருத்தன் தன் வேலை, வீட்டு வேலைகளை மற்றவர்களிடம் விட்டுவிட்டுப் பொதுப்பணிக்குப் போகிறான் என்னும்போது, வீட்டின் மற்ற பேருக்கு இவனிடம் ஏற்படுகிற அதிருப்தியில் ஸமூஹத்தொண்டே பிடிக்காமல் போய்விடுகிறது. ''போதும், இன்னொருத்தன் ஊர்க்கார்யம் என்று உழப்பறித்துக்கொண்டு அகத்துக் காரியத்தை விட்டிருப்பது. நமக்கு இந்த ஸேவையும் கீவையும் வேண்டாம்'' என்று அவர்களுக்கு ஒதுங்கிப்போகத் தோன்றிவிடும். அதுவே அவன் அளவறிந்து அகத்துக் காரியத்தையும் கவனித்துக் கொண்டு, பொதுக் காரியமும் பண்ணினானென்றால் அப்போது வீட்டின் மற்ற மநுஷ்யர்களும் இவனோடுகூடவெளித்தொண்டுக்கு வந்து தங்களாலானதைச் செய்வார்கள் வீட்டுக் காரியத்தைக் கவனிப்பதால் இவனொருத்தன் செய்யும் ஸோஷல் ஸர்வீஸ் குறைந்து போகிறதென்றால், இப்போது அதைவிட ஜாஸ்தியாக மற்றவர்களின் ஸர்வீஸ் ஸொஸைட்டிக்குக் கிடைத்துவிடும். இவன் அதியாகப் போய் வீட்டு மநுஷ்யர்களின் அதிருப்தியை ஸம்பாதித்துக் கொள்ளும்போதோ, தன் நோக்கத்துக்கே பாதகமாக, அவர்களால் ஏற்படக்கூடிய ஸோஷல் ஸர்வீஸைத் தடுத்துவிடுகிறான்!

தொண்டுக்குப் போகிறவர்களுக்கு ஒரு 'ட்ரிக்' சொல்லித் தருகிறேன். அன்போடு பதவிசாக நடப்பதுதான் 'ட்ரிக்'! வெளிமநுஷ்யர்களிடம் மட்டுமில்லை, அகத்துப் பேரிடமும் இப்படிப் பரிவாக, பணிவாக இருந்தானானால் அவர்களே, ''நாம்தான் வீட்டையே கட்டிக்கொண்டு அழுகிறோம். இவனாவது லோகத்துக்குப் பண்ணி, நமக்கும் சேர்த்துப் புண்யம் ஸம்பாத்தித்து தரட்டும்'' என்று நினைத்து அவனிடம் வீட்டு வேலைகளைக் கூடிய மட்டும் காட்டாமல் தாங்களே பண்ணுவார்கள். 

ஆனால், தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால், தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் - ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது 'ஹிபாக்ரிஸி' (போலி வேஷம்) தான். 

1 comment:

  1. போலி வேஷத்தைப் பற்றி நல்ல விளக்கம்... நன்றி...

    ReplyDelete