வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.
அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.
"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.
அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.
"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-
"நானும் நீயும் ஒண்ணுதான்!"
என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.
கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார்
"இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்.
வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.
('பீபிள்ஸ் ஃப்ரூட்!'-People Fruit)
பெரியவாள் போடும் சாப்பாட்டு விருந்தை சாப்பிட்டு முடிக்கிறோம். இலை போட்டு அதில்தானே விருந்தைப் படைப்பது? அந்த இலையைத் தரும் வாழை ஜாதி பற்றி அவர் வாய்மொழி கூறாது முடிக்கலாமா?
'மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதான ஒன்றுதான். ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும் இலை துளியளவே இருக்கும்போது இதற்குத்தான் 'போட்டுக் கொண்டு சாப்பிடுகிற' அளவுக்குப் பெரிசாக இலை! அப்படி, தாய் மனஸோடு சாதம் போட்டுப் பார்க்கிறதாலேதான் வாழையை நம் ஸம்பிரதாயத்தில் உசத்தி வைத்திருக்கிறது.
'எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக, தேஹாரோக்யம், புஷ்டி தருவதாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதில் வாழை ஒன்றைத் தவிர எதையாவது அதையே முழுச் சாப்பாட்டுக்குப் பதிலாகச் சாப்பிட முடிகிறதோ? முப்பழங்களில் மீதி இருக்கிற மா, பலாப்பழங்களைக் கூட வயிறு ரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோ? ஒரு வேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அது பணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான் கட்டுப்படியாகும். சர்வ ஜனங்களும் காசு கொடுத்து நாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு வயிறு 'தம்' மென்று நிறையும்படி இருப்பது வாழைதான். அதுதான் (சிரித்து) 'பீபிள்ஸ் ஃப்ரூட்!'
வாழைப்பழம் ஆஹாரம் என்றால், வழைப் பூ மருந்து. பழமாகும்போது தித்திக்கிற அது பூவாக இருக்கும்போது துவர்க்கிறது. துவர்ப்புப் பண்டங்களே உடம்புக்கு ரொம்ப நல்லது. பூஞ்சைக் குடலுக்குக் கூட வாழைப் பூ ஏற்றது.
மற்ற பூக்கள் வாஸனை. வழைப் பூ மட்டும் அப்படியில்லை. வாஸனா ஸஹிதம், வாஸனா க்ஷயம் என்று வேதாந்தத்தில் சொல்கிறார்களே, அதைக் காட்டுவதாக இது இருக்கிறது. இன்னும் வேதாந்தமாக ஒன்று. விதை போடாமல் முளைப்பது அது. கர்மா விதையிலேதான் ஜீவன் மறுபடி, மறுபடி பிறந்து, வினையைப் பிறவி தோறும் விதைத்துப் புனர்ஜன்மங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது. அந்த வித்து அடிபட்டுப்போன ஞானத்தை வாழை நினைவூட்டுகிறது.
இப்படிச் சொன்னதால் அது வாழ்க்கைக்கு ஸம்பந்தப்படாதது என்று அர்த்தம் இல்லை. வாழ்கிற மட்டும் நல்லபடி வாழ்வதற்கும் அதுதான் பாடம் போதிப்பது.
'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக இருப்பது வாழை. தண்டு, பட்டை, தார் உள்பட, இலை, பூ, காய், பழம் என்று அதன் ஸர்வாங்கமும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதல்லவா? ஆனபடியால், 'வாழ்க்கை' 'வாழ்வு' என்று அதற்கே பெயர் வைக்கிற அபிப்பிராயத்தில்தான், 'வாழை' என்று பெயர் வைத்தது.
அதை வாழை மரம் என்கிறோம். மரம் என்றால் அது சொர சொரவாக இருப்பதுதானே வழக்கம்? இது ஒன்று மாத்திரம் வழவழாவாக இருக்கிறது! கரட்டு முரட்டுத்தனமில்லாமல் மழமழவென்று எல்லாவித மனுஷ்யர்களுக்கும் ஸந்தர்ப்பங்களுக்கும் அநுகூலமாக நம்மைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை உபதேசிக்கிறதே அந்த வழவழ. வழவழப்பை வைத்தும் அதற்கு 'வாழை' என்று பெயர் கொடுத்திருக்கலாம்.
விதையாகி வம்ச விருத்தி ஏற்படுத்திக் கொள்ளும் மா, ஆல், இன்னும் அநேக வ்ருக்ஷங்களில் கணக்கு வழக்கில்லாமல் விதைகள் தோன்றுகின்றன. அது ஒவ்வொன்றும் முளைத்தால், இந்த பூமியே ஒரு வ்ருக்ஷ ஜாதிக்குக்கூடப் போதாது. அப்படி நடக்காததால் அந்த விதைகளில் பெரும்பாலானவை முளைப்பதில்லை என்று தீர்மானமாகிறது. முளைத்திருப்பதிலும், எந்தக் கன்று எந்தத் தாய் மரத்தின் விதையிலிருந்து முளைத்திருப்பது என்பது எவருக்கும் சொல்லத் தெரியாததாக இருக்கிறது. வாழையில்தான் தாய் மரத்தைச் சுற்றியே அதன் கன்றுகள் முளைப்பதால் இதிலிருந்து இது பிறந்தது என்று தீர்மானமாகத் தெரிகிறது. கன்று பிறந்ததோடு தாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறது. ஸத்பிரஜை உண்டான அப்புறம் தாம்பத்யம் இல்லாமலிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு தர்ம சாஸ்திரம் சொல்கிறதென்றால், வாழையோ அதைவிட ஞானத்துடன் பெரிய ஸந்நியாஸமாகப் போயே போய் விடுகிறது. இங்கே வேதாந்தம். இதிலேயே வாழ்க்கைத் தத்துவமும்! நல்ல ப்ரயோஜனமுள்ள ஒரு வாழை, அதே ப்ரயோஜனத்திற்காக லோகத்திற்குத் தரும் ப்ரஜைகளான கன்றுகளை, இந்தப் ப்ரஜை இந்த அம்மாவுக்குப் பிறந்தது என்று நமக்கெல்லாம் காட்டும்படி இருக்கிறதல்லவா? வேறே எந்த மரத்தின் விஷயமாகவும் அப்படி இல்லையே! அதனால்தான் ?வாழையடி வாழையாக வாழ்? என்று வாழ்த்துவதாக இருக்கிறது! அந்த வாழ்த்துக்கு அடையாளமாகவே கல்யாணங்களிலும் மற்ற மங்கள வைபவம் எதிலுமே வாழை கட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது. வாழை மரம் மங்களச் சின்னம்.
குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம்
ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் 'ராஜாப்பயல்'என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் 'கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்'என்று சொல்லி வந்தார்கள். இப்போது 'மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை'என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா?
அதனால்தான் " இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது" என்று சொல்வது.
இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான்.
இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது.
இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் - ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் " பெரிய இடத்துப் பிள்ளை " யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும்.