Thursday 29 August 2013

மனஸ் மட்டும் வைத்துகொண்டு ஒன்றும் பண்ண முடியாது-மஹா பெரியவா

அநேக ஸமயாசாரங்களை, சடங்குகளைச் சீர்திருத்தக்காரர்கள் ஒதுக்குவதற்கு ஈஸியாக ஒரு காரணம் சொல்லி விடுகிறார்கள்:''மனஸு சுத்தமாக இருக்க வேண்டியதுதானே முக்யம்? 'ரிசுவல்' (சடங்கு) எதற்கு? இந்த 'ஃபார்மாலிடீஸ்'எதற்கு?'' என்கிறார்கள்.

மனஸைத் தனியாக விட்டால் அது கட்டுப்படாமல் கெட்ட வழிகளில்தான் போய்க் கொண்டிருக்கும். எவனாவது ஆயிரம், பதினாயிரத்தில் ஒருத்தனுக்குத்தான் காரியத்தில் போகாத போதும் மனஸ் கட்டுப்பட்டு நல்லதிலேயே போய்க் கொண்டிருக்கும். மற்றவர்களுக்கு ஒரு காரியத்தைக் கொடுத்து, 'கார்ய த்வாரா' மனஸை பகவானியமோ, ஜலஸேவையிலோ திருப்பி விட்டால்தான் உண்டு. இதைக் கவனித்துத்தான் ஆசார அநுஷ்டானங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன.

மனஸைத் தனியாக விட்டால் என்று மட்டுமில்லை அதை நாம ஜபம், ஸ்தோத்ரம் என்று வாக்குடன் சேர்த்துவிட்டாலுங்கூடக் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அது பிய்த்துக் கொள்கிறது. அதனால் மனோ-வாக்-காயம் என்றபடி மனஸை வாக்கு மட்டுமின்றி, சரீர கார்யத்தோடும் பிணைத்தே சடங்குகளைக் கொடுத்திருக்கிறது. மந்திரங்களை வாக்கால் சொன்னபடியே "ஹோமம்" என்ற காரியத்தைப் பண்ணுவது, ஸஹஸ்ரநாமத்தை வாக்கால் சொன்னபடியே அர்ச்சனை என்ற கார்யத்தைப் பண்ணுவது - என்று வைத்திருக்கிறது.

கேசவ, நாராயண, த்ரவிக்ரம என்று வாயால் சொன்னால்கூட பகவான் மஹிமையில் மனஸ் நன்றாக ஈடுபடுமாட்டேன் என்கிறதே! அதற்காக, ''அந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லிக்கொண்டே உடம்பில் பன்னிரண்டு நாமங்களைத் திருமண்ணால் போட்டுக் கொள்ளு'' என்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். த்ரவிக்ரமன்தான் உலகளந்தான். உலகத்தை அளந்தவனே அதை ச்வேத வராஹமாக அவதாரம் பண்ணி வெள்ளைவெளேரென்ற தெற்றிப் பல்லிலே தூக்கி நிறுத்தினான். பல்பட்ட இடத்தில்தான் 'ச்வேத ம்ருத்திகை' என்ற வெளுப்பு மண்கட்டி கிடைக்கிறது. 

'திருமண்'என்பது அதுதான். துளஸிக்கு அடிமண்ணும் இப்படி விசேஷமானது. இப்படிப்பட்ட மண்ணைக் குழைத்து ஒரு காரியமாக்கி உடம்பிலே போட்டுக் கொண்டால், அப்போதுதான் 'த்ரிவிக்ரம' என்கிறபோது, ''அப்பா, உன் ஸ்பரிசம் பெற்ற மண்ணை என் சரீரத்திலும் தாரணம் பண்ணிக் கொள்கிறேன்'' என்கிற மனக்குழைவு உண்டாகும்.

ஆத்மாபிவிருத்தியில் ஓரளவுக்கு மேலே போகப்போக, மனஸின் ஒருமுக தியானத்துக்கு வாக்கு, கார்யம் ஆகியவையே இடைஞ்சலாகத்தான் ஆகும். கார்யம் ஸ்தோத்ரம், மந்திரம் எல்லாமே அப்போது நின்று போய்விடும். ஆனால் இது தானாகவே விடப்போகிற ஸமாசாரம். தவளையை உதராணமாகச் சொல்வது வழக்கம். தவளை ஜலத்தில்தான் முட்டை போடும். அப்புறம் முட்டையிலிருந்து வெளியே வந்தவிட்டும் சிலகாலம் மீன் மாதிரி ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். அந்த ஸ்டேஜில் அதற்கு நிலத்திலே ச்வாஸிப்பதற்கு வேண்டிய லங்ஸ் கிடையாது. மீன் மாதிரி ஜலத்தில் கரைந்திருக்கிற ஆக்ஸிஜனை தனக்குள்ளே இழுத்துக் கொள்ளும் gills என்ற உறுப்பு மட்டுந்தான் அப்போது தவளைக்கு உண்டு. அப்புறந்தான் அது வளர வளர இந்த உறுப்பு எப்படி மறைந்தது என்றே தெரியாமல் தானாக மறைந்து, அதற்கு நிலத்திலே இருந்து கொண்டு, காற்றிலேயுள்ள ஆக்ஸிஜனை ச்வாஸிக்கக்கூடிய லங்ஸ் உண்டாகிறது. இப்படி ஹையர் ஸ்டேஜுக்குப் போகும்போது தானாகச் சடங்கு, மந்த்ரம் எல்லாம் நின்று போகும்.

அதற்காக ஆரம்பத்திலேயே இதெல்லாம் வேண்டாம், மனஸ் சுத்தம் போதுமென்றால், அது தவளை முதலில் ஜலத்திலிருக்கும்போதே லங்ஸ்தான் வேண்டும் என்று தனக்கு இருக்கிற ச்வாஸ அவயவத்தையும் விட்டு விட்டு ... விட்டால் என்ன ஆகும்? உயிரையும் விட வேண்டியதுதான்!

வெளிச்சின்னங்கள், வெளிக்கார்யங்கள், வெளிவித்யாஸங்கள், இவற்றின் மூலந்தான் உள்ளே ஒரு அடையாளமும், காரியமும், பேதமும் இல்லாமல் ஆகிற நிலைமையை அடைய முடியும்*. முதலிலேயே கார்யத்தைக் கொடுக்காமல் மனஸை மட்டும் வைத்துக்கொண்டு தியானம் பண்ணு என்றால், மனஸ் மட்டும் வைத்துக்கொண்டு தியானம் பண்ணு என்றால் மனஸ் ரொம்ப நேரம் கண்டபடி ஓடிவிட்டு, அப்புறம் எழுந்துவிடத்தான் வைக்கும். அல்லது களைத்துத் தூக்கத்தில் கொண்டுவிடும்.

மனஸ் சுத்தம் டிஸிப்ளின் இல்லாமல் வராது. உள் டிஸிப்ளின் வெளி டிஸிப்ளின் இல்லாமல் வராது. ரூல்களும், ஃபார்மாலிடிகளும், வெளிக் கார்யங்களும், அந்தக் கார்யங்களைப் பொறுத்த அநேக வித்தயாஸங்களுமில்லாமல் வெளி டிஸிப்ளின் இல்லவேயில்லை.

''மனஸ் சுத்தத்தை மட்டுந்தான் கவனிப்போம்'' என்று நவீனர்கள் சொன்னாலும், இதில் யாரோ ஒன்று இரண்டு தலைவர்கள் மட்டும் வேண்டுமானால் அப்படியிருக்கக்கூடுமே தவிர மற்றவர்கள், ''மனம் போனபடிதான் இருப்போம்'' என்று ஆவதாகவே முடிந்திருக்கிறது! இதற்கு நான் தொண்டை தண்ணீர் போக இத்தனை சொல்ல வேண்டியதேயில்லை. ரிஃபார்ம், ரிஃபார்ம் என்று ஆரம்பித்த பின் தேசத்தில் டிஸிப்ளினே இல்லை என்பது எல்லாருக்கும் பட்டவர்த்தனமாகத் தெரிகிற விஷயம். ஆனாலும் 'அதனால்தான் இது' (சீர்திருத்தம் என்ற காரணத்தால்தான் கட்டுப்பாட்டுக் குலைவு என்ற விளைவு) என்பதை ஒப்புக்கொள்ள யாருக்கும் மனஸு வரவில்லை.

நாஸ்திகர்கள் என்று போகிறவர்களை விட்டு விடலாம். அவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேர்தான். ''ரிலிஜன்'' என்று போற்றிச் சொல்லி, ''நாங்கள்தான் வேதத்தின் ஸ்பிரிட்டை ஸரியாகப் புரிந்து கொண்டு இன்டர்ப்ரெட் பண்ணுகிறோம்'', ''அதை 'ஆர்த்தடாக்ஸி'யின் ஆதிக்யத்திலிருந்து மீட்டு உள்ளபடி ப்ரகாசம் பண்ணுகிறோம்'' என்று சொல்லிக் கொண்டே ரிஃபார்ம்காரர்கள் அநாதிகாலமாய் ஒழுங்காயிருந்து வந்த ஸமுதாயத்தைக் கட்டுப்பாடேயில்லாமல் 'டிஃபார்ம்' (உருக்குலைவு) பண்ணுகிறார்களே என்பதுதான் துக்கமாயிருக்கிறது. 

ஆயிரலக்ஷம் ஆசாபாசங்கள், அழுக்குகள் இருக்கிறவர்களை எடுத்த எடுப்பில் உச்சாணிக் கொம்பிலுள்ள மனஸ் சுத்தத்துக்கு ஏறுங்கள் என்று, சொல்லி தாங்கள் இங்கேயுமில்லாமல் அங்கேயுமில்லாமல் திரிசங்கு லோகத்தில் தொங்குவது போதாது என்று, மற்றவர்களையும் அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்துக்கும் கீழே உருட்டி விடுகிறார்களேயென்று துக்கம் துக்கமாக வருகிறது. வேறே ஒன்றும் தெரியாவிட்டாலும், ஈஸ்வரன் என்று ஒருத்தனுக்கு பயந்து தர்ம நியாயமாக நடக்கவேண்டும்; பெரியவர்கள், முன்னோர்கள் காட்டும் வழியில் போகவேண்டும் என்பதால் இதுவரை ஜனங்களுக்கு இருந்த ஒழுக்கத்தையும் பணிவையும்கூட இந்தச் சீர்திருத்தங்கள் போகப் பண்ணிவிட்டன. ஸ்வதந்திரம், ஸ்வதந்திரம் என்று சொல்லி எல்லோரையும் - ஸ்வபாவமாக விநயகுணம் உள்ள நம்முடைய நல்ல பொது ஜனங்களை - மமதையில் கொண்டு தள்ளியிருப்பதுதான் சீர்திருத்தவாதிகள் செய்திருக்கிற கைங்கர்யம். யாரும் யாருக்கும் அடங்க மாட்டோம் என்று ஆக்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் ஸ்வயநலம்தான் - ரைட் ரைட் என்ற பெயரில் - ஸகலமுமாகி விட்டது.

ஆனபடியால், ''நாங்கள் ஹிந்து மத அபிமானிகள் தான்; நாங்கள்தான் நிஜமான ஹிந்துமதத்தின் அபிமானிகள்; We are for religion '' என்று சொல்லிக்கொண்டே, இவர்கள் ''கார்யத்தில் சாஸ்த்ர விரோதமாக எதை வேண்டுமானாலும் செய்வோம்''என்று போகிறவரையில் இவர்கள் பிரசாரம் செய்வது ir religion (மத விரோதம்) தான். 'சாஸ்திரம் வேண்டாம், சடங்கு வேண்டாம், மனஸ் தான்' என்று இருக்கிறவன் ஒன்றுக்கும் உதவாதவன்தான்.

No comments:

Post a Comment